Monday, April 2, 2018

2018 April Month Natchathira Palangal - 2018 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள்


அசுவினி

அஸ்வினிக்கு ஒரு சிறப்பு பலனாக இந்த மாதம் உங்களை எதிரியாக நினைத்தவர்கள் நண்பராக மாறுவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். செலவுக்கேற்ற வருமானம் உண்டு. வீட்டில் கலகலப்பும், சிரிப்பும் இருக்கும்.

பரணி

ஏப்ரல் மாதம் பரணிக்கு சுப நிகழ்ச்சிகளும், தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகளும் இருக்கும். உங்களில் சிலருக்கு மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் வருமானம் உண்டு. ரியல் எஸ்டேட், சிகப்பு நிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள் போன்றோருக்கு “லம்ப்சமாக” ஒரு தொகை கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும் என்றாலும் கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.

கிருத்திகை

உங்களில் ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும். அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுங்கள். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் உண்டு. வெளிநாடு, வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் நிதானம் தேவை.

ரோஹிணி

இந்த மாதம் எட்டில் இருக்கும் கிரக நிலைகள் உங்களை கோபக்காரனாக்கி, ஏதாவது சிக்கலை உண்டாக்கும் என்பதால் எதிலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மிகுதியாக இருக்கும். கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். சகோதரர்கள் உதவுவார்கள். அதேநேரத்தில் சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. வீண் வம்புகள் இருக்கும். எதிலும் குறுக்குவழி இப்போது வேண்டாம். நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது.

மிருகசீரிடம்

மிருகசீரிஷத்தில் ரிஷபராசியை சேர்ந்தவர்கள் எதிலும் அனுசரித்துச் செல்லுங்கள். குறிப்பாக வாழ்க்கைத் துணை விஷயங்களில் விட்டுக் கொடுங்கள். ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணியிடங்களில் வாக்குவாதம் வேண்டாம். அனைத்து விஷயங்களையும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. உங்களில் மிதுன ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் எதுவும் இருக்காது.

திருவாதிரை

பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது. அதேநேரம் அவர்களால் செலவும் இருக்கும். சிலருக்கு தூரப் பிரயாணங்கள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்

புனர்பூசம்

ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு மனதைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும் என்பது உறுதி. ஏப்ரல் மாதம் உங்களுக்கு ஏற்றம் தரும் மாதம்தான். வியாபாரிகள், ஏஜெண்டுகள், எழுத்துத்துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். குழந்தைகளை அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

பூசம்

பூசம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். இந்த மாதம் முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

ஆயில்யம்

உங்களில் முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் இந்த மாதம் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். ஆயில்ய நட்சத்திரத்தினர் இந்த மாதம் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக்கம்பத்தை தொடுவீர்கள்.

மகம்

மகத்திற்கு இது ஆகாத மாதம் இல்லை. தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவு உண்டு.

பூரம்

ஏப்ரல் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. சிலருக்கு தொழில் ரீதியான நன்மைகள் இருக்கும். நட்சத்திரநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. பணப்பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளையபருவத்தினர் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும்.

உத்திரம்

நட்சத்திர நாதன் சூரியன் வலுப்பெறுவதால் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கிய அனைத்தும் முடிவுக்கு வந்து இந்த மாதம் நிம்மதிக்கு வழிவகுக்கும். சூரியவலுவால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். இளையோர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள். உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். உத்திரத்திற்கு உற்சாக மாதம் இது.

அஸ்தம்

அஸ்தத்திற்கு ஏப்ரல் சிறப்பான மாதமே. ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு அந்த விஷயத்தை ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது.

சித்திரை

உங்களில் துலாம் ராசியினர் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் இனிமேல் வெற்றியாக அமையும். உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள். கன்னிராசியை சேர்ந்தவர்களுக்கு திருப்பு முனையான மாதமிது. வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் உங்கள் மனம் போல நிறைவேறும். சிலர் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் புரிந்து மற்றவர்களால் புகழப்படுவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும்.

சுவாதி

சுவாதிக்கு சிறப்பான மாதம் இது. அலுவலகங்களில் சிக்கல்கள் தீரும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். பழிநோக்கோடு வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்லமாதம். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். சஸ்பெண்டு ஆனவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். ஆன்மிகத்துறை, கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள் லாபங்களை அடைவீர்கள்.

விசாகம்

பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. பெண்களால் நன்மைகளும், சிலரின் வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டு. தொழில் ஸ்தானம் வலுப்பெறுவதால் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும், பாராட்டுக்களும் இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் வரப் போகும் பணவரவால் கடன் பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம் இனிமேல் கைகொடுக்கும்.

அனுஷம்

அனுஷத்தின் சோதனைகள் அத்தனையும் விலகி விட்டது. அதை உங்களில் சிலர் இன்னும் உணராமல் இருக்கிறீர்கள் அவ்வளவுதான். அவர்களும் கூடிய சீக்கிரம் உணருவீர்கள். இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் உண்டாகும். தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி சிறிதளவு முயற்சி செய்தாலே நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

கேட்டை

கேட்டை கோட்டை கட்டி ஆளும் காலம் துவங்கி விட்டது. எந்த சோதனைகளும் இனிமேல் உங்களுக்கு வரப் போவது இல்லை. இருக்கும் சிக்கல்களும் தீரும் மாதம் இது. இனிமேல் பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வேதனைகள் விலகி விட்டன. உங்கள் வாழ்க்கையை இனி நீங்கள்தான் நல்லபடியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் இனி கவலை ஒன்றும் இல்லை.

மூலம்

மூலத்திற்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் மாதம் இது. கையில் உணவு இருந்தாலும் சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் நீங்களே சுயமாக முடிவெடுக்க வேண்டாம். அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் பிரச்னைகளை சொல்லி ஆலோசனை பெற்று அதன்படி நடங்கள். வேகமாக போய்க் கொண்டிருக்கும் கார் வேகத்தடையை பார்த்ததும் வேகம் குறைவதைப் போல இப்போது சற்று நிதானமான பலன்களே நடைபெறும்.

பூராடம்

இந்த மாதம் உங்களுக்கு சில வித்தியாசமான அனுபவங்கள் இருக்கும். சனி, செவ்வாய் இணைவால் மனதிற்குப் பிடிக்காத ஒரு செயலை செய்ய வேண்டியிருக்கும். பிடிக்கவே பிடிக்காத, ஆகவே ஆகாத ஒருவருடன் வேலை செய்யவோ, பயணம் செய்யவோ, கூடவே இருந்தே தீர வேண்டிய அமைப்புகளோ இருக்கும். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உத்திராடம்

உங்களில் தனுசு ராசியினருக்கு மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திருவோணம்

ஏப்ரல் மாதக் கிரகநிலைகளின்படி சமாளிக்க முடியாத பிரச்னைகள் எதுவும் திருவோணத்திற்கு இல்லை. எதையும் உங்களால் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் உங்கள் மனம் போல் நடக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். வேலையில் சிக்கல்கள் தீரும்.

அவிட்டம்

நட்சத்திரநாதன் செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகள் இந்த மாதம் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாண உறுதி நிகழ்ச்சிகள் உண்டு. இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் போடுகின்ற நல்ல வேலை, தொழில் போன்றவைகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைத்து தடைகளும் விலகும். சிலருக்கு சுபச்செலவுகளும், விரயங்களும் உண்டு. அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள். பொதுவில் இது நல்ல மாதம்தான்.

சதயம்

விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் உங்களை தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் நேரமிது. அதிக முயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவியின் சத்தியவார்த்தைகள் இப்பொழுது உங்களுக்குப் பொருந்தும் என்பதால் அனைத்திலும் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஏப்ரல் மாதம் உங்களுக்கு ஏற்றத்தை மட்டும் தரும் மாதமே.

பூரட்டாதி

உங்களில் மீனராசியினருக்கு பெண்களால் விரயங்கள் இந்த மாதம் உண்டு. மற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். கும்பத்தினர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்தமாதம் மேன்மைகளை தரும்.

உத்திராட்டாதி

இந்த மாதம் நீங்கள் செய்யும் முயற்சிகள் ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும். குறிப்பிட்ட பலனாக சிலருக்கு மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். நண்பர்களிடம் விலகியே இருங்கள். பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் வரும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இந்தமாதம் இருக்கும்.

ரேவதி

இந்த மாதம் எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களால் எரிச்சல் அடைவீர்கள். உங்களில் சிலர் பணம் வருவதற்கு பொய் சொல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இளைய பருவத்தினருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் உண்டு.

No comments :

Post a Comment