Tuesday, March 13, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 178 (13.3.18)


எஸ்.வள்ளி, பாப்பாங்கோட்டை.

கேள்வி :

திருமணமாகாத நான் இருக்கும் போது என் தங்கை சென்ற வருடம் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே மாற்று இன பையனோடு வீட்டை விட்டு வெளியேறி குடும்ப மானத்தை காற்றி பறக்க விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு விட்டாள். காதல் வாழ்க்கை கசந்து அவள் மீண்டும் திரும்பி வருவாளா? என்று மாலைமலரில் உங்களிடம் கேட்டதற்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயாவாள்.  திரும்பி வரமாட்டாள் என்று பதில் சொன்னீர்கள். அது அப்படியே நடந்து விட்டது. தற்போது ஒரு பெண் குழந்தையோடு கணவருடன் அவள் வசித்து வருகிறாள். என் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தாலும் எனக்கு இப்போது திருமண ஏற்பாடு செய்கிறார்கள். -பெற்றோர்கள் மனக் கஷ்டப்படுகிறார்கள். என்னுடன் படித்த தோழிகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு இப்போது திருமணம் நடக்குமா? செய்யலாமா? என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? மாலைமலர் கேள்வி-பதில் பகுதியை தொடர்ந்து படிக்கும் நான் என் தந்தைக்கும் மேலான தந்தையாகிய உங்களின் பதிலை எதிர்நோக்குகிறேன்.

பதில்:

சந்,
கே

செவ்

சனி

26-8-1994,
மதியம்1.24, பாப்பாங்கோட்டை

சூ,பு

கு,
ரா

சு

(விருச்சிக லக்னம். மேஷ ராசி. 4-ல் சனி. 6-ல் சந், கேது. 8-ல் செவ். 10-ல் சூரி, புத. 11-ல் சுக். 12-ல் குரு, ராகு. 26-8-1994, மதியம் 1.24, பாப்பாங்கோட்டை.)

அஷ்டமச்சனியும், அவயோக நீச சுக்கிரனின் தசையும் சென்ற வருடத்தோடு முடிந்து விட்டதால் இனிமேல் உனக்கு கஷ்டங்கள் எதுவும் இல்லை. விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எப்படிபட்ட பலவீன நிலையில் இருந்தாலும் சூரியனும், சந்திரனும் கெடுபலன்களை செய்யமாட்டார்கள். அத்தகைய சூரிய தசை உனக்கு ஆரம்பித்து விட்டதால் இனி அனைத்தும் உன் குடும்பத்தில் நல்லபடியாகவே நடக்கும். அடுத்த வருடம் தைமாதம் ஆரம்பிக்கும் ராகு புக்தியில் உனக்கு திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவார் என்பதால் உன்னுடைய திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

எம்.ரகுபதி, சென்னை-119.

கேள்வி :

மகன் பி.சி.ஏ. முடித்துவிட்டான். மேற்கொண்டு அவனுக்கு படிக்க மனம் இல்லாததால் எங்களது தொழிலான மளிகைத்தொழில் செய்யலாமா? அல்லது ஹார்டுவேர்ஸ், பாத்திரவியாபாரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழில் செய்யலாமா? அல்லது வேலைக்கு போகலாமா? நீங்கள் சொல்லும் முடிவில்தான் பையனின் வாழ்க்கை உள்ளது. தயவுசெய்து நல்வழி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:


ச,கே

சந்

7-9-1996, அதிகாலை 2.55, திசையன்விளை
ல,சு
செவ்

சூ

குரு

பு,ரா

(கடக லக்னம், மிதுன ராசி. 1-ல் சுக், செவ். 2-ல் சூரி. 3-ல் புத, ராகு. 6-ல் குரு. 9-ல் சனி, கேது. 12-ல் சந். 7-9-1996, அதிகாலை 2.55, திசையன்விளை.)

மகன் ஜாதகத்தில் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் நீசத்தில் உள்ளதாலும், தற்போது கடனைக் கொடுக்கக்கூடிய குருவின் தசை நடப்பதாலும், இன்னும் இரண்டு வருடங்களில் அஷ்டமாதிபதி சனிதசையும், அஷ்டமச்சனியும் ஆரம்பிக்க உள்ளதாலும் 28 வயதுவரை மகனுக்கு சொந்தத் தொழில் ஒத்து வராது. கடன்காரனாகி விடுவான். வேலைக்குப் போகச் சொல்லவும்.




ஆர்.ஜெகநாதன், நாமக்கல்.

கேள்வி :

என் அம்மா ஒரு ஜோதிடரை அணுகி என் ஜாதகத்தை பார்த்தபோது அவர் எனக்கு 19 வயதில் திருமணம் ஆகும் என்று கூறியுள்ளார். இதனை நாங்கள் நம்பவில்லை. ஆனால் திடீர் என்று அவர் சொன்னபடியே நடந்து விட்டது. மிகவும் கஷ்டத்தில் இருந்த ஒரு பெண்ணை கலப்புத் திருமணம் செய்ய வேண்டியதாகி விட்டது. ஏன் எனக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது என்று தெரியவில்லை. ஜாதகப்படி இதை விளக்க வேண்டுகிறேன். திருமணத்திற்கு பிறகும் கல்லூரிப் படிப்பை தொடர்ந்து முடித்திருக்கிறேன். எனது மனம், எண்ணங்கள் அனைத்தும் அரசுவேலை என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளது. இது ஏன்? எனக்கு அரசு வேலை கிடைக்குமா? மூன்றுமுறை நேர்முக தேர்வு வரை சென்றும் வெற்றி கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்?

பதில்:


கே


10-12-1991, மதியம் 12.25, சேலம்
சந்,செ
சனி

குரு

ராகு
சூ,பு
செவ்

சு

(கும்ப லக்னம். மகர ராசி. 5-ல் கேது. 7-ல் குரு. 9-ல் சுக். 10-ல் சூரி, புத, செவ். 11-ல் ராகு. 12-ல் செவ், சனி. 10-12-1991, மதியம் 12.25, சேலம்)

ஜாதகப்படி ராகு பகவான் சுபத்துவமாக பதினொன்றாம் இடத்தில், சுபர் வீட்டில், தாம்பத்திய சுகத்தை கொடுக்க கூடிய சுக்கிரனின் சாரத்தில் அமர்ந்து 18 வயதிலேயே தசை நடத்த ஆரம்பித்ததாலும், 2012-ம் ஆண்டு உங்களின் 21 வயதில் ராகுதசை, குருபுக்தியில் நீங்கள் தந்தையாக வேண்டிய அமைப்பு உள்ளதாலும், உங்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது.
ஜாதகத்தில் சுக்கிரன் பழுது இல்லாமல் இருந்தால் ஒருவருக்கு மிக இளம் வயதிலேயே தாம்பத்திய சுகம் கிடைத்து விடும். லக்னத்திற்கு பத்தில் சூரியனும், செவ்வாயும் திக்பலமாக இருப்பதால் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் அரசு வேலை பற்றியே இருக்கின்றன. ராசி, லக்னத்திற்கு பத்துக்குடைய சுக்கிரன்-செவ்வாய் இருவரும் ஆட்சியாக இருப்பதாலும், சிம்மத்தில் குரு அமர்ந்து சூரியன் திக்பலமாக இருப்பதாலும் உங்களுக்கு அடுத்த ஆண்டு புதன் புக்தியில் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்.


இ.சுவாமிநாதன், செய்யாறு.

கேள்வி :

முதுகலை பட்டப்படிப்பு முடித்து உதவி பேராசிரியர் பணிக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு அரசு வேலை அமையவில்லை. தனியார்துறையில் குறைந்த ஊதியத்தில் பணி புரிகிறேன். அரசுவேலை கிடைக்குமா? பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பிற்காக ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து தேர்வு பெற்றேன். ஆனால் விசா பெறும்போது காலர்ஷிப் இல்லாத காரணத்தினால் போக முடியவில்லை. வெளிநாட்டில் பி.எச்.டி. படிக்க முடியுமா? எல்லாத் தகுதிகளும் இருந்தும் நிராகரிக்கப்படுகிறேன். அது ஏன்?

பதில்:


சந்,கே

சூ,செ

பு,சு

31-05-1981 இரவு 11-25 செய்யாறு

ரா


கு,சனி

(மகர லக்னம், மேஷராசி 1ல் கேது, 4ல் சந், 5ல் சூரி. செவ் 6ல் புத, சுக், 7ல் ராகு, 9ல் குரு,சனி 31-05-1981 இரவு 11-25 செய்யாறு)

மேஷ ராசிக்கு கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச்சனி நடந்ததால் எதுவும் கைகூட வில்லை. சனி முடிந்ததும் வாழ்க்கை செட்டில் ஆகும் என்பது ஜோதிட விதி. கடகத்தில் இருக்கும் ராகுதசை நடந்து கொண்டிருப்பதால் இப்போது வெளிநாடு சென்று படிக்க முடியும். மனதை தளர விடாமல் மீண்டும் இப்போது முயற்சி செய்யுங்கள். இனிமேல் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வாழ்த்துக்கள்.




கே. கோதண்டபாணி. கும்பகோணம்.

கேள்வி :

அநேக நமஸ்காரங்கள். ஒரே மகள் ஐடித்துறையில் பெங்களூரில் இருக்கிறாள். இப்போது நிறைய வரன்கள் வந்து கொண்டிருக்கின்றன. திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள். இரண்டுமுறை வெளிநாட்டில் வேலை செய்ய வாய்ப்பு வந்தும் நான் அனுமதி தரவில்லை. இப்போது அவளது கம்பனியில் ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய மீண்டும் அழைப்பு வந்துள்ளது என்று மிகவும் நச்சரிக்கிறாள். தனியாக அனுப்ப பயமாக உள்ளது. என்ன செய்வது என்றே புரியவில்லை. நான் பெரிதும் மதிக்கும் ஆசானாகிய உங்களின் திருவாக்குப்படி நடக்க உத்தேசித்துள்ளேன். குழம்பியுள்ள எனக்கு உத்தரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

காலமாறுதலினால் பெண் குழந்தைகளை அனைவரும் படிக்க வைக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. முடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்கள் வில்லில் இருந்து விடுபடும் வேகத்தோடு அனைத்திலும் ஜெயிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். மகள் இப்போதே பெங்களூரில்தானே இருக்கிறாள்? அதுவும் கிட்டத்தட்ட வெளிநாடு போலத்தானே? ஐநூறு கல் தொலைவில் இருப்பவள் இனி ஐயாயிரம் கல் தொலைவில் இருக்கப் போகிறாள் அவ்வளவுதான்.
மகளின் ஜாதகப்படி கிழக்குத் திசையைக் குறிக்கும் சூரியனின் தசை ஆரம்பித்து விட்டதால் மூன்று வருடங்களுக்கு கிழக்கு நாடு ஒன்றில் இருப்பாள். நிரந்தரமாக இருக்க வாய்ப்பில்லை. திருமணம் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே நடக்கும்.

மாப்பிள்ளை எந்த திசையில் இருந்து வருவார்?
எம்.சரஸ்வதி, புதுச்சேரி.

கேள்வி :

36 வயதாகும் என் மகளுக்கு வாரம் ஒரு வரன் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இவளுக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? மாப்பிள்ளை எந்த திசையில் இருந்து வருவார்? இந்த வருடமாவது திருமணம் நடக்குமா? 18 வயதில் ஜாதகம் பார்த்தபோது அவளுக்கு மாங்கல்யம் தோஷம் இருப்பதாக சொன்னார்கள். உள்ளூரில் திருமணம் செய்து கொள்வாள் என்றும் கூறினார்கள். அதனால்தான் திருமணம் தள்ளிப் போகிறதா?

பதில்:

காலத்திற்கேற்பத்தான் ஜோதிட பலன்கள் சொல்லப்பட வேண்டும் என்று இந்த தெய்வீக சாஸ்திரத்தை நமக்கு அருளிய ஞானிகளால் சொல்லப்பட்டு இருக்கிறது. ஜோதிடமுறை உருவான காலத்தில் பெரும்பான்மையான மனித சமூகமும் சிறு சிறு குழுக்களாக வயல்களுக்கு நடுவே வீடு கட்டி வசித்தது. உறவுக்குள்ளேயே திருமணமும் செய்து வைக்கப்பட்டது. இப்போது போல மாப்பிள்ளை, பெண் தேடும் படலம் அன்றைக்கு இல்லை. மிகவும் அரிதான சூழலில் பருவம் வந்த ஒருவருக்கு முறைப்பெண்ணோ, முறைப்பையனோ இல்லாத நிலையில், இங்கிருந்து கிழக்கே நாற்பது கல் தொலைவில் போ, இந்தப் பெண்ணிற்கு மாப்பிள்ளை இருக்கிறான் என்று பலன் சொல்லப்பட்டது. அது சரியாகவும் இருந்தது.

ஆனால் இன்றைக்கு இதுபோன்ற சமூக அமைப்பு முற்றிலும் மாறி, உறவுத் திருமணங்கள் கிட்டத்தட்ட ஒழிந்து போய், கிராமங்களில் இருந்த ஒட்டுமொத்த சமுதாயமும் நகரங்களுக்கு படையெடுத்து வந்து தமிழ்நாட்டின் ஜனத்தொகையே நான்கு, ஐந்து நகரங்களுக்குள் சுருங்கிப் போய்விட்ட நிலையில் இப்போது ஒரு ஜோதிடர் இந்தப் பெண்ணிற்கு இந்தத் திசையில் இருந்து மாப்பிள்ளை அமையும் என்று சொல்வது குத்துமதிப்பான ஒரு அருள்வாக்காகத்தான் இருக்குமே தவிர விதிகளின்படி அமையாது. உலகமே ஒரு சிறிய கிராமமாகிக் கொண்டிருக்கும் போது எந்த திசையை சொல்வீர்கள்? உழக்கில் எப்படி கிழக்கு மேற்கு பார்ப்பது?

மகளுக்கு கும்ப லக்னமாகி லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், சனி இணைந்த கடுமையான தோஷ அமைப்பு இருக்கிறது. இதைவிட மேலாக லக்னத்திற்கு ஐந்தில் ராகு, ராசிக்கு ஐந்தில் செவ்வாய், சனி என்றாகி லக்னத்திற்கும், ராசிக்கும் ஐந்திற்குடைய புத்திர ஸ்தானாதிபதி புதன் பனிரெண்டில் மறைந்த புத்திர தோஷமும் இருக்கிறது. எனவே இதுவரை திருமண பாக்கியமும், குழந்தை அமைப்பும் கிடைக்கவில்லை. சரியான பருவத்தில் 19 வயதில் ஆரம்பித்த மிதுன ராகுவின் தசை இந்த இரண்டு பாக்கியங்களையும் அவளது 37 வயது வரை தடை செய்தே தீரும்.

மகளின் ஜாதகப்படி 2019ம் ஆண்டு ஆரம்பத்தில் ஆரம்பிக்க இருக்கும் குருதசை முதல் குருபகவான் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் தாம்பத்திய சுகமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் அமைப்பு இருக்கிறது. எனவே கண்டிப்பாக இந்த வருட இறுதியில் இந்த பெண்ணிற்கு திருமணம் நடக்கும். கவலை வேண்டாம்.

லக்னாதிபதி சனி சுபத்துவமின்றி இருப்பதால் 19 வாரம் சனிக்கிழமை இரவு படுக்கும்போது சிறிது கருப்பு எள்ளை தலைக்கு அடியில் வைத்துப் படுத்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை புதிதாக வடித்த சாதத்தில் யாரும் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்து அதில் அந்த எள்ளைக் கலந்து காகத்திற்கு வைக்கவும். ஒரு சனிக்கிழமை இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், கால் இழந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மகளின் கையால் ஊன்றுகோல் தானம் தரச் சொல்லவும். உடனடியாக மாப்பிள்ளை அடையாளம் காட்டப்படுவார்.

No comments :

Post a Comment