Thursday, March 1, 2018

2018 March Month Natchathira Palangal - 2018 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள்

அசுவினி

மார்ச் மாதம் அஸ்வினிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் மாத ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் பிற்பகுதியில் வெற்றி பெறும். பத்தில் இருக்கும் கேது பணவரவுகளையும், வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். இளைஞர்கள் புதியவைகளை இந்த மாதம் சோதனை செய்து பார்ப்பீர்கள்.

பரணி

உங்களின் நெடுநாள் தயக்கங்கள் விலகும் மாதம் இது. புதிதாக ஒன்று உடலிலும் மனதிலும் புகுந்தார்போல உணருவீர்கள். எதையும் சமாளிப்பீர்கள். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும் சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும் பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது.

கிருத்திகை

உங்களில் சிலருக்கு இந்தமாதம் வீண் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். உங்களில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்குக்கு சில வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். சிலருக்கு டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கும். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

ரோஹிணி

மாத ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். உங்களின் மனோதைரியம் கூடுதலாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்தையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள்.

மிருகசீரிடம்

இந்த மாதம் வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்கள் இருக்கும். இளையவர்களில் சிலர் காதலிப்பவரிடம் சண்டை போட்டுக் கொள்வீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. என்ன செலவு வந்தாலும் வருமானம் குறையாது.

திருவாதிரை

இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும் ஆனால் சேமிக்கத்தான் முடியாது. அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

புனர்பூசம்

இயல்பாகவே புத்திக்கூர்மையானவர்களாகிய நீங்கள் இந்த மாதம் அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் மார்ச் மாதம் நல்ல மாதமே.

பூசம்

ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல்துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வியாபாரம் தொழில் லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும்.

ஆயில்யம்

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். மார்ச் மாதம் உங்களுக்கு மிகவும் நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்த மாதம் இருக்காது. இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது.

மகம்

மார்ச் மாதம் மகத்திற்கு தடைகளைக் கொடுத்தாலும் எல்லாவற்றையும் நீங்கள் சமாளிக்கும் மாதமாக இருக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் உண்டு. கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும்.

பூரம்

வேலை செய்யும் இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள். நண்பர்கள் எதிரியாகும் அமைப்பு இருக்கிறது. பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். செவ்வாய், சனி ஐந்தில் இணைவதால் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. ஐந்தாமிட செவ்வாய் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்குவார் என்பதால் அனைத்திலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.

உத்திரம்

பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம். மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு. வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள்.

அஸ்தம்

யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் மார்ச் மாதம் சுப நிகழ்ச்சிகளும், நல்ல செய்திகளும், பணவரவும் உள்ள மாதமாக இருக்கும். வருமானம் குறையாது. மாத முற்பகுதியில் எதிர்பாராத லாபங்களும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் உண்டு. தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. ராசிக்கு சனியின் பார்வையால் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும்.

சித்திரை

உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் சித்திரைக்கு திருப்புமுனையான மாதமிது. அதேநேரம் பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால் முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லமாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். மார்ச் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான்.

சுவாதி

சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் உங்களை தேடி வந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் வருமானம் வரக்கூடிய சூழல் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இனி இருக்கும். தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

விசாகம்

விசாகத்தினர் இந்த மாதம் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அனுஷம்

உங்களில் ஆன்மிகத்துறை, கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் இந்த மாதம் நன்மைகளை அடைவீர்கள். இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. எதையும் சமாளிக்கும் திறன் கொண்ட உங்களுக்கு யாரும் சொல்லித் தர தேவையில்லை. சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் சுலபமாக சமாளிக்க முடியும். அதிக முயற்சி இல்லாமலே வேலைகளை முடிப்பீர்கள். சிலருக்கு மறைமுகமான வழியில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும்.

கேட்டை

இதுவரை பிரச்னைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இனி அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். மார்ச் மாதம் முழுவதும் உங்களுக்கு மன தைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும் என்பது உறுதி. இது உங்களுக்கு நல்ல மாதம்தான். இதுவரை சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். எதையும் சமாளிப்பீர்கள். இனிமேல் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனதைத் தளர விட்டு விட வேண்டாம். இனி உங்களுக்கு நல்ல காலம்தான்.

மூலம்

இந்த மாதம் ஒரு சிறப்பு பலனாக நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மூலநட்சத்திர இளைய பருவத்தினருக்கு எதிர்காலத்தையும் மனித உறவுகளையும் புரிய வைக்ககும் மாதம் இது. தொழில் விரிவாக்கம், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது செய்யவேண்டாம். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.

பூராடம்

கிரக நிலைகள் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்கும் என்பதால் அனைத்திலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். அந்தக் காதல் மூலம் பின்னாட்களில் மனஅழுத்தம் வரும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். நிதானம் தேவைப்படும் மாதம் இது.

உத்திராடம்

இந்த மாதம் நடக்கும் செவ்வாய் சனி இணைவால் உங்களுக்கு பணவரவு இருக்கும். எதிர்பார்த்த தொகை வரும். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் உண்டு. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம்.

திருவோணம்

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு முக்கிய பலனாக இந்த மாதம் வாக்குவாதங்களைத் தவிருங்கள். அதனால் நண்பர்களே கோபத்தால் பாதிக்கப்பட்டு எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது. இதுவரை முயற்சி அளவிலேயே இருந்து வந்த சில காரியங்கள் இப்போது நிறைவேறும். சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த மாதம் வருமானமும் உண்டு.

அவிட்டம்

உங்களில் மகர ராசியில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். கும்பத்தினருக்கு இந்த பலன் பொருந்தாது. பழி வாங்கும் நோக்கத்தோடு வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் திரும்பி வருவீர்கள். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கடன் வாங்கும் சூழல்கள் வரும். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் அதை திருப்பி தருவதற்கும் வருமானம் வரும்.

சதயம்

சதயத்தின் சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது. மனோதைரியம் கூடுதலாகும். பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள். நட்சத்திரநாதன் ராகு நல்ல நிலையில் இருப்பதால் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகள் அமையும். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. மார்ச் மாதம் மகிழ்ச்சி மாதம்.

பூரட்டாதி

உங்களில் மீனத்தில் பிறந்தவர்களுக்கு கைப்பொருள் திருட்டுப் போகுதல், பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கும் என்பதால் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக செல்போனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் கசப்பும் இனிப்பும் கலந்த திருப்பமான விஷயங்கள் இருக்கும். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இளையவர்கள் அடைவீர்கள். உங்களில் கும்பராசியை சேர்ந்தவர்களுக்கு இப்போது திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு.

உத்திராட்டாதி

இந்த மாதம் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள். எதையும் சமாளிக்கவும் செய்வீர்கள். இளையவர்களுக்கு காதல் அனுபவங்களும், எதிர்பாலினத்தவர் பற்றிய புரிதல்களும் கிடைக்கும். செவ்வாய் சனி இணைவால் சிலருக்கு அம்மாவின் வழியில் மன வருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

ரேவதி

மார்ச் மாதம் செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். குறிப்பாக வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் கூடி வரும். இனிமேல் சிக்கல்கள் எதுவும் இருக்காது. எடுத்த காரியம் வெற்றி பெறும். உடன் வேலை செய்பவர்கள் உங்கள் வேகத்திற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.

No comments :

Post a Comment