Tuesday, February 27, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 176 (27.2.18)


கே.மோகன்ராஜ், தஞ்சாவூர்.

கேள்வி:

ஜோதிட கற்றுக்குட்டிகளின் கலங்கரை விளக்கத்திற்கு இந்த முரட்டு ரசிகனின் வணக்கங்கள். இங்குள்ள ஜோதிடர் என் மூன்று வயது பெண் குழந்தையை தத்துக் கொடுக்க சொல்கிறார். செய்யலாமா? அடுத்து வரும் பாதகாதிபதி சந்திரனின் தசை சனி பார்வை பெற்றுள்ளதால் பாதகம் செய்யுமா? இரண்டில் இருக்கும் செவ்வாய் எப்படி இருக்கும்? பதினொன்றாமிட ராகு நன்மைகளை செய்வாரா? மகளின் எதிர்காலம் பற்றி விளக்க வேண்டுகிறேன்.


பதில்:


கேது

17-11-2014, காலை 8.10, தஞ்சாவூர்

குரு

சந்

செவ்
ல,சூ
சு,சனி

பு

ராகு

(விருச்சிக லக்னம், சிம்ம ராசி. 1-ல் சூரி, சுக், சனி. 2-ல் செவ். 5-ல் கேது. 9-ல் குரு. 10-ல் சந். 11-ல் ராகு. 12-ல் புத. 17-11-2014, காலை 8.10, தஞ்சாவூர்)

குழந்தைகளை தத்துக் கொடுப்பது, ஆஸ்டலில் சேர்ப்பது பற்றியெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. இதற்கென தனிவிதிகளும் கிடையாது. இவையெல்லாம் ஜோதிடர்களாக எதையோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்வதுதான். ஜோதிடம் என்பது இவைகளைத் தாண்டி எதிர்காலத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாக உணர்த்தும் ஒரு அபாரமான கலை. தத்துப்பித்தான விஷயங்கள் ஜோதிடத்தில் இல்லை.

ஒரு ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரத்தில் அமர்ந்து, அவர்கள் லக்ன கேந்திரத்திலும் இருந்தால் அது முதல்தரமான யோகஜாதகம். இதைவிட மேலாக மகளின் ஜாதகத்தில் லக்னத்தை பங்கமற்ற உச்சகுரு பார்க்கிறார். அவரின் தசையும் நல்ல பருவத்தில் வர இருக்கிறது. 

லக்னாதிபதியும் உச்ச கிரகத்தின் வீட்டில் இருக்கிறார். அடுத்தடுத்து வாழ்நாள் முழுவதும் யோக தசைகள் வர இருக்கின்றன. இவையெல்லாம் எதிர்காலத்தின் பெருமைப்படத்தக்க ஒரு குழந்தையை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது.

பாதகாதிபதி சந்திரனை பாப கிரகமான சனி பார்ப்பதால் அவர் பாதகம் செய்யும் வலிமையை இழக்கிறார். பாதகாதிபதியை சுபக் கிரகம் பார்ப்பதுதான் தவறு. லக்னாதிபதி செவ்வாய் உச்சனின் வீட்டில் இருப்பதாலும், ராகு கன்னியா ராகுவாகி பதினொன்றில் உள்ளதாலும் பலத்த யோகத்தை செய்வார்கள். எதிர்காலத்தில் உங்கள் மகள் அரசு உயரதிகாரியாக அதிகாரம் செய்யும் அமைப்பில் வருவாள்.

எம்.சேகர், திருச்சி-16.

கேள்வி:

மனைவியை பிரிந்து எட்டு வருடங்கள் ஆகிறது. சில பிரச்சினையால் சேர்ந்து வாழ முடியவில்லை. நானும், என் மனைவியும் சேர்ந்து வாழ முடியுமா?

பதில்:

ஜோதிடம் என்பது பிறந்தநாள், நேரம், இடத்தைக் கணக்கில் கொண்டு சில மூல விதிகளின்படி எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு காலவியல் விஞ்ஞானம். என் ராசி துலாம், நட்சத்திரம் சுவாதி, மனைவியின் ராசி மிதுனம், நட்சத்திரம் புனர்பூசம் என்று மட்டும் எழுதி விட்டு மனைவியுடன் சேர்வேனா? என்று கேள்வி கேட்கிறீர்கள். இதுபோல நாள், நேரம், இடம் போன்ற விவரங்கள் முழுமையாக இல்லாததால்தான் சில நேரங்களில் பதில் கொடுக்க நினைக்கும் கேள்விகளுக்கு கூட என்னால் பதில் தரமுடியாமல் போகிறது.

ஜோதிடத்தில் தோராயமாக ஏதோ ஒரு பலன் சொல்ல நினைப்பவர்களும், விதிகளுக்கு அப்பாற்பட்டு அருள்வாக்கு போல எதையோ சொல்வர்களும்தான் அரைகுறைத் தகவல்களை வைத்து பலன் சொல்வார்கள். தொடர்ந்து பத்து அல்லது பதினைந்து முறை கடிதம் அனுப்பும் பலர் கூட ஜாதகத்தில் பிறந்த நேரத்தை தருவதே இல்லை.

முடிந்தவரை சரியான பதில் சொல்ல நினைக்கும் ஒரு ஜோதிடனுக்கு துல்லியமான பிறந்த விவரங்கள் தேவை. தயவு செய்து பிறந்தநாள், நேரம், இடம் போன்ற விவரங்கள் இல்லாமல் கேள்விகளை அனுப்பாதீர்கள். இவை மூன்றும் இருந்தால்தான் எவ்வளவு பெரிய ஜோதிடராக இருந்தாலும் விதிப்படியான பலன்களை சொல்ல முடியும்.

எஸ். குழந்தைவேலு, தஞ்சாவூர்

கேள்வி:

என் பெண்ணின் எதிர்காலம் பற்றி அறிய விரும்புகிறேன். இவளுடைய கணவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்? இவளுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

பதில்:

பத்து வயது பெண் குழந்தை எப்படிப் படிக்கும் என்று கேட்பதை விடுத்து அவளின் திருமணத்தைப் பற்றிக் கேட்கும் உங்களைப் போன்றவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எதையாவது கேட்க வேண்டுமே என்று நினைத்து தயவுசெய்து கடிதம் எழுதாதீர்கள். நம் இருவருக்குமே இதனால் நேரம்தான் வீணாகிறது. ஒருவரின் பருவத்திற்கேற்ப தேவையான கேள்விகளை மட்டும் கேளுங்கள்.

பி.சரஸ்வதி அம்மாள், மதுரை.

கேள்வி:

75 வயதான எனது மனக்குறையை பலமுறை எழுதியும் நீங்கள் பதில் தர மறுக்கிறீர்கள். மகனுக்கு இருபது ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. பல கோவில்களுக்குச் சென்றும், மருத்துவச் செலவு செய்தும் பலன் இல்லை. இவனுக்கு குழந்தையில்லை என்பது தினமும் என்னை வாட்டுகிறது. மருமகள் சமீபத்தில் சந்திராஷ்டமம் இல்லாத ஒரு நாளில் காளகஸ்திக்கு சென்று சர்ப்பசாந்தி செய்து வந்திருக்கிறாள். திருசெந்தூர், கஞ்சனூருக்கும் போய் வந்திருக்கிறாள். எல்லா பரிகாரமும் என் மருமகள் மட்டும் தனியே போய்தான் செய்திருக்கிறாள். குழந்தை கிடைக்காத விரக்தியில் என் மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல்நலத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறான். மகன் வாழ்க்கையில் எப்போது வசந்தம் வீசும்? இந்தக் கடிதத்திற்காவது பதிலை எதிர் பார்க்கிறேன்.

பதில்:

குழந்தை பாக்கியம் என்பது கணவன்-மனைவி இருவரும் சேர்வதால் கிடைப்பது. அப்படிப்பட்ட ஒரு பாக்கியத்திற்கே கணவன்-மனைவி சேர்ந்து போக முடியாமல் மனைவி மட்டும் கோவில்களுக்கு போயிருக்கிறார் என்றால் பரிகாரம் செய்வதற்கு கடவுள் அனுமதி தரவில்லை என்று அர்த்தம்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு எந்த வித பரிகாரங்களும் கிடையாது மற்றும் பலன் தராது என்பதே உண்மை. குழந்தை கிடைக்காத விரக்தியில் என் மகன் குடிக்கிறான் என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு. குடிகாரர்களுக்கு குடிக்க ஒரு காரணம் வேண்டும். அது எதுவாக இருந்தாலும் கவலை இல்லை. அவ்வளவு தான்.

“ஏனப்பா.. குடிக்கிறாய்?” என்று ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு “எம்.ஜி.ஆர். இறந்து விட்ட சோகம் தாங்கவில்லை. அதனால் குடிக்கிறேன்” என்று சொன்னானாம். எம்.ஜி.ஆர். காலமாவதற்கு முன்னால் இருந்தே குடித்துக் கொண்டுதானே இருக்கிறாய் என்று திருப்பிக் கேட்டதற்கு “அப்போது காமராஜர் செத்து விட்டார் இல்லையா? அந்த துக்கம் தாங்காமல் குடித்தேன்” என்று சொன்னானாம். குடிகாரர்களுக்கு எல்லாமே காரணம்தான்.

மகன் ஜாதகத்தில் குழந்தையைக் குறிக்கின்ற குருபகவான் நீசமாகி, ஐந்தாமிடத்தை செவ்வாய், சனி பார்ப்பதும், மருமகள் ஜாதகத்தில் குருபகவான் சனியுடன் இணைந்து செவ்வாய் பார்வை பெறுவதும் கடுமையான புத்திர தோஷம். கூடுதலாக மருமகளுக்கு விருச்சிகம். மகனுக்கு மேஷராசி என்பதும் கடந்த ஐந்து வருடங்களாக மருமகள் எந்தவகையிலும் நிம்மதியாக இல்லை என்பதையும் காட்டுகிறது.

முதலில் உங்களுடைய பாசத்தால் மகனைத் திருத்த முயற்சி செய்யுங்கள். குடியை நிறுத்த சொல்லுங்கள். கணவன், மனைவி இருவரும் இணைந்து ஸ்ரீகாளகஸ்திக்கு செல்வதும், குருவிற்கான முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுவதன் மூலமும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவர் தனியே சமைக்கிறார், என்ன செய்வது?

பா.பிரியா, சேலம்.

கேள்வி:

எனக்கு விருச்சிகராசி கேட்டை நட்சத்திரம். கணவருக்கு கன்னிராசி. திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. கடந்த சிலமாதங்களாக கணவருக்கும் எனக்கும் இடையே சண்டை வந்து பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. அதனால் அவர் என்னுடன் பேசுவதில்லை. அவரைப் பிரிந்து இரண்டு மாதம் அம்மா வீட்டில் இருந்தேன். மாமியார் வந்து பேசி என்னைக் கூட்டிச் சென்றார். இன்றுவரை கணவர் என்னுடன் பேசுவது இல்லை. வீட்டில் சாப்பிடுவது இல்லை. தனியே சமைத்து சாப்பிடுகிறார். தினமும் குடிக்கிறார். போதையில் இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறார். அவருடைய கோபம் குறைந்து எப்போது என்னிடம் பேசுவார்? இந்த பிரச்னை எப்போது சரியாகும்? நாங்கள் சேர்ந்து பழையபடி சந்தோஷமாக எப்போது வாழ முடியும்? பதிலுக்கு காத்திருக்கிறேன்.

பதில்:

வெறும் ராசியை மட்டும் அனுப்பி பதில் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் தருவதில்லை என்றாலும் கூட கடிதம் முழுக்க ஓடும் உன் அப்பாவித்தனத்தை நினைத்தும், இப்படிப்பட்ட ஒரு பெண்ணை கண்ணீரில் வாழ வைத்துக் குடித்துக் கொண்டிருக்கிறானே உன் கணவன் என்று நொந்து கொண்டும்தான் பதில் தருகிறேன் அம்மா...

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் கடந்த சில மாதங்களாக கடுமையான சோதனைகளை அனுபவித்து விட்டீர்கள். நீயும் அதற்கு விதிவிலக்கு இல்லை. பெரும்பாலான விருச்சிகராசி இளைய பருவத்தினர் சென்ற வருடம் சண்டை, சச்சரவு, வழக்கு, கோர்ட், கேஸ் என்றுதான் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்த வருடம் அந்த நிலைமை இருக்காது.

விருச்சிகத்தினர் அதிலும் குறிப்பாக கேட்டை நட்சத்திரத்தினர் அவர்களுடைய நட்சத்திரத்தில் சனி சென்று கொண்டிருந்ததால் சிந்திக்கும் திறனை இழந்து விட்டிருந்தீர்கள். அதனால் பொறுமையிழந்து கோபமாகி நீங்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தில் மேலும் சிக்கலை வரவழைத்துக் கொண்டீர்கள். சென்ற வருடத்துடன் விருச்சிகத்தின் பாதிப்புகள் விலகி விட்டன. எனவே இப்போது இருக்கும் சோதனைகளும் மன அழுத்தமும் இனி இருக்காது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உன் பிரச்னைகளில் நீ தீர்வை உணருவாய் அம்மா. கணவனின் நடத்தையில் மாற்றங்கள் தெரியும். இனிமேல் உன்னைக் கஷ்டப்படுத்தும் விஷயங்கள் எதுவும் நடக்காது. பொறுத்தது பொறுத்தாய். இன்னும் சிலவாரங்கள் பொறுமையாக இரு. ஏழு வருடமாகப் புரிந்து கொள்ளாத கணவனைப் பற்றி கடந்த ஏழு மாதத்தில் புரிந்து கொண்டிருப்பாய். இதுதான் வாழ்க்கை என்பதை ஓரளவிற்கு நீ உணர்ந்து விட்டதால் இனிமேல் தெளிவாக நடந்து கொள்வாய். ஏழரைச்சனி உன் கணவனை, மாமியாரை, அம்மாவை, உலகத்தை, வாழ்க்கையை உனக்குப் புரிய வைத்து விட்டது.

ஜென்மச்சனி முடிந்து விட்டதால் உன் வாழ்க்கையில் இனி சோதனைகள் இல்லை. இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று உன் கணவன் குடித்து விட்டு உளறுவதை பெரிதாக நினைத்துக் கொண்டு கவலைப் பட்டுக் கொண்டிராதே. உறுதியாக அப்படி ஒன்று நடக்காது. உன்னை விட்டால் உன் புருஷனுக்கு வேறு நாதியில்லை. அது அவனுக்கும் தெரியும். உன்னை பயமுறுத்திப் பார்க்கிறான் அவ்வளவுதான்.

நீ வீட்டில் இருக்கும்போதே உன் கணவன் தனியே சமைக்கிறான் என்றால் கடிதத்தில் காட்டியிருக்கும் குழந்தைத்தனத்தை விட நீ எப்படிப்பட்ட குழந்தை என்பதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இதை அனுமதித்திருக்கலாமா நீ? உடனடியாக அழுதோ, அன்பு காட்டியோ அல்லது நீ பட்டினி கிடந்தோ மாமியார் மூலமோ அதை இன்றுடன் நிறுத்து. அதற்காக ஆர்ப்பாட்டம் செய்யாதே. ஒரு பெண் அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க வேண்டும்.

நீ பிறப்பதற்கு முன்பு வெளிவந்த சில திரைப்படங்களில் தனியே சமைக்கும் கணவனை எப்படித் திருத்துவது என்று இயக்குனர் பாக்கியராஜ் சில ஐடியாக்களைக் கொடுத்திருப்பார். அதை உன் மாமியாரிடமோ, அம்மாவிடமோ கேட்டுத் தெரிந்து கொள். இனி என்றும் கணவனுடன் சந்தோஷமாக இருப்பாய் அம்மா. கவலைப்படாதே. உன் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன.

No comments :

Post a Comment