Tuesday, January 23, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 171 (23.1.18)


எம் .மயூரநாதன், தஞ்சாவூர்.

கேள்வி :

ஒப்பற்ற என் குருநாதரின் திருப்பாதங்களை தெண்டனிட்டு நமஸ்கரிக்கிறேன். மாலைமலரில் வெளிவந்த ஜோதிடம் எனும் தேவரகசியம் மற்றும் உங்கள் ஜாதகம் எப்படி கேள்வி -பதில்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடையில் சில பகுதிகள் என்னிடம் இல்லை. நீங்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் பதில்கள் புத்தகமாக வெளி வந்திருக்கிறதா? வந்திருந்தால் அவைகள் எங்கே கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.


பதில்:

மாலைமலரில் கடந்த சில வருடங்களாக நான் எழுதிய ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகள் அதே பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. கேள்வி-பதில்களும் குருஜி பதில்கள் என்ற பெயரில் புத்தகமாக வந்திருக்கின்றன. புத்தகங்களின் விலை விபரங்கள் மற்றும் எங்கே கிடைக்கும் என்ற விபரங்களை 8681 99 8888 என்ற எனது அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

பி .புருஷோத்தமன், புதுச்சேரி-3.

கேள்வி :

புதுச்சேரி கூட்டுறவு சங்க பணியில் இருந்தேன் . நட்டத்தில் இயங்கியதால் 2012-ம் ஆண்டு மூடுவிழா செய்யப்பட்டது. ஆனால் எனக்குச் சேர வேண்டிய பலன்கள் எதுவும் இன்றுவரை கிடைக்கவில்லை. கோர்ட்டில் கேஸ் இருக்கிறது. வேலையின் பயன் எப்போது கிடைக்கும் என்று தெரியப்படுத்த வேண்டுகிறேன். மனைவியுடன் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. எப்போது தீரும்? எனது மரணம் எப்பொழுது இருக்கும்?

பதில்:

விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரும் 2012-ம் ஆண்டு முதல் நன்றாக இல்லை என்றுதான் மாலைமலரிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அனுஷம் நட்சத்திரம் விருச்சிகத்தில் பிறந்த நீங்களும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. வரும் ஏப்ரல் முதல் மாற்றங்களை உணர்வீர்கள். வேலையின் பயன்கள் அடுத்த வருடம்தான் கிடைக்கும். வழக்கு உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பாகும். பணம் வந்தவுடன் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் சரியாகும் என்பதற்கு ஜோதிடம் தேவையில்லை. மரணத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் அதைப் பற்றி கவலை வேண்டாம்.

தி .கலைவாணி, கோவை-45.

கேள்வி :

ஒவ்வொரு ஜோதிடரும் , ஒரு மாதிரியாக கூறுவதால் எனது ராசி சிம்மமா? கன்னியா என்பது தெரியவில்லை. எதிலும் உண்மையும், தெளிவும், துல்லியமும் உங்களிடம் இருப்பதால் நீங்கள்தான் இதற்கு முடிவு சொல்ல வேண்டும். எனது ஜாதகத்தில் 2, 8-ல் ராகு-கேதுக்கள் இருப்பதால் சர்ப்ப தோஷம் என்றும், 4-ல் செவ்வாய் உள்ளதால் செவ்வாய் தோஷம் என்றும் சிலர் சொல்கின்றனர். ஒரு சிலர் பாபரான சனியோடு இணைந்த ராகுவால் சர்ப்ப தோஷமும், சனியின் 3-ம் பார்வையால் செவ்வாய் தோஷமும் நிவர்த்தி பெற்றது என்றும் சொல்கின்றனர். இதில் எது சரி என்றும் நீங்கள்தான் விளக்க வேண்டும். திருமணம் எப்போது நடக்கும்? தோஷம் உள்ள மணமகனைத்தான் பார்க்க வேண்டுமா? எனக்கு புத்திர பாக்கியம் உண்டுதானே? அடுத்து வரும் தசைகள் யோகம் செய்யுமா? எனது ஜாதகம் யோக ஜாதகமா?


பதில்: 



செவ்

பு, சு

சூ

குரு

1-6-1990
இரவு 7.40 தூத்துக்குடி

கேது
சனி, ரா


சந்

(தனுசு லக்னம், கன்னி ராசி. 2-ல் சனி, ராகு. 4-ல் செவ். 5-ல் புத, சுக். 6-ல் சூரி. 7-ல் குரு. 8-ல் கேது. 10-ல் சந். 1-6-1990, இரவு 7.40, தூத்துக்குடி)

திருக்கணித பஞ்சாங்கமே சரியானது என்பது பலமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நானும் இதை அடிக்கடி எழுதி இருக்கிறேன். ஜோதிடர்களும் தற்போது இதை உணர்ந்து வருவதால் தமிழகத்தை தவிர்த்து இந்தியா முழுவதும் ஏற்கனவே கைவிடப் பட்டு விட்ட வாக்கியப் பஞ்சாங்கம் இன்னும் சில ஆண்டுகளுக்குள் தமிழகத்திலும் விலக்கப்படும் என்பது காலத்தின் கட்டாயம். திருக்கணிதப்படி உனக்கு கன்னி ராசி என்பதே சரியானது.

தோஷத்தை தருகின்ற ஒரு பாபக்கிரகம் இன்னொரு பாபக் கோளுடன் சேரும் போது இன்னும் அதிகமான கெடுபலன்களைத்தான் தருமே தவிர அதனுடைய தோஷம் நீங்கும் என்பது தவறான கருத்து. இதுபோன்ற அபத்தமான கருத்துக்களை ஜோதிடர்கள்தான் உணர்ந்து உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் இந்த சேர்க்கையில் இரு கிரகங்களும் எத்தனை டிகிரி இடைவெளியில், எந்த பாவத்தில் இருக்கின்றன என்பதை மிக நுணுக்கமாக கணித்தே பலன் அறிய வேண்டும்.

உன்னுடைய ஜாதகத்தில் சனியும், ராகுவும் 15 டிகிரி இடைவெளியில் இருப்பதால் பாதகங்கள் எதுவும் உனக்கு வந்துவிடப் போவது இல்லை. ஆனால் நடக்கும் ராகு தசை, ராகு-சனியின் சேர்க்கையால் பெரிய நன்மைகள் எதையும் உனக்கு செய்து விடாது. இரண்டாமிடத்தில் சர்ப்பக் கிரகங்களும், சனியும் தொடர்பு கொண்டுள்ளதால் உனக்கு 30 வயதில் ராகுதசை, புதன் புக்தியில் திருமணமாகும்.

4-ல் செவ்வாய் இருப்பது உன்னைப் பொருத்தவரையில் தோஷம் அல்ல. இங்கே செவ்வாயின் தோஷம் வளர்பிறைச் சந்திரனின் பார்வையாலும், செவ்வாய் குருவின் வீட்டில் இருப்பதாலும்தான் நீங்குகிறதே தவிர சனியின் பார்வையால் அல்ல. சனியின் பார்வையை பெற்ற செவ்வாய் கூடுதலான தீமைகளைத்தான் அந்த பாவத்திற்கு தரும். சனியின் பார்வையால் செவ்வாயின் தோஷம் நீங்கி விட்டது என்பது ஜோதிடத்தை தலைகீழாக புரிந்து கொண்டதாகும்.

எந்த ஒரு ஜாதகத்திலும், லக்னாதிபதியும், லக்னமும் வலுத்திருந்தால் தோஷங்கள் இல்லை என்பதோடு, குறைகள் எதுவும் இருக்காது என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். உன்னுடைய ஜாதகத்தில் லக்னாதிபதி குரு 7-ல் அமர்ந்து லக்னத்தை பார்ப்பதோடு, அடுத்து குருவின் தசையும் நடக்க இருப்பதால் உனக்கு நிறைவான மணவாழ்க்கை, நல்ல கணவனும் அமைவார்கள். தோஷமுள்ள வரனைத்தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை. புத்திர பாக்கியத்திற்கும் குறைவில்லை. லக்னம் வலுத்திருப்பதால் உன்னுடைய ஜாதகம் யோக ஜாதகம்தான்.

டி .கருணாகரன், புதுச்சேரி-8.

கேள்வி :

என் அம்மா எனக்குத் தரும் தொல்லைகளைச் சொல்ல முடியாது . அதுவும் திருமணமான பிறகு தாயாரால் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். 2012-ம் ஆண்டிற்கு பிறகு கடுமையான கடன் தொல்லையால் மனைவியின் அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து மீட்கவும் முடியாமல், வட்டி கட்டவும் முடியாமல் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. அரசுப் பணியில் இருந்தும் 2 மகன்களின் பள்ளிக் கட்டணத்திற்கு வாங்கிய கடன் கூட திரும்ப கொடுக்க முடியவில்லை. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. கடனும், என் தாயாரின் இன்னல்களும் எப்போது தீரும்?


பதில்: 



சனி
சந்,
ரா

24-9-1969,
பகல் 3.10, புதுச்சேரி

சுக், கே

செவ்
சூ, பு, குரு

(மகர லக்னம், கும்ப ராசி. 2-ல் சந், ராகு. 4-ல் சனி. 8-ல் சுக், கேது. 9-ல் சூரி, புத, குரு. 12-ல் செவ். 24-9-1969, பகல் 3.10, புதுச்சேரி)

ஒரு ஜாதகத்தில் சந்திரனும், 4-ம் வீடும், அதன் அதிபதியும் வலுவிழந்தால் தாயார் மூலமாக எவ்வித நன்மைகளும் இருக்காது. மாறாக கெடுபலன்கள் இருக்கும். அம்மாவே விரோதி ஆவது இதுபோன்ற அமைப்புகளால்தான். அவயோக கிரகங்களின் தசாபுக்தி அமைப்புகள் நடக்கும்போதோ அல்லது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கும்போதோ இது போன்ற பிரச்னைகளை அனுபவிப்பீர்கள். என்னுடைய கணிப்பின்படி தற்போது உங்கள் மனைவி, மகன்களில் யாருக்காவது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும்.

தாயார் ஸ்தானமான நான்கின் அதிபதி செவ்வாய் பனிரெண்டில் மறைந்து, நான்காம் வீட்டில் நீச வக்ர சனி அமர்ந்து, மாதாகாரகனாகிய சந்திரன் ராகுவுடன் இணைந்ததால் தாயாரால் உங்களுக்கு நன்மைகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. மகர லக்னத்திற்கு அவயோக கிரகங்களான சூரிய, சந்திர, செவ்வாயின் புக்திகள் உங்களுக்கு 2012 முதல் நடப்பதால் தற்போதைய பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன. வரும் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்க இருக்கும் குரு புக்தியில் இருந்து அம்மாவின் பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். அடுத்த வருடம் முதல் கடன்களை அடைக்கத் துவங்கி இன்னும் இரண்டு வருடங்களில் பிரச்சினைகள் அனைத்தும் முழுக்க தீர்ந்து நிம்மதியாக இருப்பீர்கள்.

அருள்வாக்கில் சொன்ன பெண்ணே அமையுமா?

சி .எஸ்.ராஜேந்திரன், சென்னை-40.

கேள்வி :

சிறுவயது முதல் அருள்வாக்கு ஆலயங்களுக்கு சென்று கொண்டிருக்கிறேன் . நான் மிகவும் நம்பும் ஒரு ஆலயத்தில் முப்பது வருடங்களுக்கு முன் 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி அன்று, ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு இந்தப் பெண்ணைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் உனக்கு மனைவியாக அமைய மாட்டார் என்று வரம் கொடுத்தார்கள். அந்தப் பெண் இருப்பது ஐதராபாத் என்று சொன்னார்கள். ஆனால் இன்றுவரை அது சம்பந்தமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. திரும்பத் திரும்ப அருள்வாக்கு கேட்டு காலம்தான் கடந்து போகிறது. இப்போது எனக்கு 57 வயது ஆகிவிட்டது. அந்தப் பெண்ணே அமையுமா? அல்லது வேறு பெண் பார்க்கலாமா? எனக்கு எப்போது திருமணம் நடக்கும். என் சிக்கலுக்கு விடை கூறுங்கள் அய்யா.

பதில்:


கே

19-1-1960
இரவு 10.40 சென்னை

சூ,பு
செவ்,
சனி
சு,
கு
ல, சந், ரா

(கன்னி லக்னம், கன்னி ராசி. 1-ல் சந், ராகு. 3-ல் சுக், குரு. 4-ல் செவ், சனி. 5-ல் சூரி, புத. 7-ல் கேது. 19-1-1960, இரவு 10.40, சென்னை)

ஜோதிடம் என்பது முறையான கணித சமன்பாடுகளுக்குள் அடங்கிய சில விதிகளுக்குட்பட்டு உங்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் அபாரமான ஒரு தெய்வீகக் கலை. ஆனால் அருள்வாக்கு என்பது அப்படி அல்ல. முப்பது வருடங்களாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கடிதம் எழுதும் உங்களைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஜாதகப்படி சுக்கிரனும், குருவும் 2 டிகிரிக்குள் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து 4-ம் வீட்டில் செவ்வாய், சனி இணைந்ததாலும் குருவும், செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றதாலும் உங்களுக்கு முறையான திருமணமோ, குழந்தை பாக்கியமோ கிடைக்க வாய்ப்பு இல்லை. சுக்கிரனும், குருவும் மிக நெருக்கமாக இணைந்தாலே குரு தரும் புத்திரபாக்கியத்தை சுக்கிரன் தர விட மாட்டார். சுக்கிரனின் தாம்பத்திய சுகத்தை குரு தடுப்பார் என்பதை மாலைமலரில் வெளிவந்த ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.

மனிதர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை செய்யக் கூடிய இவ்விரண்டு சுபக் கிரங்களும் ஒருவருக்கொருவர் எதிர்த்தன்மை கொண்டவர்கள் என்பதால்தான் இவர்களை அசுரகுரு, தேவகுரு என்று நம்முடைய ஞானிகள் வகைப்படுத்தி இருவரும் இணையவே முடியாத, சேரக்கூடாத ஜென்ம விரோதிகள் என்று நமக்கு விளக்கினார்கள்.

சமபலம் பொருந்திய விரோதிகள் இருவர் சண்டையிடும் போது அங்கே முடிவு கிடைப்பது கடினம். ஒருவரை ஒருவர் ஜெயிக்க இயலாமல் இருவருமே களைத்துப் போவார்கள் என்பதால் குரு சுக்கிரன் மிகவும் நெருக்கமாக இணைவது ஒருவருக்கு நன்மைகளை தராது. லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். இவற்றை ஏற்கனவே மாலைமலரில் எழுதியிருக்கிறேன். பரிகாரங்களைச் செய்து கொள்ள பரம்பொருள் அனுமதிக்கும் பட்சத்தில் எஞ்சிய வாழ்க்கை ஏமாற்றம் இன்றி இருக்கும்.

1 comment :

  1. அன்புள்ள குருஜி
    அன்பு வணக்கம். 5ம், 7ம் வீடுகளில் கிரகங்கள் இல்லாவிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்குமா?
    பதலை ஆவலுடன் எதிர்பார்க்கும்

    ராஜம் ஆனந்த்

    ReplyDelete