Tuesday, January 30, 2018

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் 2018- தைப்பூச சந்திர கிரகணம்


வரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இக் கிரகணம் தை மாதம் 18ம் நாள், ஆங்கிலப்படி 2018 ஜனவரி 31ம் தேதி மாலை 5.16 க்கு ஆரம்பமாகி இரவு 8.40 மணிக்கு நிறைவடைகிறது. ஜோதிட வார்த்தைகளின்படி கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் கிரகணம் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் இது முடிவடையும்.

பூமியின் நிழலான ராகுவால் ஏற்பட இருக்கும் இந்தக் கிரகணத்தின் போது ஒரு நிலையில் சந்திரனின் வான்வெளி அமைப்பில் மிக நெருக்கமாக மூன்று டிகிரிக்குள் பூமியில் நிழல் படரும். அதாவது சந்திரனும், ராகுவும் கிரகண நிலையில் மூன்று டிகிரிக்குள் இணைந்திருப்பார்கள்.

பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, ராகு எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும் போது, சந்திரன் சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களான பூசம், ஆயில்ய நட்சத்திரங்களின் பின்னாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தின் அருகிலும் இருப்பார். எனவே கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளியும் மறைக்கப்பட்டு பாதிப்படையும்.

எனவே இந்தக் கிரகணத்தினால் குரு, புதன், சனி ஆகிய மூன்று கிரகங்களின் ஆளுமை நட்சத்திரங்களான புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கிரகணத்தன்று மட்டும் தோஷம் எனப்படும் ஒரு சிறிய பாதிப்பினை அடைவார்கள்.

மேற்படி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அன்று மட்டும் ஒரு சில உடல், மனச் சங்கடங்களை அடையக் கூடும். எனவே மேற்கண்டவர்கள் கிரகண நேரத்தில் எதையும் உட்கொள்வதையும், முக்கியமான எவற்றையும் செய்வதை தவிர்க்கலாம். இவர்கள் கிரஹணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்திற்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டினை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்து பின் உணவருந்துவது நல்லது.

மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவது நல்லதல்ல. பிறந்த ஜாதகப்படி சந்திரதசை, சந்திரபுக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும்.

No comments :

Post a Comment