புத்தாண்டின் முதல் மாதம் அசுவினிக்கு அமோகமான மாதமாக இருக்கும். இனிமேல்
பிரச்னைகள் தீருவதை பார்க்க முடியும். வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான
ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின்
திருமணம் கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இனிமேல்
சிக்கல்கள் எதுவும் இருக்காது. எடுத்த காரியம் வெற்றி பெறும். பெண்களுக்கும்,
வியாபாரிகளுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் வருமானம் உள்ள
மாதம்தான்.
பரணி:
உங்களில் இளைய பருவத்தினர் சிலருக்கு இந்த மாதம் காதல் அனுபவங்கள் ஏற்படும்.
நட்சத்திர நாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் பணவரவு நன்றாகவே இருக்கும்.
எதிர்பார்த்திருந்த தொகை வரும். சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது.
உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக
சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். அலுவலகங்களில்
நிம்மதியான சூழல்கள் இருக்கும். மன அழுத்தம் தரும் டார்கெட் உள்ள வேலைகளை
இனிமேல் செய்ய வேண்டியிருக்காது.
கிருத்திகை:
இந்தமாதம் கிருத்திகை நட்சத்தினரின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள்
நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல்
நடக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித்
தொகைகள் வசூலாகும். குறிப்பிட்ட சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும்
பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். வெகுநாட்கள் திருமணம் தாமதமான
பெண் குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும்.
ரோஹிணி:
மாத ஆரம்பத்தில் நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து
கொண்டு ஜெயித்து காட்டுவீர்கள். உங்களின் தைரியம் கூடுதலாகும். முதல் வாழ்க்கை
கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இனி நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள்.
பெண்களால் செலவுகள் இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில்
விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்கள்
திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
மிருகசீரிடம்:
மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக்
கம்பத்தை தொடப் போகிறீர்கள். சிலருக்கு இந்த மாதம் சுபகாரியச் செலவுகள் செய்ய
வேண்டி இருக்கும். கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு
உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். கோபத்தைக்
கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன்
இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. பெண்களால் சுகமும், உல்லாச
அனுபவங்களும் கிடைக்கும் மாதம் இது.
திருவாதிரை:
இந்த மாத கிரக நிலைகள் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை
உண்டாக்கும் என்பதால் அனைத்திலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் முதன்மையில் இருக்க
விரும்புவீர்கள் என்பதால் இந்தமாதம் நல்லமாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள
உயர்வு போன்றவைகள் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க
வேண்டியது அவசியம். வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிமாநிலத்தில் மேற்படிப்பு
படிக்கவோ செல்ல முடியும்.
புனர்பூசம்:
இந்த மாதம் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல்
தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வீண்
வாக்குவாதத்தை தவிருங்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள்.
வியாபாரம் தொழில் லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு. வீட்டுத் தேவைக்கான பொருள்
வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி
உறவு அன்யோன்யத்துடன் இருக்கும்.
பூசம்:
பூச நட்சத்திரத்தினர் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு
கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு
கிடைக்கும் பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும்,
வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள்
இருக்கும் என்றாலும் பணவரவு தடைபடாது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை
செய்வோருக்கு இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சுறுசுறுப்பாக
காரியம் ஆற்ற வேண்டியது அவசியம்.
ஆயில்யம்:
இந்த மாதம் எதையும் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால்
எதையும் சாதிக்க முடியும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள்
இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள்.
அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச்
செய்பவர்கள், மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் போன்ற துறைகளில் இருப்பவர்கள்
லாபம் அடைவீர்கள். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து
விட்டதால் ஜனவரி மாதம் நல்ல மாதமே.
மகம்:
ஜனவரி மாதம் மகத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். உங்கள்
கெடுதல்கள் எல்லாம் சென்ற வருடத்தோடு முடிந்து விட்டது. இந்த மாதம் உங்கள்
நட்சத்திர நாதன் கேது சுபவலுப் பெறுவதால் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும்.
செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. கடன்
விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல்
இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு
அதிகமாக நன்மைகள் நடைபெறும்.
பூரம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும்
விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப்
பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். ஜனவரி மாதம் உங்களுக்கு
மிகவும் நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும்
விஷயங்களும் இருக்காது. இளைஞர்களுக்கு மட்டும் அலைச்சல்கள் இருக்கும்.
கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம்
இருக்காது. இது யோக மாதம்தான்.
உத்திரம்:
ஜனவரி மாதம் வாழ்க்கைத் துணை விஷயத்தில் சில உரசல்கள் இருக்கும். உங்களில்
சிலர் ஈகோ பார்ப்பீர்கள். இளையவர்கள் காதலிப்பவரிடம் சண்டை போட்டுக்
கொள்வீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும்
அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சொந்தவீடு
இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். என்ன செலவு
வந்தாலும் வருமானம் குறையாது. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள்
இருக்கும். சொந்த தொழில் சிறக்கும்.
அஸ்தம்:
பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை
கிடைக்கும். கலைஞர்களுக்கு இது சிறந்த மாதம். தொழில், வியாபாரம் போன்றவைகள்
விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு
பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். இளைய சகோதரத்தால்
செலவுகள் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் உண்டு.
பிள்ளைகளுக்கான கடமைகளை சரியாகச் செய்ய முடியும். பிரிந்தவர்கள் ஒன்று
சேர்வார்கள்.
சித்திரை:
இந்த மாதம் முதல் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் நடக்க இருக்கிறது. வாழ்க்கையில்
உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு அச்சாரம் போடும் மாதம் இது. வியாபாரிகளுக்கு
இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல
சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். வீட்டில் ஆபரணச்
சேர்க்கையும், தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம்
மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.
சுவாதி:
யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் ஜனவரி மாதம் முழுவதும் சுப நிகழ்ச்சிகளும்,
நல்ல செய்திகளும், பணவரவும் இருக்கும். வருமானம் குறையாது. மாத முற்பகுதியில்
எதிர்பாராத லாபங்களும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் உண்டு. உங்களின் நல்ல
உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால்
சுவாதிக்கு திருப்பு முனையான மாதமிது. உங்களில் சிலர் பணம் வருவதற்கு பொய்
சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் துறைகளில் இருப்பவர்களுக்கு
நல்ல பணவரவு உண்டு.
விசாகம்:
சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் மாதமிது.
இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு இனிமேல் மாதமானால் வருமானம் வரக் கூடிய
சூழல் அமையும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இனி இருக்கும்.
தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளுங்கள். எடுத்துக் கொண்ட காரியங்களில்
சிறிதளவு முயற்சி செய்தாலே பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக்
கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும். ஜனவரி
மாதம் உங்கள் மாதம்.
அனுஷம்:
அனுஷத்திற்கு இனி எல்லாம் ஜெயமே. இடைவிடாத தோல்விகளில் இருந்து நீங்கள் வெளியே
வரும் மாதம் இது. பரம்பொருளின் கருணையினால் உங்கள் துன்பங்கள் அனைத்தும்
முடிந்து விட்டன. இனிமேல் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். தொல்லை
கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் தீரப் போகின்றன. புதிய நண்பர்கள்
கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல்
உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது
பக்கத்தில் வருவார்கள்.
கேட்டை:
கேட்டை இனி நிஜமாகவே கோட்டை கட்டி ஆளப் போகும் மாதம் இது. கடந்த காலங்களில்
இருந்து வந்த ஒன்றுமில்லாத ஒரு வெற்று நிலைமை மாறி யோக வாழ்க்கைக்கு திரும்ப
ஆரம்பிப்பீர்கள். இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த
காரியங்கள் அனைத்தும் இனி நிறைவேறும். மனம் உற்சாகமாக இருக்கும். சுப
காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். அலுவலகங்களில் சிறப்புக்களைப்
பெறுவீர்கள். அனைத்து தடைகளும் விலகும். சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத்
துணைவரை சந்திப்பார்கள்.
மூலம்:
ஜனவரி மாதம் தடைகளைக் கொடுத்தாலும் சமாளிக்கும் மாதமாக இருக்கும். உங்கள்
நட்சத்திரத்தில் சனி இருப்பதால் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள்
போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும மனஸ்தாபமும் இருக்கும். எதிலும் ஒரு
குழப்பத்தன்மையும் மந்தமும் உண்டு. எல்லா விஷயமும் கிணற்றில் போட்ட கல்லாக
கிடக்கும். நகர்த்த முடியாது. சில நேரங்களில் விரக்தியும், சோம்பலும் வரும்.
எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். மூலத்தினர் வெற்றி பெறுவதற்கு மட்டுமே
பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பூராடம்:
ஜனவரி மாதம் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக
மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய
முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை வரும். தொழில் விரிவாக்கம், பணம்
முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது செய்ய வேண்டாம். எதிலும் நிதானத்தை
கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிருங்கள்.
அரசியல்வாதிகள் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
உத்திராடம்:
இதுவரை தொழில் விஷயங்களில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அவை
நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். மாதம் முழுவதும் உங்களுக்கு மன
தைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும். ஜனவரி மாதம் உங்களுக்கு நல்ல
மாதம்தான். சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த விஷயங்கள் முடிவுக்கு வந்து
நிம்மதிக்கு வழிவகுக்கும். எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும்.
கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மனதைத் தளர விட்டு விட வேண்டாம். இனி
உங்களுக்கு நல்ல காலம்தான்.
திருவோணம்:
இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது.
செயல்திறன் கொண்ட உங்களுக்கு சொல்லித் தர வேண்டியிருக்காது. தேவையில்லாமல்
யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது
நல்லது. உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறுசிறு உடல் கோளாறுகள் வரலாம்.
சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து
கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அவிட்டம்:
உங்களில் மகர ராசி இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான மாற்றங்கள்
இருக்கும். கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு இப்போது திருமணம் தொடர்பான நல்ல
விஷயங்கள் உண்டு. மாத முற்பகுதியில் தனலாபங்களும், பணவரவுகளும் இருக்கும்.
15-ம் தேதிக்குப் பிறகு வருமானத்தைச் சேமிக்க முடியாமல் செலவு செய்ய வேண்டி
இருக்கும். அவிட்டத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் போட்டி
பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது
கடினம்.
சதயம்:
சதயத்தினர் இந்த மாதம் விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள்.
சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக்
கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். வேலை மாற்றும்
செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். ஆன்மிக
விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள்
செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும்
இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும்.
பூரட்டாதி:
நட்சத்திரநாதன் குரு நல்லநிலையில் இருப்பதால் உங்களில் கும்ப ராசிக்காரர்கள்
மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். மீனராசி இளைஞர்களுக்கு
அதிர்ஷ்டம் உள்ள மாதம் இது. நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை
தொழில் அமைப்புகள் சிலருக்கு அமையும். அந்நிய இன, மத மொழிக்காரர்கள்
உதவுவார்கள். குறுக்குவழி வேண்டாம். கைப்பொருள் திருட்டுப் போகுதல்,
பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால்
எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
உத்திராட்டாதி:
ஜனவரி மாத முக்கிய பலனாக உங்களில் சிலருக்கு பெண்கள் விஷயத்தில் கருத்து
வேறுபாடுகளும், சச்சரவுகளும் உண்டு. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி,
மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் கஷ்டங்கள் இருக்கும். தேவையற்ற
விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை
இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் தருவதாக உறுதி அளிக்க வேண்டாம்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும்
மாதம்தான்.
ரேவதி:
நட்சத்திரநாதன் புதன் பலமாக இருப்பதால் ஜனவரி மாதம் எதையும் சமாளிப்பீர்கள்.
பணவரவிற்கு பஞ்சம் இல்லை. வாழ்க்கைத்துணை விஷயத்தில் சிலர் ஈகோ பார்த்து
முறைத்துக் கொள்வீர்கள். சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்படும். திருமண
ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பயணங்களும்,
அது சம்மந்தமான நன்மைகளும் இருக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன்
காணப்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். கூட்டுத் தொழில் சிறப்பாக
நடைபெறும்.
No comments :
Post a Comment