Tuesday, 22 August 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 149 (22.8.2017)

எம். சரண்யா மகேஷ், நாகர்கோவில்.

கேள்வி :

என் கணவர் பிறந்த நட்சத்திரம் உத்திரம் என்று அவர் அம்மா சொல்கிறார். ஜோதிடர் உத்திராட்டாதி என்கிறார். இதில் எது உண்மை என்று நீங்கள்தான் தயவு செய்து பதில் தர வேண்டும்.


பதில் :

ஜோதிடர் சொல்வதுதான் சரி. கணவரின் பிறந்த தேதியான 9-11-1981, அதிகாலை 3.13 மணிப்படி உன் கணவரின் நட்சத்திரம் உத்திராட்டாதி, ராசி மீனம்.

எஸ். சங்கரக்குமார், காரமடை.

கேள்வி :

விபரம் தெரிந்ததில் இருந்து இன்றுவரை ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். குடும்பத்திலும் சண்டை. தொழிலும் நிரந்தரம் இல்லை. கடன் பிரச்சினையோடு கடந்த 3 வருடங்களாக இரண்டு கால்களிலும் நரம்பு சுருண்டு கொண்டு நடக்கக் கூட முடியாமல் மிகவும் அவதிப்படுகிறேன். நரம்பு சுருளும் ரத்தநாள பிரச்சினைக்கு எந்த தெய்வத்தை மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன் .

கேது

7.45pm
10.2.1958
கோவை

சூரி,பு 
சுக்
லக்

செவ் 
சனி

சந்,குரு 
ராகு

பதில் :

பனிரெண்டு வயதில் இருந்தே ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்ட சனி, புதன், சுக்கிர தசைகள்தான் நடந்து வந்திருக்கின்றன. இடையில் ஒரு ஏழு வருடம் மட்டுமே பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலையாக கேது தசை நடந்திருக்கிறது. ஜோதிடப்படி லக்னாதிபதியே ஆறில் மறைந்து, ஆறாமிடத்தோடு சம்பந்தப்பட்ட தசைகள் நடக்கும் போது ஒருவருக்கு கடன், நோய், எதிரித்தொல்லைகள் சமாளிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

உங்களுக்கு கடந்த மூன்று வருடங்களாக ஆறாமிடத்தில் அமர்ந்த சுக்கிரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிரன் சனியின் வீட்டில் இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான் நடக்கும். சனி எப்போதுமே ஒருவரை நொண்ட வைப்பார் என்பதால் உங்களுக்கு தற்போது ரத்தநாள பிரச்சினை வந்து அவதிப் படுகிறீர்கள். லக்னாதிபதி சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். இவற்றை சில வாரங்களுக்கு முன் மாலைமலரில் விரிவாக எழுதி இருக்கிறேன்.

ஆர். ரத்தினம், கோயம்புத்தூர்.

கேள்வி :

உங்களுடைய கேள்வி - பதிலை தவறாமல் படிக்கும் வாசகன் நான். என்னுடைய தொழில் அமைப்பு இதுவரை சரியாக அமையவில்லை. ஜோதிடம் படித்து ஜாதகம் பலன் சொல்லி வந்தேன். ஓரளவிற்கு பெயர் கிடைத்தது. ஆனால் இப்போது சரியாக அமையவில்லை. ஜாதகமே பார்க்கலாமா? அல்லது வேறு தொழில் செய்யலாமா? எது சரியாக அமையும்? வருங்காலம் எப்படி இருக்கும்?

சுக்

சூரி 
புத
கேது
11.25am
30.4.1961 
கும்பகோணம்

லக் 
செவ்
குரு 
சனி
ராகு
சந்

பதில் :

சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் ஒருவருக்கு ஜோதிட ஞானம் வரும். ஜோதிடத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். புதன் இருக்கும் வலுவிற்கு ஏற்றார் போல் அவருக்கு ஜோதிட சூட்சுமங்கள் பரம்பொருளால் புரிய வைக்கப்படும். உங்களுடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு நேரெதிரில் புதன் அமர்ந்து தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் உள்ளதாலும், புதன் தசை நடந்து கொண்டிருப்பதாலும் உங்களால் ஜோதிடத்தை தொழிலாகக் கொள்ள முடியும். அதில் வருமானமும் வரும்.

ஆனால் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் நீசமாகி ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பதால் தொழில் விஷயத்தில் நீங்கள் ஒரு நிலையற்ற மனம் கொண்டவராக இருப்பீர்கள். உங்களால் ஒரு இடத்தில் உட்கார்ந்து தொழில் செய்வது கடினமாக இருக்கும். மேலும் கடந்த 7 வருட காலமாக ஏழரைச்சனி நடந்ததாலும் போதிய வருமானம் இருந்திருக்காது சனி முடிய போவதால் இனிமேல் உங்களின் தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். ஜாதகமே பார்க்கலாம். வருங்காலம் கஷ்டமின்றி நன்றாகவே இருக்கும்.

பி . கல்யாணசுந்தரம், கிணத்துக்கடவு.

கேள்வி :

குருவிற்கு என் பணிவான வணக்கம். எனது இரண்டு மகன்கள் ஜாதகத்திலும் தந்தையைக் குறிக்கும் சூரியன் பனிரெண்டில் மறைந்து, ஒன்பதாம் அதிபதியும் ஆறு, பனிரெண்டில் மறைந்து லக்னம், ராசிக்கு ஒன்பதில் பாவக் கிரகம் அமர்ந்துள்ளது. எனது எதிர்காலம் எவ்வாறு இருக்கும். என் சொந்த வீட்டு கனவு நிறைவேறுமா? என் வாழ்க்கை எப்படிப் போனாலும் என் குழந்தைகளாவது எதிர்காலத்தில் சொந்தவீடு, வசதியுடன் வளமாக வாழ்வார்களா?

பதில் :

ஜோதிடத்தில் விதிகளை விட விதிவிலக்குகளை தெளிவாகப் புரிந்து கொள்பவனால் மட்டுமே தெளிவான பலனை அறிய முடியும். உங்களுடைய குழந்தைகள் இருவருமே சூரியனும், சந்திரனும் ஒரு சேர வலுப்பெறும் பவுர்ணமி யோகத்தில் பிறந்திருக்கிறார்கள். மூத்தவனின் ஜாதகத்தில் இது தர்மகர்மாதிபதி யோகமாக அமைந்து சூரியனுக்கு, குருவின் பார்வையோடு, நீசனை நீசன் பார்த்து உச்சப்படுத்தும் ஒரு அமைப்பும் இருப்பதோடு, சூரியன், சுக்கிரனுடன் பரிவர்த்தனையும் பெற்றிருப்பதால் தன் வீட்டிலேயே ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார் என்பதே சரி. எனவே பெரியவனின் அமைப்புப்படியே அவனுடைய தகப்பனான நீங்கள் நல்ல நிலைமைக்கு வந்தாக வேண்டும்.

இளையவனுக்கும் 9-ல் சனி அமர்ந்து, சூரியன் மறைந்தாலும் சந்திரன் தனது பூரண ஒளியுடன் முழுமையாக இருக்கும் வருடத்தின் ஒரே நாளான திருக்கார்த்திகை பவுணர்மி அன்று பிறந்து சூரியனை வலுப்படுத்துவதாலும் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு இருப்பதாலும் தோஷம் நீங்கி எதிர்காலத்தில் சொந்த வீடு, வாசல் என நன்றாக இருப்பீர்கள்.

பி . அரிஷ் , சென்னை -81.

கேள்வி :

பி. . படித்து முடித்து 2 வருடம் வெளிநாட்டில் வேலை செய்து கடந்த வருடம் திரும்பி வந்து விட்டேன். மறுபடியும் முயற்சி செய்கிறேன். நல்ல வேலை கிடைக்குமா? எப்பொழுது?

புத

சந், 
சூரி

சுக்,கே 
செவ்
12.02pm
15.5.1991
சென்னை

லக் 
குரு
சனி
ராகு

பதில் :

ஒரு ஜாதகத்தில் 8, 12-க்குடையவர்கள் வலுவடைந்து சுபத்துவமாக இருந்தால் நீடித்து வெளிநாட்டில் இருக்கின்ற அமைப்பு அமையும். அதேநேரத்தில் ஒரு முக்கிய பலனாக திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணத்திற்காக வெளிநாட்டு அமைப்பு தடைப்படும். அல்லது திரும்பி வரச்செய்யும்.

உங்களுடைய ஜாதகப்படி 8-க்குடைய சனி ஆட்சி பெற்று, சர ராசியில் குருவின் பார்வையில் இருப்பது வெளிநாட்டில் நீடித்து இருப்பதை குறிக்கிறது. 12-க்குடைய புதனும் பரிவர்த்தனை மூலம் வலுவுடன் சுபத்துவமாக இருக்கிறார். அடுத்தடுத்து சர ராசிகளான கடகம், மகரம், மேஷத்தில் அமர்ந்திருக்கும் குரு, சனி, புதன் தசைகள் நடக்க இருப்பதால் 2019-ம் ஆண்டிற்குப் பிறகு நீடித்து வெளிநாட்டில் இருப்பீர்கள்.

என் . நடராஜன் , திருவெண்ணெய்நல்லூர் .

கேள்வி :

ஐந்து வருடங்களாக மகளுக்கு வரன் பார்க்கிறேன். ஒன்றும் அமையவில்லை. 12- ல் சுக்கிரனுடன் கேது இருப்பதால் திருமணமே நடக்காது என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். வேறு சிலர் மகளுக்கு புத ஆதித்ய யோகம், குருச்சந்திர யோகம் இருப்பதால் திருமணம் நடக்கும் என்கிறார்கள். அதிலும் ஒரு புள்ளி வைப்பது போல் திருமணம் நடந்தாலும் வாழ்க்கை சரியாக இருக்காது என்று சொல்கிறார்கள். எனது மகள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தாங்கள் சொல்ல விரும்புகிறேன்.

செவ்
குரு
ராகு
4.30am
16.10.1988
வந்தவாசி

சுக் 
கேது
சனி
சந்

லக்,சூ 
புத

பதில் :

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாகவும், லக்னம் சுபத்துவமாகவும் இருந்தாலே எவ்வித தோஷங்களும் கெடுபலன்களைத் தராது. அதேநேரத்தில் இளம் பருவத்தில் வருகின்ற ஏழரைச்சனி நல்லவைகளை, தேவையானவைகளை தராது என்று அடிக்கடி எழுதி வருகிறேன். அதற்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்த உங்கள் மகளும் விதிவிலக்காக இருக்க முடியாது.

மகளுக்கு யோக ஜாதகம் என்பதால்தான் கடுமையான சனி நடக்கும் இந்த ஐந்து வருடங்களில் திருமணம் ஆகாமல் இருந்து வருகிறது. திருமணம் செய்து வைத்திருந்தா பிரச்சினைகள் வந்திருக்கும். ராசிக்கு 2-ல் சனி, லக்னத்திற்கு 7-ல் செவ்வாய் அமர்ந்து செவ்வாய், சனி இருவரும் லக்னத்தைப் பார்ப்பதால் உங்கள் பெண்ணே இன்னும் பக்குவப்படாமல்தான் இருப்பாள். இது போன்ற பெண்ணிற்கு 30 வயதில் திருமணம் செய்வதே சரியாக இருக்கும்.

தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலன்களை ராகு-கேதுக்கள்தான் எடுத்துச் செய்வார்கள் என்ற விதிப்படி அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்க இருக்கும் கேது புக்தியில் உங்கள் மகளுக்கு திருமணம் நடக்கும். திருமணத்திற்கு பிறகு எவ்வித பின்னடைவுகளும் இன்றி மிகவும் சிறப்பாக இருப்பாள். அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்?

செ . முத்துக்கனி , மதுரை .

கேள்வி :

இதுவரை பதினாறு முறை கடிதங்கள் எழுதியும், தங்கள் மனம் இரங்காதது ஏன்? என்னுடைய கேள்விக்கு ஏன் பதில் தர மறுக்கிறீர்கள் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது? நாங்கள் அனுப்பும் கடிதங்கள் தங்களுடைய பார்வைக்கு வருகின்றனவா? இல்லையா?

பதில் :

ஜோதிடத்தில் மேலோட்டமாக இல்லாமல் ஓரளவிற்காவது துல்லிய பலனைச் சொல்வதற்கு ஒருவருடைய பிறந்தநாள், நேரம், இடம் போன்ற விபரங்கள் கண்டிப்பாகத் தேவை. உங்கள் ஊரில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை அனுப்பினாலும் இந்த விபரங்களைக் நீங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

ஊரில் எழுதப்படும் ஜாதகங்களில் பெரும்பாலும் பிறந்த நேரத்தை குறிப்பிடுவது இல்லை. ஜோதிடர் என்பவர் ஒரு மனிதர்தான். அவர் தவறு செய்யக் கூடும். பிறந்த நேரத்தை மறைத்து நாழிகைக் கணக்கை மட்டும் குறிப்பிடும் ஜாதகங்களில் தவறு இருக்கலாம். பிறந்த நேரம் எழுதப்படா விட்டால் தவறு இருந்தாலும் அதைக் கண்டு பிடிக்க முடியாது. தான் கணித்த ஜாதகத்தில் தவறு இருந்தாலும் இன்னொரு ஜோதிடர் அதைக் கண்டு பிடித்து விடக் கூடாது என்ற காரணத்தினால்தான் சிலர் பிறந்த நேரத்தை குறிப்பிடுவது இல்லை.

மேலும் வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்படும் பெரும்பாலான ஜாதகங்களில் சூரிய உதயத்தை தோராயமான 6 மணி என்று கணக்கிட்டுத்தான் கணிக்கப் படுகின்றன. ஆனால் ஒரு ஊரில் தினமும் சரியாக 6 மணிக்கு சூரியன் உதிப்பது இல்லை. முன்,பின் அரைமணி நேரம் வரை சூரிய உதயம் மாறும்.

வாக்கியப் பஞ்சாங்கம் பிழையானது. இன்றைய தலைமுறையின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு வாக்கியப் பஞ்சாங்கப்படி திருமண பொருத்தம் பார்ப்பதே காரணம். வாக்கியப்படி கணிக்கும் ஜாதகங்களில் புதன், சனி போன்ற கிரகங்கள் மாறி இருக்கும். சில நேரங்களில் லக்னமே தவறாக இருக்கும். இதுபோன்ற தவறான ஜாதகத்தை வைத்துக் கொண்டு ஓரளவிற்காவது சரியான பலனை சொல்ல வேண்டும் என்று நினைக்கின்ற ஜோதிடரால் பலன் சொல்ல இயலாது.

எனவே உங்களுடைய ஜாதகத்தை அனுப்பினாலும் நீங்கள் அதில் கண்டிப்பாக பிறந்தநாள், நேரம், இடம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டால் மட்டுமே திருக் கணிதப்படி ஜாதகத்தை கணித்து என்னால் பலன் சொல்ல முடியும். பிறந்த விபரங்கள் இல்லாமல் நீங்கள் எத்தனை கடிதங்கள் எழுதினாலும் என்னால் பதில் தர இயலாது என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

ஏராளமானோர் ஜாதகக் கட்டத்தை கையில் எழுதி, தசா,புக்தி இருப்பும் எழுதி எனக்கு இந்த தசையில், இந்த புக்தி நடந்து கொண்டிருக்கிறது. என்ன பலன் நடக்கும் என்று கேட்கிறீர்கள். நீங்கள் அனுப்பும் ஜாதகம் தவறாக இருக்கலாம். அல்லது வாக்கியத்தில் கணிக்கப்பட்டிருக்கலாம். தசை, புக்தி இருப்புக் கணக்கில் ஏதேனும் விடுபட்டு இருக்கலாம். அது எப்படி எனக்குத் தெரியும்?
ஒரு நல்ல ஜோதிடன் பலன் சொல்வதற்கு முன் ஜாதகத்தை உறுதி செய்து கொண்டுதான் பதில் சொல்ல வேண்டும். ஜோதிடத்தின் அஸ்திவாரமே ஜாதக கட்டங்கள்தான். அவை சரியில்லாமலோ, பிழையாகவோ இருந்தால் பலன் சொல்வதும் தவறாகப் போய் விடும்.

நான் போகிறபோக்கில் மேம்போக்காக பலன் சொல்லும் ஜோதிடன் இல்லை. பரம்பொருள் எனக்குக் கொடுத்திருக்கும் ஞானத்தை வைத்து ஓரளவுக்கேனும் துல்லியமான பலன் சொல்ல முயற்சி செய்பவன். எனவே தெளிவான பிறந்த விவரங்கள் இல்லாத கடிதங்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை.

1 comment :