Tuesday, April 19, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 82 (19.4.2016)

பாரிசென்னை,

கேள்வி :

கடந்த வருடம் மேமாதம் 1- ந்தேதி திடீரென எனது திருமணம் பெரும் போராட்டத்தில் நடந்தது. எந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேனோ அதே பெண்ணை மணக்க நேரிட்டது. இதற்கு காரணம் ஏதேனும் செய்வினையா? அல்லது ஜாதக கிரக நிலையா? தற்போது மிகவும் கடனில் தவிக்கிறேன். என்ன செய்வது? பரிகாரம் என்ன ?


சு,ரா சந்,சூ
பு,செ
ராசி
குரு
சனி,
கே

பதில்:

(சிம்மலக்னம், மிதுனராசி, மூன்றில் சனி, கேது. ஆறில் குரு. ஒன்பதில் சுக், ராகு. பதினொன்றில் சூரி, புத, செவ்.)

செய்வினை எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நீங்கள் செய்த வினைதான். ஆறில் மறைந்த நீசவக்கிர குருவின் தசையில் ராகுவுடன் ஐந்து டிகிரிக்குள் இணைந்த சுக்கிரபுக்தி நடப்பதால் உங்களுக்கு நடந்த போராட்டத்தின் காரணம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

தசாநாதன் குருபகவான் ஆறில் மறைந்து தசை நடத்துவதாலும் அடுத்து நடக்க இருக்கும் புக்திநாதர்கள் சூரிய, சந்திர, செவ்வாய் மூவரும் குருவிற்கு ஆறில் மறைவதாலும் ராகுபுக்தி வரை இன்னும் சில வருடங்களுக்குக் கடன் தொல்லைகள் இருக்கும். நவாம்சத்தில் லக்னாதிபதி சூரியன் நீசமாகி உள்ளதால் சூரியனுக்கான முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும். ஏற்கனவே இவற்றை விரிவாக மாலைமலரில் எழுதி இருக்கிறேன்.

எஸ். பத்மா, கூடுவாஞ்சேரி.

கேள்வி :

ராகுதசை பற்றி தாங்கள் மாலைமலரில் எழுதி வரும் தொடரைப் படிக்கப் படிக்க ஆசையாக இருக்கிறது. எனது கணவருக்கு செவ்வாய்தசை நடப்பில் உள்ளது. வரும் ராகுதசையில் அவருக்கு மாற்றங்கள் வருமா? எனது மகனின் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் என் கணவர் வாழ்க்கையில் தவறிப்போன அத்தனை வாய்ப்புகளையும் மகன் மூலம் அனுபவிப்பார் என்று சொல்கிறார்கள். அதைத் தங்கள் திருவாக்கால் அறிய விரும்புகிறேன் .

பதில்:

கணவருக்கு ரிஷபலக்னம், சிம்மராசியாகி, லக்னாதிபதி சுக்கிரன் பூரண நீசமாகி அவரை நீசகுரு பார்த்த ஜாதகம். லக்னாதிபதி வலுவிழந்தால் ராசிதான் பலன் தரும் எனும் விதிப்படி சிம்ம ராசிப்படித்தான் உங்கள் கணவருக்கு பலன்கள் நடந்து கொண்டிருக்கும். அதன்படி இப்போது லக்னத்திற்கு எட்டில் இருக்கும் ராகு தனது தசையில் ராசிக்கு ஐந்தில் இருக்கும் பலனைச் செய்வார்.

ராகுவிற்கு வீடு கொடுத்த குருபகவான் நீசமானாலும் அவர் வக்கிரமாகி உச்ச பலனைப் பெறுவதாலும் சாரம் கொடுத்த கேது ராசிக்கு பதினொன்றில் இருப்பதாலும் ராகுதசை கெடுதல்களைச் செய்யாது. ஆனால் தசையின் பிற்பகுதி மட்டுமே யோகமாக இருக்கும்.

லக்னாதிபதி நீசமானாலே வாழ்க்கையின் முற்பகுதி அதிர்ஷ்டமில்லாமலும், அவர் முறையான நீசபங்கம் பெற்றிருந்தால் பிற்பகுதி யோகமாகவும் அமையும். வாழ்க்கையில் எதுவும் அவரவர் கர்மவினைப்படிதான் நடக்கும். தவறிப்போன வாய்ப்புகளை மகன் மூலம் அனுபவிப்பார் என்றால் உங்கள் மகன் எதை அனுபவிப்பார்? சிலஜாதகங்களில் யோகநேரம் ஆரம்பிக்கும் போது குடும்பத்தில் யோகக்குழந்தைகள் பிறந்து அதிர்ஷ்ட பலன்கள் நடக்கும். அதற்கும் தந்தை-மகன் இருவரின் ஜாதகமும் யோகமாக இருக்க வேண்டும்.

உங்கள் மகனுக்கும் தந்தையை போலவே ரிஷப லக்னம். ஆனாலும் லக்னாதிபதி நீசமாகாமல் வலுவாகவே இருக்கிறார். அதைவிட மேலாக சந்திரனுக்கு பத்தில் சூரியன் ஆட்சியாக இருப்பது ஒரு சிறப்பான அமைப்பு. நடக்க இருக்கும் தசைகளும் மகனுக்கு யோகமாக இருப்பதால் மகன் வளர வளர குடும்பம் செழிப்புப் பெறும்.

பி. பத்மாவதி, சென்னை.

கேள்வி :

மகளின் திருமணம் தாமதாமாகி வருகிறது. ஜோதிடர்கள் சொல்லும் அனைத்துக் கோவில்களுக்கும் சென்று வந்துள்ளோம். சொல்லிய பரிகாரங்களையும் செய்திருக்கிறோம். திருமணம் தாமதமாவதற்கு காரணம் என்ன? திருமணம் எப்போது நடைபெறும்? தெளிவாக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ல,ரா சூ
குரு
ராசி
பு
சந்,சு
செவ் சனி

பதில்:

(மேஷலக்னம், சிம்மராசி. லக்னத்தில் ராகு. மூன்றில் சூரி. நான்கில் புத. ஐந்தில் சுக். எட்டில் சனி. ஒன்பதில் செவ். பதினொன்றில் குரு.)

மகளுக்கு ஏழாமிடத்தில் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு எட்டில் சனி அமர்ந்து குருவும் சுக்கிரனும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதால் திருமணம் தாமதமாகிறது. முறையான பரிகாரங்களை நீங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. ஶ்ரீகாளகஸ்தியில் இரவு தங்கி ஜென்மநட்சத்திரம் அன்று ருத்ராபிஷேகம் செய்யவும். திருமணம் ஆகும்வரை செவ்வாய்தோறும் பூந்தமல்லி வைத்தியநாத சுவாமி கோவிலில் வழிபடவும்.

வரும் மேமாதம் முதல் ஆரம்பிக்க இருக்கும் செவ்வாய் தசை குருபுக்தியில் குருபகவான் ராசிக்கு ஏழில் இருந்து லக்னத்திற்கு ஏழைப் பார்ப்பதால் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு 2017 ஏப்ரலுக்குள் நல்லபடியாகத் திருமணம் நடக்கும்.

வி. ஜி. தேவேந்திரன், வியாசர்பாடி.

கேள்வி :

36 வயதாகும் மகனுக்கு எப்போது திருமணம் ஆகும்? என்ன செய்தால் திருமணம் நடக்கும் என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

மேலே பத்மாவதி அவர்களுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். மகனுக்கு கடகலக்னமாகி லக்னத்தில் ராகுவும், இரண்டில் செவ்வாய், சனியும் அமர்ந்து தற்போது ராகுதசை நடப்பதால் திருமணம் தாமதமாகிறது. ஶ்ரீகாளகஸ்தியில் ருத்ராபிஷேகபூஜையில் மகனைக் கலந்து கொள்ளச் செய்யுங்கள். சந்திரனை வலுப்படுத்தும் பரிகாரத் தலங்களுக்குச் செல்லுங்கள்.

ஜெ. நாகலட்சுமி, அரசரடி.

கேள்வி :

அரசு வேலைக்குப் பல தேர்வுகள் எழுதியும் தேர்வாகாமல் சமீபத்தில் என் கல்வித்தகுதிக்கு நடந்த தேர்வில் வெற்றி பெற்று ஓராண்டுக்கு மேலாகி விட்டது. உத்தரவு கிடைக்குமா என்ற ஏக்கத்துடனும், கவலையோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் ஜாதகப்படி அரசு உத்தரவு கிடைக்குமா? அதற்கு அனுகூலம் இருக்கிறதா ? எவ்வளவு காலம் ஆகும்? ஜோதிடக்கலை அரசர் அருள்வாக்கு அளிக்க வேண்டுகிறேன். தினமும் ஆலயங்களுக்கு சென்று வணங்கி வருகிறேன்.

பதில்:

உங்கள் விருச்சிகராசிக்கு ஏழரைச்சனி நடப்பதால்தான் கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலையாக இதுவரை அரசு உத்தரவு வரவில்லை. 30 வயதுகளில் இருக்கும் விருச்சிகராசிக்காரர்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என்பதை எழுதிக் கொண்டும், டி.வி. நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டும்தான் இருக்கிறேன். ஆகஸ்டுக்குப் பிறகு நல்லசெய்தி உண்டு. கவலை வேண்டாம்.

அரசியலில் இறங்கினால் பிரகாசிப்பேனா?

ஆர். நந்தினி, திருப்பூர்.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்களின் மாலைமலர் பகுதிகளையும் டிவி நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன். சமீபத்தில் ஒரு டிவியில் ஒரு மகாதசையில் சுயபுக்தி வேலை செய்யாது என கூறினீர்கள். ஆனால் எனக்கு 2007- ம் வருடம் சுக்கிரதசை சுயபுக்தியில் அரசு வேலை கிடைத்து செல்வாக்கும், மரியாதையும் ஓஹோவென்று இருந்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தேன். இது 2012- ம் ஆண்டுவரை மட்டுமே நீடித்தது. தவறு செய்யாத என்னை வீண்பழி சுமத்தியதால் வேலையில் சேராமல் வந்து விட்டேன். கடந்த மூன்று வருடங்களாக சம்பளம் இல்லை.

எனக்கு கோபம் வரும் என்றாலும் அதில் நியாயம் இருக்கும். என்னுடைய நியாயம் அரசாங்கத்தின் முன் எடுபடாமல் போய் விட்டது. 2017- க்கு பிறகு மீண்டும் சந்தோஷம் வருமா? வரும் 2017- ல் சுக்கிரதசை குருபுக்தியில் திருமணம் நடைபெறுமா? என்தம்பிக்கும் விருச்சிகராசி. அவன் வேலையும் பிரச்னையாக இருப்பதால் மன உளைச்சலுடன் இருக்கிறான். என் ஜாதகத்தை வைத்து அவன் வாழ்க்கையைச் சொல்ல முடியுமா? அரசியலில் இறங்கினால் பிரகாசிப்பேனா? தொழில் செய்யலாமா?

சனி,
ரா
சுக்
ராசி
சூ,பு
சந் செவ் குரு,
கே

பதில்:

(மேஷலக்னம். விருச்சிகராசி. ஆறில் குரு, கேது. ஏழில் செவ். பத்தில் சூரி, புத. பதினொன்றில் சுக். பனிரெண்டில் சனி, ராகு)

நீ பார்த்த அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு மகாதசையில் சுயபுக்தி வேலை செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அடுத்த புக்திகள் நன்றாக இராது என்றுதான் சொல்லி இருப்பேன். உனது லக்னம், ராசிக்கு அவயோகியான சுக்கிர தசையில் சுயபுக்தியில் யோகம் நடந்ததால் அடுத்த புக்திகளில் அதை இழந்து தற்போது கஷ்டப்படுகிறாய்.

மேலும் 2012 முதல் உன்னுடைய விருச்சிகராசிக்கு ஏழரைச்சனியின் கெடுபலன் ஆரம்பித்து விட்டதால் உனக்கு சுயபுத்தி வேலை செய்யவில்லை. கிடைத்த வேலையைத் தக்க வைக்காமல் ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறாய். மேஷலக்னத்தைச் செவ்வாய் பார்ப்பதால் நியாயமானாலும் அநியாயமானாலும் எந்த இடத்தில் கோபப்படவேண்டும் என்று தெரியாத முன்யோசனை இல்லாத அவசரக்குடுக்கையான கோபக்காரி நீ. உன் கோபத்தால் ஒரு பிரயோஜனமும் இருக்காது.

குழந்தை பாக்கியத்தை கொடுக்க வேண்டியவரான ஐந்துக்குடைய சூரியன் அந்தபாவத்திற்கு ஆறாம்வீட்டில் மறைந்து ஆறுக்குடைய புதனுடன் இணைந்து பகைவீட்டில் பலவீனமானார். புத்திரகாரகன் குருவும் ராகு-கேதுவுடன் சம்பந்தப்பட்டு ஆறில் மறைந்ததோடு ராசிக்கு ஐந்தாமிடத்திலும் சனி, ராகு அமர்ந்து கடுமையான புத்திரதோஷம் உள்ளது. புத்திரதோஷம் இருந்தால் திருமணத்திற்கு தடை இருக்கும்.

அது மட்டுமின்றி லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து லக்னத்திற்கு இரண்டாமிடமான குடும்பஸ்தானத்தை சனி, செவ்வாய் பார்ப்பதும், ராசிக்கு இரண்டை சனி பார்ப்பதும், தசாநாதன் சுக்கிரனும், லக்னாதிபதி செவ்வாயும் ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதும் குடும்பம் அமைய உனக்குள்ள தடைகள். ஆனாலும் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் என்பதால் உனக்கு தாம்பத்தியசுகம் கிடைத்தாக வேண்டும் என்பதால் நீ கேட்கும் சுக்கிரதசை குருபுக்தியில் திருமணம் நடக்க முறையான பரிகாரங்களைச் செய்து கொள்.

உலகம் முழுக்க இளையபருவ விருச்சிகராசியினர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது உன் தம்பி அதில் விதிவிலக்காக இருக்க முடியாது. தம்பி வாழ்க்கையை தம்பியின் ஜாதகத்தில்தான் பார்க்க வேண்டும். அரசியலையும் தொழிலையும் ஏழரைச் சனி முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியைப் பார்.

No comments :

Post a Comment