Tuesday, 9 August 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 98 (9.8.2016)

ஹாஜி அலி, சிதம்பரம்.

கேள்வி :

முஸ்லிமாகப் பிறந்த நான் ஒரு நாளைக்கு நான்கு ஐந்துமுறை தொழவேண்டும். கடந்த நான்கு வருடமாகவே தொழ வேண்டும் என்ற சிந்தனையே இல்லை. நான்கு வருடமாக ஒருவரிடம் டிரைவராக இருக்கிறேன். நல்ல சம்பளம் என்றாலும் சேமிக்க முடியவில்லை. இவரிடமே தொடர்ந்து இருக்கலாமா? அல்லது வெளிநாடு செல்லலாமா? அம்மாவின் பெயரில் இருக்கும் வீட்டை போக்கியம் வைத்து ஐந்தாண்டு ஆகியும் மீட்க முடியவில்லை. மேலே மேலே பணம் வாங்க வேண்டியுள்ளது. எப்போது கஷ்டம் தீரும்? மகாகுருஜியின் அருள்வாக்கை வேண்டுகிறேன்.


பதில் :

ஒரு முஸ்லிமாகப் பிறந்தவனுக்கு விதிக்கப்பட்ட கடமையான தினமும் தொழுவது என்பதை நீ செய்யாததால்தான் கடந்த நான்காண்டுகளாக உனக்கு பிரச்னைகள் வருகின்றன. தொழுகை என்பதும் பரம்பொருளிடம் வேண்டுவதுதானே? இதை நீ முறையாகச் செய்திருந்தால் என்னிடம் கேள்வி கேட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

2012 முதல் மீனராசி இளைஞர்களுக்கு அஷ்டமச்சனியும் ஜென்மராகுவும் இருந்து வந்ததால் நான்காண்டுகளாக நிலைமை சரியில்லை. இந்தக் குருப்பெயர்ச்சி முதல் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நிலைமை சீராகும். கன்னிலக்னமாகி புதனும் சுக்கிரனும் பத்தாமிடத்தில் ஒன்றிணைந்து தர்மகர்மாதிபதி யோகம் கொண்ட இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஜாதகம் உன்னுடையது. அஷ்டமாதிபதி குருபார்வை பெற்று சுபத்துவம் பெற்றதால் வெளிநாடு சென்று சம்பாதிக்க முடியும்.

ஜி. ஜெயராமன், குரோம்பேட்டை.

கேள்வி :

ஐம்பது வயதாகும் மகனுக்கு திருமணம் தடைப்பட்டு வருகிறது. அதன் உண்மையான காரணம் தெரியவில்லை. காரணம், பரிகாரம் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.


ல,சூ 
சனி
சுக்,ரா
பு
ராசி
குரு
சந்
செவ்

பதில் :

(மீனலக்னம் விருச்சிகராசி லக்னத்தில் சூரி சனி இரண்டில் சுக் ராகு ஐந்தில் குரு எட்டில் செவ் பனிரெண்டில் புதன் 31-3-1967 காலை 6 மணி சென்னை)

லக்னத்திற்கு ஏழாமிடத்தை சனி பார்த்து, ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய் பார்த்து ஏழுக்குடையவன் பனிரெண்டில் மறைந்து, எட்டில் செவ்வாய் அமர்ந்து, எல்லாவற்றையும் விட மேலாக தாம்பத்திய சுகத்தைத் தருகிற சுக்கிரன் ராகுவுடன் நான்கு டிகிரிக்குள் இணைந்து பலவீனமாகி, நவாம்சத்தில் நீசமாகி சனியுடன் இணைந்ததால் தாம்பத்திய சுகம் கிடைக்கவில்லை.

புத்திரகாரகன் குருபகவான் தனித்து ஐந்தில் அமர்ந்து காரஹோ பாவநாஸ்தி அமைப்புப்படி புத்திர தோஷமும் உங்கள் மகனுக்கு இருக்கிறது. லக்னாதிபதி குரு உச்ச வர்க்கோத்தமம் அடைந்ததும் பலவீனம். தாம்பத்திய சுகத்தைக் கெடுத்த ராகுவிற்கு ஜென்மநட்சத்திரம் அன்று ஸ்ரீகாளஹஸ்தியில் ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யும்பட்சத்தில் அடுத்தவருடம் சந்திரதசை சுக்கிரபுக்தியில் திருமணம் நடக்கும்.

பி. சந்திரா, கோவை.

கேள்வி :

மாலைமலரில் நீங்கள் எழுதிவரும் ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடர் கட்டுரைகளை பத்திரமாக எடுத்து பைண்டு பண்ணி வைத்திருக்கிறேன். புத்தகமாக வெளியிட்டால் என்னைப் போன்ற எண்ணற்ற வாசகர்கள் பயன் பெறுவார்கள். என் பேரனின் ஜாதகத்தில் நான்கில் சுக்கிரன் உள்ளது. இது மாளவ்யயோகம் என்கின்றனர். மேலும் நான்குகிரகங்கள் அந்தந்தக் கட்டங்களில் உள்ளதால் மிகுந்த யோகம் என்கின்றனர். வேறுசிலர் நல்லதில்லை என்கின்றனர். நீங்கள்தான் விளக்க வேண்டும். சந்திரன் கேது சேர தாய்க்குப் பாதிப்பா?

குரு
சந்
ராசி
சூ,பு
ரா
சுக்

செவ், 
சனி

பதில் :

(கடகலக்னம் மிதுனராசி இரண்டில் சூரி புத,மூன்றில் செவ் சனி, நான்கில் சுக், ஐந்தில் ராகு, ஒன்பதில் குரு, 3-9-2010 அதிகாலை 5 மணி கோவை)

இதுவரை நான் எழுதியவை அனைத்தும் விரைவில் புத்தகமாக வெளிவர இருக்கிறது. மாலைமலரில் அவை அறிவிக்கப்படும். பேரனின் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் குரு ஆகிய மூன்று கிரகங்கள் ஆட்சி பெற்றது மிகுந்த சிறப்பு. லக்ன கேந்திரத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றது மாளவ்ய யோகம் என்பதால் வீடு வாகனச் சிறப்புடன் எதிர்காலத்தில் நன்றாக வாழ்வான்.

அம்சத்தில் புதன் உச்சம் பெற்றதால் நன்கு படித்து புத்திசாலியாக இருப்பான். லக்னாதிபதி பனிரெண்டில் கேதுவுடன் தொடர்பு கொண்டதால் பிறந்த இடத்தை விட்டு தூர இடங்களில் வசிப்பான். சந்திரனுடன் ராகு இணைந்தால்தான் இணையும் தூரத்தைப் பொறுத்து தாயாருக்கு நல்லதில்லை. உங்கள் பேரன் ஜாதகத்தில் சந்திரன் மறைந்தாலும் நாலுக்குடைய சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் தாயாருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

பி. வைத்தியநாதன், கும்பகோணம்.

கேள்வி :

குருநாதனின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாகப் பணிகிறேன். சில இடங்களில் குருவும் சுக்கிரனும் சஷ்டாஷ்டகமாக இருப்பது நல்லது என்றும் இருவரும் நேருக்குநேர் பார்த்துக் கொள்ளக்கூடாது மற்றும் இணையக்கூடாது என்றும் சொல்கிறீர்கள் மகாகுருவே... இந்த எளியோனுக்குப் புரியும்படி விளக்கக் கோரி வணங்கி தங்களின் திருவாக்கால் ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறேன்..

பதில் :

நம்முடைய ஞானிகளால் ஜென்மவிரோதிகளாக வகைப்படுத்தப்பட்ட கிரகங்களான குருவும் சுக்கிரனும், சூரியசந்திரர்களும் சனியும் ஒரு ஜாதகத்தில் நேர்த் தொடர்புகளை அடைவது யோகத்தைச் செய்யாது. பூமிக்கு இரண்டுபுறமும் உள்ள எதிரெதிர் ஒளித்தன்மையுடைய சுபக்கிரகங்களான குருவும் சுக்கிரனும் இணைவது மற்றும் பார்ப்பது இருவரின் தனித்தன்மையைக் குறைக்கும்.

இருவரும் சரியாக நேரெதிர் நூற்றி எண்பது டிகிரியில் பார்த்துக் கொண்டாலோ, மிக நெருக்கமாக இணைந்தாலோ இருவருமே வலிமையிழப்பார்கள். இதை நூற்றுக்கணக்கான ஜாதகங்களில் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதுபோன்ற அமைப்பிருந்தால் அந்த லக்னத்திற்கேற்றபடி தாம்பத்யம் அல்லது புத்திரம் பாதிக்கும்.

அதேபோலத்தான் மூல ஒளிக்கிரகங்களான சூரியசந்திரர்கள் ஒளியற்ற இருள்கிரகமான சனியோடு தொடர்பு கொண்டால் தங்களின் ஒளியை இழந்து சுயத்தன்மையை இழப்பார்கள். ஒரு யோகஜாதகத்தில் சூரிய சந்திரர்களுக்கும் சனிக்கும் நேர்த்தொடர்பு இருக்காது. இருந்தால் அந்த லக்னத்தின்படி ஏதேனும் ஒரு காரகத்துவக் குறைபாடு இருக்கும்.

ஜோதிடத்தில் புரியும்தன்மை என்பது உங்கள் ஜாதகத்தில் புதன் இருக்கும் வலிமையைப் பொறுத்தது. புதன் தனித்தன்மையுடன் குருவின் பார்வையின்றி இருந்தால் சூட்சுமங்கள் யாரும் விளக்காமலேயே புரியும். ஜோதிட அறிவைத் தாண்டி ஜோதிடஞானம் வரும். இந்த அமைப்பு இல்லாவிடில் அறிவோடு நின்றுவிடுவீர்கள். ஞானம் கிடைக்காது. அனைத்திலும் முதன்மை பெற என் ஆசிகள்.

என் மாங்கல்யம் நிலைக்காதா?

சி. சந்திரிக்கா, ஸ்ரீலங்கா மொறட்டுவ.

கேள்வி :

இலங்கையில் இருந்து இந்தக் கேள்வியை அனுப்புவதால் நிராகரித்து விடாதீர்கள். உங்கள் பதிலை மாலைமலர் E PAPER மூலமாக படித்து விடுவேன். 34 வயதாகியும் திருமணம் தொழில் இல்லை. எல்லா பரீட்சையும் நல்ல புள்ளி பெற்றாலும் வேலை கிடைக்கவில்லை. இங்குள்ள ஜோதிடர்கள் உனக்கு குடும்பம் இல்லை. திருமணமானால் கணவரும் நீயும் இறந்து விடுவீர்கள். ஐந்தாம் அதிபதி செவ்வாயுடன் இருப்பதால் குழந்தை பிறந்தாலும் இறந்து விடும். செவ் சனி குரு மூன்றும் வக்ரத்தில் உள்ளதால் உனக்கு ஆயுள்பலம் இல்லை என்று சொல்கிறார்கள். என் தாய் தந்தை தம்பி தங்கை என்னால் வருத்தத்தில் இருக்கிறார்கள். உண்மையில் என் ஜாதகத்தில் என்ன குற்றம் இருக்கிறது? என் மாங்கல்யம் நிலைக்காதா? திருமணம் நடக்குமா? என்னால் என் தாய்தந்தை சந்தோசமாக இருப்பார்களா? ஒருவேளை எனக்கு திருமணம் நடந்தால் என் குழந்தைகள் தீர்க்காயுளுடன் இருப்பார்களா? வெளிநாடு செல்வேனா? நான் இரட்டைப் பிள்ளையாகப் பிறந்தேன். எனக்கு பத்து நிமிடத்திற்குப் பிறகு பிறந்தவள் பதினோரு மாதங்களில் இறந்து விட்டாள். உங்கள் வார்த்தைக்காக என் குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.

சந்
சூ,பு
சுக்
ராசி
கே
குரு

ல,சனி 
செவ்

பதில் :

(கன்னிலக்னம் மீனராசி லக்னத்தில் சனி செவ் இரண்டில் குரு நான்கில் கேது, ஆறில் சுக், எட்டில் சூரி புத 22-4-1982 5.35 மாலை யாழ்ப்பாணம்)

லக்னாதிபதி முன்வலு இழந்து பின்வலுப் பெற்றாலே பிற்பகுதி வாழ்க்கைதான் சுகமாக இருக்கும். உனது லக்னாதிபதி புதன் எட்டில் மறைந்து பலவீனமாகி, லக்னத்தில் ஆறு எட்டுக்குடையவர்கள் அமர்ந்து லக்னமும் சுபர் பார்வை பெறாததால் முற்பகுதி வாழ்வில் எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறாய்.

அதேநேரத்தில் லக்னாதிபதி புதனும் எட்டுக்குடைய செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றதன் மூலம் இருவரும் ஆட்சி பெற்ற நிலையுண்டாகி வலுவானதால் நீ தீர்க்காயுள் இருப்பாய். பத்து நிமிடங்களுக்குப் பிறகு பிறந்த உன் தங்கைக்கு லக்னமும் லக்ன உப நட்சத்திராதிபதியும் மாறியதன் மூலம் இந்தப் பரிவர்த்தனை ஏழு பனிரெண்டிற்குரிய மாரகாதிபதிகள் பரிவர்த்தனையாக மாறியதால் அவள் குழந்தையில் இறந்து விட்டாள்.

ராசிக்கு ஏழில் வக்ரச்சனி, வக்ரச்செவ்வாய் இணைந்து லக்னத்திற்கு ஏழாமிடத்தைப் பார்த்ததும், ஏழாம் அதிபதியும் ராசிநாதனுமான குருபகவான் ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதும் குற்றம். அதேநேரத்தில் தற்போது நடக்கும் சுக்கிரதசை சனிபுக்தியில் வரும் நவம்பருக்குப் பிறகு கண்டிப்பாக உனக்கு திருமணம் நடக்கும். கணவர் வெளிநாடு சம்பந்தப்பட்டவர். இருவரும் குழந்தைகள் பெற்று தீர்க்காயுளுடன் இருப்பீர்கள்.

ஐந்துக்கதிபதி செவ்வாயுடன் இணைந்தாலும் பதினைத்து டிகிரி விலகியிருக்கிறார். எனவே உன் குழந்தைகளுக்கும் ஆயுள் குற்றம் இல்லை. எட்டுக்குடையவன் பரிவர்த்தனை வலுப் பெற்றதாலும் வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டிற்குடையவன் உச்சமாகி அடுத்து சூரியதசை நடக்க உள்ளதாலும் திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் சுகமாக வாழுவாய். உன் கஷ்டங்கள் அனைத்தும் இந்த மாதத்தோடு விலகுகிறது. லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்துகொள்.

சுக்கிரதசை நடப்பதால் இருபது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இரவு படுக்கும்போது சுக்கிரனின் தான்யமான மொச்சைக்கொட்டையை சிறிதளவு தலைக்கடியில் வைத்துப் படுத்து இருபது பொட்டலம் சேர்த்து கடைசிவாரம் அனைத்தையும் மொத்தமாகச் சேர்த்து நிற்கும் நீர்நிலையான கிணறு அல்லது குளத்தில் போடு. ஓடும் நீரில் போட்டு விடாதே. இருபது வாரம் முடிவதற்குள் உன் கணவன் அடையாளம் காட்டப்படுவார்.

No comments :

Post a Comment