Tuesday, 6 September 2016

Astro Answers - Guruji Pathilkal -குருஜியின் மாலைமலர் பதில்கள் - 102 (6.9.2016)

ஜி.ஜெயராமன், குரோம்பேட்டை.

கேள்வி :

மகனுக்கு 49 வயதாகியும் திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்?

பதில் :

உங்கள் கேள்விக்கு ஏற்கனவே விரிவாகப் பதில் கொடுத்திருக்கிறேன். இதுபோன்ற கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதிலளித்தால் பதிலை நீங்கள் பார்க்கத் தவறுகிறீர்கள். இதுபோலவே பதில் தந்ததைப் பார்க்காமல் சிலர் திரும்பத் திரும்ப ஐந்து, ஆறுமுறையாக கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

மாலைமலர் தருவது பொதுவான ஒரு சேவை. நிறையக் கடிதங்கள் வருவதால் அனைத்திற்கும் பதில் தருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. வருபவற்றில் முக்கியமானதை முன்னுரிமை கொடுத்து உடனே பதில் தருகிறேன். அதையும் பார்க்கத் தவறிவிட்டு மீண்டும், மீண்டும் கேள்விகளை அனுப்புவதை என்னவென்று சொல்வது? கேள்வி அனுப்பி மூன்று மாதங்களுக்குள் அதாவது 12 வாரங்களுக்குள் பதில் வராவிட்டால் என்னால் பதில் தர இயலவில்லை என்று எடுத்துக் கொள்ளுங்கள். பதிலைத் தவற விட்டவர்கள் மாலைமலரின் இணையப் பதிப்பான epaper maalaimalar ல் மீண்டும் படிக்கலாம்.

டி. ராதிகா, பழைய பெருங்களத்தூர்.

கேள்வி :

கடந்த பத்து வருடங்களாக பல்வேறு துன்பங்களைத் தாண்டி வந்துள்ளேன். கணவரைப் பிரிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. என் எதிர்காலம் மற்றும் குழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது? மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்வேனா? அல்லது வாழ்க்கை பெற்றோருடன்தான் இருக்குமா? எதிர்காலம் எப்படி இருப்பினும் வரவேற்கிறேன். முன்னமே தெரிந்து கொள்ள மட்டும் ஆசைப்படுகிறேன். துன்பப்படும் சகோதரிக்கு வழிகாட்ட வேண்டுகிறேன்.

பதில் :

தற்போதைய பிரிவிற்கு உன்னுடைய தவறுகளும் காரணமாக இருக்கும் என்பதை ஜாதகம் காட்டுகிறது. கணவனுக்கு கும்பலக்னம், உனக்கு கும்பராசி என்பதால் நிரந்தரப்பிரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மகனது ஜாதகப்படியும் தந்தையின் ஆதரவு அவனுக்கு இருக்கிறது. உன் ஜாதகத்தில் இரண்டில் சனி, எட்டில் செவ்வாய் என்பதால் நடந்து விட்ட விஷயங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பாய். 2017 பிற்பகுதியில் கணவனுடன் சேருவாய். 2018 க்குப் பிறகு துன்பங்கள் படிப்படியாகக் குறையும். ஜாதகப்படி எதிர்காலம் இருவருக்கும் கவலைப்படும்படியாக இருக்காது. கஷ்டங்கள் எல்லாம் இப்போதுதான்.

டி. சக்திவேல், ஆர். எஸ். புரம்.

கேள்வி :

உங்கள் கேள்வி-பதில்களையும், ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளையும் படிக்கும் பாக்கியத்தை வழங்கிய மாலைமலருக்கு நன்றி தெரிவிக்கிறேன். சொந்தமாக சலூன்கடை நடத்துகிறேன். கடவுள் அருளால் சுமாராக நடந்து வருகிறது. இரண்டு பெண்குழந்தைகள் உள்ளன. அவர்களை நன்றாகப் படிக்க வைத்து நல்லநிலைமைக்கு உயர்த்த ஆசைப்படுகிறேன். என் பொருளாதார நிலை உயருமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? எந்தத் தசை யோகம் செய்யும்? ஏதாவது துணைத்தொழில் செய்யலாமா? எத்தனையோ பேருக்கு நல்வழி காட்டும் தாங்கள் எனக்கும் கருணை காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சந்
சுக்

சூ,பு 
சனி
குரு
ராசி
செவ்

பதில் :

(விருச்சிக லக்னம் மீனராசி நான்கில் குரு. ஏழில் சுக். எட்டில் சூரி, புதன், சனி. ஒன்பதில் செவ். 12-7-1974, 3.45 பகல், உடுமலைப்பேட்டை)

விருச்சிக லக்னத்தின் பாக்கியாதிபதியான சந்திரனின் தசையில் சுயபுக்தி முடிந்து தற்போது செவ்வாய் புக்தி நடப்பதாலும், அடுத்தடுத்து யோகதசைகள் நடக்க இருப்பதாலும் இனிமேல் உங்களுடைய பொருளாதாரம் மிகவும் செழிப்பான ஒரு நிலையில் இருக்கும். லக்னாதிபதி பாபராகி நீசம்பெற்றதால் நாற்பது வயதிற்கு மேல் யோகத்தை அனுபவிக்கும் பிற்பாதி யோகஜாதகம் உங்களுடையது.

மீனராசிக்கு இனிமேல் கோட்சாரரீதியில் நல்ல பலன்கள் நடைபெறும் என்பதால் உங்களுக்குத் தெரிந்த இதே அழகுக்கலை சம்பந்தப்பட்ட துணைத்தொழிலைச் செய்யுங்கள். தெரியாத தொழில் வேண்டாம். எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு உயர்வான அமைப்புகளையும் செய்து தரமுடியும். இனிமேல் வரும் செவ்வாய் ராகு குருதசைகள் அனைத்தும் யோகதசைகள்தான்.

வே. வீரையா, நெம்மேலிக்காடு.

கேள்வி :

என்னுடைய கிராமத்தில் மாலைமலர் தினமும் கிடைப்பது இல்லை. சிலநாள் வருவது இல்லை. தினமும் வரும்படி செய்தால் நல்லது. வாழ்க்கையில் துயரங்கள், துரோகங்களை மட்டுமே சந்தித்து கசப்புடன் வாழ்கிறேன். இறை பக்தியும் ஜோதிட நம்பிக்கையும் கொண்ட என்னை “சனியன் பிடித்தவன்” என்று உறவுகள் தூற்றுகின்றன. ஐம்பது வயதாகியும் திருமணம் ஆகவில்லை. தம்பியும், தங்கையும், என் பெரிய தாயின் குழந்தைகளும் என் சிறிய அளவு நிலத்தைப் பறித்துக் கொள்வதற்காக எதிரிகளாகவே மாறிப்போனார்கள். தனியாக வசிக்கும் என் குடிசையின் கூரையைப் பிரித்து எறிகிறார்கள். எனக்கு நல்லகாலமே பிறக்காதா? திருமணம் ஆகாதா? வறுமை மாறுமா?


சூ,பு 
சுக்

குரு, 
ரா
சனி
ராசி
செவ்
சந்


பதில் :

(துலாம் லக்னம், விருச்சிகராசி. ஐந்தில் சனி, ஆறில் சூரி, புதன், சுக். எட்டில் குரு, ராகு. பதினொன்றில் செவ். 22.3.1965, 9.15 இரவு, புதுக்கோட்டை)

ஐந்தில் சனி அமர்ந்து, ஐந்தாமிடத்தைச் செவ்வாய் பார்த்து, புத்திரக்காரகன் குருபகவான் எட்டில் மறைந்து ராகுவுடன் இணைந்து பலவீனமானதால் உங்களுக்கு புத்திரபாக்கிய அமைப்பு இல்லை. திருமணம் என்பதே குழந்தைக்காகத்தான் என்பதால் புத்திரதோஷத்தின் காரணமாக உங்களுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை.

தற்போது விருச்சிகராசிக்கு கடுமையான ஜென்மச்சனி நடந்து வருவதால் மனஅழுத்தத்தைத் தரக்கூடிய அனைத்து சம்பவங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும். 2017 நவம்பர் முதல் கெடுபலன்கள் விலக ஆரம்பிக்கும். அதுவரை பொறுத்திருங்கள்.

வே. காமாட்சிநாதன், மதுரை - 16.

கேள்வி :

மகளுக்கு அடுத்தமாதம் இரண்டாவது குழந்தை பிறக்க இருக்கிறது. ஏற்கனவே ஆண்குழந்தை உள்ள நிலையில் இது பெண்குழந்தையாக இருக்க வேண்டும் என்று மகளும் மருமகனும் ஆசைப்படுகிறார்கள். பரிபூரண ஜோதிட அருள் கைவரப் பெற்ற என் குருநாதராகிய தாங்கள் வயிற்றில் இருப்பது பெண் குழந்தைதான் என்று சொல்லி ஆசிவழங்க வேண்டுமென்று எனது மகள் விரும்புகிறாள். குருவின் திருவடி பணிந்து பதில் வேண்டுகிறேன்.

பதில் :

இப்படியெல்லாம் சாமர்த்தியமாக கேள்வி கேட்டால் விரும்பியது கிடைக்குமா என்ன? பிறப்பும் இறப்பும் என்றும் பரம்பொருளின் ஆளுகைக்கு உட்பட்டது அல்லவா? மகள், மருமகன் ஜாதகப்படியும் பேரனின் ஜாதகப்படியும் பெண்குழந்தைக்கு வாய்ப்பில்லை. இப்போது இரண்டாவது பேரன் பிறந்திருப்பான்.

பி. பழனிச்சாமி, திண்டுக்கல் மாவட்டம்.

கேள்வி :

கடந்தமுறை ஊராட்சி வார்டு மெம்பர் பதவிக்கு போட்டியிட்டு நான்கு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றேன். அதற்கு தீயசக்தி படைத்தவர்கள் செய்த சூழ்ச்சிதான் காரணம் என்று என் உள்மனது சொல்கிறது. இது சரியா? தவறா? என்று விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தமுறை போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா என்றும் பதில் தர வேண்டுகிறேன்.

பதில் :

பிறந்ததேதி, ராசி, நட்சத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஜோதிடத்தில் சரியான பலன்களைச் சொல்ல முடியாது. சென்றமுறை நீங்கள் தோல்வி அடைந்ததற்கு உங்களின் துலாம்ராசிக்கு ஏழரைச்சனி நடந்ததே காரணம். இம்முறை ஜெயிப்பீர்களா என்பதற்கு உங்களுடைய ஜாதகம் அவசியம் தேவை.

இரண்டாவது, மூன்றாவது திருமணம் நடைபெறுமா?

ராமகிருஷ்ணன், சூளைமேடு.

கேள்வி :

காலம் கடந்து திருமணமான எனக்கு விரைவிலேயே விவாகரத்தும் ஆகி விட்டது. சில ஜோதிடர்கள் எனது ஜாதகம் சந்நியாச ஜாதகம் என்றும் ஒருவேளை திருமணம் நடந்தால் மூன்று மனைவிகள் அமையும் என்றும் சொன்னார்கள். பனிரெண்டாமிடத்தில் ஒரு பாவக்கிரகம் இருந்து அதனை ஏழாம் பார்வையாக எத்தனை கிரகங்கள் பார்வை செய்கிறதோ அத்தனை மனைவிகள் அமையும் என்ற ஜோதிடவிதிப்படி போதியவசதி இல்லாத எனக்கு இரண்டாவது, மூன்றாவது திருமணம் நடைபெறுமா? அல்லது பூவுக்குள் வீணாய் இருந்த நீர். தேனாய் மாறுவது போல ஆன்மிக பாதைக்கு வாழ்க்கை செல்லுமா? ஆழ்மனதில் சுடர்விடும் ஆன்மிக ஒளிக்கும் ஆசாபாசங்களைத் தேடி அலையும் புலன்களுக்குமான போரில் எது வெற்றி பெறும்?

சனி

சந், 
குரு
ராசி

சூ,பு 
சுக்
செ,ரா

பதில் :

(கடகலக்னம், கும்பராசி. ஐந்தில் செவ், ராகு. ஆறில் சூரி, புதன், சுக். எட்டில் குரு. பனிரெண்டில் சனி. 19.12.1974, 8.30 இரவு, சென்னை)

இரண்டு மூன்று திருமணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான திருட்டு வேலைகளைச் செய்ய வேண்டியதுதானே? இல்லாத ஜோதிட விதிகளைச் சொல்லி ஏன் என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? ஏற்கனவே கல்யாணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்தது போதாது என்று இன்னும் இரண்டு கல்யாணம் வேறு கேட்கிறதா? போலிச் சாமியாராகப் போங்கள். பத்துப் பதினைந்து பேர் கூடக் கிடைப்பார்கள். சந்நியாச ஜாதகம் என்று சொல்லி ஏன் எனது உன்னத மதத்தின் அப்பழுக்கற்ற துறவிகளின் பெயரைக் கெடுக்கிறீர்கள்?

லக்னாதிபதி சந்திரன் எட்டில் சனியின் வீட்டில் மறைந்து பலவீனமாகி தற்போது அஷ்டமாதிபதி சனியின் தசையும் நடப்பதால் யார் வந்து சமைத்துப் போடுவார்கள்.. சாப்பிட்டு விட்டு திண்ணையில் தூங்கலாம் என்று திரிகிறீர்கள். சாமியாராகப் போகவேண்டும் என்றால் கோவணத்தைக் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கிவிட வேண்டியதுதானே? நடுவில் எதற்கு மூன்று பெண்டாட்டி ஆசை?

ஒருவர் ஆன்மீகவாதியாகி சாதனை செய்ய வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் குரு சனி கேது ஆகிய மூன்று கிரகங்களும் ஏதேனும் ஒரு வகையில் லக்னத்துடனோ ராசியுடனோ லக்னாதிபதியுடனோ சம்பந்தப்பட்டு இவர்களின் தசையும் நடக்க வேண்டும். உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி சந்திரன் குருவுடன் இணைந்து சனியின் வீட்டில் அமர்ந்து குரு பார்த்த சனிதசை நடப்பதால் ஆன்மிக எண்ணங்களால் தூண்டப்படுவீர்கள்.

ஆனால் லக்னாதிபதி மறைந்து கெட்டதால் எந்தக் குறிக்கோளும் நிலையான புத்தியும் இல்லாமல் “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என சந்நியாசத்துக்கும் சம்சார பந்தத்துக்கும் இடையில் அலைபாய்கிறீர்கள். லக்னம் உள்ளிட்ட அனைத்தும் உங்கள் ஜாதகத்தில் ராகு கேது சனி குரு நட்சத்திரங்களில் இருப்பதால் ஆன்மிக ஈடுபாடு இருக்கும்.

ஆனால் சுக்கிரன் மட்டும் தனது சொந்த நட்சத்திரத்தில் இருந்து தசாநாதன் சனியைப் பார்ப்பதால் புலனடக்கம் இல்லாமல் ஒரு பெண் கிடைத்தது பத்தாது என்று இன்னும் இரண்டு பேர் ஏமாறுவாளா என்று மனம் எதிர்பார்க்கிறது. இதற்கு இல்லாத ஜோதிடவிதி ஒரு சாக்கு. சனிதசை முடியும்வரை வாழ்க்கை இப்படித்தான் இரண்டும் கெட்டானாக இருக்கும். புதன் தசையில்தான் “சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்” என்று ஒரு முடிவிற்கு வருவீர்கள்.

1 comment :

  1. வரவிருக்கும் பெயர்ச்சி பலன்களை எப்பொழுது வெளியிடுவீர்கள் குரு ஜி .

    ReplyDelete