Monday, 15 May 2017

2017 வைகாசி மாத பலன்கள்

மேஷம்:

வைகாசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் மேஷநாதன் செவ்வாய் சனியின் பார்வையில் இருக்கிறார். எனவே, இந்தமாதம் மேஷராசிக்கு தேவையற்ற மனக்கலக்கங்களும் சிறிய விஷயங்களை பெரிதாக்கி பார்ப்பதும், சிலருக்கு எதிர்காலத்தை பற்றிய கவலைகளும் உள்ள மாதமாக இருக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும்.

சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை கைக்கு வரும். மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ கிடைக்கும்.

வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தமாதம் நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ரிஷபம்:

வைகாசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் இந்த மாதம் ரிஷபராசிக்கு யோகமாகவே இருக்கும். சுக்கிரனின் உச்சத்தாலும், ராசிக்கு குருபார்வை இருப்பதாலும் ராசி வலுவடைகிறது. எனவே இந்த மாதம் உங்களுடைய எண்ணங்கள் யாவும் பலிக்கும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் மாத ஆரம்பத்தில் சனி எட்டில் இருப்பதால் உங்களை எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.

சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதோடு தைரிய வீரிய ஸ்தானாதிபதியான மூன்றுக்கு அதிபதி சூரியனும் ராசியில் அமர்ந்து குருபார்வை பெறுவது இந்த மாதம் உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அதிகப்படுத்துவதால் உங்களின் எதிரிகளோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குவார்கள். அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு. தந்தை வழி நன்மைகளும் அப்பாவின் ஆதரவு மற்றும், பூர்வீக சொத்து கிடைப்பதும் ஞானிகள் தரிசனம், புனிதயாத்திரை, கோவில் திருப்பணி என ஆன்மிகத்தொண்டு பாக்கியங்களும் உள்ள அருமையான மாதம் இது.

மிதுனம்:

சுக்கிரன் உச்சம் பெற்று குருவின் பார்வையில் இருப்பதும், பாக்கிய லாபாதிபதிகள் சனியும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் மிதுன ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நல்லபலன்களையும் நிம்மதியையும் தரக்கூடிய அமைப்பு என்பதால் வைகாசி மாதம் மிதுனத்திற்கு வசந்த மாதமாக இருக்கும். சிலருக்கு உல்லாசப் பயணங்கள் உண்டு. இன்னும் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு நன்மை தரும் மாதம் இது.

யோகாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் இது மிதுன ராசிக்காரர்களின் மனம் மகிழும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டு. குடும்பத்தினர் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுத்து செலவு செய்வீர்கள். பெண்களினால் உதவிகளும் ஆதரவுகளும் நல்ல பலன்களும் இருக்கும். தனலாபம் உண்டு. பணத்திற்கு பஞ்சம் இருக்காது. வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும்.

இதுவரை மந்தமாக இருந்து வந்த வேலை தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் இனிமேல் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் போடும் மாதமாக இது அமையும்.

கடகம்:

இரண்டு, பத்துக்குடைய சூரியனும், செவ்வாயும் லாபஸ்தானத்தில் இணைந்து குருபார்வையில் இருப்பதாலும், குருபகவான் தனது ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தைப் பார்த்து உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்க பணவரவை அருளும் நிலையில் இருப்பதாலும் கடக ராசிக்கு வைகாசி மாதம் தொல்லைகள் தராமல் எதிலும் ஒரு சீரான செயல்பாட்டை தரும் மாதமாக இருக்கும். வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இந்தமாதம் வீட்டுக்கனவு நனவாகும்.

யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதும் பாக்கியாதிபதி குருபகவான் அவர்களைப் பார்ப்பதும் செலவுகளை தந்தாலும் அதற்கேற்ப பணவரவுகளையும், சுபச்செலவுகள் மூலமாக குடும்ப சந்தோஷங்களையும் தரும். இரண்டாமிடத்திலிருக்கும் ராகுவால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு வருவதற்கு இடமிருக்கிறது என்பதால் இப்போதிலிருந்தே அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது.

மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. உங்கள் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் இருக்கும். அதேநேரம் மனோதைரியம் கூடுதலாகும். இரண்டில் இருக்கும் ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் வலுவான நிலையில் பத்தாம் வீட்டில் யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்திருப்பது மிகவும் சிறந்த அமைப்பு என்பதோடு இவர்கள் இருவரையும் குருபகவான் பார்ப்பது கூடுதல் நன்மை என்பதால் வைகாசி மாதம் சிம்மத்திற்கு நல்ல மாதமே. ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் எவ்வித பங்கமும் இன்றி இருப்பதால் சிம்மராசிக்காரர்களுக்கு எல்லா சிறப்புக்களையும் தரும் மாதம் இது. சிம்மத்திற்கு இப்போது தடைகள் எதுவும் இல்லை.

எதிர்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும்.

பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் இனிமேல் கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இந்தமாதம் சில புதிய அறிமுகங்கள் உங்களுக்கு உண்டு. அதனால் நன்மைகளும் உண்டு. இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

கன்னி:

யோகாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் உச்ச நிலையில் இருப்பதால் வைகாசி மாதம் உங்களுக்கு யோக மாதம்தான். அதேநேரத்தில் ராசிநாதன் புதன் எட்டில் மறைவதால் மனவருத்தங்கள் தரும் சம்பவங்கள் நடக்கும் மாதமாகவும் இது இருக்கும். பனிரெண்டிற்குடைய சூரியனும், எட்டிற்குடைய செவ்வாயும் இணைந்து குரு பார்வையில் இருப்பது கன்னிக்கு சாதகமற்றதுதான் என்றாலும் யோகாதிபதி சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதால் அனைத்தும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதுவும் எல்லை மீறாது.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். வழக்குகள் இனிமேல் உங்களுக்கு சாதகமாக திரும்பும். இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான திருப்புமுனை சம்பவங்கள் நடக்கும். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். ராசியை சுபர் பார்ப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும்.

அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும். குறிப்பிட்ட சிலர் வெளிநாடு செல்வீர்கள். பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

துலாம்:

மாதம் முழுவதும் செவ்வாயும், சூரியனும் எட்டில் வலுப்பெற்று குருபார்வையுடன் இருப்பது துலாராசிக்காரர்களுக்கு சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலை பெற்று இருப்பதும் பதினொன்றாமிடத்தில் ராகுபகவான் இருப்பதும் அனைத்து எதிர்ப்புகளையும் வெல்லும் வலிமை தரும் என்பதால் துலாம் ராசிக்காரர்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் இரண்டில் சனி இருப்பதால் கொடுக்கல் வாங்கல்களில் நிதானம் தேவை.

வைகாசி மாதம் துலாம் ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் தடைகள் ஏற்பட்டு சுலபமாக நடக்கக்கூடிய விஷயங்கள் கூட கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும் மாதமாக இருக்கும். அதே நேரத்தில் எட்டாமிடம் சுபவலுப் பெறுவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டமாக ஒரு நல்ல பணவரவும் கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் நன்மைகளைத் தரும்.

உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்களாலும் செலவுகள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். எட்டுக்குடையவன் வலுவாக இருப்பதால் மாற்றங்கள் வரும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் இருக்கும்.

விருச்சிகம்:

ஏழரைச்சனியின் கெடுபலன்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு சற்று மூச்சு விட்டுக் கொண்டு இளைப்பாற இடங்கொடுக்கும் மாதம் இது. பத்துக்குடையவன் மாதம் முழுவதும் ஏழாம் வீட்டில் அமர்ந்து ராசிநாதன் செவ்வாயும் அவருடன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் வைகாசி மாதம் வருத்தங்களைத் தராமல் நல்ல நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும். குறிப்பாக அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் பிரச்னைகள் எதுவும் வராது.

அறிவால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கலாம். குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதத்தில் செலவுகளும், அலைச்சல்களும் வீண் தொந்தரவுகளும் இருக்கும். யோகாதிபதிகள் வலுப்பெறுவதால் பிரச்னைகளை சமாளிக்கும் தைரியமும் உண்டாகும்.

வெகுநாட்களுக்கு பிறகு இளைய பருவத்தினருக்கு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். உங்கள் கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக இனிமேல் சம்பாதிப்பீர்கள். மனஅழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. தன்னுடைய திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும்.

தனுசு:

ஐந்து, ஒன்பதுக்குடைய யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் ஆறாமிடத்தில் மறைந்தாலும் இவர்கள் இருவரையும் ராசிநாதன் குரு பார்ப்பதால் வைகாசி மாதம் உங்களுக்கு நல்ல மாதமே. ஆனாலும் யோகாதிபதிகள் மறைவதால் எல்லா விஷயங்களிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத மாதமாக இது இருக்கும். இளைய பருவத்தினர் எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல் போன்ற பலன்கள் நடக்கும். செல்போன் பத்திரம்.

அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான கடிதங்கள் வரும். ஆனால் வேலைதான் இழுத்தடிக்கும். தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் இந்த மாதம் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

சனி ராசியில் இருப்பது சிலருக்கு கெடுபலன்கள் எதுவும் நடக்காவிட்டாலும் ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தை தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே குடும்பத்தில் சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். நல்ல நண்பர்களும் சிறு பிரச்னைகளால் இந்தமாதம் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

மகரம்:

எட்டுக்குடையவன் ஐந்தில் அமர்ந்து எட்டாமிடத்தில் ராகுவும் இருப்பது நல்ல நிலையல்ல என்றாலும் குருபகவான் ஒன்பதாமிடத்தில் இருந்து அஷ்டமாதிபதியை பார்ப்பது அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பதால் வைகாசிமாதம் கவலைப்படத் தேவையில்லாத மாதமாக இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு இரட்டிப்பான அதிர்ஷ்ட நிகழ்வுகள் இருக்கும்.

மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில்மேன்மை தனலாபங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் இந்த மாதம் உங்களுக்கு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.. எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

கும்பம்:

ராசிநாதன் சனிபகவான் ராசியைப் பார்ப்பதும் சுக்கிரன் உச்சத்தில் இருப்பதும் யோகநிலை என்பதால் வைகாசி மாதம் கும்பராசிக்கு நன்மைகளை தரும் மாதமாக இருக்கும். வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகளில் நல்ல மாற்றங்கள் வரும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிமாநிலத்தில் படிக்கவோ செல்ல முடியும்.

இளைஞர்களுக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

மாத இறுதியில் சனியை செவ்வாய் பார்க்கப் போவதால் அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிலோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். நீங்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும்.

மீனம்:

மீனராசிக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடும் மாதமாக வைகாசி மாதம் இருக்கும். மீனராசிக்கு இருந்து வந்த அனைத்து இடையூறுகளும் விலகி விட்டதால் இனிமேல் மீனத்திற்கு கவலை எதுவும் இல்லை. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். தாயார் விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படியான நன்மைகள் இருக்கும். தாயார்வழி உறவினர்கள் உதவுவார்கள்.

உயர்கல்வி கற்க விரும்பும் சிலருக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். சிலருக்கு வேற்றுமொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. எதிர்பாராத தனலாபங்கள் இந்த மாதம் இருக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் முடிவுக்கு வந்து ஒரு நல்லதொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்குகிறது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.

வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடர்புடையவர்கள், வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து சங்கடப்படுத்தலாம்.

No comments :

Post a Comment