Monday, May 1, 2017

கன்னி: 2017 மே மாத பலன்கள்



கன்னி:

மாத ஆரம்பத்தில் கன்னிநாதன் புதன் எட்டாமிடத்தில், எட்டுக்குடையவனுடன் இருக்கிறார். கன்னிக்கு மாத துவக்கத்தில் வேலை, தொழில் அமைப்புகளில் ஏமாற்றங்களும், பின்னடைவுகளும் இருந்தாலும் பிற்பகுதியில் அனைத்தும் நீங்கி, சமநிலைக்கு வருகின்ற மாதமாக மே மாதம் இருக்கும்.

எட்டாமிடம் வலுப் பெறுவதால் ஆகாதவர் என்று தெரிந்தும் அவருடன் நீங்கள் சிரித்து பேச வேண்டிய ஒரு சூழ்நிலை இப்போது இருக்கும். எதிரியை சகித்து கொண்டு இணக்கமாக போக வேண்டிய மாதம் இது. குறிப்பிட்ட சிலருக்கு எதிர்மறை பலன்கள் நடக்கும் என்பதால் இந்த மாதம் ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை செய்வது கூடாது. அடுத்தவரை நம்பிச் செய்யக் கூடிய விஷயங்களையும் செய்ய வேண்டாம். காலை வாரும் சம்பவங்கள் இந்த மாதம் கன்னிக்கு இருக்கும். சிறு விஷயங்களில் கூட கவனம் அதிகமாக தேவைப்படும். உங்களால் முடியும் என்று நம்புகின்ற விஷயங்களை மட்டும் செயல்படுத்துவது நல்லது.

பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும், தன லாபங்களும் நிறைவாகவே இருக்கும். ராசிநாதன் வலுக்குறைவாக இருந்தாலும் ராசியில் குரு அமர்ந்து சுபத்துவமாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும் கடைசியில் உங்களுக்கு சாதகமாகவே முடியும். ராசிநாதன் செவ்வாயின் வீட்டில் இருப்பதால் தேவையில்லாமல் கோபம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பேச்சால் சிலரை மனது சங்கடப்படும் படி வைப்பீர்கள் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

2,5,7,9,10,15,17,18,19,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 23 ம் தேதி காலை 8.24 மணி முதல் 25 ம் தேதி காலை 8.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment