Thursday, April 13, 2017

2017 ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்

தமிழக அரசியலில் மாற்றம் வரும் ஆண்டு..!

இந்த வருடம் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் “ஹே விளம்பி” என்பதாகும். இதற்கு “மகிழ்ச்சியைச் சொல்லுதல்” என்று அர்த்தம்.


வருடங்களின் பெயர்களும் அந்த வருடம் நடக்க இருப்பவையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அதன்படி சென்ற வருடத்தின் பெயர் “துர்முகி” என்பதாக இருந்தது. இதற்கு “துயரமான அல்லது கோரமான, பார்க்கப் பிடிக்காத முகம்” என்று அர்த்தம்.

வருடத்தின் பெயர்கள் அந்த ஆண்டின் பலனைச் சொல்லும் என்பதன்படி சென்ற வருடம் யாரெல்லாம் துன்பமான, சோகமான, பார்க்கப் பிடிக்காத முகத்துடன் இருந்தீர்களோ, யாருக்கெல்லாம் துயரமான, மனதைப் பாதித்த சம்பவங்கள் நடந்ததோ, அவர்கள் அனைவரும் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் துயரங்கள் நீங்கி உங்கள் மகிழ்ச்சியை அடுத்தவர்களிடம் சொல்லுவீர்கள். எனவே அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தும் வருடம் இது.

இந்த ஆண்டின் இன்னொரு சிறப்பு பலனாக, பிறக்கும் புது வருடத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகப் பெயர்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ராகுகேது பெயர்ச்சி வரும் ஆகஸ்டு 18 ம் தேதியும், ஏறத்தாழ வருடம் ஒருமுறை நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி வரும் செப்டம்பர் 12 ம் தேதியும், அனைவரும் ஆவலுடனும், விருச்சிக ராசிக்காரர்கள் கூடுதலான ஆர்வத்துடனும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி எதிர்வரும் அக்டோபர் மாதம் 26 ம் தேதியும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நடக்க இருக்கின்றன.

ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் சர்ப்பக் கிரகங்கள் தற்போது இருக்கின்ற சிம்ம-கும்ப வீட்டில் இருந்து கடக-மகர வீட்டிற்கு மாற இருக்கிறார்கள். இதன் மூலம் தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான நிலை நல்லபடியான ஒரு தீர்வை நோக்கி நகர ஆரம்பிக்கும்.

சிம்மம் என்பது அரசர்களையும், அரசாங்கத்தையும் குறிக்கின்ற ஒரு ராசி என்பதால் சிம்ம வீடு பலவீனமாக இருக்கின்ற நேரங்களில், உலக அரசியலில் மாற்றங்களும், அரசியல் தலைவர்களுக்கு ஆபத்துகளும், சிம்மத்தை லக்னமாகவோ, ராசியாகவோ கொண்ட தலைவர்களுக்கு கண்டங்களும் ஏற்படும்.

சிம்மத்தில் ராகு அமர்கின்ற நிலைமை 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற ஒன்றாகும். இதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ராகு சிம்மத்திற்கு மாறியதால், பிறந்த ஜாதக அமைப்புப்படி குறைவான ஆயுள்பலம் கொண்டு சிம்மராசியில் பிறந்த ஜெயலலிதா உடல்நல பாதிப்பிற்கு உண்டாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்தார்.

அவரது மறைவிற்குப் பின் தமிழக அரசியலில் ஒரு நிச்சயமற்ற நிலை தோன்றி இன்று வரை நீடித்து வருகிறது. இந்த நிலைமை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதிக்கு பிறகு மாறும். தமிழ்நாட்டில் நிலையான ஒரு அரசியல் மாற்றத்தையும், அரசாங்கத்தையும் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி உருவாக்கி தரும்.

சிம்மத்தை ராசியாக கொண்ட தலைவர் மறைந்து விட்டதால், அடுத்து வரும் காலங்கள் சிம்மத்தை லக்னமாக கொண்ட ஒரு தலைவருக்கு சாதகமாக இருக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு அடுத்த சில வாரங்களில் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி குருப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது.

ஒன்பது கிரகங்களிலும் பணத்திற்கு அதிபதியான கிரகம் குரு ஆவார். எப்போதுமே குரு பலவீனமாகும் நிலையில் உலகில் பணத்தட்டுப்பாடு, பணப்புழக்கம் குறைதல், எவர் கையிலும் பணமில்லாத நிலை போன்ற பலன்கள் இருக்கும்.

தனத்திற்கு அதிபதியான குரு கடந்த முறை இருந்த கன்னி வீடு அவருக்கு பகை வீடாகும். காலபுருஷன் என்று உருவகப் படுத்தப்பட்ட, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் முதல் ராசியான மேஷத்திற்கு ஆறாம் வீட்டில் அப்போது அவர் மறைந்து பலவீனமான நிலையில் இருந்ததால், கடந்த வருடம் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மத்திய அரசாங்கத்தால் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன் மூலம் எவர் கையிலும் பணம் இல்லாமல், பணத்திற்காக பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு ஏ.டி.எம். வாசலில் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலைமை இனிமேல் சீராகி வருகின்ற குருப் பெயர்ச்சிக்கு பிறகு பணப்புழக்கம் ஏற்கனவே இருந்து வந்த சகஜமான நிலைமைக்கு மாறும்.

உலகப் பொது விஷயங்களில் ஜோதிடர்கள் அனைவரும் சம்பவங்கள் நடந்து முடிந்த பின்புதானே ஜோதிடக் காரணங்களைச் சொல்கிறீர்கள். குருப்பெயர்ச்சிக்கு முன்பே மத்திய அரசு இதுபோன்ற ஒரு முடிவை அறிவிக்கப் போகிறது என்று சொல்லியிருக்கலாமே, அப்போதுதானே ஜோதிடம் உண்மை என்று நம்ப முடியும் என்று சிலர் நினைக்கக் கூடும்.

ஜோதிடம் என்பது அபாரமான கணிப்புத் திறனும், ஞானமும் தேவைப்படும் ஒரு அனுமானக் கலை. பணத்திற்கு உரிய கிரகமான குரு பலவீன நிலையில் இருந்ததால் மத்திய அரசு பணம் சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கையை எடுத்தது என்ற ஜோதிடக் காரணத்தை நான் சொல்கிறேன்.

அதேநேரத்தில் ஜோதிடத்தில் குரு பணத்திற்கு மட்டுமே உரிய கிரகமல்ல. இன்னும் இது போன்ற ஏராளமான செயல்பாடுகளுக்குச் சொந்தக்காரர் அவர். உதாரணமாக குழந்தைகள், மஞ்சள் நிறமுள்ளவைகள், யானை போன்ற அளவில் பெரியவைகள், ஆன்மிகம் சம்பந்தப்பட்டவைகள் போன்ற ஏராளமான விஷயங்கள் குருவின் ஆளுகைக்கு உட்பட்டவை.

அதேபோல இந்தியாவிற்கு மட்டும் குரு சொந்தக்காரர் அல்ல. ஜோதிடமும் இந்தியர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. வேத ஜோதிடத்தில் நாளும், நேரமும். இடமும் மிக முக்கிய காரணிகள்.

எனவே உலகப் பொதுக் கிரகமான குரு, இந்த உலகின் எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த வகையில், தனது செயல்பாடுகளை, எவ்வாறு செய்ய இருக்கிறார் என்பது மனிதர் எவரும் அறிய முடியாத பிரம்ம ரகசியம்.

அவர் இந்தியாவில், உலகில் இந்தியா அமைந்துள்ள இடத்தின் தன்மைக்கேற்ப இங்கே பணப் பாதிப்புகளைத் தரலாம். பாகிஸ்தானில் அந்த இடத்திற்கேற்ப தன்னுடைய இன்னொரு காரகத்துவம் எனும் செயல்பாடுகளில் ஒன்றான மஞ்சள் நிறமுள்ளவைகளைப் பாதித்திருக்கலாம். அமெரிக்காவில் அளவில் பெரியவைகளைப் பாதித்திருக்கலாம். தான் பலவீனமானதால் உலகில் எங்கோ ஒரு மூலையில் உள்ள குழந்தைகளை வாட்டி வதைத்திருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயமானது. சென்ற வருடம் குரு வலிமையிழந்த நிலையில் இருந்ததால் உலகிற்கு குருவால் கிடைக்க இருக்கும் நன்மைகள் பாதிப்பு அடைந்தன. இது உறுதியான ஒன்று.

ஜோதிடம் என்பது தெய்வத்தின் துணை கொண்டு இந்த பாதிப்புகள் எங்கே, எப்படி நடக்கும் என்பதை ஓரளவிற்கேனும் அறிய முயற்சி செய்து, ஏதேனும் தெரிந்தால் அதன் மூலம் மனித சமூகத்தை தற்காத்துக் கொள்ள வைப்பதுதான். அறிவெனும் ஒளி என்ற பொருள் கொண்ட இந்த ஜோதிடக் கலையின் மூலம் இதைத்தான் சென்ற நூற்றாண்டுகளில் ஞானிகள் செய்து வந்தார்கள்.

என்றோ ஒருநாள் இந்த பூமி இல்லாது போகும், சர்வ நிச்சயமாக அழிந்து விடும் என்பதை எப்படி நவீன விஞ்ஞானம் உறுதியாக நம்புகிறதோ, அதனை நிரூபிக்கவும் இயலும் என்று சொல்கிறதோ, அதைப் போலவே, அதாவது பூமியின் முடிவும் நிச்சயிக்கப் பட்டதுதான் என்பதைப் போலவே, இந்த பூமியில் நடக்கும் செயல்களும் என்றோ நிச்சயிக்கப் பட்டவை என்றுதான் ஜோதிடம் சொல்கிறது.

முன்னதை உறுதிப் படுத்த முடியும், பின்னதை அவ்வாறு நிரூபிக்க இயலாது என்று வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். ஒன்று நமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று ஆகி விடாது என்பதும் நவீன விஞ்ஞானம் ஒத்துக் கொண்ட ஒரு கருத்து தான்.

பனிரெண்டு ராசியினருக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டின் ஒரு முக்கிய பலனாக மூன்று கிரகப் பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க இருப்பதால், இந்த புத்தாண்டில் யாருக்காவது சாதகமற்ற பலன்கள் நடக்க இருந்தால் கூட சில வாரங்களுக்குப் பிறகு அது மாறி நல்ல பலன்கள் நடக்கும் என்பது உறுதி.

உதாரணமாக குறிப்பிட்ட ஒரு ராசிக்கு முதலில் நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி சாதகமற்ற பலன்களைத் தருவதாக அமைந்தாலும், அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி நல்ல ஒரு இடத்திற்கு மாறி, சர்ப்பக் கிரக பெயர்ச்சிகளின் சாதகமற்ற பலன்களை ஈடு கட்டும்படி அமையும்.

துரதிர்ஷ்ட வசமாக ராகு-கேது, குருப்பெயர்ச்சி இரண்டும் ஒருவருக்கு சாதகமற்ற கெடுபலன்களை தரும் அமைப்பில் இருந்தாலும்,. அடுத்த சில வாரங்களில் நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சி நிச்சயமாக நற்பலன்களை தரும் நிலையில் அமையும். எனவே எல்லோருக்கும் இந்தப் புத்தாண்டின் ஒரு நல்ல அம்சமாக அடுத்தடுத்து மூன்று கிரக பெயர்ச்சிகள் வருவதை குறிப்பிடலாம்.

அடுத்து புது வருடத்தின் மிக முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி திருக்கணிதப்படி வரும் அக்டோபர் மாதம் 26-ம் நாள் நடக்க இருக்கிறது.

இந்த பெயர்ச்சியின் மூலம் சனி தற்போது இருக்கும் விருச்சிக வீட்டில் இருந்து தனுசுவிற்கு மாற இருக்கிறார். இதன் மூலம் தற்போது ஏழரைச் சனியின் துன்பங்களினால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிகம் மற்றும் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் மேஷ ராசிகளுக்கு மிகப்பெரிய ஒரு நல்ல மாறுதல் கிடைக்கும்.

எனவே ஏதேனும் ஒரு கிரகம் சாதகமற்ற இடத்திற்கு மாறினாலும் கூட அதனையடுத்து சில வாரங்களில் நடக்க இருக்கும் மற்றொரு கிரக மாறுதல் உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதால், எல்லோருக்கும் நல்லவைகளை மட்டுமே தருகின்ற, உங்கள் சந்தோஷங்களை நீங்கள் அடுத்தவரிடம் விளம்புகிற வருடமாக இந்த “ஹே விளம்பி” புது ஆண்டு இருக்கும்.

அனைவருக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

1 comment :