Saturday, 1 April 2017

2017 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள்


அசுவினி:

அஸ்வினியினர் எதிலும் அனுசரித்துச் செல்லுங்கள். குறிப்பாக வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் வேண்டாம். பணி இடங்களில் வாக்குவாதம் எதுவும் வேண்டாம். அரசு, தனியார்துறை ஊழியர்கள் இந்த மாதம் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு நல்ல பலன்கள் நடக்கும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு.

பரணி:

உங்களில் சிலருக்கு இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பழகிய ஒருவர் காரணமில்லாமல் துரோகியாக மாறலாம். செய்யாத குற்ற த்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்வுகள் உண்டு.

கிருத்திகை:

இந்தமாதம் சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொள்வது நல்லது. கிரகநிலைகள் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்கும் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்துக் கொள்வது நல்லது. அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் மிகுதியாக இருக்கும். ஆனாலும் நல்லபெயர் கிடைக்கும். கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு. பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும்.

ரோஹிணி:

செலவுகளும் அதற்கேற்ற வருமானமும் இந்த மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும் என்பதால் வீட்டில் கலகலப்பும், சிரிப்புமாக இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் நல்ல வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.

மிருகசீரிடம்:


நட்சத்திரநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதால் சகோதரர்கள் உதவுவார்கள். அதே நேரத்தில் பங்காளிகள் எனப்படும் சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தாலும் இந்தமாதம் வம்புச் சண்டைகள் இருக்கும். குறுக்குவழி சிந்தனைகள் இப்போது வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். கோபத்தை தவிருங்கள்.

திருவாதிரை:

உங்களின் நீண்டகால பிரச்னைகளை இந்த மாதம் வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். வேலையில் டிரான்ஸ்பர் கிடைத்து ஊரை விட்டு மாறுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும்.

புனர்பூசம்:

பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது. அதேநேரம் அவர்களால் செலவும் இருக்கும். சிலருக்கு தூரப் பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

பூசம்:

இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் இப்போது அமைந்து இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் இந்த மாதத்தில் இருந்து உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். இதுவரை இருந்த தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

ஆயில்யம்:

வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இந்த மாதம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைத்து தடைகளும் விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். ஆண்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.

மகம்:

மகம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால் இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

பூரம்:

ஏப்ரல் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்த மாதம் இருக்காது. அதேநேரம் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்துச் செய்தால் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும்.

உத்திரம்:

இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இந்த மாதம் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும், ஆதாயங்களும் வரும். நண்பர்கள் உதவுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமண உறுதி செய்தல் அல்லது திருமணம் நடத்தல் போன்ற சிறப்புப் பலன்கள் இருக்கும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்ல சம்பவங்கள் இருக்கும்.

அஸ்தம்:

அஸ்தத்திற்கு இது ஆகாத மாதம் இல்லை. தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். இளைய சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் வரும். பணவரவும் உண்டு.

சித்திரை:

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இந்த மாதம் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. குடும்பத்தில் திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவைகள் நடந்து உங்களை மகிழ்விக்கும். என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

சுவாதி:

இந்த மாதம் உங்களை கோபப்படுத்தி எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வாக்குவாதங்களைத் தவிருங்கள். நண்பர்களே உங்களின் கோபத்தால் பாதிக்கப்பட்டு எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

விசாகம்:

அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் இந்த மாதம் தீரும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி டிரான்ஸ்பர் ஆகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல மாதம். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.

அனுஷம்:

அனுஷத்திற்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கையில் உணவு இருந்தாலும் சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் நீங்களே சுயமாக முடிவெடுக்க வேண்டாம். உங்களுக்கு வேண்டப்பட்ட அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் பிரச்னைகளை சொல்லி ஆலோசனை பெற்று அதன்படி நடங்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் நன்மைகள் உண்டு. பணவரவு நன்றாகவே இருக்கும்.

கேட்டை:

இந்த மாதம் பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். ஆனால் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. இளைய பருவத்தினருக்கு இந்தமாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். கேட்டை நட்சத்திரக் காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் இனி கவலை ஒன்றும் இல்லை.

மூலம்:

இந்தமாதம் உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதேநேரம் அவர்களால் செலவுகளும் உண்டு. வேலை செய்யுமிடங்களில் வாக்குவாதம் வேண்டாம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது.

பூராடம்:

இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கையும் உள்ள மாதமாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் லாபம் உண்டு. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். நட்சத்திர நாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இருக்கும். எதிர்பார்த்திருந்த ஒரு தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது. பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

உத்திராடம்:

இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் உங்கள் மனம் போல இந்த மாதம் நிறைவேறும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு சாதனைச் செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

திருவோணம்:

இந்த மாதம் உங்களுக்கு சில எதிர்மறை அனுபவங்கள் இருக்கும். வேகமாக போய்க் கொண்டிருக்கும் கார் வேகத்தடையை பார்த்ததும் வேகம் குறைவதைப் போல இப்போது சற்று நிதானமான பலன்களே நடைபெறும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

அவிட்டம்:

நட்சத்திரநாதன் செவ்வாய் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாண உறுதி நிகழ்ச்சிகள் நடக்கும். இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. அவிட்டத்திற்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் போடுகின்ற வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளும் இந்தமாதம் நல்லபடியாக அமையும்.

சதயம்:

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். சிலருக்கு சுபச்செலவுகளும், விரயங்களும் உள்ள மாதமாக இருக்கும். செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் இந்த மாதம் வருமானமும் நன்றாக இருக்கும். எல்லோருக்கும் எல்லோரும் கடன் தரமாட்டார்கள். கடன் வாங்குவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்பதால் செலவு செய்வதற்கு கடன் வாங்காமலேயே வருமானம் வரும். அலுவலகங்களில் சிறப்புக்களைப் பெறுவீர்கள்.

பூரட்டாதி:

உங்களின் நட்சத்திர நாதன் குரு பலம் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த மாதம் பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்ல அனுபவங்கள் இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நீண்ட தூர பயணம் செல்வீர்கள்.

உத்திராட்டாதி:

எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் இல்லாமல் இந்த மாதம் கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். உங்களில் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்போது திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள்.

ரேவதி:

இந்த மாதம் வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். பொதுவில் இது சிறப்பான மாதம்தான்.

No comments :

Post a Comment