Saturday, 17 December 2016

2017 ம் ஆண்டின் பொதுப் பலன்கள்


2017 புத்தாண்டு அன்று கிரக நிலைகள்

சுக்செவ் கேது
1-1-2017
கிரக நிலை
சந்
ராகு
சூரி, புதன்
சனி
குரு


ஆங்கிலப் புத்தாண்டு இம்முறை சனிக்கிழமை இரவு, ஞாயிறு அதிகாலை, மார்கழி 16ம் நாள், திருதியை திதி, திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் கன்னி லக்னத்தில் உதயமாகிறது.

டிசம்பர் மாதம் நள்ளிரவு 12 மணி எப்போதுமே கன்னி லக்னமாகவே இருக்கும் என்பதால் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிராயன முறையை பின்பற்றும் நமது இந்திய முறைப்படி வருடாவருடம் மாறும் சந்திர ராசிப்படி புத்தாண்டு பலன்களைக் கணிப்பதே பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும். அதன்படியே நான் புத்தாண்டு பலன்களை எழுதி வருகிறேன்.

எந்த ஒரு அமைப்பிலும் ராசியையோ, லக்னத்தையோ குரு பார்த்தால் அது சிறப்பாக அமையும் என்ற விதிப்படி 2017 ம் ஆண்டு பிறக்கும் நேரத்தில் ராசியாகிய மகரத்தை குருபகவான் பார்ப்பது சிறப்பு. அதைவிட மேலாக ராசிநாதன் சனியும் தனது ராசியைத் தானே பார்க்கிறார். எனவே இந்தப் புதுவருடம் பிறக்கும் போதே வலிமையான நன்மைகளைச் செய்யும் அமைப்பில்தான் பிறக்கிறது.

உலகியல் ஜோதிட விதிகளின்படி நமது இந்தியத் திருநாடு மகர ராசியைச் சேர்ந்ததாகும். சென்ற முறை சென்னையைச் சூறையாடிய பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்களை எழுதும்போது இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதன்படி பெரும் மக்கள் கூட்டத்தையும், அவர்கள் கூடும் இடங்களையும் சனியும் அவரது மகர, கும்ப ராசிகளும் குறிப்பிடுகின்றன என்பதால் உலகில் அதிக ஜனத்தொகைகளைக் கொண்ட சீனா, கும்ப ராசியையும், இந்தியா மகர ராசியையும் குறிக்கும்.

நமது நாட்டைக் குறிக்கும் ராசி சுபத்துவமடைந்து உள்ளதால் 2017 ம் ஆண்டு இந்தியாவில் உள்ளவர்களுக்கும், இந்த தேசத்தில் பிறந்து வெளியிடங்களில் உள்ளவர்களுக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கும். அதைவிட மேலாக பிறக்க இருக்கும் புத்தாண்டில் நமது நாட்டின் பெருமைகள் உலக அரங்கில் பேசப்படும்.

பொதுவான நாட்டு நடப்புகளைப் பார்க்கும்போது இந்தியாவின் மத்திய மாநில தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் அமைப்பில் வருடத்தின் உதயம் அமைந்திருக்கிறது. ராசியின்படி யோகங்கள் அமையும் விதத்தில் இந்த வருடம் பிறப்பதால் இந்தியர்கள் மேன்மை பெறுவார்கள். உலக அரங்கில் இந்தியாவின் தனித்தன்மை பளிச்சிடும்.

ராசியின் தன, லாபாதிபதிகளான செவ்வாய், சனி, பரிவர்த்தனை பெறுவதால் இப்போது இருக்கும் பணத்தட்டுப்பாடு புது வருடத்தில் நீங்கும். வருடத்தின் பிற்பகுதியில் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு எல்லோருடைய கையிலும் பண நடமாட்டம் இருக்கும். நாட்டின் பொருளாதார நிலையும் சரிவடையாமல் சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.

சனி, செவ்வாய் இருவருமே வலுப்பெற்றுள்ளதால் அடித்தட்டு மக்கள், உழைப்பாளிகள், தொழிலாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்டவர்கள், வாகன ஓட்டுநர்கள், மெக்கானிக்குகள், மாற்றுத்திறனாளிகள், மதுபானத் தொழிலில் உள்ளோர், எண்ணைத்தொழில், தோல்பொருட்கள் செய்வோர், கட்டிடம் கட்டி விற்பவர்கள், மலை மற்றும் மண், செங்கல், டைல்ஸ், கிரானைட், ரியல் எஸ்டேட், அமைச்சர்கள், அரசுப்பணி செய்வோர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் வாழ்க்கைத் தரம் உயரும்.

குருவும் புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் குருபகவான் சம்பந்தப்பட்ட துறையினரான ஜுவல்லரிக்காரர்கள், ஆன்மிகத் துறையினர், வட்டித்தொழில் செய்பவர்கள், வங்கித்துறை, நிதித்துறை, சட்டம் சம்பந்தப்பட்டோர், நீதியரசர்கள், சொல்லிக் கொடுப்போர், மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்டோர் போன்றவர்களும்

புதனின் அறிவுசார்ந்த துறைகளான சாப்ட்வேர், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங், வியாபாரிகள், தகவல் தொழில்நுட்பத்துறை, கணக்கு, புத்தகம் சம்பந்தப்பட்டோர், எழுத்தாளர், பத்திரிக்கைத்துறை, கவிஞர்கள், செல்போன்துறை, கமிஷன் துறையினரும் சிறப்புப் பெறுவார்கள்.

வருட ஆரம்பத்தில் செவ்வாய் கேதுவுடன் இணைவது பொதுவாக நெருப்பு சம்பந்தமான அழிவுகளையும், கோர வெடிகுண்டு சம்பவங்களையும், வன்முறை, கலவரங்களையும் ஏற்படுத்தும். ஆனால் இம்முறை இவர்கள் இருவருடனும் சுபக்கிரகமான சுக்கிரன் இணைவதால் அதிகமான உயிரிழப்பு சம்பவங்கள் நிகழாவண்ணம் பரம்பொருள் நம்மைக் காக்கும்.

2017 ம் வருடத்தின் சிறப்பம்சமாக இந்த வருடம் ராஜகிரகங்களான குரு, சனி, ராகு-கேது ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சியும் அடுத்தடுத்து நடக்க இருப்பதைச் சொல்லலாம். இவ்வாறு அடுத்தடுத்த மாதங்களில் மூன்று கிரகங்களும் மாறுவது ஒரு அபூர்வமான நிகழ்வு.

இந்த வருடம் ஆகஸ்டு மாதம் 18 ம் தேதி ராகு-கேதுப் பெயர்ச்சி நடக்க இருக்கிறது. ராகு தற்போது இருக்கும் சிம்ம வீட்டில் இருந்து கடகத்திற்கும், கேது கும்பத்திலிருந்து மகரத்திற்கும் மாற இருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் 12 ம் தேதி குரு மாறுதலடைய இருக்கிறாரர். தற்போது கன்னியில் இருக்கும் குருபகவான் துலாத்திற்கு மாறுவார்.

வருடத்தின் இறுதியில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சியும் நடக்க இருக்கிறது. சனிப்பெயர்ச்சி நடக்கும் நாள் அக்டோபர் 26ம் தேதி. எனவே அந்தநாள் முதல் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்களும், வேதனை விலகுதலும் இருக்கும்.

குறிப்பாக விருச்சிகம், மேஷம், துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முதல் அனைத்திலும் நன்மைகள் உண்டு. கடுமையான மன அழுத்தம் தரும் சம்பவங்களால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிகம், மேஷத்தினருக்கு இந்த வருடத்துடன் முறையே ஜன்மச்சனி, அஷ்டமச்சனி விலகுவதால் இவர்கள் இருவருக்கும் இனிமேல் நிம்மதி கிடைக்கும்.

துலாத்திற்கு ஏழரைச்சனி முழுவதுமாக விலகுவதால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான். சனிபகவானால் பெரிதும் பாதிக்கப்பட்ட இன்னொரு ராசியான சிம்மத்திற்கு இந்த வருடத்தோடு அர்த்தாஷ்டமச் சனி விலகுகிறது. இதனால் இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்து வரும் சிம்மத்தினர் அது நீங்கப் பெறுவார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கும் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கும்.

தனுசுக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. வருட இறுதியில் அவர்கள் ஜென்மச்சனி அமைப்பில் நுழைவார்கள். எனவே இளைய பருவத்தினர் வேலை தொழில் போன்றவைகளில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த வருடம் காதல் கத்திரிக்காயை வேக வைக்காமல் இருந்தால் போதும். இல்லையெனில் அடுத்த வருடம் மனம் வெந்து விடும். நடுத்தர வயது தனுசுவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

ரிஷபம், மீனம், மகரம் ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் தொல்லைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதிர்ஷ்டமான ஆண்டு இது. கடகம், மிதுனம், கன்னி, ஆகிய மூன்று ராசிகளுக்கும் வருட இறுதியில் கிரக நிலைகள் சாதகமடைவதால் குறைகள் எதுவும் சொல்வதற்கு இல்லை.

இறுதியாக கும்ப ராசியினர் சிறப்பு நற்பலன்களைப் பெறுவார்கள். கும்பத்திற்கு மட்டும் இந்த வருடம் நடக்க இருக்கும் மூன்று பெயர்ச்சிகளும் சாதகமான பலனைத் தரும் அமைப்பில் இருக்கின்றன. ராகு ஆறிலும், குரு ஒன்பதிலும், சனி பதினொன்றிலும் மாற இருப்பது மிக விசேஷம். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக இருந்தால் கும்பத்தினர் சாதிக்கும் ஆண்டாக இது இருக்கும்.

இனி ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியான பலன்களைக் காணலாம்.

1 comment :

  1. தாங்கள் திருக்கணிதமே சரி என்பவர்.அப்படியானால், சனி பெயர்ச்சி january 2017ல் அல்லவா?

    ReplyDelete