Tuesday, 4 October 2016

சினிமாவில் நடிக்க வைக்கும் ராகு - 53 எப்

நம்முடையகிரந்தங்கள் அனைத்தும் “நானாவித வேடத்தொழில்” மற்றும் “சாதுர்யமாக ஏமாற்றுதல்” ஆகிய இரண்டு விஷயங்களை ராகு விற்குரிய முக்கியமான காரகத்துவங்களாக சொல்லுகின்றன.

நவீனயுகத்தில் சினிமாவில் நடித்தல், மற்றும் தொலைக்காட்சி போன்ற நேரடி ஊடகங்களில் தோன்றுதல் போன்றவைகளைச் செய்ய வைப்பவர் ராகுதான்.
ஒருவருக்கு ராகு, சுக்கிரன் மற்றும் சந்திரனைத் தொடர்பு கொண்டு அவர்கள் சம்பந்தம் பெற்று அல்லது ராகு அவருக்குரிய நல்ல பாவங்களில் அமர்ந்திருந்தால் ராகு தசையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபலமடையும் யோகம் நடக்கும்.


அதோடு “ஒயிட் காலர் கிரைம்” எனப்படும் நாகரிக குற்றங்களை செய்ய வைப்பவர் ராகு பகவான்தான். சாதுரியமாக ஏமாற்றுதல் எனும் பிரிவில் லாட்டரி சீட்டுகளையும் மற்ற பிற சூதாட்டங்களையும் சேர்க்கலாம் என்பதால் இது போன்ற துறைகளில் நல்ல பாவங்களில் அமர்ந்த ராகு பகவான் தனது தசையில் ஏராளமான பண லாபத்தை அள்ளித் தருவார்.


ஸ்பெகுலேஷன் துறை எனப்படும் பங்குச் சந்தையிலும் பொருள் சேர்க்க வைப்பவர் ராகுதான். தற்போது புதிது புதிதாக கிளம்பும் ஈமு கோழி வளர்ப்பு, அதிக வட்டி தருகிறோம் என ஆசை காட்டுதல், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பணம் தருகிறோம் என ஏமாற்றுதல், தேக்குமரம் மூலிகைச் செடி வளர்ப்பு போன்ற குறுக்குவழி சிந்தனைகள் அனைத்திற்கும் காரணகர்த்தா ராகு பகவான்தான்.

அதேநேரத்தில் இப்படிப்பட்ட சிந்தனைகளையும் செயல் திட்டங்களையும் தருகின்ற ராகு பகவானுக்கு சுபர்களின் பார்வையும் தொடர்பும் இருக்கும் பட்சத்தில் சிறிய தண்டனையோடு சட்டத்தின் பிடியில் இருந்தும் ஜாதகர் தப்பித்து விடுவார்.

அதோடு ராகு தசை நடக்கும்போது ஒரு நபருக்கு ஜோதிடம் ஆன்மிகம் போன்றவைகளிலும் ஈடுபாடு உண்டாகலாம். சிலருக்கு ராகு புக்திகளில் ஜோதிடம் மற்றும் அந்நிய மொழி கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பாக சிலருக்கு பிளாக் மேஜிக் எனப்படும் மந்திரதந்திரங்கள், மாந்தி ரீகம் போன்றவைகளையும் ராகு கற்க வைப்பார். சுபரோடு சேர்ந்து சுபர் வீட்டில் இருக்கும் ராகு ஒருவரை தனது தசையில் ஜோதிடராக புகழ் பெற வைப்பார்.

ஒரு சரராசியில் (மேஷம் கடகம் துலாம் மகரம்) ராகு இருந்து, அந்த பாவம் லக்னத்திற்கு 3, 11 மிடங்களாக அமைந்து, அந்த ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்று, ஐந்து அல்லது ஒன்பதுக்குடையவன் சாரத்தில் இருக்கும் ராகுவின் தசை வருமானால் ஜாதகர் ஏழ்மையான நிலையில் பிறந்திருந்தாலும் மறைமுகமான வழியில் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிப்பார் என்பது உறுதி.

இது போன்ற அமைப்பில் ராகுதசை சுயபுக்தியில் சாதாரண தொழிலாளியாக அதிகார உச்சத்தில் இருக்கும் குடும்பத்திற்கு அறிமுகம் ஆகி இன்று கோடிகளை குவித்து வைத்திருக்கும் சில ஜாதகங்களை நான் ஆரம்பம் முதலே ஆராய்ந்திருக்கிறேன்.

அதே போல ராகு தனது தசை புக்திகளில் அந்நிய தேசம் சென்று பொருள் தேட வைப்பவர். ஜோதிடக்கலை உருவான காலத்தில் நமது இந்தியா ஐம்பத்தியாறு தேசங்களாக பிரிக்கப்பட்டு இருந்ததால் ஹைதராபாத் மும்பை டெல்லி போன்ற வட மாநிலங்கள் கூட ஜோதிடப்படி வெளிதேசங்கள்தான்.

சர ராசிகளில் வலுவாக அமர்ந்த ராகு கேதுக்கள் தங்களது தசா புத்திகளில் ஜாதகரை நிச்சயமாக வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மேலும் ஒரு முக்கியமான காரகத்துவகமாக அந்நிய மொழிகளை கற்றுக்கொள்ளுதல் குறிப்பாக ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வேற்று மதத்தவரை விரும்புதல், நட்பு கொள்ளுதல் போன்றவைகளையும் நடத்துபவர்கள் ராகு கேதுக்கள்தான்.

சில நிலைகளில் எனது அனுபவத்தில் ராகு பகவான் இஸ்லாமிய மதத்தையும் கேது பகவான் கிறிஸ்துவ மதத்தையும் சுட்டிக் காட்டுவார்கள்.

நிறைவாக ராகுதசை பற்றி எனக்குத் தெரிய பரம்பொருளால் அனுமதிக்கப்பட்ட ஒரு சூட்சுமத்தை சொல்லி இந்த வாரக் கட்டுரையை முடிக்கிறேன்.

எப்போதுமே ராகு தசை நடந்து கொண்டிருக்கும் பொழுது, ராகு தசை சுக்கிர புக்தியில் இருந்து ஒரு திருப்பம் இருக்கும்.


ஒரு ஜாதகருக்கு ராகு தசை நல்ல பலன்களைத் தந்து கொண்டிருந்தால் சுக்கிரபுக்திக்கு பிறகு வரும் கடைசி மூன்று புக்திகளில் அதாவது சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளில் மாறுபாடான கெடுபலன்களைச் செய்வார்.


ஏற்கனவே ராகுதசையில் கெடுதலான பலன்கள் நடந்து கொண்டிருந்தால் மேற்கண்ட மூன்று புக்திகளிலும் சற்று மூச்சு விட்டுக் கொள்ளும்படியான ஒரு சுமுக நிலையை ராகு தருவார்.

ராகுதசையில் மேற்கண்ட அந்தரங்களிலும் இதை உணரலாம். இதற்கு ராகுவிற்கு சூரிய , சந்திர , செவ்வாய் , மூவரும் கொடிய பகைவர்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

ராகு எப்பொழுதுமே சூரிய சந்திரர்களை கடும் பகைவராக எண்ணுபவர். கிரகணம் உண்டாவதே ராகு கேதுக்களால்தான். அதாவது மூல ஒளிக் கிரகங்களை மறைத்து இருளாக்கும் தன்மை ராகு கேதுக்களுக்கு மட்டுமே உண்டு என்பதால்தான் சூரிய சந்திரர்களுக்கும் ராகு கேதுக்களுக்கும் பகை என்பது உண்டாயிற்று.

இதைப் புரியும்படி விளக்கவே நமது ரிஷிகள் பாற்கடலில் பிறந்த அமுதத்தை உண்ணும் போது ராகு கேதுக்கள், சூரிய சந்திரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு தலைவேறு உடல் வேறு ஆனார்கள் என்ற கதையினைச் சொன்னார்கள்.

அடுத்த வாரம் இன்னும் சில சூட்சுமங்களைப் பார்க்கலாம்.......

சாயாகிரகங்கள் என்று ராகுகேது அழைக்கப்படுவது ஏன்?

இராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவை உண்மையில் பருப்பொருளுடைய கிரகங்களே அல்ல என்பதுதான்.

அதாவது இராகு கேதுக்கள் என்பவை வெறும் தோற்றங்கள் மட்டும்தான். அவற்றிற்கு ஒரு நிஜமான வடிவம் கிடையாது. அதோடு இராகு கேதுக்கள் நிழல்கள் என்று சொல்லப்பட்டாலும் நிதர்சனமாக அவைகள் இருட்டுகள் என்றுதான் நான் சொல்வேன்.

உண்மையில் இராகு கேதுக்கள் என்பவை பூமி மற்றும் சந்திரனின் நிழல்கள்தான். அதாவது பூமி, சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே போன்ற பாதையின் விரிவு படுத்தப்பட்ட நிலையும் சந்தித்துக் கொள்ளும் இரண்டு புள்ளிகள்தான் ராகு கேதுக்கள் என அழைக்கப் படுகின்றன.

இந்த இரண்டு புள்ளிகளையும் ஒரே நேர்கோட்டால் இணைக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் இரண்டும் ஒரே கிரகம்தான் என்று கூட நாம் சொல்ல முடியும்.

இராகு கேதுக்களை மிக நுட்பமாகவே பிரித்தறிய வேண்டும். சந்திரனின் ஏறு பாதையில் உள்ள இராகுவிற்கென்று சில தனிப்பட்ட குணங்களும், இறங்கு பாதையில் உள்ள கேதுவிற்கென்று சில குணங்களும் உள்ளன.

நம் ஜோதிடத்தின் நாயகனான சூரியன் உள்ளிட்ட ஏழு கிரகங்களையும் முற்றிலும் வலிமை இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவை இந்த இரண்டு இருள் கிரகங்கள் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிலும் ஒரு கிரகத்தின் உண்மையான குணத்தையே நேர் எதிராக மாற்றிப் பாதிக்கும் வல்லமை இராகுவிற்கு மட்டுமே உண்டு.

( மே 19 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

3 comments :

  1. neenga sonna ethume enaku nadakala sir. ragu rishapathula
    sukran thulathula. apram enga appa iranthathu than micham.innum nalla aarachi pannunga sir

    ReplyDelete
  2. எனக்கு சிறு வயதில் கேது திசை நடந்த போது கிறித்தவ மத போதனை வகுப்புகளுக்கு சென்று பங்கேற்றேன், பைபிள் படித்தேன், நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை

    ReplyDelete