Thursday, September 22, 2016

லக்ன ராகுவின் பலன் என்ன ? Lakna Raahuvin Palan Yenna ? - C - 056.


கேந்திரங்கள் எனப்படும் 4, 7, 10 மிடங்களில் தனித்து அமரும் ராகு, திரிகோணங்களில் செய்யும் பலனைப் போலவே, தனது தசை புக்திகளில் மேற்கண்ட பாவங்களின் ஆதிபத்தியங்களில் முக்கியமான ஒன்றை பாதிப்பார்.

அதாவது நான்காமிட ராகுவால் கல்வி, வீடு, வாகனம் தாயார் இவைகளில் ஏதேனும் ஒன்று, ஏழாமிட ராகுவால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், மண வாழ்வு, பங்குதாரர்கள் போன்றவைகளில் ஒன்று, பத்தாமிட ராகுவால் தொழில், வேலை, வியாபாரம், வாழ்வதற்கான வழிமுறை போன்றவைகளில் ஒன்று நிச்சயம் பாதிக்கப்படும்.

இன்னும் ஒரு சூட்சுமமாக இது போன்ற அமைப்பில் ஒரு கிரகம் தனது ஜடக் காரகத்தை விட உயிர்க் காரகத்துவத்தையே முதலில் பாதிக்கும். அதாவது நான்காம் வீட்டின் ஜடக் காரகத்துவமான கல்வி, வீடு, வாகனத்தை விடுத்து தனித்த, சுபத்துவமும், சூட்சும வலுவும் பெறாத ராகுவின் தசையில் உயிர்க் காரகத்துவமான தாயார் பாதிக்கப்படுவார்.

அதேபோல ஏழாமிடத்தில் பாபத்துவம் பெற்ற ராகுவின் தசையில் அந்த பாவத்தின் உயிர்க் காரகத்துவமான வாழ்க்கைத் துணை பாதிக்கப்படும். சில நிலைகளில் கேந்திர ராகு பாபர்களுடன் கூடி சுபத்துவமடைந்திருக்கும் அமைப்பில் உயிர்க் காரகத்துவத்தை பாதித்து, மற்ற நன்மைகளையும் பொருளாதார மேம்பாடுகளையும் தரும்.

ஒரு முக்கிய அமைப்பாக கேந்திரங்களில் இருக்கும் ராகு, அந்த லக்னத்தின் ஐந்து மற்றும் ஒன்பதுக்குடைய கிரகங்கள் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற இயற்கைச் சுபர்களாக இருந்து, அவர்களுடன் இணைவு பெற்றிருந்தால் தன்னுடன் இணைந்தவர்களின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவங்களைக் கெடுத்து, அதாவது அவர்களின் பலம் மற்றும் தன்மைகளைத் தான் ஏற்றுக் கொண்டு அபரிமிதமான சக்தி கொண்ட சுபராக மாறி, தனது தசையில் பெரும் நன்மைகளைச் செய்வார். இப்படிப்பட்ட அமைப்பில் ஒருவருக்கு தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ராகுதசை உயர்வானதாக இருக்கும்.

அடுத்து கேந்திரத்திற்கும், கோணத்திற்கும் பொதுவான, லக்னத்தில் இருக்கும் ராகு என்ன செய்வார் என்பதைப் பற்றிச் சொல்லும் முன்...

கேந்திரம், திரிகோணம் என்று சொல்லப்படும் 1, 4, 7, 10 மற்றும் 1, 5, 9 மிடங்கள் அவ்வளவு சிறப்பாகச் சொல்லப்படுவது ஏன்? அதன் சூட்சுமம் என்ன? என்று ஒரு வாசகர் (ரசிகர்!) கேள்வி எழுப்பி இருந்தார்.

திரிகோணங்கள் எனப்படுபவை ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கிய மூன்று வித்தியாசமான ராசிகள். கேந்திரங்கள் எனப்படுபவை ஒன்பது கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நட்சத்திரங்களை தொடர்ச்சியாகக் கொண்ட ஒரே தன்மை கொண்ட ராசிகள்.

காலபுருஷனின் முதல் ராசியான மேஷத்திற்கு சிம்மமும், தனுசும் திரிகோணங்கள் (1, 5, 9, மிடங்கள்) ஆகும். இந்த மூன்று ராசிகளுக்குள்ளும் ஒரே கிரகத்தின் ஆளுமை கொண்ட நட்சத்திரங்களே இருக்கும்.

அதாவது மேஷத்திற்குள் இருக்கும் அசுவினி, பரணி, கிருத்திகை, சிம்மத்திற்குள் அமைந்த மகம், பூரம், உத்திரம் மற்றும் தனுசுவில் அடங்கும் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் ஆளுமையைக் குறிப்பவை.

மேலும் மேஷம், சர ராசி, சிம்மம் ஸ்திரம், தனுசு உபயம் என திரிகோண ராசிகள் மூன்றும் வெவ்வேறு தன்மை கொண்ட ராசிகள். இதைப் போலவே ஒவ்வொரு ராசிக்கும் அதன் திரிகோண ராசிகள் ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

கேந்திரங்கள் எனப்படும் 1, 4, 7, 10 மிடங்களைக் கவனித்தால் மேஷத்தின் கேந்திரங்களாக கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகள் அமையும். இவற்றில் மேஷத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம் என ஆரம்பித்து மகரத்தின் உத்திராடம் 2, திருவோணம், அவிட்டம் 2ல் தொடர்ந்து துலாத்தின் சித்திரை 3, சுவாதி, விசாகம் 3 ல் நீடித்து கடகத்தின் புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் என ஒன்பது கிரக நட்சத்திரங்களையும் தொடர்ச்சியாக உள்ளடக்கி முடியும்.

அதோடு இந்த ராசிகள் அனைத்தும் சர ராசிகள் மட்டும் என்பதைப் போல், அனைத்துக் கேந்திர ராசிகளும் சரம், ஸ்திரம், உபயம் மட்டுமாகவே இருக்கும். கலந்து வராது. இவைதான் கேந்திர, கோணங்களின் சிறப்பு.

இதையும் தாண்டி திரிகோணாதிபதிகளாக இயற்கைப் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய் வரக்கூடாது என்று நான் அடிக்கடி எழுதுவதில் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் உள்ளது. அதை இங்கே விவரித்தால் இந்தக் கட்டுரை திசை மாறும் என்பதால் வேறொரு சந்தர்ப்பத்தில் அதை விளக்க முயற்சிக்கிறேன்.
அடுத்து லக்னம் என்பது ஜாதகரை, அதாவது உங்களைத்தான் குறிக்கிறது. ஒருவரது லக்னம் எது, லக்னாதிபதி யார்? லக்னத்தோடு சம்பந்தப்படும் கிரகங்கள் எவை? என்பதை வைத்து உங்களைப் பற்றி நூறு சதவிகிதம் துல்லியமாகச் சொல்ல முடியும்.

(என்னிடம் பலன் கேட்க வருபவர்களிடம் முதலில் இந்த முறையைக் கையாண்டு ஜாதகரின் குண விசேஷங்களைச் சொல்லி விடுகிறேன். ஒரு ஜோதிடரால் இவற்றைத் தெளிவாக சொல்ல முடிந்தால் பலன் கேட்பவருக்கு ஜோதிடரின் மேல் நம்பகத்தன்மை கூடும்.)

அதோடு ராகு என்பது ஒரு இருட்டு என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எனவே லக்னத்தில் ராகு என்றால் நீங்கள் இருளில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை, உங்கள் திறமைகளை யாரும் கவனிக்க முடியாது மற்றும் பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தம். எனவே லக்னத்தில் ராகு இருப்பது சிறப்பான நிலை அல்ல.

பாபக் கிரகங்களான செவ்வாய், சனியின் ராசிகள் லக்னங்களாகி அதில் ராகு இருந்து பாவிகளின் தொடர்பை அவர் பெற்றிருப்பின் அந்த ஜாதகர் முன்கோபம், பிடிவாதம், குறுகிய மனப்பான்மை, சுயநலம், தந்திரப்போக்கு, நன்றி மறத்தல், முட்டாள்தனம் போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்.

அதிலும் மேஷம் லக்னமாகி ராகு அதில் இருந்து, ராகு கேதுக்களுடன் இணையாத செவ்வாயின் பார்வையை ராகு பெற்றிருந்தால் அந்த ஜாதகர் கடுமையான முன் கோபக்காரராகவும், முரட்டுத்தனம் உடையவராகவும் இருப்பார்.

அதோடு விருச்சிகம், மகர, கும்பங்களில் ராகு இருந்து அஷ்டமாதிபதியின் இணைவை நெருக்கமாக பெற்றிருந்தால் தற்கொலை எண்ணத்தை தூண்டுவார். ராகு அல்லது எட்டுக்குடையவனின் தசா,புக்திகளில் ஜாதகர் தற்கொலை முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறக் கூடும்.

விஷமருந்தியோ, தூக்குப்போட்டுக் கொண்டோ தன் மரணத்தைக் தேடிக் கொள்ள வைப்பவர் ராகு. சில நேரங்களில் சிலர் கொடூரமான முடிவுகளைத் தேடிக் கொள்வதும் இவரால்தான். லக்னத்தில் சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாத ராகு இந்த வேலைகளைச் செய்வார்.

பாவிகளுடன் தொடர்பு கொண்ட ராகு லக்னத்தில் இருந்தால் உடல்நலம் மனநலம் இரண்டையும் தனது தசை புக்திகளில் பாதிப்பார். லக்னத்தில் இருந்து இயற்கைப் பாபியான ஆறாமிடத்தோனுடன் சம்பந்தப்படும் ராகு மன நோயாளிகளை உருவாக்குவார்.

ஆனால் லக்னத்தில் சுபருடன் இணைந்தோ, சுபரால் பார்க்கப்பட்டோ, சுபரின் வீடுகள் லக்னமாகி அதில் அமர்ந்த ராகுவோ இதுபோன்ற கெடுபலன்களைச் செய்வது இல்லை.

ராகு எப்போதுமே தான் இருக்கும் வீட்டின் அதிபதியையும், தன்னைப் பார்க்கும் மற்றும் தன்னோடு இணைந்தவர்களின் குணங்களையும் பிரதிபலிப்பவர் என்பதால், சுபரின் வீடுகளான ரிஷபம், துலாம், மீனம், தனுசு போன்ற ராசிகள் லக்னங்களாகி, அதில் சுபரோடு இணைந்து அல்லது சுபரால் பார்க்கப்பட்டு இருந்தால் பெரும் நன்மைகளைச் செய்வார்.

புதனும், சந்திரனும் கட்டுக்கு உட்பட்ட சுபர்கள் என்பதால் (அதாவது பாபிகளுடன் சேராத தனித்த புதனும், வளர்பிறைச் சந்திரனும் மட்டுமே சுபர்கள்.) அவர்கள் பூரண சுபத்துவம் பெற்றிருக்கும் நிலையில், அவர்களின் வீடுகளான மிதுனம், கன்னி, கடகத்தில் இருக்கும் ராகு மற்ற சுபர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் நிலையில் நற்பலன்களைத் தருவார்.

ஆயினும், பொதுவாக ராகு லக்னத்தில் அமர்வது நல்ல நிலை அல்ல. லக்ன ராகு ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார். இருட்டு உங்கள் மேல் படர்ந்திருந்தால் என்ன ஆகும்..? நீங்கள் வெளியே தெரிய மாட்டீர்கள். உங்களுடைய திறமைகள் வெளி வர முடியாத சூழ்நிலை இருக்கும். மேலும் லக்ன ராகு உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப் போகச் செய்வார்.

ஜோதிடத்தில் ஐந்து வருட அனுபவம் போதுமானதா?

ஏதோ ஒரு விதத்தில் வாசகர்களைப் பாதித்திருக்கிறேன் என்பது என்னுடன் தொடர்பு கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதில் இருந்து தெரிகிறது.

என்னுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் நுணுக்கமான அர்த்தம் இருப்பதாலும், வார்த்தைகளை மிகக் கவனமாக நான் தேர்ந்தெடுப்பதாலும், என்னுடைய எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு நன்கு புரியும் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆயினும் ஆதிபத்தியங்களுக்கும், காரகத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் சிலர் குழம்புகிறீர்கள். அதோடு ஒரு செயல் என்பது ஒரே ஒரு கிரகம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல என்பதும் ஜோதிடத்தில் அடிப்படையான பால பாடம்.

ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது கிரகங்களின் சேர்க்கையால் நடத்தப் பெறுவது. தனி ஒரு கிரகத்தினால் அல்லவே அல்ல. ஒரு கிரகம் மட்டுமே தனித்து எந்த ஒன்றையும் செய்யவே முடியாது.

சென்ற வாரம் எழுதிய கட்டுரையில் ராகுவுடன் மிக நெருங்கும் குருவால், குழந்தைகளையும், பணத்தையும், நேர்மையான குணத்தையும், ஆன்மிக ஈடுபாட்டையும் கொடுக்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஜோதிடத்தில் தனக்கு ஐந்ந்ந்ந்ந்ந்து வருட அனுபவம் (!) என்று தன்னைக் குறிப்பிட்டுப் பேசிய வாசகர், தன்னுடைய ஜாதகத்தில் குரு, ராகுவுடன் இரண்டு டிகிரியில் இணைந்திருந்தும் தான் மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

குரு தசையில் குழந்தைகளும், பொருளாதார வசதியும் இருந்ததா? என்று கேட்டேன்... “இல்லை... அனைத்தும் தற்போதைய சனி தசையில்தான் கிடைத்தன.” என்றார். அவருக்கு விருச்சிகம் லக்னமாகி, ஏழாமிடத்தில் சுபரின் ரிஷப வீட்டில், நட்புடன் திக்பலமாகி அமர்ந்த சனிதான் ஆன்மிக ஈடுபாட்டுக்கான காரண கிரகம் என்பதை விளக்கினேன்.

ஆன்மிகம் என்பது குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் பங்களிப்புக் கலவை. அதுபோலவே எந்த ஒரு காரகத்துவமும் தனி ஒரு கிரகம் மட்டும் சம்பந்தப் பட்டதாக இருக்க முடியாது. உதாரணமாக சனி உச்சம் பெற்றால் பூரண ஆயுள் என்று சொல்லி விட முடியாது. ஆயுள் என்பது லக்னாதிபதியும், அஷ்டமாதிபதியும், சனியும் சேர்ந்த கலவையான விஷயம்.

ஜோதிடத்தில் ஐந்து வருட அனுபவம் என்பது ஆரம்ப நிலைதான். அதாவது எல்.கே.ஜியில்தான் இப்போது இருக்கிறீர்கள். இன்னும் எம்.ஏ, எம்.பில் போன்ற முதுகலைப் படிப்பு வரை தொடரும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தால் ஓரளவு புரியும் நிலைக்கு வர முடியும்.

அதேபோல என்னுடைய முப்பது வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை இங்கே மூன்று பக்கம் எழுதுவதாலோ, என்னிடம் நீங்கள் மூன்று நிமிடம் தொலைபேசியில் பேசுவதாலோ உங்களுக்கு முழுமையாக விளக்கி விட முடியாது.

நான் ஒரு சூட்சுமத்தை எளிமையாக விளக்கினாலும், புரியும் தகுதி நிலை இருந்தால்தான் அந்த சூட்சுமம் பிடிபடும். இல்லையெனில் மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதுதான்.

ஆயினும் வருடங்கள் கடந்து போய், புரியும் நிலை வருகையில் இந்த எளியவனின் கருத்து ஒரு நாள் புரியும் ...........!

( மே 13 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

3 comments :

  1. Natural Malefics Planets are Mars and Sani. Both are Lord of Trikona for all lagnas. How could you say both planets supposed not having ownership of Trikonas.

    ReplyDelete
  2. Kataka, Simha,Dhansh,Meena - Mars

    Rishbha,Mithuna,Kanni and Tula - Sani

    ReplyDelete
  3. I have my realtionship chart. He is Dhanusu Lagan Mars + Sani in 10th House. No Natural benefic Planets like Jupitar , Budha and Sukara aspect on them. But, He is good in his career . Currently, he is working as Auditor and Sani Dasa going on

    ReplyDelete