Tuesday, 30 August 2016

ராகுவின் உச்ச , நீச வீடுகள் எது? - c - 054 - Raahuvin Uchcha , Neesa Veedugal Yedhu ?


பொதுவாக ராகு சனியைப் போலவும், கேது செவ்வாயைப் போலவும் பலன் அளிப்பார்கள் என்று நமது மூல நூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.

இதில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில்....

சனியின் நண்பர்களான சுக்கிரன், புதன் ஆகியோரின் லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மற்றும் மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ராகு நன்மைகளைச் செய்வார். செவ்வாயின் நட்புக் கிரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியோரின் லக்னங்களான கடகம், சிம்மம், தனுசு, மீனம் மற்றும் மேஷம், விருச்சிகம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு கேது நன்மைகளைச் செய்வார் என்பதுதான்.

மேற்படி இரு பிரிவு லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் அவரவர் லக்னங்களுக்கு ஏற்றபடி நல்ல அமைப்புகளில் ராகு, கேதுக்கள் அமைந்து விட்டால் மிகப் பெரிய நன்மைகளைச் செய்கின்றன.

இன்னும் ஒரு சூட்சுமமாக மிதுனத்திற்கு மட்டும் ராகு கெடுதல்களைச் செய்யாத யோகர் எனும் நிலை பெறுவார்.

பொதுவாக மிதுனத்திற்கு சுக்கிரன் மட்டுமே சுபர் ஆகிறார். பாக்யாதிபதியான சனி அஷ்டமாதிபத்தியம் அடைவதாலும், லக்னாதிபதியான புதன் நான்காமிட கேந்திரத்திற்கும் அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் அடைவதாலும் இருவருமே சுபர் எனும் நிலை பெற மாட்டார்கள்.

அதோடு இயற்கைப் பாபக் கிரகமான சனி மிதுனத்திற்கு ஒன்பதாம் பாவமான திரிகோணத்திற்கு அதிபதியாவதால் ராகு மட்டுமே மிதுனத்திற்கு யோகம் செய்வார். (சுபர் வேறு, யோகர் வேறு என்பதை புரிந்து கொள்வது நல்லது)
எனது முப்பதாண்டுகளுக்கும் மேலான ஜோதிட ஆய்வில் மிதுனத்தவர்களுக்கு ராகு கெட்ட இடத்தில் இருந்தாலும் அல்லது பாபர்களுடன் கூடி தசை நடத்தினாலும் முற்றிலும் கடுமையான கெடுபலன்களைச் செய்வது இல்லை. பெரும்பாலான வடமொழிக் கிரந்தங்கள் ராகுவிற்கு மிதுனம் உச்சவீடு என்று சொல்கின்றன. இதுகூட மிதுனத்திற்கு ராகு யோகம் செய்வதன் காரணமாக இருக்கலாம்.

ராகு, கேதுக்களின் ஆட்சி, உச்ச, நீச நிலைகளைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ராகு சனியைப் போல செயல்படுபவர் என்பதால், சனியின் ஸ்திர வீடான கும்பம் ராகுவின் ஆட்சி வீடு எனவும், கேது செவ்வாயைப் போல பலன்களைத் தருவார் என்பதால் செவ்வாயின் ஸ்திர வீடான விருச்சிகம் கேதுவிற்கு ஆட்சி வீடு எனவும் சில வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால் ஏற்கனவே பருப்பொருளுடைய ஏழு கிரகங்களும், வானில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் இடங்களான அவற்றின் ராசிகள், ஞானிகளால் அறிந்து பகுக்கப்பட்டு, அவற்றிற்கு ஆட்சி வீடுகளாக பிரித்து ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், பருப்பொருளே இல்லாத வெறும் நிழல்களான ராகு, கேதுக்களுக்கு அவைகளில் இரண்டைத் தருவது அர்த்தமற்றதாகவும் நமது ஒப்பற்ற ஞானிகளன்றி வேறு எவரோ செய்த இடைச்செருகலாகவும் தெரிகிறது. எனவே ராகு, கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் என்ற ஆராய்ச்சியே தவறு என்றும் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால், பராசர ஹோரையில் மகரிஷி பராசரர் ராகுவிற்கு ரிஷபம் உச்சவீடு, கடகம் மூலத்திரிகோணம், கன்னி ஆட்சி வீடு என்று கூறுகிறார். மகரிஷி காளிதாசரும் தனது உத்தரகாலாம்ருதத்தில் ராகுவிற்கு ரிஷபம் உச்ச வீடு என்கிறார். பெரும்பாலான தென்னிந்திய மூலநூல்களில் ராகுவிற்கு விருச்சிகம் உச்சம், ரிஷபம் நீசம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

என்னுடைய நீண்ட அனுபவத்தின்படியும் பாபக் கிரகங்கள் நேர்வலுவடையக் கூடாது, அப்படி வலுவடைந்து ஸ்தான பலம் பெற்றால் கெடுப்பார்கள் என்ற எனது “பாபக் கிரகங்களின் சூட்சும வலு” தியரிப்படியும் ரிஷப ராகு எவரையும் கெடுத்தது இல்லை. நன்மைகள்தான் செய்கிறது.

அதேநேரத்தில் விருச்சிக ராகு தசையில் கெட்ட பலன்கள்தான் நடக்கின்றன என்பதால் விருச்சிகம் ராகுவிற்கு உச்சம், ரிஷபம் ராகுவிற்கு நீசம் என்றே நான் கணிக்கிறேன்.

மேலும் காலபுருஷ தத்துவத்தின்படி நமக்கு ஒளி வழங்கும் மூல ஒளிக் கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் காலபுருஷனின் முதல் இரண்டு வீடுகளான மேஷமும், ரிஷபமும் உச்ச வீடுகளாயின.

இந்நிலையில் சந்திரனால் உருவாகும் நிழல் கிரகமான ராகுவிற்கும் சந்திரனின் உச்ச வீடான ரிஷபத்தை பங்கிட்டு அளிப்பது இருட்டுக்கும், வெளிச்சத்திற்கும் ஒரே இடம் என்ற நிலையில் பொருத்தமற்றது என்பது என் கருத்து.

அதேநேரத்தில் இருளும், ஒளியும் எதிரெதிர் நிலை கொண்டவை என்பதாலும், விருச்சிகத்தில் வேறு எந்தக் கிரகமும் உச்சநிலை அடைவதில்லை என்பதாலும் ரிஷபத்தின் நேரெதிர் வீடான விருச்சிகத்தை ராகுவிற்கு உச்ச வீடாகக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

இதுபற்றிய இன்னும் சில சூட்சும விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

ராகு, கேதுக்களுக்கு பார்வை உண்டா?

ராகு,கேதுக்களுக்கு 3, 7, 11 மிட பார்வை உண்டு என்று சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றியும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கிரகங்களின் பார்வை என்பதே அவற்றின் ஒளிவீச்சுத்தான் என்பதை ஏற்கனவே நான் விளக்கியிருக்கிறேன்.

அதன்படி சுயஒளியும் இல்லாத, ஒளியைப் பிரதிபலிக்கவும் முடியாத வெறும் இருட்டுக்களான ராகு, கேதுக்களுக்கு பார்வை பலம் உண்டு என்பது இயல்புக்கு மாறானது. எனவே ராகு, கேதுக்களுக்கு பார்வை இல்லை என்பதே எனது கருத்து.

ஆயினும் ராகு, கேதுக்கள் ஒருவருக்கு ஒருவர் நேரெதிராக 180 டிகிரியில் சுற்றி வருபவை என்பதால் ஒன்று அடுத்ததை... அதாவது அது நிற்கும் ஏழாம் பாவத்தை நிச்சயம் பாதிக்கும். அதனை ஏழாம் பார்வை என்பது பொருத்தமற்றது. ராகு, கேதுவை ஏழாம் பார்வையாக பார்க்கிறது கேது ஏழாம் பார்வையாக ராகுவைப் பார்க்கிறது என்று சொல்லக் கூடாது. அது தவறு.

எனது இந்தக் கருத்தை மறுப்பவர்கள் ராகுவின் மூன்றாம் பார்வையால் இந்த பலன் நடந்தது, பதினோராம் பார்வையால் இந்த பாவம் பாதிக்கப்பட்டது என்று ஒரு ஜாதகத்தை உதாரணமாகச் சொல்வீர்களேயானால், அதற்கு எனது பதில் அந்த ஜாதகத்தை இன்னும் நன்றாகப் பாருங்கள், அந்தச் செயலோ அந்த பாவமோ வேறு ஏதேனும் ஒரு வகையில்தான் பாதிக்கப் பட்டிருக்கும் என்பதாக இருக்கும்.

( ஏப்ரல் 29 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

4 comments :

 1. Birth time 5:28am, ennal enjathagathai kanikka mudiyavillai. aanal en nanban thirumanam ungalin katturaiyil ullathupol naan kanithathapadi nadanthathu. Nandri ji.

  ReplyDelete
 2. 24-07-1988, neyveli, both time:5:28 mail: thirumal2020@gmail.com

  ReplyDelete
 3. Please ji reply

  ReplyDelete
 4. குருஜி தயவுசெய்து கும்ப லக்னத்தின் சூட்சும ரகசியங்கள் பற்றி கூறவும்.

  ReplyDelete