Friday, 19 August 2016

சாயா கிரகங்களின் சூட்சுமநிலைகள் C- 053A

காலசர்ப்ப தோஷம் என்று சொல்லப்பட்ட ஒரு அமைப்பின் விளக்கங்களை சென்ற வாரம் பார்த்த நிலையில் சாயாகிரகமான ராகுவின் மிக நுண்ணிய சூட்சும அமைப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.

கோட்சாரத்தில் சனிபகவான் ராசிக்கு முன்னும் பின்னும் அமர்ந்து ஏழரைச்சனியாகி நம்மைப் பாதிப்பதைப் போல மூன்று தொடர் இராசிகளைப் பாதிக்கும் திறன் இராகுவிற்கும் உண்டு.

சனி என்பதும் இராகுவைப் போலவே ஒரு இருள்கிரகம். ஆனால் பருப்பொருள் உடைய வாயுக்கிரகம். அதாவது சனி திடப் பொருள்களான மண், பாறைகள் போன்றவைகளால் அமைந்த கிரகம் அல்ல. பஞ்சபூதக் கிரகங்களில் அவர் முற்றிலும் வாயுவினால் மட்டுமேயான எடையற்ற கிரகம் ஆவார்.

சனியின் எடை நீரின் அடர்த்தியை விடக் குறைவு. சனியை நீங்கள் அதை விடப் பெரிய கடலில் தள்ளுவீர்களேயானால் அது அந்தக் கடலில் மிதக்கும். சூரியனிடமிருந்து அவர் வெகு தூரத்தில் இருப்பதால் அவருக்கு கிடைக்கும் சூரிய ஒளியும் குறைவு, அதனால் அவரின் பிரதிபலிப்புத் திறனும் குறைவு எனும் நிலையில் அவர் இருள் கிரகம் ஆகிறார்.

இருளாகிய சனி கோட்சாரத்தில் தான் இருக்கும் இராசியையும், அதன் முன்பின் இராசியையும் ஏழரைச்சனியாகி பாதிப்பது போல கோட்சாரத்தில் ஒரு இராசியில் தங்கி இருக்கும் இராகுவும் தன் முன்பின் ராசிகளைப் பாதிக்கவே செய்கின்றார். ஆனால் இராகுவின் கடுமை சனியைப்போல் இல்லாமல் சற்றுக் குறைவு. அதற்கு அவர் பருப்பொருள் அற்ற வெறும் நிழல் கிரகம் என்பதும் ஒரு காரணம்.

எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைபொருளாகச் சொல்லும் நமது கிரந்தங்களில் ஞானிகள் 3,11 மிடங்களில் இருக்கும் இராகு கேதுக்கள் நன்மையைச் செய்வார்கள் என்று சொல்வதன் உண்மையான சூட்சுமம் என்னவெனில், மேற்சொன்ன இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்கும் நிலையில் இந்த பாவங்களின் நேர் எதிர் பாவமான இலக்கினத்தின் அதிர்ஷ்ட வீடுகள் ஐந்து மற்றும் ஒன்பதில் இதன் மறுமுனைக்கிரகம் இருந்து நல்ல பலன்களை மற்றொரு முனையான 3,11 மிடங்களுக்கு தரும் என்பதுதான்.

அதாவது மூன்றாமிடத்தில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்தின் அதிர்ஷ்ட பாவமான ஒன்பதில் கேது இருந்து ராகுவின் மூலமாக நல்ல பலன்களை எடுத்துத் தரும். பதினொன்றில் ராகு இருக்கும் நிலையில் இன்னொரு அதிர்ஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் கேது இருந்து அந்த பாவ நன்மைகளைச் செய்யும்.

இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கிறேன்...

எப்பொழுதுமே இராகுவிற்கு பலன் கூறும் போது கேது இருக்கும் இடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும், கேதுவிற்கு பலன் சொல்லும் போது இராகு இருக்குமிடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும் பலன் சொல்லுங்கள். மிகச் சரியாக வரும்.

மற்ற ஏழு கிரகங்களும் அவை இருக்கும் நட்சத்திர நாதனின் அடிப்படையிலேயே தனது தசையில் முதன்மைப் பலன்களைச் செய்யும் நிலையில் இராகு கேதுக்கள் சார அடிப்படையில் முதன்மைப் பலன்களை செய்வது இல்லை.

இது எனது நீண்ட ஆய்வில் கிடைத்த தீர்க்கமான முடிவாகும். இதனை நீங்கள் நன்கு அறிந்த ஜாதகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கும் இந்த உண்மை புரியும்.

இராகு கேதுக்கள் முதலில்...

தன்னுடன் இணைந்த கிரகம் , பிறகு
தான் இருக்கும் வீட்டின் அதிபதி , அடுத்து
தன்னைப் பார்த்த கிரகம் , பின்னர்
தான் பெற்ற சாரநாதன் ,
இறுதியாக
தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரங்களின் தன்மை
அல்லது
தான் சாரமளித்த கிரகங்களின் தன்மை

என்ற வரிசைப்படியே தனது தசையில் பலன்களைச் செய்கின்றன.

மற்ற கிரகங்களின் இருப்பை நாம் எப்போதும் உணருகின்றோம். அவற்றை வெறுங்கண்ணால் பார்க்கவும் செய்கின்றோம். ஆனால் இராகு கேதுக்களை நாம் கிரகண காலங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

ஒரு வினோத விளைவாக திருக்கணித பஞ்சாங்கம் சரியா? வாக்கியப் பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதத்தில் பெரும்பாலானோரை திருக்கணிதத்தின் பக்கம் சாய வைத்ததும் இந்த இராகு கேதுக்கள் தான்.

எப்படியெனில் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகங்கள் அமைந்திருக்கும் டிகிரி அளவில் சில வித்தியாசங்கள் உள்ளன. இவற்றில் எது சரி என்பதைச் சரி பார்க்க, சாதாரண மனிதராகிய நாம் மகாவிஷ்ணுவைப் போல விஸ்வரூபம் எடுத்து வானத்துக்கு மேலே நின்று பார்த்துத்தான் கிரகங்களின் சரியான இருப்பிடத்தை அடிக்கணக்கில் துல்லியமாக அளவெடுக்க முடியும். 

ஆனால் சூரிய சந்திரர்களை மறைக்கும் இராகு கேதுக்களின் இருப்பு சிறிது மாறினாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிரகணம் வராது என்பது உண்மை. 

இதன் அடிப்படையில் வாக்கியப் பஞ்சாங்க கணிப்புகள் சிறிது பிசகுவதால் சமீபத்திய வருடங்களில் திருக்கணித கிரகண நேரத்தையே வாக்கியப் பஞ்சாங்கங்கள் எடுத்து வெளியிடுகின்றன.

அடுத்து செவ்வாய், சனி ஆகிய இரு பாபக்கிரகங்களின் தொடர்பையோ இணைவையோ, பார்வையையோ பெற்ற இராகு கேதுக்கள் மிகக் கடுமையான பலன்களைச் செய்வார்கள். ஆனால் இவ்விரு கிரகங்கள் நீசம் பெறும் நிலையில் மேஷ கடகத்தில் அவர்களுடன் இணைந்து இருக்கும் இராகு கெடுபலன்களைக் குறைத்துத்தான் செய்கிறார்.

மேலும் அஷ்டமாதிபத்தியம் பெற்ற பாபக்கிரகங்களின் இணைவைப் பெற்ற நிழல் கிரகங்கள் அல்லது எட்டாமிடத்தில் இருந்து பாபக்கிரகங்களின் இணைவைப் பெற்ற இராகு கேதுக்கள் ஆகிய இரண்டு நிலையும் மிகக் கடுமையானவை.

இந்த அமைப்பில் இருக்கும் இராகுகேது தசைகள் மிகவும் மோசமான பலன்களைத் தரும். இந்த நிலைகள் இலக்கினத்திற்கு மட்டுமல்ல சந்திரனுக்கு எட்டு என்று இருந்தாலும் பொருந்தும்.

இன்னொரு சூட்சும நிலையாக ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி கெட்டு அல்லது முற்றிலும் வலுவிழந்த நிலையில் இருந்து இராகு கேதுக்கள் இலக்கினாதிபதியோடு சம்பந்தப்படாமலேயே இலக்கினத்தில் இருக்கும் நிலையில் நிழல் கிரகங்களின் தசை நடைபெற்றால் ஜாதகரின் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் நாசமாக்கும்.

இலக்கினாதிபதி பாபக்கிரகங்களோடு இணைந்து அவர்களது பிடியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

மேலும் இலக்கினத்தோடும், அஷ்டமாதிபதியோடும் ஒரே நேரத்தில் இராகு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகரை சுயமரணம் எனும் முடிவைத் தேட வைக்கிறார். இப்படி ஒருவர் தற்கொலை முடிவெடுக்கும் நிலையில் அஷ்டமாதிபதியை இராகு பகவான் மிகவும் நெருங்கி முற்றிலும் பலவீனப்படுத்தி இருப்பார்.

மேற்கண்ட அமைப்பில் எட்டுக்குடையவன் பாபக்கிரகமாக இருந்தாலோ இவர்களுடன் ஆறுக்குடையவரும் சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம். 

ஒரு பாவத்தில் இராகு கேதுக்கள் எப்போது அமர்கின்றனவோ, அது முதல் அந்த பாவ ஆதிபத்தியம், மற்றும் பாவாதிபதியின் தன்மைகள், அதன் காரகத்துவங்களை சாயாக்கிரகங்கள் ஆளுமை செய்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.

குறிப்பாக சில நிலைகளில் இராகு இருக்கும் பாவத்தின் அதிபதி தனது ஆதிபத்திய பலனையும், காரகத்துவங்களையும் தரும் வலிமையை இழந்து விடுகிறார். அதே நேரத்தில் அந்த வீட்டில் அமர்ந்த இராகு தனது தசையில் அந்த பாவத்தின் ஆதிபத்தியப் பலனையும், அந்த வீட்டின் அதிபதி கிரகத்தின் காரகத்துவப் பலனையும் செய்வார். 

மேலும் இராகு கேதுக்கள் அமர்ந்த இராசிநாதனின் தசை ஜாதகருக்கு வாழ்நாளில் வர இயலாத நிலை இருந்தால் முழுக்க முழுக்க அந்த பாவத்தில் அமர்ந்த நிழல் கிரகங்கள்தான் அந்த பொறுப்பை எடுத்துச் செய்கின்றன. 

அதேபோலத்தான் இராகுவுடன் இணைந்த கிரகத்தின் நிலையும்....! ராகுவுடன் இணைந்த கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் இராகுதான் தனது தசையில் எடுத்துச் செய்வார். 

இன்னொரு நிலையாக இராகு அமர்ந்த பாவாதிபதி தனது தசையில் பலன்களை மாற்றி மாறுபட்டதாகத் தருவார். அதாவது ஜோதிடரின் கணிப்பில் இந்த தசை நன்றாக இருக்காது எனும் நிலையில் அந்த தசை நற்பலன் தருவதும், நன்மைகள் செய்யும் என்ற கணிப்பில் கெடுதல்களைச் செய்து குழம்பச் செய்வதும் இராகு கேதுவின் வேலைதான்.

ஒரு கிரகத்தின் தசை எவ்வாறு பலன் தரும் என்று கணிக்கும் முன்பு அந்த கிரகத்தின் வீடுகளில் இராகு கேதுக்கள் அமர்ந்து அந்த பாவம் கெட்டுப் போயிருக்கிறதா என்பதைக் கவனித்த பின்னரே பிறகு அந்த தசையைப் பற்றிய பலன்களைச் சொல்ல வேண்டும். 

உதாரணமாக மிதுன இலக்கினத்திற்கு செவ்வாய் தசை நன்மைகளை அளிக்காது.

மிதுனத்திற்கு செவ்வாய் 6, 11க்குடைய பாவி என்பதாலும், இலக்கினாதிபதி புதனுக்கு அவர் ஆகாதவர் என்பதாலும் தசையின் ஒரு பகுதியான மூன்றரை வருடங்கள் தன் ஆறாமிடத்துப் பலனை மிகக் கடுமையாகத் தந்து ஜாதகரை வாட்டி வதக்குவார்.

ஆனால் ஆறாமிடமான விருச்சிகத்தில் இராகுவும் சனியும் இணைவு பெற்றிருந்து, செவ்வாய் வேறு எங்கிருந்து தசை நடத்தினாலும் ஆறாமிட கொடிய பலன்கள் நடக்காது.

ஏனெனில், ஆறாமிட கெட்ட பலன்களை இராகு ஆளுமை செய்கிறார். மேலும் ஆறாமிடத்தில் இரண்டு பாவக்கிரகங்கள் இருந்து அந்த இடத்தைக் கெடுக்கிறார்கள். எனவே செவ்வாய் தசை நன்மை செய்யும்.

புரியவில்லையா? நிதானமாக ஒன்றுக்கு இரண்டு முறை படியுங்கள். புரியும்...!

அதே நேரத்தில் அடுத்து வரும் இராகு தசையில் முழுமையான கெடுபலன்கள் நடக்கும். ஜாதகரை இராகுதசை பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஏனென்றால், இராகு செவ்வாயின் வீட்டில் இருக்கிறார். விருச்சிகத்தில் அவர் உச்சபலம் பெறுவார். ( பாபக்கிரகங்கள் நன்மை செய்ய வேண்டுமானால் ஸ்தான பலம் மற்றும் நேர்வலு அடையக் கூடாது. எனது பாபக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரிப்படி சூட்சுமவலுதான் பெற வேண்டும்.) அஷ்டமாதிபதி சனியின் இணைவு வேறு. அதாவது ஆறாமிட செவ்வாயின் பலனை இராகு முழுமையாகத் தன் தசையில் செய்வார்.

( ஏப்ரல் 15 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

4 comments :

 1. ஐயா, குருவின் வீட்டில் ராகு இருந்து. ராகுவின் சாரம் பெரும் கிரகம் குருவின் காரத்துவமான குழந்தையை தரும் அதிகாரம் பெறுமா?

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. நல்ல போதனை ஐயா.ஒரு சீடனாக தங்களது கருத்தினை கிரகித்துக்கொண்டேன்.எல்லாம் பரம்பூருளின் சித்தம்.நன்றி ஐயா

  ReplyDelete
 4. நல்ல போதனை ஐயா.ஒரு சீடனாக தங்களது கருத்தினை கிரகித்துக்கொண்டேன்.எல்லாம் பரம்பூருளின் சித்தம்.நன்றி ஐயா

  ReplyDelete