Wednesday, 13 July 2016

ராஜயோகம் தரும் ராகு தசை – C--052 ( எம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம்)

சென்ற வாரம் உயர்வையும் தாழ்வையும் ஒருசேரத் தரும் ராகுதசையினைப் பற்றி நான் விளக்கியிருந்த நிலையில் இப்போது வாழ்வின் உச்சநிலைக்கு ஒருவரைக் கொண்டு செல்லும் ராஜயோக ராகுவின் தசையைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒருவரை அரசனுக்கு நிகரானவராக மாற்றும் ராஜயோகத்தை ராகு தனது தசையில் செய்ய வேண்டுமெனில் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகளில் அவர் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதி.

மேலும் இந்த வீடுகள் லக்னத்திற்கோ ராசிக்கோ மூன்று ஆறு பத்து பதினொன்றாமிடங்கள் என்று சொல்லப்படுகின்ற உபசய வீடுகளாகவும் அமையவேண்டும் என்றும் நமது மூலநூல்கள் வலியுறுத்திச் சொல்கின்றன.

எனது முதன்மைக் குருநாதரும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைய தலைமுறை ஜோதிடர்களை உருவாக்கியவரும் இந்த நூற்றாண்டில் தமிழ் ஜோதிட உலகிற்கு கிடைத்த ஒப்பற்ற மாமணியுமான ஜோதிஷ வாசஸ்பதி தெய்வக்ஞசிரோன்மணி ஆத்தூர் மு.மாதேஸ்வரன் அய்யா அவர்கள் மறைவு ஸ்தானங்களின் இறுதிவீடான பனிரெண்டாமிடத்தில் அமரும் ராகுவும் ராஜயோகத்தைத் தருவதாக தனது மேலான ஆய்வுநூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எனவே நான் மேலே சொன்ன மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகள் ஒருவரின் லக்னத்திற்கோ ராசிக்கோ மூன்று ஆறு பத்து பதினொன்று பனிரெண்டாமிடங்களாக அமைந்து அங்கு ராகு அமரும்போது சுயமாக ராஜயோகத்தைத் தருவார்.

மேற்சொன்ன வீடுகளில் ஏதேனுமொன்றில் ராகு அமர்ந்து ராகுவுக்கு வீடு கொடுத்தவன் சுபவலு அடைந்து ராகு சுபருடன் குறிப்பிட்ட டிகிரியில் இணைந்து சுபரின் பார்வை பெற்று நல்ல சார அமைப்புடனும் நவாம்சத்தில் சுபவலுவும் பெற்றிருக்கும் நிலையில் ஒருவரை அரச நிலைக்கு உயர்த்துவார்.
 
மேலும் ராகுபகவான் தன்னோடு இணைந்த கிரகங்களின் வலுவைக் கவர்ந்து தனது தசையில் செய்பவர் என்பதால் சுபர்களோடு இணையும் பட்சத்தில் சேர்ந்த கிரகங்களின் முழு ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களை தானே வலுவுடன் தருவார்.

வலுப்பெற்ற ராகுவின் தசையில் ஒருவருக்கு ஆயிரம் யானைகளின் பலம் உண்டாகும். எவராலும் எதிர்க்க முடியாத வெல்ல முடியாத அமைப்பில் ஜாதகர் இருப்பார். இதுபோன்ற பலம் வாய்ந்த ராகுதசை ஒருவரை சமுதாயத்தில் மிகவும் பிரபலமாக்கி உச்சத்தில் கொண்டு சென்று வைக்கும்.

இந்த அம்சத்தை மனதில் கொண்டுதான் ராகுவைப் பற்றிய ஆரம்பக் கட்டுரையில் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாகாந்தியாக மாற்றியதும், ஆட்சிக்கு ஆசைப்படாமலிருந்த ஒருவரை மக்கள் தலைவராக்கி, பத்துவருடங்கள் நீடித்த மன்னனாக்கி இன்றும் இறவாதவராக இருக்கும் வகையில் அழியாப் புகழைக் கொடுத்தவரும் இந்த ராகுதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

கீழே ஒரு உன்னதமான ராஜயோக ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.

மிகவும் எளிமையான ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய இளமைக்காலத்தில் பசியின் கொடுமையை நன்கு உணர்ந்ததால் தனது இல்லத்துக்கு வந்த ஒருவரைக் கூட சாப்பிடாமல் அனுப்பாத ஒரு பொன்மனம் கொண்டவரின் உண்மையான ஜாதகம் இது.

அரசனாக இருந்த போது வீட்டிலிருந்து ஆட்சி மாளிகைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் தனக்குப் பின்னால் வந்த கார்களில் இருக்கும் ஒருவர் சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் காரை வீட்டுக்குத் திருப்பு என்று கட்டளையிட்ட மன்னாதி மன்னன் இவர்.

தனது வாழ்வின் முற்பகுதியில் நாடோடியாகவும் பிற்பகுதி முழுவதும் மன்னனாகவும் வாழ்ந்து தமிழ் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இந்தப் பேரழகன் ஐநூறு வருடங்களுக்கு முன் பிறந்திருந்தால் நமது ஆலயங்களில் அருள்பாலிக்கும் தெய்வங்களுள் ஒன்றாக்கப்பட்டு நம்மால் வழிபடப் பட்டிருப்பார். .

வெளியுலகில் இவரது பிறந்ததேதி ஜனவரி 17, வருடம் 1917 என்று அறியப்பட்டாலும் இவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு மட்டும் இவரது உண்மையான பிறந்ததேதி ஜனவரி 11, வருடம் 1916 என்பது தெரியும்.

இந்த மன்னனின் ஜாதகப்படி இவருக்கு கன்னிலக்னம் மீனராசி ரேவதி நட்சத்திரமாகி லக்னாதிபதி புதனும் சுக்கிரனும் தர்மகர்மாதிபதி யோகத்துடன் நட்பு நிலையில் ஐந்தாமிடத்தில் இணைந்து வலுப்பெற்று இருக்கிறார்கள். இவர்களுடன் ராகுவும் இணைந்திருக்கிறார்.

ஒருவர் திரைத்துறையில் அதிஉச்சப் புகழ் பெற வேண்டுமானால் மக்களை மயக்கும் வசீகரத்தை அடைய வேண்டுமானால் சுக்கிரனும் ராகுவும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விதியின்படி இவரது ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் மிகவும் நெருங்காமல் எட்டு டிகிரியை விட்டு விலகியிருக்கிறார்.

புதன்தசை ஏறத்தாழ ஒன்பது வருடங்கள் மீதியிருக்கும் நிலையில் பிறந்த இவருக்கு லக்னாதிபதி புதன் ஐந்தாமிடத்தில் நட்பு நிலையில் இருந்தாலும் ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் நெருங்கியிருந்ததால் பள்ளிக்கல்வியை முடிக்கும் அமைப்பு ஏற்படவில்லை என்பதோடு இளமைக்காலம் மிகவும் வறுமையுடன் கழிந்தது.

அதேநேரத்தில் புதன் ராகுவுடன் நெருங்கி வலுவிழந்தாலும் பத்தாமிடத்து சனியுடன் பரிவர்த்தனை பெற்றதால் ஆட்சிபெற்ற நிலையுண்டாகி பலம் பெற்றார் என்பதோடு லக்னத்தை இயற்கைச்சுபரான குருபகவான் வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்து ஆட்சி பெற்றுப் பார்த்ததால் லக்னமும் லக்னாதிபதியும் வலுப் பெற்று ராஜயோகத்தைத் தந்தது

ஜோதிடம் எனும் தேவரகசியம் தொடர்கட்டுரைகளின் ஆரம்பத்தில் சூரியனின் சூட்சுமங்களில் ஒருவர் நாடாள வேண்டுமென்றால் அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென்றால் சூரியன் ராசிக்கோ லக்னத்திற்கோ பத்தாமிடத்தில் அமர்ந்து சந்திரனுக்குக் கேந்திரத்தில் இருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.

இவரது ஜாதகத்திலும் இந்த அமைப்பு உண்டாகி ராசிக்குப் பத்தில் சூரியன் அமர்ந்து லக்னத்திற்குப் பத்தாமிடத்தைப் பார்த்ததால் இவருக்கு ஆரம்ப காலத்திலேயே அரசியல் தொடர்பு ஏற்பட்டு இவரால் தர்மகர்மாதிபதிகளின் தொடர்பைப் பெற்ற ராகுதசையில் அரசனாகவும் முடிந்தது.

மேலும் இந்த ராகு நமது ஞானிகள் வகுத்த விதிப்படி மகர ராகுவாகவும் அமைந்து லக்னத்திற்கு ஐந்தில் அவர் இருந்தாலும் ராசிக்குப் பதினொன்றில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி எனப்படும் புகழைக் குறிக்கும் மூன்றாமிடத்தின் அதிபதியான செவ்வாய் அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் அமர்ந்து தனது மூன்றாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்தி குருபகவானும் தனது சுபப்பார்வையால் மூன்றாம் வீட்டைப் பார்த்ததால் இவர் அழியாப் புகழ் பெற்றார்.

புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகு அமர்ந்து அந்த வீட்டிற்கு அதிபதியான சனி அந்த பாவத்திற்கு ஆறில் மறைந்து புத்திரகாரகன் குருவும் இன்னொரு சுபரான சந்திரனுடன் இணைந்து பாதகாதிபத்தியமும் கேந்திராதிபத்திய தோஷமும் பெற்றதால் இவருக்கு வாரிசு தோஷம் ஏற்பட்டது.

இளம் வயதில் ஏறத்தாழ இருபது வயது வரை கஷ்டங்களை அனுபவித்த இவர் சுக்கிரதசை சுயபுக்தி முடிந்ததும் 1936 ல் சினிமா வாய்ப்பினைப் பெற்றார். சுக்கிரதசையில் அவர் அறிமுகமானாலும் 1952 ல் சுக்கிரதசை முடியும் வரை ஏறத்தாழ இருபது வருடங்கள் திரைத்துறையில் நிலை கொள்ள முடியவில்லை. அதற்கு சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றதும் ஒரு காரணம்.

லக்னாதிபதி புதனின் நெருங்கிய நண்பரான சூரியனின் தசையில்தான் 1952 க்குப் பிறகு இவர் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது. ஒரு தசாநாதன் நற்பலன்களைச் செய்ய வேண்டுமெனில் அவருக்கு வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெறவேண்டும் என்று நான் அடிக்கடி எழுதுவதை நினைவில் கொள்ளுங்கள்.

அடுத்து ஆட்சி பெற்ற குருவின் வீட்டில் இருந்து லக்னாதிபதி புதனின் சாரத்தில் அமர்ந்த சந்திரனின் தசையில்தான் (1958 - 1968) இவர் திரைத்துறையிலும் தமிழ்நாட்டிலும் அசைக்க முடியாத சக்தியானார்.

குருவுடன் இணைந்து சுபத்துவம் பெற்ற ஒளிமிகு வளர்பிறைச் சந்திரன் லக்னத்தைப் பார்த்து ஒளிப்படுத்தி தசை நடத்திய இந்தப் பத்து வருடங்களில்தான் தமிழ்நாடே இவரிடம் மயங்கிக் கிடந்தது. ஒளி பொருந்திய இவர் முகத்தை திரையிலும் நேரிலும் பார்க்க தமிழகமே தவம் இருந்தது.

இவரின் கட்சித்தலைவர் “தம்பி.. தேர்தலில் உன் நிதியுதவியை விட உன் திருமுகத்தைக் காட்டு அதுவே நம் கட்சிக்குப் பலம்.” சொன்னதும் இந்த காலகட்டத்தில்தான்.

1968 முதல் 1975 வரை நடந்த செவ்வாய் தசையில் காட்சிகள் மாறின. செவ்வாய் அஷ்டமாதிபதி என்பதால் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்தன. எட்டுக்குடையவன் வெளிதேசத்தைக் குறிக்கும் பனிரெண்டாம் வீட்டில் இருந்ததால் வெளிநாடு சென்றார். உலகம் சுற்றும் வாலிபன் ஆனார்.

செவ்வாய் விரையத்தில் இருந்ததால் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்காக சொத்துக்களை விரயம் செய்தார். செவ்வாய் தசை முடியும் வரை கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டன.

1974 இறுதியில் ராஜயோக ராகுதசை ஆரம்பித்ததும் சாதகக் காற்று வீச ஆரம்பித்தது. மகரத்தில் தர்மகர்மாதிபதிகளுடன் இணைந்து சந்திரனின் சாரம் பெற்ற ராகு சந்திரதசையை விட உச்சத்தில் கொண்டு செல்லும் வேலையை ஆரம்பித்தார்.

தன்னுடன் இணையும் கிரகங்களின் பலத்தைக் கவர்ந்து தனது தசையில் ராகு செய்வார் என்று நான் எழுதியுள்ளபடி லக்னாதிபதி புதனை மூன்று டிகிரிக்குள் கிரகணமாக்கிய ராகு லக்னாதிபதியாகவும் தர்மகர்மாதிபதிகளாகவும் மாறி இவரை அரசபதவியை நோக்கிக் கொண்டு சென்றார்.

ராகுதசை சுயபுக்தி முடிவில் 1977 ல் மக்களின் பேராதரவுடன் இவர் அரசனானார். அடுத்து 1980 ல் ஆரம்பித்த ஆறுக்குடைய சனிபுக்தியில் சிறு சறுக்கல் ஏற்பட்டு மீண்டும் பலத்த ஆதரவுடன் மன்னன் ஆனார். ராகுவுடன் மூன்று டிகிரிக்குள் நெருங்கி பலவீனமான லக்னாதிபதி புக்தியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தமிழ் உலகமே இவருக்காக பிரார்த்தனை செய்தது.

சரராசியில் ராகுவுடன் இணைந்த லக்னாதிபதி புக்தி என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்தபடியே மீண்டும் ராஜயோக ராகுவால் அரசபதவியைப் பெற்றார்.

ஆனால் உபசெய ஸ்தானங்களைத் தவிர்த்து கேந்திர கோணங்களில் அமரும் ராகுகேதுக்கள் ராஜயோகத்துடன் மாரகத்தையும் செய்வார்கள் எனும் விதிப்படி லக்னத்திற்கு இரண்டிற்கும் ராசிக்கு மூன்று எட்டிற்கும் உடைய மாரகாதிபதி சுக்கிரனின் புக்தியில் (அம்சத்தில் நீசம்) அழியாப் புகழுடன் அரசனாகவே இந்தப் பெருமகன் புகழுடல் எய்தினார்.

மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை மக்களால் மறக்கப்படாமல் இன்னும் நூறு நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் ஒரு மக்கள் தலைவனின் ராஜயோக ராகுதசையின் விளக்கம் இது.

அரச ஜாதகம்

சந், குரு
சனி

11.1.1916
கண்டி இலங்கை
கேது
புத, சுக், ராகு
செ
சூரி
( மார்ச் 4 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

7 comments :

 1. Ragu 11L EDAPAM
  Kadaga Lakinam
  epadipalan Sir.

  ReplyDelete
 2. அருமையான பதிவு சார்

  அம்பரீஷ் ஸாஸ்த்ரி
  savithaastro@gmail.com
  http://savithaastro.blogspot.in
  +91 9443711056

  ReplyDelete
 3. ஐயா எனக்கு ராகு 12ல் நான் மிகவும் சிரமப்படுகிறேன்.ராகு திசை நடக்கிறது.சாவின் விலும்பிற்கு சென்று திரும்பி இறுக்கிறேன்.படிப்பும் தடை,வேலையும் அமையவில்லை.திருமணமும் நடக்கவில்லை.சிவன் ஒருவனே என்று காலத்தை நகர்துகிறேன்.எனக்கு கஷ்டங்கள் எப்போது குறையும்.அல்லது எனக்கு அகோரி ஆகவேண்டும் என் ஆன்மா சிவனை அடைய வேண்டும் இது நிறைவேருமா.எனக்கு ஒரு பதில் வழங்குங்கள் ஐயா.லாரி சொந்தமாக வாங்கலாமா?.பெயர்:ராஜேஷ்குமார். பிறந்த தேதி:1.8.1985. நேரம்;2.00am பிறந்த ஊர்; கருர்.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. மக்கள் போற்றும் மகத்தான நாயகனை மறக்க முடியாத மக்கள் மனதில் நிற்கும் எம்.ஜீ.ஆரின் சாதகபலனை அழகாக விளக்கிய ஞானகுருவுக்கு நன்றி.

  ReplyDelete
 6. மக்கள் போற்றும் மகத்தான நாயகனை மறக்க முடியாத மக்கள் மனதில் நிற்கும் எம்.ஜீ.ஆரின் சாதகபலனை அழகாக விளக்கிய ஞானகுருவுக்கு நன்றி.

  ReplyDelete
 7. amazing explanation sir.. thank u very much sir...

  ReplyDelete