Wednesday, 15 June 2016

அஷ்டமச் சனியின் செயல்பாடுகள் C- 048

நவக்கிரகங்களின் சூட்சும நிலைகளை விளக்கி நான் எழுத ஆரம்பித்த இந்தக் கட்டுரைகளில் சனியைப் பற்றிய விளக்கங்கள் மட்டும் நீண்ட வாரங்களுக்குத் தொடர்ந்து விட்டது.

\உண்மையில் ஒன்பது கிரகங்களிலும் சனியும் ராகுவும் மட்டுமே ஒரு ஜாதகத்தில் தனித்து ஊன்றிக் கவனித்துப் பலன் சொல்ல வேண்டியவை. ஏனெனில் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய அமைப்புகள் மற்றும் பாக்கியங்களைத் தடை செய்வதில் முன்னிலை வகிப்பவை இந்த இரண்டு பாபக்கிரகங்கள் மட்டும்தான்.

சனியையும் ராகுவையும் சரியாகக் கணிக்க உங்களால் முடிந்து விட்டால் ஜோதிடம் உங்கள் கைவசம் வந்து விட்டது என்று பொருள்.

மரணம் அல்லது ஆயுள், பொய் சொல்லுதல், வயதானவர்கள், இரவு, கோபம், தோல்பொருட்கள், உடல்உழைப்பால் பிழைத்தல், சட்டத்துறை, சட்டத்திற்கு புறம்பான செய்கை, கருப்புநிறம், துக்கம், வேலைக்காரர், மேற்குத்திசை, தாழ்வுமனப்பான்மை, விவசாயம் செய்தல், கழுதை, அடிமை, கெட்டநடத்தை, திடீர்சரிவு, முரட்டுப்பிடிவாதம், ஆண்மைக்குறைவு, அருவருப்பான இடங்கள், முறையற்ற காமம், எமன், திருட்டு.

அழுக்கான இடங்களில் பணி, போதைப்பழக்கம், திரவமான நீசப்பொருட்கள், வேஸ்ட் பேப்பர் மற்றும் குப்பைகள், சாராயம், மது, பெட்ரோல், தார், சாலை போடும் பணி, பழைய கிழிந்த துணிகள், எண்ணெய், எருமைமாடு, நயவஞ்சகம், இரும்பு, இடிந்தகட்டிடம், குட்டிச்சுவர்கள், கல்மண் சுமப்போர், ஆலைத் தொழிலாளர், பியூன்வேலை, துப்புரவுப்பணிகள், விறகுக்கடை, கலப்படம் செய்யும் தொழில், நீலம், விமானநிலையம், மூட்டை சுமத்தல், கூலிவேலை, சுரங்கம், கல் குவாரிகள், பிளாஸ்டிக், சிறைச்சாலைப் பணி, தண்டனை அனுபவித்தல், மக்கள் தொடர்பு, குற்றவாளிகளின் சேர்க்கை, செவிலியர், மருத்துவமனையின் நெடி,

பொதுப்பணத்தை மோசடி செய்தல், ஊராட்சிமன்றம், உடல் ஊனம், நடக்க இயலாத நிலை, அநாதைவிடுதிகள், கறுப்புநிறப் பொருட்கள், மை, வெட்டியான் பணி, புரோகிதம், பிணத்துடன் இருத்தல், மரணத்திற்குப் பின் என்ன என்கிற தேடல், சித்துநிலை, ஆன்மீகம், தவம், கூடுவிட்டு கூடுபாய்தல், சிறுதெய்வ வழிபாடு, ஈஸ்வரப்பற்று, சந்தேகம், நடைபாதை வியாபாரம், வளவளவென்ற விஷயமற்ற பேச்சு, குள்ளம், முட்டாள்தனம், கழிப்பிடத்தைப் பராமரித்தல், கடன், பசியுடன் இருத்தல், வறுமை, தீராதநோய், ஏமாற்றுதல் போன்ற அனைத்துக்கும் சனிபகவானே காரகன் ஆவார்.

ஒரு ஜாதகத்தில் தனித்து வலுப்பெறும் நிலையில் சனி மேலே நான் சொன்ன அவரது செயல்களை தனது தசையில் வலுவாகச் செய்வார். சுபத்துவமும் சூட்சுமவலுவும் அடைந்திருந்தால் மேற்சொன்ன அமைப்புகளின் மூலம் நன்மைகளையும், நேர்வலு மற்றும் பாபத்துவம் அடைந்திருந்தால் இவற்றின் மூலம் தீமைகளையும் செய்வார்.

சனிபகவான் ஒருவருக்கு லக்னாதிபதியானாலோ அல்லது தொழில் ஸ்தானங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலோ, பத்தாமிடத்து அதிபதியானாலோ அல்லது பத்தில் இருந்தாலோ வேறுவகையில் பத்துக்குடையனுடன் இணைந்தாலோ மேலே நான் சொன்ன விஷயங்களில் ஒருவருக்கு வருமானம் வரும்.

சனிபகவான் சூட்சும வலுவும், சுபத்துவமும் அடைந்திருந்திருக்கும் நிலைகளில் ஒருவருக்கு தனது காரகத்துவங்களின் வழியாக அபரிதமான வருமானங்களைத் தருவார். அவருடைய வலுவைப் பொறுத்து ஒருவருக்கு மேற்கண்ட அமைப்பில் முதலாளியாகவோ வேலைக்காரனாகவோ வருமானம் அமையும்.

உதாரணமாக சனிபகவான் முற்றிலும் நேர்வலுவிழந்து சுபத்துவம் அடைந்து பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டு பத்தாமிடம் திரவம் சம்பந்தமான ராசியாக இருப்பின் ஒருவரைத் தனது தசையில் மதுபானத் தொழிற்சாலைகள், பெட்ரோல், ஆசிட் போன்ற நீசத்திரவங்கள் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தொழிலதிபராக்கி வருமானம் தருவார்.

இதே அமைப்பில் சனி நேர்வலுப் பெற்று சுபத்துவமின்றி அமைந்தால் மதுக்கடை பார்களில் பாட்டில் பொறுக்கும் வேலை பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடும் பணி போன்றவை அமையும்.

சமீபகால விஞ்ஞான வளர்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகமான பிளாஸ்டிக் கூட சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதுதான். பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட ஹார்டுவேர் கடை மற்றும் ஸ்பேர்பார்ட்ஸ் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட கடைகளும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதுதான். இவற்றில் பணம் வருமா போகுமா என்பது சனியின் சூட்சுமவலுவைப் பொறுத்தது.

மிகவும் முக்கியமாக ஒருவர் குடிப்பழக்கம் போன்ற போதைப்பழக்கங்களுக்கு அடிமையாவதும் சனிபகவானால்தான். லக்னத்தோடு சம்பந்தப்பட்ட பாபத்துவம் பெற்ற சனி ஒருவரை குடிப்பழக்கத்திற்கு உள்ளாக்குவார். குடியில் இருந்து மீள முடியாத நிலையை லக்னபாபர்களின் தசைகளிலோ தனது தசையிலோ தருவார்.

ஒருவருக்கு மகரலக்னமாகி லக்னாதிபதியான சனி ஏழாமிட நீர்ராசியான கடகத்தில் பகை பெற்று அமர்ந்து எவ்வித சுபத்துவமும் பெறாமல் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் லக்னமும் சுபர்பார்வையோ தொடர்போ இல்லாமல் இருந்தால் அவர் குடிக்கு அடிமையானவராக இருப்பார். சனிதசை புக்திகளில் அவருக்கு மது அறிமுகப்படுத்தப்படும். இங்கே லக்னாதிபதி லக்னத்தைப் பார்க்கிறார் என்பது செல்லுபடியாகாது.

அதேபோல ஒருவருக்கு சனியின் வீடுகள் ஜீவனஸ்தானமானாலோ ஜீவனாதிபதியுடன் வலுப்பெற்ற சனி தொடர்பு கொண்டாலோ குப்பைகள், வேஸ்ட் பேப்பர் போன்ற கழிவுப்பொருட்கள், கழிப்பிடங்கள், பாத்ரூம் பொருட்கள் விற்றல் போன்றவைகளின் மூலம் வருமானம் வரும்.

நேர்வலு மட்டும் அடைந்து பாபத்துவம் அடைந்த சனிபகவான் ஒருவரை உடலால் பிழைக்கும் தொழில்களில் ஈடுபடுத்துவார். கைவண்டி இழுப்பவர்கள், மூட்டை தூக்கி பிழைப்பவர்கள், கட்டிடத்தொழிலில் செங்கல் சுமக்கும் சித்தாள் வேலை செய்பவர்கள் போன்றவர்கள் சனியால் உருவாக்கப்பட்டவர்கள்தான்.

சனிபகவான் நீசபங்கம் பெற்ற நிலைகளில் சுக்கிரனுடன் இணைந்து தொழில் ஸ்தானத்தோடு தொடர்பு கொண்ட நிலையில் ஒருவர் பெண்கள் சம்பந்தப்பட்ட நீசத்தொழிலில் இருப்பார். அதேநேரத்தில் சனிபகவான் பெண்களின் ஜாதகத்தில் நேர்வலு மட்டும் பெற்று சுக்கிரனோடோ அல்லது சுக்கிரனின் வீடுகளோடோ தொடர்பு கொள்கையில் ஜாதகியை ஒழுக்கம் குறையச் செய்வார்.

நிறைவாக அன்றைய தின கிரகநிலையான கோட்சாரத்தில் ஒருவரின் ராசிக்கு எட்டாமிடத்தில் வரும் அஷ்டமச்சனி எனும் நிலையும் ஒருவரின் ராசியிலும் அதற்கு முன்பின் வீடுகளில் வரும் ஏழரைச்சனி எனும் நிலையும் தனிமனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை.

நமது ஜோதிடசாஸ்திரம் ஒருவருக்கு முப்பது வயதுகளின் நெருக்கத்தில் நடக்கும் அஷ்டமச்சனியும் ஏழரைச்சனியும் கடுமையான எதிர்மறை பலன்களைத் தந்து அவருக்கு வாழ்க்கையைப் புரியவைக்கும் என்று குறிப்பிடுகிறது.

அஷ்டமச்சனி என்பது ஒருவருக்கு சுமாராக இரண்டரை வருடம் முதல் மூன்று வருடகாலங்களுக்கு நடக்கும். ஏழரைச்சனி என்பது ஏழரை வருடம் முதல் எட்டு வருடங்கள் தொடரும்.

அஷ்டமச்சனி நேரங்களில் ஒருவருக்கு நெருங்கிய உறவினர் மரணம், வருமானம் இல்லாத நிலை, எதிலும் தோல்வி, வம்பு வழக்கு, வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நிம்மதியற்ற தன்மை, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பிழைத்தல் போன்றவைகள் நடக்கும்.

அதேபோல ஏழரைச்சனி நடக்கும் காலங்களில் ஒருவர் நல்லது எது கெட்டது எது நண்பர் யார் சுற்றியுள்ளவர்கள் எப்படி என்பது போன்ற அனுபவங்களைப் பெறுவார். அவரவர் வயது வாழ்க்கைமுறை இருக்கும் இடம் போன்றவைகளைப் பொறுத்து சனியின் பலன்கள் நடக்கும்.

குறிப்பாக ஏழரைச்சனி ஆரம்பிப்பதற்கு ஒருவருடம் அல்லது சிலமாதங்களுக்கு முன்பாக ஒருவரைத் தொழில் ஆரம்பிக்க வைத்து சனி ஆரம்பித்ததும் சிக்கல்களை உண்டாக்கி பணத்தை இழக்கவைத்து புலி வாலைப் பிடித்த கதையாக தொழிலை நடத்தவும் முடியாமல் விடவும் முடியாமல் தொழில் அனுபவங்களை சனி தருவார்,

ஏழரைச்சனியின் நடுப்பகுதியான ஜென்மச்சனி எனப்படும் சொந்தராசியில் சனிபகவான் அமரும்போது கடுமையான மனஉளைச்சல்களைத் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். அதிலும் ஜென்மநட்சத்திரத்தில் செல்லும்போது எதிர்மறையான வழிகளில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை சனி புரிய வைப்பார்.

இத்துடன் சனிபகவானைப் பற்றிய விபரங்களை முடித்துக் கொண்டு அடுத்த வியாழன் முதல் ராகுவைப் பற்றிய சூட்சுமங்களைப் பார்க்கலாம்....

கிரகங்களுக்கான நிறம் எப்படி சொல்லப்பட்டது?

கருப்புநிறம் சனிக்கு சொந்தமானது என்பதால் சனிபகவான் வலுப்பெற்றவர்கள் கருப்புநிறப் பொருட்கள் மேல் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுபோன்ற கருப்பு நிறம் சம்பந்தப்பட்ட பொருட்களில் அவர்களுக்கு லாபம் வரும்.

பெட்ரோலிய பொருட்களுக்கும் சனிபகவானே காரணகத்தா ஆவார். பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் சனிபகவானே காரணம். பெட்ரோலின் கடைநிலை வடிவமான ரோடு போட உபயோகப்படும் தார் மற்றும் வாகனங்களின் டயர்கள் போன்றவைகள் சனிக்குச் சொந்தமானவை.
கருப்பு என்பது ஒரு நிறம் அல்ல. அது ஒரு நிறமற்ற நிலை என்பதை நான் முன்பே இந்த கட்டுரைகளில் விளக்கி இருக்கிறேன். மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறமான ஒளி ஒரு இடத்தில் இல்லாத போது அங்கிருக்கும் நிறமற்ற நிலையே கருப்பு எனப்படுகிறது.

கிரகங்கள் பிரதிபலிக்கும் அல்லது வெளிப்படுத்தும் ஒளியின் நிறத்தை வைத்தே கிரகங்களின் நிறங்களை ஞானிகள் நமக்குச் சொன்னார்கள். அதேபோல பூமியில் அந்த நிறமுள்ள பொருட்களின் மேல் சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தே கிரகநிறம் கிரகராசிக்கல் கிரகஉலோகம் போன்றவைகளும் பிரிக்கப்பட்டன.

உதாரணமாக சிகப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் ஒளியை வெளிப்படுத்தும் சூரியனுக்கு அக்னிக்கலரும், பச்சைவண்ணத்தை வெளிப்படுத்தும் புதபகவானுக்கு பச்சை நிறமும் அந்த நிறக்கல்லான மரகதப்பச்சையும் ஞானிகளால் ஒதுக்கப்பட்டன.

புதனின் தேவதை வடிவமாகவும் பச்சை நிறமுடையவளாகவும் மீனாட்சி அம்மன் உருவகப்படுத்தப்பட்டதும். மீனாட்சியின் கையில் பச்சைக்கிளி இருப்பதற்கும் காரணம் இதுவே.

அதன் போலவே தூயவெள்ளை நிறத்தில் பால்போல அதிகாலை நேரத்தில் கிழக்கு வானில் பிரகாசமாக ஒளிரும் சுக்கிரனுக்கு தூயவெள்ளை நிறமும் நள்ளிரவில் நமக்கு பாதிவெண்மை நிறத்தில் ஒளிரும் சந்திரனுக்கு பாதி வெள்ளை நிறமும் ஞானிகளால் ஒதுக்கப்பட்டன.

பூமியில் இருந்து பார்க்கும்போது மிகத்தெளிவாக சிவப்புநிறத்தில் தெரியும் செவ்வாய்க்கு ரத்தச்சிவப்பு நிறம் ஒதுக்கப்பட்ட காரணமும் அது சிவப்புநிறக் கதிர்களை பிரதிபலிப்பதால்தான். அதேபோல மிகபிரகாசமாக மஞ்சள் நிறத்தில் நம் கண்களுக்கு தெரியும் குருபகவானுக்கும் மஞ்சள் நிறம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் மேற்கண்ட கிரகங்களுக்கு ஒளிப்பிரதிபலிப்பு நிலை இருப்பதன் காரணமாகவே நிறங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒளியை பிரதிபலிக்க முடியாத அதிக தூரத்தில் இருக்கும் சனிபகவானுக்கு ஆழ்ந்த இருட்டைக் குறிக்கும் கருப்பு எனப்படும் கருநீலம் நமது ஞானிகளால் ஒதுக்கப்பட்டது. சனியை போலவே ஒளியற்ற கிரகமாக அமைந்த ராகு-கேதுகளுக்கும் இருட்டைக் குறிக்கும் கருப்பு மற்றும் கருநீலம் ஒதுக்கப்பட்டதன் காரணம் இதுவே..

( ஜன 22 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

1 comment :

  1. Sir You didnt say for Dhanusu lagnam about சனி பகவானின் சூட்சுமங்கள்

    ReplyDelete