Thursday, December 31, 2015

மேஷம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

மேஷம்:

மேஷராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து ஐந்தாமிடத்திற்கு ராகுபகவானும், பனிரெண்டாமிடத்தில் இருந்து மிக நல்ல பலன்களைத் தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு கேதுபகவானும் இந்த பெயர்ச்சியின் மூலம் மாறுகிறார்கள்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் மிகவும் நல்லபலன்களை அடையப் போகும் ராசிகளில் மேஷராசியும் ஒன்று.

ராகு-கேதுகளுக்கு பதினொன்றாமிடம் சந்தேகத்திற்கு இடமில்லாத நன்மைகளைத் தரக்கூடிய பாவம் என்பதால் லாபஸ்தானத்திற்கு மாறப்போகும் கேதுபகவானால் நன்மைகள் இருக்கும் என்று சொன்னாலும் 2016ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரை கேதுபகவான் குருவின் பார்வையிலும் இருப்பார் என்பதால் பருத்தி புடவையாய்க் காய்த்தது என்பதைப் போல மேஷராசிக்கு இம்முறை இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும்.

மேலும் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் இளம்வயது மேஷத்தினருக்கு சனியின் கெடுபலன்களைத் தடுத்து நிறுத்தும் அமைப்பாகவும் இந்தப் பெயர்ச்சி செயல்படும்.

இன்னும் ஒரு முக்கியபலனாக நமது மூலநூல்களில் ஐந்தாமிடத்தில் ராகு இருப்பது அதிர்ஷ்டக் குறைவானதாகவும், பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தமும், விரையங்களும், பெற்றவர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்றும் எதிர்மறை பலனாக சொல்லப்பட்டிருகிறது.

இருப்பினும் ராகு-கேதுக்கள் தன்னுடன் சேர்ந்திருக்கும் கிரகத்தின் பலனைக் கவர்ந்து அந்தக் கிரகபலனைச் செய்பவர்கள் என்பதால் வருடத்தின் முற்பகுதி வரை ராகுபகவான் ஏற்கனவே ஐந்தாமிடத்தில் நிலை கொண்டிருக்கும் குருபகவானுடன் இணைந்து தானே குருவாக மாறி மேஷராசிக்கு மிகச்சிறந்த நன்மைகளைச் செய்வார் என்பதாலும் இந்தப்பெயர்ச்சி மேஷராசிக்கு நல்ல நன்மைகளைத் தரும் என்பது உறுதி.

மேலும் பதினொன்றாமிடத்தில் இருக்கும் கேதுபகவானால் உங்களின் ஆன்ம பலம், மனஉறுதி, செயல்திறன், அறிவாற்றல், சொல்வன்மை கூடும் என்பதால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு நான் சொன்ன இத்தனை அம்சங்களும் வலிமை பெற்று உங்களது வாக்குறுதியும் சொல்லும் பலித்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி அந்தஸ்து, கௌரவத்தை உயரவைக்கும்.

எனவே ராகு-கேதுக்களின் இரண்டு நிலைகளிலும் இம்முறை மேஷராசி நன்மைகளையே அதிகமாகப் பெறும் என்பதால் இந்தப் பெயர்ச்சியை மேஷ ராசிக்காரர்கள் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம்.

அதேநேரம் அடுத்த வருட பிற்பகுதியில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ராகுபகவான் குருவிடமிருந்து விலகி முழுக்க சனியின் பார்வையினுள் வருவார் என்பதால் 2016 பிற்பகுதியில் இருந்து ஒரு வருட காலம் பிள்ளைகளால் விரையங்களையும், பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கங்களையும், பருவ வயதுக் குழந்தைகளின் முதிர்ச்சியற்ற வயதுக்கேயுரிய போக்கால் உங்களுக்கு மனக்கஷ்டங்களையும் தருவார்.

எனவே வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே சில விஷயங்களை திட்டமிட்டுக் கண்காணித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதும் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.

ஒரு சிலருக்கு பிள்ளைகளின் கல்வித்தடை, அவர்களுக்கு நல்லவேலை அமையாத நிலை, திருமணம் போன்ற சுபகாரியத் தடைகளையும் ராகுபகவான் தருவார் என்பதால் 2016-ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து மேஷராசிக்கு ஐந்தில் ராகு, ஆறில் குரு, எட்டில் சனி எனும் சாதகமற்ற கோட்சார நிலைமைகள் இருக்கும் என்பதால் தற்போதே மேற்கண்ட அமைப்புகளை கவனத்தில் கொண்டு உங்களுடைய எதிர்காலத் திட்டமிடலை அமைந்துக் கொண்டால் வாழ்க்கை ஒரு குறையும் இல்லாமல் செல்லும் என்பது உறுதி.

அதேநேரத்தில் மேற்கண்ட ஐந்து, பதினோராம் இடங்களால் வியாபாரம், தொழில் போன்ற ஜீவனஅமைப்புகள் பாதிக்கப்படாது என்பதால் சுயதொழில் செய்பவர்களுக்கோ, அரசு-தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, கலைஞர்களுக்கோ, பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கோ தொழில் அமைப்புகளில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது.

அதே நேரத்தில் நீங்கள் இப்போது அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் 2017ம் ஆண்டுவரை எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது. அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ வேண்டாம்.

வேலை செய்பவர்களும் இருக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக கவனித்து செய்து வருவது நல்லது. மேலதிகாரி சொல்லும் பேச்சுகளைக் கவனமாக கேட்டு நடங்கள். அலுவலகங்களில் வீண் ஈகோ பார்க்க வேண்டாம். அதேபோல வேலை பிடிக்கவில்லை என்று இருக்கும் வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்கு போக போகிறேன் என்பது இந்த நேரங்களில் உதவாது.

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை இப்போது நடக்கும் என்பதால் இருக்கும் வேலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது. அல்லது இன்னொரு வேலை கிடைத்தபின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. ஆனால் புதிதாய்க் கிடைக்கும் வேலை நன்றாக இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. சிலநேரங்களில் இந்தப் பேயை விட அந்தப் பிசாசிடமே இருந்திருக்கலாம் என்றும் நினைக்க வைக்கும்.

குறுக்குவழியில் பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். எவரிடமும் மனம் விட்டுப் பேச வேண்டாம். யார் எங்கே எப்படி உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று தெரியாது. முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் செய்யாத தவறுக்கும் தண்டனை கிடைக்கும் என்பதால் எதற்கும் ஒரு ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேநேரத்தில் வேலை மாற்றங்களோ வேலையை விட்டு விலகக்கூடிய சூழ்நிலைகளோ, தூர இடங்களுக்கு பணி மாறுதல்கள் கிடைப்பதோ இப்போது இருக்கும் என்பதால் அதையும் நீங்கள் புத்திசாலித்தனமாக சமாளிக்க வேண்டி இருக்கும்.

அடுத்து கேதுபகவானின் பதினொன்றாமிட மாறுதலால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கப் போவது இல்லை.

குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எனப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

யூக வணிகத்துறையில் இந்த வருடம் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். கடன் பெற்று வீடு வாங்கும் அமைப்பு இந்த வருடம் உள்ளது. புதிய வாகனம் அமையும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை எதுவும் இருக்காது. விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல பலனைத்தரும் பெயர்ச்சிதான். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மை தரும் பெயர்ச்சி இது.

அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு;

முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இந்தப் பெயர்ச்சியால் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு;

பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு;

பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்தப் பெயர்ச்சியால் இருக்காது. அதேநேரம் அஷ்டமச்சனியால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும்.

பரிகாரங்கள்.

அஷ்டமச்சனி நடப்பில் உள்ளதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஒருகுறையும் வராமல் சனியின் குருநாதராகிய காலபைரவப் பெருமான் உங்களைப் பாதுகாப்பார்.

No comments :

Post a Comment