கைப்பேசி எண் : 8681 99 8888
சிம்மத்தை அடுத்த கன்னி லக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் உச்சம் பெற்று
மாளவ்ய யோகம் எனப்படும் சிறப்பான யோக பலன்களை அளிப்பார். லக்னாதிபதி புதனை விட
சுக்கிரன் மட்டுமே இந்த லக்னத்திற்கு நல்ல பலன்களைத் தரக்கூடியவர்.
கன்னியின் லக்னாதிபதி புதன் பத்தாமிடத்திற்கும் அதிபதியாகி கேந்திராதிபத்திய
தோஷத்தை பெறும் நிலையில், சுக்கிரன் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும்,
ஒன்பதாமிடமான திரிகோணத்திற்கும் அதிபதியாகி மிகுந்த நன்மைகளைத் தருவார்,
உண்மையில் மாளவ்ய யோகம் கன்னிக்கு மேன்மையான பலன்களைத் தரும்.
சுக்கிரன் உச்சமாகிப் பார்க்கும் ஒரே லக்னம் என்பதும் கன்னிக்கு ஒரு கூடுதல்
சிறப்பு. கன்னி லக்னக்காரர்களுக்கு உச்ச சுக்கிரனின் பார்வையால் அந்தஸ்து,
மதிப்பு போன்ற சிறப்பு நன்மைகள் கிடைக்கும். புதனும் வலுவிழக்காத அமைப்பில்
உச்ச சுக்கிரன் கன்னிக்கு பெரும் நன்மைகளைச் செய்வார்.
சுக்கிரன் ஒரு இயற்கைச் சுப கிரகம் எனும் நிலையில் இதுபோன்ற அமைப்பில் அவரது
பார்வைக்கு குருவின் பார்வையை விட வலிமை அதிகம் உண்டு. சுக்கிரன் உச்சம் பெற்ற
கன்னி லக்னத்தினர் அழகாகவும், களையான முகத்தைக் கொண்டவர்களாகவும், பேச்சுத்
திறமையோடு பண்பான குணங்களை உடையவர்களாகவும், சிறந்த காதலர்களாகவும்
இருப்பார்கள்.
பொதுவாக நமது மூல நூல்கள் சுப கிரகங்களின் வரிசையை குரு, சுக்கிரன், தனித்த
புதன், வளர்பிறைச் சந்திரன் என்று வரிசைப் படுத்தினாலும் உத்தர
காலாம்ருதத்தில் மகரிஷி காளிதாசர் சுக்கிரன், குரு, தனிப் புதன், வளர்பிறை மதி
என்றே வரிசைப் படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னிக்கு சுக்கிரன் உச்சம் பெற்று பாபர்களுடன் இணையாமல், குறிப்பாக
லக்னாதிபதி நீச புதனுடனும், தான் பகைவராகக் கருதும் விரயாதிபதி சூரியனுடனும்
இணையாமல், தனித்து வலிமை பெற்று, முப்பது வயதுகளுக்கு மேல் சுக்கிர தசை
ஆரம்பமானால் அந்த ஜாதகர் பரம்பொருளின் அருளை பூரணமாகப் பெற்றவராக இருப்பார்.
இது போன்ற அமைப்பில் வரும் சுக்கிர தசை ஜாதகரை சுக்கிரனின் காரகத்துவங்களான
உணவுத் தொழில், தங்கும் விடுதிகள், துணிக்கடை, பெண்கள் உபயோகப்படுத்தும்
பொருள்கள், கலைத்துறை, டிராவல்ஸ் போன்றவைகளில் ஈடுபடுத்தி பெரும்பொருள்
அளிக்கும். சுக்கிர தசை என்பது சூப்பர் தசைதான் என்பது கன்னி
லக்னக்காரர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.
அதே நேரத்தில் உச்சமடையும் சுக்கிரன் ரேவதி நான்காம் பாதத்தில் வர்க்கோத்தமமாக
இருக்கக் கூடாது. சுப கிரகங்கள் உச்சமடையும் நிலையில் வர்க்கோத்தமம் அடைவது
முழுமையான நன்மைகளைத் தராது. இதுபற்றிய ஒரு மறைமுகமான குறிப்பு நமது
மூலநூல்களில் ஞானிகளால் தரப்படுகிறது. இது ஏன் என்பது பற்றிய விளக்கத்தை
வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்.
மேலும் சிறு வயதிலோ, அறுபது வயதிற்கு மேலோ வரும் சுக்கிர தசை ஒரு ஜாதகருக்கு
முழுமையான பலன்களைத் தராது. என்னதான் சுக்கிரன் நேர்மையான வழிகளில் யோகத்தைச்
செய்தாலும் பெண் சுகத்தையும், தொடர்பையும், பெண்கள் சம்பந்தமான லாபத்தையும்
ஜாதகர் விரும்பியோ, விரும்பாமலோ தருவார்.
எனவே பெண் சுகத்தை அனுபவிக்கும் வயதுகளில் வரும் சுக்கிர தசையே மிகவும்
மேன்மையான பலன்களைத் தரும். கூடவே இணைப்பாக உல்லாசம், கேளிக்கை போன்றவைகளும்
சுக்கிரனால் உண்டு.
துலாத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதி ஆவார் என்பதால் அவர் லக்னத்தில் ஆட்சி
பெறுவதன் மூலம் மாளவ்ய யோகம் கிடைக்கப் பெறும். இந்த லக்னத்திற்கு அவரே
அஷ்டமாதிபதியும் ஆவார் என்பதால் இருபது வருடம் கொண்ட சுக்கிர தசையில் ஒரு பாதி
பத்து வருடங்கள் யோகத்தையும், மறு பாதி பத்தில் அவ யோகத்தையும் செய்வார்.
பொதுவாக துலாமில் பிறந்தவருக்கு லக்னத்தைத் தவிர வேறு எங்கிருந்தாலும்
சுக்கிரன் மேன்மையான பலன்களைத் தருவதில்லை. இந்த லக்னத்திற்கு அவர் உச்சம்
பெறுவது ஆறாமிடத்தில் என்பதால் உச்சம் பெறுவதும் பெரிய யோகங்களைச் செய்யாது.
தனது இன்னொரு வீடான எட்டாமிடத்தோடு சுக்கிரன் தொடர்பு கொண்டு பாவத்
பாவத்தின்படி எட்டாமிடத்திற்கு மூன்றாமிடமான பத்தாம் கேந்திரத்தில் இருந்தால்
அவரது தசை, புக்திகளின் பிற்பகுதிகளில் தொழில் சரிவுகளையும் பிரச்னைகளையும்
உண்டு பண்ணுவார். எனவே துலாம் லக்னத்தவருக்கு சுக்கிரன் எட்டாமிடத்துத்
தொடர்புகள் பெறாமல் இருப்பதே முழுமையான யோகங்களைச் செய்யும்.
விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் ஏழு, பனிரெண்டாம் இடங்களுக்கு அதிபதியாகி
மனைவிக்கும், மனைவியின் மூலம் கிடைக்கும் போக சுகத்திற்கும் அதிபதி என்பதால்
ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை செய்வார்.
இங்கு தனித்து ஆட்சி பெற்றால் கேந்திராதிபத்திய தோஷத்தையும், களத்திர காரகன்
களத்திர பாவத்தில் நிற்பதால் உண்டாகும் “காரஹோ பாவ நாஸ்தி” அமைப்பில் களத்திர
தோஷத்தையும் செய்வார். எனவே விருச்சிக லக்னத்திற்கு அவர் ஏழில் தனித்திருப்பது
சிறப்பான நிலை அல்ல.
சூரியனுடன் இணைந்து அவர் இங்கே இருப்பது ஜாதகருக்கு நல்ல பலன்களையும்
யோகத்தையும் தரும். இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு சுக்கிர தசையில்
பெண்களால் லாபம், கூட்டுத் தொழில் நன்மை, வெளிநாட்டுத் தொடர்புகள் போன்றவை
கிடைக்கும். ஜாதகத்தின் மற்ற அமைப்புகளின்படி ஜாதகர் வெளிமாநிலம்,
வெளிநாட்டில் பிழைக்கக் கூடும்.
தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விஷேசம் இல்லாத
பாவி எனும் நிலை பெற்று நான்காமிடத்தில் உச்சமாகி மாளவ்ய யோகத்தைத் தருவார்.
நான் அடிக்கடி எழுதுவதைப் போல தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் வலிமை பெறுகிறார்
என்றால் லக்னாதிபதியான குரு சுக்கிரனை விட பலம் பெற வேண்டும். அவ்வாறு குரு
வலுப் பெற்றால் மட்டுமே எதுவும் சிறப்பாக அமையும். இந்த அமைப்பை குருவின்
சூட்சுமங்கள் எனப்படும் தலைப்பிலும் எழுதியிருக்கிறேன்.
அடுத்து மகரத்திற்கு சுக்கிரன் ஐந்து, பத்திற்குடைய ராஜயோகாதிபதி எனும் நிலை
பெற்று, பத்தாமிடத்தில் ஆட்சியாகி மாளவ்ய யோகத்தைத் தருவார். சுக்கிரன் ஒரு
சுப கிரகம் என்பதால் பத்தாமிடமான கேந்திரத்தில் தனித்து ஆட்சி பெறுவது நல்ல
நிலை அல்ல.
பெரும்பாலும் தன் அருகில் இருக்கும் இந்த லக்னத்தின் ஒன்பதிற்குடைய புதனுடன்
இணைந்து, தர்ம கர்மாதிபதி யோகமாகவும் இருக்கும் நிலையில் மாளவ்ய யோகமும், தர்ம
கர்மாதிபதி யோகமும் இணைந்து சுக்கிர தசை வரும் நிலையில் ஜாதகர் வாழ்க்கையின்
உச்சத்திற்கே செல்வார். ஆனால் மகரத்தின் எட்டுக்குடையவரான அஷ்டமாதிபதி சூரியன்
இங்கே சுக்கிரனுடன் இணைவது யோகத்தை வலுவிழக்கச் செய்யும்.
எனவே சுக்கிரன் தனித்திருப்பதை விட புதனுடன் மட்டும் இணைந்து முப்பது வயதிற்கு
மேல் சுக்கிர தசை வருமாயின் ஜாதகரை கலைத்துறை, ரெஸ்டாரென்ட், டெக்ஸ்டைல்ஸ்,
டிராவல்ஸ், கார்மெண்ட்ஸ் போன்ற இனங்களில் ஈடுபடுத்தி லாபத்தைத் தந்து ஜாதகரை
அதிர்ஷ்டசாலி ஆக்குவார்.
கும்பத்திற்கும் மகரத்தைப் போலவே சுக்கிரன் ராஜயோகாதிபதி எனும் நிலைபெற்று
நான்கு, ஒன்பது ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, நான்காமிடத்தில் ஆட்சி
பெற்று, திக்பலமும் அடைந்து, கேந்திராதிபத்திய தோஷம் பெற்று மாளவ்ய யோகம்
தரும் அமைப்பைப் பெறுவார்.
சுபமான ஒரு கிரகம் கேந்திரத்தில் ஆட்சி பலமும், திக்பலமும் பெறுவது நல்ல நிலை
அல்ல என்றாலும் அவர் கும்பத்திற்கு பாதகாதிபதி என்பதால் பாதக ஸ்தானமான
ஒன்பதாமிடத்திற்கு எட்டாமிடத்தில் மறைந்து, நான்கில் ஆட்சி பெறுவது நன்மை
தரும்.
மகரத்திற்கு சொன்னதைப் போலவே இந்த லக்னத்தின் முதன்மைத் திரிகோணாதிபதியான
புதனுடன் இங்கே சுக்கிரன் இணைந்திருக்கும் பட்சத்தில் மாளவ்ய யோகமும், கேந்திர
திரிகோணாதிபதி யோகமும் அமைந்து லக்னாதிபதி சனியும் சுப, சூட்சும வலுப்
பெற்றிருக்கும் நிலையில் ஜாதகர் முன்னேற்றங்களை அடைவார்.
நிறைவாக மீன லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷமே
இல்லாத பாவி எனும் நிலை பெற்று, லக்னாதிபதி குருவுக்கு விரோதியுமாகி
லக்னத்தில் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை தருவார்.
பொதுவாகவே குருவின் லக்னங்களுக்கு சுக்கிரன் உச்சம் பெறுவது நல்லது அல்ல என்று
எழுதியிருக்கிறேன். அதுபோலவே இங்கே சுக்கிரன் உச்சம் பெற்றால் குருவும்
அவருக்கு நிகரான வலுவில் இருப்பதே ஜாதகருக்கு நல்ல யோகங்களைச் செய்யும்.
அல்லது லக்னத்தில் பாதகாதிபதியான புதன் நீசம் பெற்றிருந்து, நீச புதனுக்கு
சுக்கிரன் தனது உச்ச வலுவைக் கடன் கொடுத்து, சுக்கிரன் வலிமை குறைந்து தசை
நடத்துவது, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சுக்கிரனை நன்மைகள் செய்ய வைத்து மீன
லக்னத்தாருக்கு மாளவ்ய யோகப் பலன்களைத் தரும்.
சுக்கிரன் அஷ்டமாதிபதி என்பதாலும், எட்டிற்குடையவன் சுபரானால் வெளிநாட்டு
யோகத்தைச் செய்வான் என்பதன்படியும் சுக்கிர தசையில் ஜாதகர் வெளிநாட்டில்
பொருள் சேர்ப்பதோ அல்லது ஏற்றுமதி இறக்குமதி போன்ற வெளிநாடு சம்பந்தப்பட்ட
தொழில்களில் பணம் சம்பாதிப்பதோ நடக்கும்.
லக்னத்தில் இருக்கும் சுக்கிரனால் ஜாதகர் உண்மைக் காதலராக இருப்பார்.
காதலுக்காக எதையும் செய்யவும் தயாராக இருப்பார். பொதுவாகவே சுக்கிரன் உச்சம்
பெற்றால் அவர்கள் எதிர்பாலினத்தவர்களால் விரும்பப்படும் நல்ல அமைப்புகளையும்,
குணநலன்களையும் கொண்டிருப்பார்கள்.
ஒரு லக்னத்தின் எதிரிக் கிரகங்கள் வலுப் பெறலாமா?
நமது ஞானிகளால் ஜென்ம விரோதிகளாக உருவகப்படுத்தப்பட்ட குரு, சுக்கிரன் மற்றும்
சனி - சூரிய, சந்திரர்களின் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு அவர்களது எதிரிக்
கிரகங்கள் லக்னாதிபதியை விட வலுப் பெறுவது யோகங்களைச் செய்யாது.
அவ்வாறு எதிரிக் கிரகங்கள் வலுப்பெற்று யோகம் செய்யும் அமைப்பில் இருந்தால்,
வாழ்க்கையின் முக்கியமான அமைப்புகளில் - திருமண, புத்திர பாக்கியம்
போன்றவைகளில் குறைகள் இருக்கும்.
அதன்படி தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் உச்சமானால் குரு அவரை விட வலிமையான
நிலையில் இருக்க வேண்டும். அதாவது குருவும் உச்சம் பெற வேண்டும். அல்லது குரு
நீசம் பெற்று முறையான நீசபங்கத்தை அதாவது குருவுக்கு வீடு கொடுக்கும் சனி
உச்சம் பெற்றும், குருவோடு உச்ச செவ்வாய் இணைந்தும், குரு, சந்திர
கேந்திரத்தில் இருந்தும், வர்கோத்தமம் பெற்றும் முறையான நீசபங்க நிலையை
அடையவேண்டும்.
முறையான நீசபங்கம் என்பது உச்சத்தை விட மேலான வலிமையான நிலை என்பதை ஏற்கனவே
நீசபங்க ராஜயோகம் பற்றிய கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.
தனுசுக்கு குரு உச்சமானால் அவர் சுக்கிரனைப் பார்க்கும் நிலையில் ஒரு “உச்சனை
இன்னொரு உச்சன் பார்க்கக் கூடாது” எனும் விதிப்படி சுக்கிரன் தன் வலுவை ஓரளவு
இழப்பார். இந்த அமைப்பு தனுசு லக்னத்திற்கு நல்லது.
இது போன்ற அமைப்புகள் இல்லாமல் குரு வலிமை இழந்து, சுக்கிரன் உச்சம் பெற்று
மாளவ்ய யோக அமைப்பில் இருப்பாராயின் அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் மிக முக்கிய
பாக்கியங்களில் ஏதேனும் ஒன்று குறைவு படும்.
மற்றபடி இங்கிருக்கும் உச்ச சுக்கிரனால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம்
போன்ற அமைப்புகள் உயர்வானதாக இருந்தாலும் சுக்கிரனுடைய முக்கியமான
காரகத்துவமான திருமணம், பெண்சுகம் எனப்படும் காமத்தில் ஜாதகருக்கு ஆர்வம்
இல்லாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
(ஆக 27- 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
No comments :
Post a Comment