Tuesday, June 30, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 44 (30.6.2015)

கதிரவன், சென்னை.

கேள்வி:

சுக்
ரா,சனி
சந்
சூ
ராசி
பு
செவ்
குரு
கே


24.02.1969 ல் பிறந்த என் தம்பியின் பிறந்ததேதி எண்கணிதப்படி மிகவும் அதிர்ஷ்ட எண்ணில் அமைந்துள்ளது. அதிர்ஷ்ட எண்கள் என்ற நூலில் பிறந்த எண்ணும் கூட்டு எண்ணும் ஒரே எண்ணாக அமைந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. என் தம்பியின் பிறந்தஎண்படி 2 + 4 = 6. கூட்டுஎண்படி 2 + 4 + 2 + 1 + 9 + 6 + 9 = 33 = 6. ஆனால் வாழ்க்கை வளமாக இல்லை. ஜீரோவாக இருக்கிறது. அவன் போதையில் எப்பொழுதும் குடிகாரனாக இருக்கிறான். அவன் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா? மாற்றம் வருமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்:

கேள்வியும் நீங்களே கேட்டு பதிலும் நீங்களே சொல்கிறீர்களே? பெயரிலும் எண்ணிலும் ஒன்றுமே இல்லை என்று திரும்பத் திரும்ப எழுதியும் வாசகர்கள் வாரந்தோறும் இது போன்ற கேள்விகளை எழுதிக் குவிக்கிறீர்கள்.

உலகிலேயே முழுமை பெற்ற ஜோதிடம் இந்திய வேதஜோதிடம் மட்டும்தான். அதற்கு காரணம் மனிதனின் வாழ்வை நூற்றியிருபது வருடங்களாக பிரித்து அவன் வாழ்க்கையை பகுதிபகுதியாய் துல்லியமாக்கிய மகரிஷி பராசரரின் தசாபுக்தி முறை. இது போன்ற சர்க்கரையைக் கொள்ளாத மேற்கத்திய நாடுகளின் இலுப்பைப்பூ எண்கணிதம்.

வேதஜோதிடம் என்பது மகாசமுத்திரம். இதைக் கற்றுக்கொள்ள ஒரு தனிமனிதனின் ஆயுள் போதாது. எவ்வளவு பெரிய ஜோதிடச் சக்கரவர்த்தியாக இருந்தாலும் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு நுட்பத்தை அவர் கற்றுக் கொண்டே ஆகவேண்டும். வாழ்நாள் முழுக்க ஒரு ஜோதிடர் மாணவர்தான்.

எண்கணிதம் என்பது ஒரு நாற்பது பக்க நோட்டிற்குள் அடக்கம். சமுத்திரத்தில் இறங்கப் பயந்துபோய் கரையோரத்தில் கால் நனைப்பதே பெயர்எண் பிறவி எண் என்பது. இந்தப் பெயர் மற்றும் எண்ணினால் இவர் கோடீஸ்வரன் என்றால் அதேபோன்ற அமைப்புள்ள பிச்சைக்காரர்கள் ஆயிரம் பேரை நான் வரிசையில் நிறுத்துவேன். இந்த முறையின் தந்தை என்று சொல்லப்படும் சீரோ தன் வாழ்வின் கடைசி ஆறுவருடங்கள் அமெரிக்கத் தெருக்களில் கவனிப்பாரற்றுக் கிடந்து அனாதையாக இறந்தார். ஏன் அவர் அப்போது தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு செழிப்பாக இருந்திருக்கலாமே?

உங்கள் தம்பியைப் பொறுத்தவரை லக்னாதிபதி சுக்கிரன் உச்சமானாலும் சனி ராகுவுடன் சேர்ந்ததால் குடிப்பழக்கம் வந்தது. துலாம் லக்னத்திற்கு பாவிதசையான பனிரெண்டில் மறைந்து ஆறைப்பார்த்த குருதசை பதினாறு வருடங்களாக நடந்து இந்த மாதத்துடன் யோக சனிதசை ஆரம்பிக்கிறது. சனி ரேவதி சாரம் வாங்கி புதன் நான்காம் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் இனிமேல் தம்பியிடம் மாற்றம் உண்டாகி படிப்படியாக நன்றாக இருப்பார்.

டாக்டர். விக்னேஷ்வரன், பாண்டிச்சேரி.

கேள்வி:

சூ,பு
கே
ராசி
குரு,சு
செவ்
சனி
ரா
சந்


எம்.பி.பி.எஸ் டாக்டரான எனக்கு எம்.டி. எம்.எஸ் போன்ற மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கிறதா? நல்ல வேலைவாய்ப்பு எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடைபெறும்? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?

பதில்:

(மகரலக்னம், தனுசுராசி, லக்னத்தில் சனி, ஆறில் சூரியன், புதன், கேது ஏழில் சுக், செவ், குரு)

முப்பது வயது நெருக்கத்தில் ஏழரைச்சனி அமைப்பு நடைபெற்றால் சனி முடியும் நேரத்தில்தான் வாழ்க்கை செட்டிலாகும். உங்கள் ராசிக்கு தற்பொழுது ஏழரைச்சனி நடைபெறுவதோடு அஷ்டமாதிபதி சூரியதசையும் சில தினங்களுக்கு முன்புதான் ஆரம்பித்திருக்கிறது. ஆயினும் ஜாதகம் யோகமாக இருப்பதாலும், லக்னத்தைச் சுக்கிரனும் உச்சகுருவும் பார்ப்பதாலும் சூரியதசை பெரிய கெடுதல்கள் எதையும் செய்யாது. அதேநேரத்தில் இருக்கும் இடத்தை விட்டு தூரத்தில் இருக்க வைக்கும்.

ஏழரைச்சனியில் மேற்படிப்புக்கு அதிகமுயற்சி தேவைப்படும். ஏழுக்குடையவன் பனிரெண்டில் மறைந்து ராகுவுடன் இணைந்து ராசிக்கு இரண்டில் சனி, ராசிக்கு எட்டில் செவ்வாய் அதுவே லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் என்ற கடுமையான தோஷ அமைப்புடன் அஷ்டமாதிபதி தசையும் நடப்பதால் முப்பது வயதிற்கு பிறகு சந்திரதசையில்தான் திருமணமாகும். சனிக்கிழமைதோறும் கால பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது ஒன்றே பரிகாரம்.

ஜி. நடராஜன், விளாகம் கிராமம்.

கேள்வி:

சூ
சந்
செவ்
பு
சுக்
ரா
ராசி
கே
குரு
சனி


மகனுக்கு நான்கு ஆண்டுகளாக திருமண ஏற்பாடு செய்கிறேன். பெண் அமையவில்லை. அவர் ஜாதகத்தில் என்ன குற்றம்? 32 வயதாகியும் ஏன் திருமணம் தடைப்படுகிறது? எப்பொழுது திருமணம்? தங்களின் வாசகனுக்கு நல்வாக்கு அருளுமாறு கோருகிறேன்.

பதில்:

(கடகலக்னம், மீனராசி, நான்கில் சனி ஐந்தில் குரு, ஆறில் கேது, ஒன்பதில் சூரி, பத்தில் புத, செவ், பதினொன்றில் சுக்)

ராசிக்கு எட்டில் உச்ச வக்ரசனி, ராசிக்கு இரண்டில் ஆட்சி பெற்ற செவ்வாய், செவ்வாயும் சனியும் நேருக்குநேர் பார்வை என்பதோடு சுக்கிரனும் குருவும் வேறு பார்த்துக் கொள்கிறார்கள், அசுரகுருவும் தேவகுருவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலோ மிக நெருக்கமாக இணைந்தாலோ சுக்கிரன் தரும் தாம்பத்தியசுகத்தை குரு தரவிட மாட்டார் குரு தரும் புத்திரசுகத்தை சுக்கிரன் தரவிட மாட்டார் என்று அடிக்கடி எழுதுகிறேன். மேலும் மீனராசிக்கு அஷ்டமச்சனி நடந்ததால் கடந்த மூன்று வருடங்களில் எந்த நல்லதும் உங்கள் மகனுக்கு நடந்திருக்க வாய்ப்பில்லை. நடைபெறும் சூரியதசையில் சுக்கிர புக்தியில் 2017 தைமாதம் திருமணம் நடைபெறும்.

குமுதம், பாண்டிச்சேரி.

கேள்வி:

ரா
சுக்
ராசி
செவ்
பு
குரு
சூ
சந்
சனி
கே


மகளுக்கு ஏழரைச்சனி முடிந்து மூன்று வருடமாக வரன் தேடுகிறேன். அமையவில்லை. செவ்வாய்தோஷம் சர்ப்பதோஷம், களத்திரதோஷம் என்று மூன்றுமுறை ஆயிரக்கணக்கில் செலவு செய்துவிட்டேன். ஒன்பது நவக்கிரக கோவிலுக்கும் போய் வந்துவிட்டேன். சிறுவாபுரி, நித்யகல்யாணப் பெருமாள் என எல்லா இடமும் போயாகிவிட்டது. வயது 29 முடியப்போகிறது. ஒரு ஜோதிடர் குலதெய்வத்திற்கு அன்னதானம் செய்யச் சொன்னார். செய்தேன், இன்னொருவர் பதினாறுவாரம் பெருமாளுக்கு விளக்குப் போடச் சொன்னார். போட்டேன். மகளுக்கு எப்பொழுது திருமணம்? அரசுவேலை கிடைக்குமா?

பதில்:


(தனுசுலக்னம், சிம்மராசி, இரண்டில் குரு. ஐந்தில் ராகு, ஏழில் சுக், எட்டில் புத செவ், ஒன்பதில் சூரி)


லக்னாதிபதி நீசமாகி எட்டில் நீசசெவ்வாயும் ஏழுக்குடையவன் எட்டில் மறைந்து ஏழில் களத்திர தோஷத்துடன் சுக்கிரன் அமர்ந்து செவ்வாயும் சனியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்ட அமைப்பு இருப்பதால் மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. நீங்கள் செய்ததாக சொல்வதெல்லாம் பொதுவான பரிகாரங்கள்.

லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்திருக்க வேண்டும். இருந்தாலும் மகளுக்கு திருமணகாலம் வந்துவிட்டதால் நடைபெறும் சந்திரதசையில் சுக்கிரனின் வீட்டில் உச்சமாகியுள்ள குடும்பாதிபதி சனி புக்தியில் இந்த வருடம் ஆவணி மாதத்தில் இருந்து கார்த்திகை மாதத்திற்குள் திருமணம் நடக்கும். அரசுவேலை நிச்சயம் உண்டு.

டி. கணேசன், மதுரை.

கேள்வி:

குரு
ராசி
கே
ரா
சனி
சுக்
சூ,பு
செவ்சந்



கடந்தமுறை பிறந்த நேரம் குறிக்காததற்கு மன்னிப்புக் கோருகிறேன். தங்களது கடைக்கண் பார்வை கிடைத்தும் அருள்வாக்குப் பெற முடியவில்லை. மறுவாய்ப்புத் தந்து பதில் தர வேண்டுகிறேன். தங்களது பக்தனும், செவ்வாய்க் கிழமை வாசகனுமான நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

பதில்:

பிறந்த நேரம் அவசியம் தேவை என்று ஏன் கேட்கிறேன் என்பது உங்கள் மகன் விஷயத்திலும் நிரூபணம் ஆகிறது. 30.10.1989 மதியம் 1.30 மணிக்குப் பிறந்த உங்கள் மகனுக்கு மகரலக்னத்திற்கு பதில் நீங்கள் அனுப்பிய ஜாதகத்தில் கும்ப லக்னம் என்று தவறாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி நான் பலன் சொன்னால் என் வாக்கு எப்படி அருள்வாக்காக இருக்கும்? இன்றும் கிராமங்களில் கணிக்கப்படும் ஜாதகங்களில் லக்னம் தோராயமாக குறிக்கப்படுவதாலேயே நான் பிறந்த நேரம் கேட்கிறேன்.

மகர லக்னமாகி லக்னாதிபதி சனியையும் ராசியையும் குரு பார்த்து சனிதசை நடக்கின்ற யோகஜாதகம். ஜாதகம் என்னதான் யோகமாக இருந்தாலும் இளம் வயதில் நடக்கும் ஏழரைச்சனி எதுவும் கிடைக்காமல் தடுக்கும் அமைப்பு கொண்டது என்பதாலும் தற்பொழுது மகனுக்கு நடந்து வரும் சனிதசையில் சூரிய, சந்திர புக்திகள் நல்லபலன்களைத் தராது என்பதாலும் 2017 ஜூலை வரை மகனுக்கு அனைத்திலும் தடை இருக்கும். அதன்பிறகு எல்லா பாக்கியங்களும் குறைவின்றிக் கிடைத்து அதிர்ஷ்ட வாழ்வு வாழ்வார். வாழ்நாள் முழுவதும் புதன், கேது, சுக்கிரன் என யோகதசைகள் வருவதால் மகனைப் பற்றிக் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பெண் குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்யலாமா?

வி. குமார், ஈரோடு.

கேள்வி :

சுக்
குரு
சூ
பு
ராசி
செவ்
ரா
சனி
கே
சந்


ஜோதிடச் சக்கரவர்த்தியை நேரில் தரிசிக்க முடியாத சூழ்நிலையில் ஒரு நல்லதீர்வு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 53 வயதாகும் எனக்கு மனைவி மகன் உள்ளனர். நான்கு வருடங்களுக்கு முன் 14 வயது மூத்தமகள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டாள். அதுமுதல் அவள் நினைவாகவே இருக்கிறது. மீண்டும் ஒரு பெண்குழந்தை பெற்று வளர்க்க வேண்டும் என்று விருப்பமாக உள்ளது. மனைவிக்கு 42 வயது என்பதால் மீண்டும் குழந்தை பெறமுடியாத நிலை. தற்சமயம் எனக்கு ஏழரைச்சனி நடக்கிறது. இரண்டாம் திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தை பெற்று அதை சீரும் சிறப்புமாக வளர்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது. நான் மிகவும் நடுத்தரக் குடும்பத்தினைச் சேர்ந்தவன் இரண்டாவது திருமணத்திற்கு பெண் கிடைக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?

பதில்:

சிலநேரங்களில் ஜோதிடத்திற்கு அப்பாற்பட்டு சகமனிதனாகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. துலாம் லக்னமாகி எட்டில் அமர்ந்த புதன் தசையில் புத்திர ஸ்தானத்திற்கு விரயபாவமான நான்கில் அமர்ந்து மாரகாதிபதி நீச செவ்வாயின் பார்வையைப் பெற்ற சனி புக்தியில் மூத்தமகள் மறைவு.

அந்தக்காலம் போல அரைடஜன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமல் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக பெற்றுக் கொள்ளும் இன்றைய நிலையில் ஆசையாய் வளர்த்த மகள் இறையடி சேர்ந்தால் மனம் பாதிப்பது இயற்கைதான். மிகவும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த 53 வயதான உங்களுக்கு முதல்மனைவி 42 வயதில் உயிரோடு இருக்கையில் 18 வயதுப் பெண்ணா வந்து கழுத்தை நீட்டுவாள்? அப்படியே வந்தாலும் 55 வயதில் பிள்ளை பெற்று 80 வயதுவரை சீரும்சிறப்புமாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுக்க முடியுமா உங்களால்?

பதினான்கு வயதில் குழந்தை தவறிப்போனால் அதே வயதுள்ள குழந்தைகள் அனைவரும் மகளாகத்தானே கண்ணுக்குத் தெரியும்? குழந்தையின் நினைவு தூக்கலாக இருந்தால் ஆதரவற்ற கைவிடப்பட்டவர்கள் இல்லத்தில் அதே வயதில் உங்கள் மகள் சாயலில் உள்ள பெண்ணைத் தத்தெடுத்து இறந்து போன உங்கள் மகளின் பெயரையே அவளுக்கு வைத்து சீரும் சிறப்புமாக வளர்த்து திருமணம் செய்து கொடுக்கலாமே? இரண்டாவது திருமணம் செய்துதான் பெண் குழந்தை பெறவேண்டும் என்பதில்லையே? எங்கேயோ இடிக்கிறதே? உங்கள் மகளை பெற்றெடுக்கும் பொழுது உங்களுக்கு இருந்த 34 வயது இரண்டாவது கல்யாணம் செய்தால் திரும்ப வருமோ? கொஞ்சம் யோசித்தால் யாருடைய ஆலோசனையும் உங்களுக்குத் தேவையில்லை.

2 comments :

  1. ஐயா, திரு. குமார், ஈரோடு அவர்களின் கேள்விக்கான உங்களின் பதில் மிக அற்புதம்.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு,

    குருவும், சுக்கிரனும் லக்னத்தை பார்ப்பது சிறந்ததா? அல்லது அதை விட லக்னாதிபதியை பார்ப்பது சிறந்ததா?


    நன்றி
    சதீஷ்

    ReplyDelete