Saturday, July 25, 2015

குருவின் சூட்சுமங்கள் C – 021 - Guruvin Sutchumangal


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

மற்றக் கிரகங்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு குருவிற்கு வேத ஜோதிடத்தில் எப்பொழுதும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எந்தக் கிரகம் வலுவிழந்தாலும் குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஜோதிடத்தில் ஒரு மறைமுக விதி.

இன்னுமொரு சொல்லப்படாத, ஆனால் உணரக் கூடிய விதியாக எந்த ஒரு ராஜயோக ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்த பட்சம் லக்னாதிபதியையோ குரு பார்த்தே தீருவார். அல்லது வலுப் பெற்று இருப்பார்.

ஒரு ஜாதகத்தில் ஏராளமான தோஷங்கள், எவ்வளவு கெடுக்கும் நிலையிலும் இருந்தால்கூட குருவின் பார்வையோ, தொடர்போ அந்த தோஷ அமைப்புக்கு இருந்தால் அது கெடுதல்களைச் செய்யாது என்பதும் குருவிற்கே உள்ள தனிச் சிறப்பு.

வேதஜோதிடத்தில் “குருவின் பார்வை கோடி நன்மை” என்று சிறப்பித்துச் சொல்லப்படும் இந்தக் குருவின் பார்வையை நான் ஒரு வீட்டோ அதிகாரத்துக்கு ஒப்பிடுவேன்.

ஐ.நா சபையில் உலகின் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தீர்மானம் கொண்டு வந்தாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வீட்டோ அதிகாரம் படைத்த நாடுகள் தங்கள் அதிகாரத்தின் மூலம் அவற்றை ரத்து செய்து அந்த விஷயத்தை செயலற்றதாக மாற்றுவதைப் போல ஜாதகத்தில் இருக்கும் கெடுபலன் தரும் அமைப்புகளை குரு தனது பார்வை மற்றும் தொடர்புகளால் மாற்றி அவற்றைச் செயலற்றதாக மாற்றுவார்.

(இதே அமைப்பு ஒரு ஜாதகத்தில் சனிக்கும், கோட்சாரத்தில் நடக்கும் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற அமைப்புகளுக்கும் உண்டு. ஆனால் குரு நன்மை செய்ய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவார் என்றால் சனி தீமைகளுக்கு அதனைப் பயன்படுத்துவார். இதனைப் பற்றி சனியின் சூட்சுமங்களில் சொல்கிறேன்.)

குருவின் சிறப்பியல்புகளாக சொல்லப் படுவது நல்ல நடத்தை, நற்சிந்தனை, ஒழுக்கம் ஆகியவை. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தோடு குரு சம்பந்தப்படுவாரேயானால் அந்த மனிதர் மிகவும் நல்லவராகவும், அன்பு, கருணை, மன்னிக்கும் தன்மை போன்ற குணங்களைக் கொண்டவராகவும் இருப்பார் என்று நமது மூலநூல்கள் புகழ்ந்து சொல்கின்றன.

குரு லக்னத்தோடு சம்பந்தப்படுவது மற்றும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவது ஹம்ச யோகம் என்றும், அது ஒரு சிறப்பான அமைப்பு எனவும் நமது கிரந்தங்கள் போற்றிக் கொண்டாடுகின்றன.

ஆனால் காலத்திற்கேற்ப பலன்கள் சொல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நான், குரு லக்னத்தோடு சம்பந்தப்படும் போது அந்த ஜாதகனை நல்லவன் என்று சொல்வதை விட இளிச்சவாயன், ஏமாளி என்றே பலன் சொல்கிறேன்.

குரு வலுப் பெற்று லக்னத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் நல்லவராக இருந்து, தன்னைப் போலவே பிறரையும் நல்லவர்களாக நினைத்து சனியின் ஆதிக்கம் பெற்றவர்களிடம் ஏமாறுவார்.

சாதுர்யமும், பொய் புனைவும், மனசாட்சியைத் துறத்தலும் மிகுதியாகி, தவறுகளும் வாழ்வின் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட, ராகுவின் ஆதிக்கத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த யுகத்தில் ஒருவர் நல்லவராக இருப்பதை விட வல்லவராக இருப்பதே முக்கியம் என்பதால் ஜோதிடத்தில் துல்லிய பலன் சொல்ல நினைக்கும் ஒருவருக்கு குருவைப் பற்றிய தற்காலப் புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.

இந்தப் புற உலகம் தாண்டி அக உலகை அறிமுகப்படுத்தும் ஆன்மிகச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் குரு. வேத ஜோதிடத்தில் ஆன்மிகம் என்பது குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையினைக் குறிக்கும். ஆன்மிகத்தில் இம் மூன்று கிரகங்களும் தனித் தனிப் பரிணாமத்தைக் காட்டுபவை.

மூன்று கிரகங்கள் ஒரு விஷயத்திற்குச் சொந்தம் என்றால் இவை மூன்றின் தனித்தன்மை என்ன? என்ன வகையான ஆன்மிகத்தை இவர்கள் தருவார்கள்? ஆன்மிகத்தில் குருவிற்கும், சனிக்கும், கேதுவிற்கும் உள்ள நுண்ணிய வித்தியாசங்கள்தான் எவை?

பரம்பொருளுடன் கலப்பதற்கு தேவைப்படும் எண்ணங்களையும், வழிகளையும் காட்டும் ஆன்மிகம் எனப்படும் ஒரு செயல் நிகழ்வில் குரு எதிர்பார்ப்புகள் இல்லாத ஆன்மிகத்தையும், சனி எதிர்பார்ப்புடன் கூடிய ஆன்மிகத்தையும் தருவார்.

அது என்ன எதிர்பார்ப்புடன் கூடிய ஆன்மிகம் மற்றும் எதிர்பார்ப்புகள் இல்லாத ஆன்மிகம்? ஆன்மிகம் என்பதே எதிலும் பற்றற்ற ஒரு சுயநலமில்லாத நிலைதானே?

ஒருவரின் ஜாதகத்தில் குரு வலுப் பெற்று லக்னம், ராசி. ஐந்து, ஒன்பதாமிடங்களில் தொடர்பு கொள்வாரெனில் அவர் பிரம்மத்தை எவ்வித சுய லாபமுமின்றி வேண்டுபவராக இருப்பார்.

சனியை விட குரு அனைத்து நிலைகளிலும் வலுப் பெற்று இருந்தால் அவர் பரம்பொருளிடம் செய்யும் பிரார்த்தனைகளில், இந்த உலகமும் மக்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று, தனக்கென எதுவும் இல்லாமல் பொதுநலத்திற்காக வேண்டிக் கொள்பவராகவும், அதன்படி நடக்கக் கூடியவராகவும் இருப்பார். இது துறவு எனப்படும் ஞான நிலை.

சனி சூட்சும வலுப் பெற்று குருவை விட மேலான வலிமையில் இருந்தால் அந்த ஜாதகர் பிரம்மத்தை வேண்டுகையில் “பரம்பொருளே எனக்கு சித்து நிலைகளைக் கொடு. அவற்றின் மூலம் நான் இந்த உலகத்தில் நல்லவைகளை வாழ வைக்கிறேன்” என்று வேண்டுபவராகவும், ஆன்மிகத்தால் லாபமடைபவராகவும் இருப்பார். இது சித்து எனப்படும் சித்த நிலை.

குரு வலுப் பெற்றால் அவர் எதிர்பார்ப்பற்ற துறவியாகவும், குருவை விட சனி வலுப் பெற்றால் அவர் எதிர்பார்ப்பும் தேடலும் கூடிய குண்டலினி சக்தி, கூடு விட்டு கூடு பாயும் சித்து நிலைகள், சென்ற பிறவியில் நான் என்னவாக இருந்தேன் அடுத்த பிறவியில் நான் என்னவாக இருப்பேன் என்ற தேடுதல் கேள்விகள் உள்ள சித்தராகவும் இருப்பார். இந்த இரு நிலைகளையும் இணைக்கும் பாலம் போல கேது செயல்படுவார்.

வேத ஜோதிடத்தில் குரு பணத்தையும், குழந்தைகளையும் தருபவர் என்ற அர்த்தத்தில் தன காரகன், புத்திரக் காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். என்னுடைய சாயாக்கிரகங்களின் சூட்சும நிலைகள் கட்டுரைகளில் ஒருமுறை “தனி ஒரு கிரகம் எந்த ஒரு சம்பவத்தையோ அல்லது ஒரு செயலையோ செய்ய முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது கிரகங்களின் சேர்க்கையால் செய்யப்படுவது. தனி ஒரு கிரகத்தால் அல்ல. இதில் ஒரு விசித்திரமாக பணத்தைத் தருபவர் குரு. ஆனால் அதைச் செலவு செய்து அதன்மூலம் கிடைக்கும் விளைவுகள் மற்றும் இன்பங்களுக்கு சொந்தக்காரர் குருவின் பரம விரோதியான சுக்கிரன். அதேபோல குருவின் குழந்தை பாக்யம் தரப்படுவது சுக்கிரனின் காமத்தின் மூலமாக...!

இது போன்ற அமைப்புகளே ஜோதிடத்தின் மிக நுண்ணிய முரண்பட்ட சில நிலைகளையும், வாழ்க்கையே முரண்களின் மேல்தான் நமக்கு அமைத்துத் தரப்படுகிறது என்பதையும் உணர வைக்கும். இதைப் புரிந்து கொண்டவர்கள் மேலானவர்கள்.

குருவும், சுக்கிரனும் பூமிக்கு எப்போதும் எதிரெதிர் நிலைகளில் இருப்பவர்கள் என்பதனாலேயே நமது ஞானிகளால் எதிர் நிலையில் உள்ளவர்கள் என்று நமக்கு தெளிவாகப் புரிய வைக்க தேவகுரு, அசுரகுரு என்று எதிரிகளாகச் சொல்லப்பட்டார்கள்.

வானில் பூமிக்கும், சூரியனுக்குமான உள்வட்டத்தில் இருப்பவர் சுக்கிரன். அதற்கு நேரெதிரே உள்ள வெளி வட்டத்தில் பூமிக்கு வெளிப் புறத்தில் அமைந்திருப்பவர் குரு. இந்த எதிர் நிலைகளே இவர்கள் எதிரிகளாக உருவகப்படுத்தப் பட்டதில் உள்ள வானியல் உண்மையை நமக்கு உணர்த்தும்.

சிற்றின்பம்-பேரின்பம், இவற்றில் மறைந்துள்ள சூட்சும விளக்கம் என்ன?

இன்பத்தை இருவகைப்படுத்தி சொல்லப்படும் இந்த சிற்றின்பம், பேரின்பம் இவற்றின் உண்மையான அர்த்தம் என்ன?

உலகின் உன்னத மதமான நமது மேலான இந்து மதம் இல்லற இன்பத்தின் மூலமான பரம்பொருளைக் காணுதலையும், இல்லறம் காணா நேரடி துறவறத்தின் மூலமாக பரம்பொருளைக் காண்பதையும் அனுமதிக்கிறது. இதில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் முதல்வகையையும், காஞ்சிக் கடவுள் மகா பெரியவர் இரண்டாம் வகையையும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இருவரின் அவதார ஜாதகத்திலும் மீனத்தில் சுக்கிரன் உச்சமாக இருப்பார். ஆனால் மகா பெரியவருக்கு உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்து, போக ஸ்தானாதிபதி சந்திரன் நீசம் பெற்றதால் நான் ஒருமுறை அந்த தெய்வத்தைப் பற்றி குறிப்பிட்டதைப் போல “காமாட்சி என்ற பெயரைத் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாதவர்.”

பகவான் ராமகிருஷ்ணர் இல்லறம் கண்டவர். அன்னையை தேவியின் வடிவாக தரிசித்தவர். அவருடைய சில ஆத்ம பரிசோதனைகள் நாம் அறிந்தவை. அவருக்கு சுக்கிரன் உச்சம் என்றாலும், அம்சத்தில் நீசம் என்பதால் சுக்கிரன் முற்றிலும் வலுவிழக்கத்தான் செய்தார். என்ன.. உச்சமாகிப் பின் வலுவிழந்தார்.

அசுர குருவான சுக்கிரன் தருவது சிற்றின்பம்.... தேவ குருவான குருபகவான் தருவது பேரின்பம் என்பதன் சூட்சும விளக்கம் என்னவென்றால்...

மனிதனுக்குக் கிடைக்கும் ஏராளமான இன்பங்களில் ஆண்-பெண் உறவின்போது ஏற்படும் உச்ச நிலையில், சில நொடிகள் உண்டாகும் எண்ணங்களற்ற இன்பமான பரவச நிலையே முதன்மை இன்பமாகக் கருதப்படுகிறது. இந்த சுகத்திற்காகவே உலகில் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன. உலகை மாற்றிய திருப்புமுனை சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

இந்த சில நொடி இன்பத்தை - அதாவது சிற்றின்பத்தை - காமத்தின் மூலமாகத் தருபவர் சுக்கிரன். சுக்கிரன் தரும் இந்த இன்பத்திற்கு ஆணிற்குப் பெண்ணும் பெண்ணிற்கு ஆணும் எனத் துணை வேண்டும்.

ஆனால் இதே இன்பத்தை ஒரு மனிதன் பெண்ணின் துணையின்றி தவம், தியானம், குண்டலினி சக்தி போன்ற மெய்ஞான அனுபவங்களின் மூலமாக, தான் நினைக்கும் போது தனக்குள்ளே பெற்று நீண்டநேரம் அனுபவிப்பது பேரின்பம்.

ஞானிகள் தன்னிலை மறந்த பரவச நிலையில் பரம்பொருளுடன் ஒன்றும்போது இதையே அனுபவிக்கிறார்கள். இதை அருளுபவர் தேவகுருவான குரு. எனவேதான் சுக்கிர பலம் ஒரு இல்லறவாசிக்கே தேவை என்றும், துறவறம் காண்போருக்கு குருவின் பலம் தேவை என்றும் சொல்லப்பட்டது.

( ஜூன் 11 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

9 comments :

  1. சனி குரு ஒருவர்க்கு ஒருவர் 1-7ல் அமர்ந்தால் இருவருடைய காரகத்துவங்களும் பாதிக்குமா??

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Dear Guruji
    I have got more experience in your each and every article.Through this article i knew the knowledge in jubitar in different angle .Thank you lot.

    ReplyDelete
  4. Dear Guruji
    I have got more experience in your each and every article.Through this article i knew the knowledge in jubitar in different angle .Thank you lot.

    ReplyDelete
  5. Dear Guruji
    I have got more experience in your each and every article.Through this article i knew the knowledge in jubitar in different angle .Thank you lot.

    ReplyDelete
  6. எனக்குபிடித்து
    குரு சுஙக்ரன். 7சேர்க்கை

    ReplyDelete