Friday, July 17, 2015

புதன் தசை என்ன செய்யும்? C - 020 - Puthan thasai Enna Seiyum?


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

புதனுக்கு சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள். சனி நட்புத் தன்மை கொண்டவர். இதில் சூரியனை முதன்மை நண்பராக புதன் கருதுவார். சுக்கிரன் இரண்டாம் நிலை நண்பர். சுக்கிரன், சனியின் ராசிகளான ரிஷபம், துலாம், மகரம், கும்பம் அவருக்கு நட்பு வீடுகள். இந்த வீடுகளில் இருக்கும் புதன் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.

அது போலவே சூரியனின் வீடான சிம்மம் அவருக்கு அதி நட்பு வீடாக அமையும். 6.8.12 போன்ற மறைவு ஸ்தானமாக சிம்மம் அமைந்தாலும் சிம்மத்தில் இருக்கும் புதன் பலவீனம் ஆவதில்லை.

புதனுக்கு பகைக் கிரகம் சந்திரன் மட்டுமே என்பதை சென்ற அத்தியாயங்களில் விளக்கியிருந்தேன். அது ஏன் என்ற காரணத்தையும் சொல்லியிருந்தேன். மீதமுள்ள செவ்வாய், குரு, ராகு, கேது ஆகியோர் புதனுக்கு நட்போ, பகையோ இல்லாத சம நிலையில் செயல்படுவார்கள்.

மற்ற கிரகங்களுக்கு இல்லாத உச்சம், ஆட்சி, மூலத் திரிகோணம் எனும் நிலை புதனுக்கு மட்டும் ஒரே ராசியில் அமைவதால் கன்னியின் முதல் 10 டிகிரி வரை ஆட்சி பலமும், அடுத்த ஐந்து டிகிரி வரை மூலத் திரிகோண வலுவும். இறுதிப் பகுதியான மீதி 15 டிகிரி வரை வலுவான உச்ச பலமும் அடைவார்.

இன்னொரு தனித்த நிலையாக புதனின் மிதுன லக்னத்திற்கு நவ கிரகங்களில் ராகு மட்டுமே யோகராக செயல்படுவார். ஏனெனில் மிதுனத்தின் லக்னாதிபதி புதன் சில நிலைகளில் கேந்திராதிபத்திய தோஷம் பெற்று நன்மைகளைத் தரும் சக்தியை இழப்பார்.

பாக்யாதிபதியான ஒன்பதிற்குடைய சனி அஷ்டமாதிபதி எனும் நிலை பெற்று கெடுபலன்களையும் செய்வார். ஐந்திற்குடைய இன்னொரு யோகரான சுக்கிரனும் பனிரெண்டாம் வீட்டிற்கும் அதிபதி என்ற நிலையில் யோகர் நிலையில் இருந்து கீழிறங்கி சுபர் என்ற நிலை மட்டும் பெறுவார்.

எனவே புதனைப் பற்றிய புரிதல்கள் உள்ள ராகு மட்டுமே மிதுனத்திற்கு யோகர் எனும் அந்தஸ்தை அடைவார் என்பதால் மிதுன லக்னத்தவர்களுக்கு ராகு எந்த நிலையில் இருந்தாலும் பெரிய கெடுதல்களைச் செய்வதில்லை.

ராகு நன்மைகளைச் செய்யும் இடமாக நமது மூல நூல்களில் கூறப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் தனித்தோ அல்லது வேறு நல்ல இடங்களில் சுபர்களுடன் இணைந்தோ இருக்கும் நிலையில் மிதுன லக்னத்திற்கு மிகப் பெரும் யோகங்களைச் செய்வார்.

மிகக் கடுமையான சூழலாக ஆறு, எட்டிற்குடைய செவ்வாய், சனியின் தொடர்புகளைப் பெற்றோ, சனியின் வீட்டில் அமர்ந்து செவ்வாயுடன் இணைந்தோ, செவ்வாயின் வீட்டில் அமர்ந்து சனியுடன் இணைந்தோ இருந்தால் மட்டுமே ராகு மிதுனத்திற்கு தன்னுடைய இயல்பு நிலை மாறி கெடுதல்களைச் செய்வார்.

இன்னும் ஒரு சூட்சுமமாக நீச நிலையில் மீனத்தில் புதன் அமர்ந்திருக்கும் போது முதல் பதினைந்து பாகைகள் மட்டுமே அதி நீசம் எனும் நிலை பெறுவார். அதிலும் பதினைந்தாவது பாகையில் முற்றிலுமாக வலிமை இழப்பார். மீன ராசியின் பதினைந்தாவது டிகிரியை தாண்டியதும் நீச நிலை மாறி இயல்பு நிலை பெறத் தொடங்குவார்.

ஒரு கிரகம் மேம்போக்காக நீசத்தில் இருப்பதாகத் தெரிந்தாலும் பரம நீசப் பாகையைத் தாண்டினால் நீசம் எனும் தோஷம் நீங்கி, உச்சத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கி விடும். இந்த நிலையில் அந்தக் கிரகத்தை வலுவிழந்த கிரகமாக கருத முடியாது.

இது போன்ற நிலையில் அந்தக் கிரகம் முற்றிலும் நீச வலுவில் இருக்காது. தனது காரகத்துவங்களைக் கொடுக்கும் தகுதி அந்தக் கிரகத்திற்கு இருக்கும். உச்ச நிலையிலும் அப்படியே. அதி உச்ச பாகையைத் தாண்டும் கிரகம் உச்ச வலு நீங்கும். அப்போது ஒரு உச்சனுக்குரிய முழுப் பலன்களை அந்தக் கிரகம் செய்யாது.

நரம்புகளுக்கு புதனே அதிபதி என்பதால் ஒருவருக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு வியாதிகளை வலுவற்ற நிலையில் இருக்கும் புதன் தருவார். மிக அரிதாக சந்திரனும் முழுக்கக் கெட்டு புதனும் வலுவிழக்கும் நிலையில் ஜாதகர் மன நோயாளியாக இருக்க கூடும்.

தசா,புக்தி வருட அமைப்பில் புதனுக்கு சுக்கிரன், சனி, ராகு இவர்களுக்கு அடுத்த நிலையாக பதினேழு வருடங்கள் மகரிஷி பராசரரால் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு சுபவலுப் பெற்று புதன் தசை நடத்தும் நிலையில் தன்னுடைய சொந்த அறிவால் முன்னேறும் நிலையைத் தருவார்.

எப்பொழுதுமே சந்திர திசையில் புதன் புக்தியும், புதன் தசையில் சந்திர புக்தியும் நன்மைகளைச் செய்வதில்லை. இருவரில் ஒருவர் யோகராக இருந்தாலும் இந்த நிலைதான். அதேநேரத்தில் புதனை யோகராகக் கொண்ட மகரம், கும்பம், ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி ஆகிய லக்னங்களுக்கு புதன் தசையில், சுக்கிர புக்தியும் சுக்கிர தசையில் புதன் புக்தியும் பெரிய நன்மைகளைச் செய்யும்.

புதனைப் பாபராகக் கொண்ட கடகம், விருச்சிகம், தனுசு, மீனம், மேஷம் ஆகிய ஐந்து லக்னங்களுக்கும் புதன் தசையில், சுக்கிர புக்தியும், சுக்கிர தசையில், புதன் புக்தியும் நன்மைகளைத் தராது. மேலும் புதனை யோகராகக் கொண்டவர்களுக்கு புதன்தசையில் சனி, ராகு புக்திகளும் தீமைகளைச் செய்வதில்லை.

வலுப் பெற்ற புதன் ஒருவருக்கு தனது தசையில் நல்ல கல்வி, திறமையான பேச்சு, உண்மை, மிகப்பெரிய புத்திசாலித்தனம், ஆராய்ச்சி, நேர்மையான தரகு, கவிதை, புத்தகம், ஸ்டேஷனரி அயிட்டங்கள், பிரிண்டிங் பிரஸ், நல்ல ஆலோசனைகளைச் சொல்லுதல், உள்அலங்காரம், தகவல் தொழில்நுட்பத் துறை, அஞ்சல், கணிப்பொறி, மென்பொருள், வானவியல், எந்தத் துறையிலும் நிபுணத்துவம், ஆடிட்டர், நகைச்சுவை நடிப்பு, விஞ்ஞானம், தர்க்கவாதம், நம்பிக்கையான உதவியாளர், தலைமைப் பதவி, சாதுர்யம், சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ளுதல், ஓவியம் நுண்கலைகள், வாகனம், கணிதத்தில் ஆர்வம், எழுத்தில் சாதிக்கும் திறன், பச்சைநிறப் பொருட்களால் லாபம், சிற்ப வேலைகள், வியாபாரத்தில் திறமை, ஜோதிடம், வடக்குத் திசை செல்லுதல், வடக்குத் திசையால் லாபம், தாய்வழிப் பாட்டனின் சொத்து, வெண்கலத்தால் நன்மை, மருத்துவம் படிக்கும் வாய்ப்பு, பணிவு, நகைச்சுவை உணர்வு, எந்த ஒரு நிலையிலும் பயப்படாமல் இருத்தல், பெருமாளின் மேல் ஈடுபாடு, தெலுங்கு மொழி பகுதிகளில் பிழைக்கும் நிலை, பறவைகளை விற்பனை செய்தல், நடுநிலைமை, கிராமத்தில் பிழைத்தல், சாஸ்திர ஈடுபாடு, மரகதப் பச்சை, குதிரைகள், இலக்கணம், தாய்வழி மாமா இவற்றின் மூலம் ஒரு ஜாதகருக்கு நன்மை தருவார்.

அதேநேரத்தில் எவ்வித நல்ல பலன்களையும் தர முடியாமல் வலுவற்ற நிலையில் இருக்கும் பொழுது மேலே சொன்ன விஷயங்களில் புதன் தீமைகளைச் செய்வார். தன் நண்பர்களான சூரியன், சுக்கிரனுடன் இணைந்திருக்கும் நிலையில், தனது தசையில் தன்னுடைய சுப காரகத்துவங்களை அபரிமிதமாகத் தருவார்.

எதிர்க் கிரகங்களான குரு, செவ்வாய், சந்திரன் ஆகியோருடன் இணையும் போது புதன் கலப்புப் பலன்களைச் செய்வார். சனி, ராகுவுடன் சேரும் போது இணையும் வீட்டையும், தூரத்தையும் பொருத்து அவரது பலன்கள் மாறுபடும். கேதுவுடன் இணைவது அவரை பலவீனப்படுத்துவது இல்லை.

புதனின் முறையான பரிகாரங்கள்

ஜாதகத்தில் புதன் வலிமை இல்லை என்றால் ஜென்ம நட்சத்திரம் அன்று மாயவரத்திற்கு அருகே உள்ள திருவெண்காடு திருத்தலம் சென்று புதனை வழிபட்டு அவரது அருளைப் பெருக்கிக் கொள்ளலாம். இந்தத் திருத்தலத்தில் விசேஷமாக சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்திர தீர்த்தம் என மூன்று திருக்குளங்கள் இருக்கின்றன. அவற்றில் குளித்து முதலில் மூலவரை தரிசித்து அதன் பின்பு புதனை வழிபட வேண்டும்.

சென்னையில் இருப்பவர்கள் சேக்கிழார் பெருமானால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட போரூருக்கும், குன்றத்தூருக்கும் இடையிலுள்ள கோவூரில் அமைந்திருக்கும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு புதன்கிழமை தோறும் சென்று ஒரு நாழிகை நேரம் எனப்படும் 24 நிமிடங்கள் கோவிலின் உள்ளே இருப்பது சிறப்பு. மிகவும் சக்தி வாய்ந்த இத்திருத்தலம் வட திருவெண்காடு எனப்படுகிறது.

புதனின் வாகனம் குதிரை என்பதால் ஒரு புதன் கிழமையில் புதன் ஹோரை எனப்படும் மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் அல்லது இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள், ஒரு குதிரைக்கு அதற்கு என்ன உணவு பிடிக்கும் என்று அதன் மாவுத்தனிடம் முன்னதாக கேட்டுக் கொண்டு அந்த உணவை அதற்குத் தர வேண்டும்.

அதுபோலவே மரகதப் பச்சையை வெள்ளியில் பதித்து வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது புத பலத்தைப் பெருக்கும். புதன் நீசம் பெற்று மிகவும் வலுவிழந்து புதன் தசையோ, புக்தியோ நடப்பவர்கள் புதன் கிழமை தோறும் பச்சைப் பயிறை தலைக்கடியில் வைத்துப் படுப்பதும், புதன் கிழமை புதன் ஹோரையில் பச்சைப் பயிறை தானம் செய்வதும் சிறந்த பரிகாரங்கள்.

மதுரையம்பதியின் தாய் அன்னை மீனாட்சி பச்சை வடிவம் கொண்டு, பச்சைக் கிளியை கையில் ஏந்தி புதனின் மறு உருவமாக அருள் பாலிப்பதால் புதனை யோகராகக் கொண்டவர்கள் அவர் பலவீனமாக இருக்கும் நிலையில் புதன்கிழமை தோறும் அய்யன் சொக்கநாதன் ஆலயத்தில் அன்னையின் திருவடி காண்பதும், இயலாதவர்கள் வீட்டில் புதன்கிழமை தோறும் அன்னையின் திருவுருவப் படத்தை வைத்து வழிபடுவதன் மூலம் புதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அதிகப் படுத்திக் கொள்ளலாம்.

( ஜூன் 4 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

1 comment :

  1. அன்புடன் வணக்கம் அய்யா,
    புதனைப்பற்றி விரிவாகவும்,அதே நேரத்தில்
    தெளிவாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது.நன்றி அய்யா

    ReplyDelete