Monday, July 13, 2015

புதன் யாருக்கு நன்மை தருவார்?...C - 019 - Puthan Yarukku Nanmai Tharuvaar?


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

ராகு,கேதுக்களைத் தவிர்த்து சூரியனுக்கு அருகில் செல்லும் அனைத்துக் கிரகங்களும் தனது சுய இயல்பையும், வலிமையையும் இழக்கும் நிலையில் புதனுக்கு மட்டுமே அந்த தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் உத்தர காலாம்ருதத்தில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அதேநேரத்தில் புதன், ராகுவுடன் மிக நெருக்கமாக எட்டு டிகிரிக்குள் இணைந்தால் தன் பலத்தை முற்றிலுமாக இழப்பார். ஆனால் ராகுவிடமிருந்து பதினைந்து டிகிரிக்கு மேல் விலகியிருந்தால் இந்த நிலை இருக்காது. மேலும் பதினைந்து டிகிரிகளுக்கு மேல் ராகுவிடமிருந்து, புதன் விலகியிருந்து அந்த லக்னத்திற்கு புதன் யோகராகவும் அமைந்திருந்தால் ராகு தசை நடக்கும் போது ஜாதகருக்கு நல்ல பலன்கள் நடைபெறும்.

இன்னொரு முக்கிய சூட்சுமமாக, சந்திரனைக் கடும் எதிரியாக புதன் நினைப்பதால், கடகத்தில் இருக்கும் புதன் தன் சுயத் தன்மையை இழந்து தன் இயல்புகளைச் செய்யமாட்டார். கடக புதன் ஒருவரை எதிலும் உயர் நிலையை எட்ட விடுவதில்லை. இங்கிருக்கும் புதனால் இருக்கும் துறையில் ஒருவர் முழுமைத்துவம் அடைவது கடினம். அதேநேரத்தில் எல்லாம் தெரிந்தவர் போன்ற தோற்றம் இருக்கும்.

ஆட்சி, உச்சம், நீசபங்கம், நட்பு போன்ற வலிமையான நிலைகளில் சந்திர கேந்திரங்களில் இருக்கும் புதன் ஒருவருக்கு ஜோதிட, வானவியல் மற்றும் கணினித்துறை அறிவுகளைத் தருவார். அவற்றில் முழுமை பெறவும் வைப்பார்,

தனித் தனியாக அனைத்து லக்னங்களிலும் பிறந்தவர்களுக்கு புதன் செய்யும் பலன்களைப் பார்க்கப் போவோமேயானால் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் மூன்று, ஆறுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி என்பதால் மேஷத்திற்கு இவர் வலுப் பெற்று தசை நடத்துவது நன்மைகளைச் செய்யாது.

லக்னாதிபதி செவ்வாய் வலுவிழந்து ஆறாமிடத்தில் புதன் உச்சம் பெற்று தசை நடத்தினால், தன் தசையில் ஜாதகரை கடுமையான கடன், நோய், எதிரித் தொல்லைகளுக்கு உள்ளாக்குவார்.

மேஷத்தவர்களுக்கு புதன் தசை வருவது சரியான யோக அமைப்பு அல்ல. இந்த லக்னத்திற்கு அவர் கெடுதல்களைச் செய்யாமல் நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில் பத்து, பதினொன்றாமிடங்களில் நட்பு வலு மட்டுமே பெற்றிருக்க வேண்டும். பதினொன்றில் இருப்பது சிறப்பு.

ரிஷபத்திற்கு புதன் மட்டுமே சுபராகவும், யோகராகவும் அமைவார். இந்த லக்னத்தின் அதிபதியான சுக்கிரனுக்கு அவரது இன்னொரு வீடான துலாமே மூலத் திரிகோணம் மற்றும் ஆறாம் வீடாக அமைவதால், சுக்கிரன் ஆறாமிடத்திற்கு ஆறில் மறைந்து உச்சமாகவோ, எட்டில் மறைந்து லக்னத்தில் ஆட்சியாகவோ இருக்கும் நிலையில் மட்டுமே யோகம் செய்வார். இல்லையெனில் சுக்கிரதசையில் ஆறாமிடத்துப் பலன்களே அதிகம் நடக்கும்.

ரிஷபத்தின் இன்னொரு யோகாதிபதியான சனியும் இந்த லக்னத்திற்கு பாதகாதிபத்தியம் பெறும் நிலையில் அவரும் முழுமையான யோகம் தரமாட்டார். புதன் மட்டுமே இரண்டு, ஐந்தாமிடங்களில் சுப வலுப்பெற்று வக்ரமடையாமல் இருக்கும் நிலையில் மிகப்பெரிய யோகங்களைச் செய்வார். லக்னத்திலும், ஒன்பது, பத்தாமிடங்களிலும் இருக்கும் புதனாலும் ஜாதகருக்கு நன்மைகள் உண்டு.

மிதுனத்திற்கு புதன் லக்னாதிபதி எனும் நிலை பெற்று சகல பாக்யங்களையும் தரும் அமைப்பினைப் பெறுகிறார். மிதுனத்தில் ஆட்சி பெற்றோ, கன்னியில் உச்சம் பெற்றோ, துலாம், கும்பம் போன்ற இடங்களில் நட்புடன் திரிகோண வலுப் பெற்றோ இருக்கும் நிலையில் ஜாதகருக்கு அனைத்து இன்பங்களையும் அள்ளித் தருவார். மீனத்தில் முறையான நீசபங்கம் பெற்றிருந்தால் முற்பகுதி வாழ்வை ஒன்றுமில்லாததாக்கி, பிற்பகுதியில் வாழ்வில் உச்ச நிலைக்கு கொண்டு செல்வார்.

பனிரெண்டாமிடமான ரிஷபத்தில் இருந்தால் கூட திக்பலத்திற்கு அருகில் இருப்பதால் கெடுபலன்களை செய்யாமல் தனது தசையில் ஜாதகரை வெளியிடங்களுக்கு அனுப்பி வைத்து பொருள் தேட வைப்பார். ஆனால் நான்காமிடமான கன்னியில் எவருடனும் சேராமல் தனித்து உச்சம் பெற்றிருந்தால் கேந்திராதிபத்திய தோஷம் பெற்று கெடுபலன்களைச் செய்வார்.

கடகத்திற்கு புதன் மூன்று, பனிரெண்டிற்குடைய ஆதிபத்திய விஷேசமில்லாத பாவி என்பதால் சிக்கலான அமைப்பில் இருந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்வார். இந்த லக்னத்திற்கு இவர் ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்புகளைத் தராது. கடகத்திற்கு அவரது தசையில் பெரும் நன்மைகளைச் செய்ய வேண்டும் என்றால் பத்து அல்லது பதினொராமிடங்களில் மட்டுமே இருக்க வேண்டும்.

சிம்ம லக்னத்திற்கு இரண்டு, பதினொன்றுக்குடையவர் புதன். அதிலும் சிம்ம நாயகன் சூரியனை தனது முதல் நண்பராக கருதுபவர் எனவே ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பொருளாதார விஷயத்தில் மிகப் பெரிய ஏற்றங்களைத் தருவார்.

அதிலும் லக்னத்தில் அதி நட்பு மற்றும் திக்பலமுடன் இருப்பது மிகவும் சிறப்பான நிலை. லக்னாதிபதியின் உத்திர நட்சத்திர சாரத்தில் இருந்தால் தனது தசையில் பெரிய நன்மைகளைச் செய்வார். மூன்று, பத்தாமிடங்களும் சிம்மத்திற்கு அவர் நன்மை செய்யும் இடங்கள்தான்.

கன்னிக்கு அவர் லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதியாகி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் செய்யக் கடமைப்பட்டவர் என்பதால் லக்னத்தில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், திக்பலம் ஆகியவற்றைப் பெற்று வக்ரமின்றி அமர்வது ஒருவரை சிறப்பான நிலைக்கு கொண்டு செல்லும்.

அம்சத்தில் அவர் நீசம் பெறாமல் இருக்க வேண்டியது முக்கியம். ஐந்து, ஒன்பதாமிடங்களில் நட்பு நிலை பெற்றும், பத்தாமிடத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெறாமல் இருப்பதும் நன்மை தரும்.

துலாமிற்கு அவர் ஒன்பது, பனிரெண்டிற்குடைய யோகர் ஆவார். மேற்கண்ட இடங்களில் வலிமை பெற்றிருக்கும் நிலைகளில் அவரால் ஜாதகருக்கு நல்ல யோகங்கள் உண்டு. பனிரெண்டில் வலுப்பெற்றால் வெளிநாடு சம்பந்தப்பட்ட நன்மைகளைச் செய்வார். லக்னத்திலும், நான்கு, ஐந்தாமிடங்களிலும் நட்பு பலம் பெற்றிருப்பது சிறப்பு.

விருச்சிகத்திற்கு எட்டு, பதினொன்றுக்குடைய கொடிய பாபி இவர். எட்டாமிடத்தில் சுபத்துவம் பெற்று சுப நிலையில் இருந்தால் ஜாதகரை வெளிநாட்டுக்கு அனுப்பி சம்பாதிக்க வைப்பார். அப்போது கூட முழுமையான யோகத்தைச் செய்ய மாட்டார்.

என்னைப் பொறுத்தவரையில் புதன் தசை வராத விருச்சிகத்தினர் யோகசாலிகள். பதினொன்றாமிடத்தில் பலம் பெற்றிருந்தால் ஜாதகர் புத்திசாலியாகவும், புதன் சம்பந்தப்பட்ட கணினி போன்ற துறைகளிலிலும் இருப்பார். மூன்று, பத்தாமிடங்களில் நட்பு வலுவில் இருக்கையில் கெடுதல்களைச் செய்யமாட்டார்.

தனுசு லக்னத்திற்கு ஏழு, பத்திற்குடைய மாரகாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி எனும் நிலை பெறுவார். இந்த லக்னத்திற்கு அவர் ஆட்சி, உச்சம் பெறாமல் இருப்பது நல்லது. மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் சுப வலுப் பெற்றிருக்கும் நிலைகளில் தன் தசையில் யோக அமைப்புகளைச் செய்வார்.

மகரத்திற்கு ஆறு, ஒன்பதிற்குடைய இரண்டு எதிர் நிலைகளைப் பெறுவார் என்றாலும் ஒன்பதாம் பாவத்தின் பாக்யாதித்துவமே மேலோங்கி இருக்கும் என்பதால் மகரத்திற்கு புதன் தசையில் பரிபூரண பாக்யாதிபதியாகவே அவர் செயல்படுவார்.

ஆனால் பனிரெண்டில் மறைந்து ஆறாமிடத்தைப் பார்த்து வலுப் படுத்தி விட்டால் பாக்யாதிபத்தியம் மறைந்து ஆறாமிடத்துப் பலம் ஓங்கி தன் தசா,புக்திகளில் ஜாதகரை கடுமையான கடன், நோய், எதிரி பிரச்னைகளில் சிக்க வைத்து வேடிக்கை பார்ப்பார்.

இந்த லக்னத்திற்கு புதன் ஆறாமிடத்தில் ஆட்சி பெறுவதோ, சம்பந்தப்படுவதோ, பார்ப்பதோ கூடாது. லக்னம், இரண்டு, ஐந்து, பத்தாமிடங்களில் நட்புநிலை பெற்று தசை நடத்தும்போது யோகங்களைச் செய்வார்.

கும்பத்திற்கு ஐந்து, எட்டிற்குடையவர் என்பதால் ஐந்தில் ஆட்சி பெற்று தசை நடத்தினால் முழுக்க நன்மைகளையும், எட்டில் உச்சம் பெற்று தசை நடத்தினால் தானே குழி வெட்டி உள்ளே படுத்துக் கொள்வது போல தன்னைதானே கெடுத்துக் கொள்ளும் செயல்களைச் செய்வார். எட்டில் சுபத்துவம் பெற்றால் வெளிநாட்டு யோகம் உண்டு. லக்னம், நான்கு, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களில் நன்மைகளைச் செய்வார்.

மீனத்திற்கு, தனுசு லக்னத்தைப் போலவே மாரகாதிபதி, பாதகாதிபதி, கேந்திராதிபதி நிலைகளை பெறுவார் என்பதால் இவர் ஆட்சி, உச்சம் பெறுவது நன்மைகளைத் தராது. பதிலாக மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் நட்பு நிலை பெற்று தசை நடத்தினால் யோகங்களைச் செய்வார்.

புதனைக் குரு பார்க்கலாமா?

புதன் ஒரு தனித்துவம் உள்ள கிரகம் என்பதால் சில நிலைகளில் அவரைக் குரு பார்ப்பது சரியான நிலை அல்ல. “குரு பார்க்கக் கோடி நன்மை” என்ற விதி எல்லா நிலைகளிலும் பொருந்தாது.

ஒரு விஷயத்தில் கலப்படமற்ற அறிவுத் திறனும், நிபுணத்துவமும், முழுமையான ஞானமும் இருக்க வேண்டுமெனில் புதனைக் குரு பார்க்கக் கூடாது.

புதன் ஆழ்ந்த சிந்தனைகளுக்கும், தெளிவான ஞானத்திற்கும் காரணமானவர் என்பதால் அவருக்கு எதிர்த் தன்மையுள்ள கிரகமான குருவின் பார்வையைப் புதன் பெறுவது சரியான நிலையாகாது.

புதன் மட்டுமே ஜோதிட அறிவிற்கு ஆதாரமான கிரகமாவார். சிலர் குருவையும் ஜோதிடத்திற்கு காரணமானவர் என்று கூறுவது தவறு. குரு சாஸ்திர அறிவிற்கு உரியவர். ஆன்மிகத்திற்கு மட்டுமே குரு காரணமாவார்.

ஜோதிடமும், ஆன்மிகமும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு நிலையாகக் கருதப்பட்ட போது, இந்தக் காரகத்துவங்கள் குருவிற்கும், புதனுக்கும் இணைத்துச் சொல்லப்பட்டன. அதாவது ஆலய அர்ச்சகரே, ஜோதிடராக இருந்த காலகட்டத்தில் இது சரி.

ஆனால் தற்போது ஜோதிடம் ஒரு விஞ்ஞானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஆன்மிகப் பணிகளில் தொடர்பு இல்லாமல் ஜோதிடத்தில் மட்டுமே ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் புதன் மட்டுமே முழுமையான ஜோதிட அறிவிற்கு காரணமாக அமைவார்.

புதனுடன் குரு சம்பந்தப்படும் நிலையில் ஒருவருக்கு முழுமையான தனித்துவமான ஜோதிட சூட்சுமங்கள் கை வராது. அதிலும் புதனை விட குரு வலுப் பெற்று புதனுடன் தொடர்பு கொண்டால் அவர் ஜோதிடத்தை ஓரளவுக்கு மட்டுமே தெரிந்து கொண்டு, முழுக்க முழுக்க ஆன்மிகத்தின் துணையோடு முறையான ஜோதிட ரீதியிலான ஜாதக பலன்களை சொல்லாமல் அருள்வாக்குப் போல பலன்களைச் சொல்லி பரம்பொருளின் துணையுடன் அது பலிக்கவும் செய்யும் ஜோதிடராக இருப்பார்.

குரு வலுவிழந்த நிலையில் புதனைப் பார்த்தாலோ வேறுவகையில் தொடர்பு கொண்டாலோ நுனிப்புல் மேய்வதைப் போல ஜோதிடத்தை ஓரளவு தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்தவர் போல விதண்டாவாதமும், குதர்க்கமும் பேசும் ஜோதிடராக இருப்பார்.

இப்போது நான் சொல்லுவது குருவிற்கும், புதனிற்கும் உள்ள மிக நுண்ணிய வேறுபாடு என்பதால் ஒரு முழுமையான ஜோதிடருக்கு குருவின் கலப்பு இல்லாத புத பலம் அவசியம். குரு என்பது சாஸ்திர அறிவு, புதன் என்பது ஜோதிட அறிவு என்பதைத் தெளிவாகப் பிரித்து புரிந்து கொள்வது நல்லது.

( மே 28- 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது )

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

7 comments :

  1. மிதுன லக்னம் மற்றும் ராசிகாரர்களுக்கு 'புதன், குரு, சுக்கிரன்' மூவரும் 'கடகத்தில்' இருந்தால் அவர்களின் மரணம் நல்ல முறையில் இருக்குமா?

    குருஜி பதில் அளித்தால் நன்றாக இருக்கும்


    நன்றி
    சதீஷ்

    ReplyDelete
  2. கடகத்தில் இருக்கும் புதன் 'சந்திரனோடு' பரிவர்த்தனை நிலையில் இருந்தால் கூட யோகம் செய்யமாட்டாரா?

    நன்றி
    சதீஷ்

    ReplyDelete
    Replies
    1. சந்திரனோடு பரிவர்த்தனை பெறும் நிலையில் புதன் ஆட்சி பெற்றவராகிறார் அல்லவா? கண்டிப்பாக யோகம் செய்வார். சில விதிகளை எல்லா நிலைகளுக்கும் பொருத்திப் பாருங்கள். ஜோதிடம் கை வந்து விடும் .

      Delete
  3. பதில் அளித்த குருஜி அவர்களுக்கு என் நன்றிகள்

    சதீஷ்

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா,
    புதன் பகவானை பற்றிய தெளிவான பதிவு.
    புதன் பகவானை பற்றி விவரமாக அறிய தங்களது பதிவு உதவியது.நன்றி அயயா

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா,
    புதன் பகவானை பற்றிய தெளிவான பதிவு.
    புதன் பகவானை பற்றி விவரமாக அறிய தங்களது பதிவு உதவியது.நன்றி அயயா

    ReplyDelete
  6. சிம்மத்தில் இருந்து குரு, கும்ப புதனை பார்க்கிறார்...ஆனாலும் எனக்கு ஜோதிடம் வரும் என்று கூறினீர்களே விளக்குங்கள் அய்யா...

    ReplyDelete