Tuesday, May 5, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 36 (5.5.2015)


ஜி. ஆனந்த், தூத்துக்குடி - 2.

கேள்வி :

கே
செவ்
ராசி
சனி
ரா
சந்
சு,ல
சூ,பு
குரு

என் அப்பாவும் அம்மாவும் என்னையும் என் தம்பியையும் படிக்க வைக்கப் பட்ட கஷ்டத்தினை வார்த்தையால் சொல்ல முடியாது. வேலைக்குச் செல்லாமல் முழுமூச்சாக சென்னையில் தங்கி அரசு வேலைக்காக தயார் செய்து கொண்டு இருக்கிறேன். அப்பா டிரைவர் தொழில் செய்து மாதம் ஆறாயிரம் என் செலவுக்கு அனுப்பி வைக்கிறார். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எந்த ஆண்டு கிடைக்கும்?

பதில்:

துலாம் லக்னம் துலாம் ராசி லக்னத்தில் சுக். நான்கில் சனி ஒன்பதில் செவ் கேது பனிரெண்டில் சூரி புத குரு

லக்னாதிபதி சுக்கிரனும் ஐந்திற்குடைய சனியும் ஆட்சி பெற்று ஒன்பதுக்குடைய புதன் உச்சம் பெற்ற யோக ஜாதகம் உன்னுடையது. மேலும் அடுத்தடுத்து யோக தசைகளும் நடைபெற உள்ளன.

தற்போது உன்னுடைய துலாம்ராசிக்கு ஏழரைச்சனி நடைபெற்று வருவதே உனது தடைகளுக்குக் காரணம் அரசு வேலைக்குரிய கிரகம் சூரியன் ராசியில் பனிரெண்டில் மறைந்தாலும் அம்சத்தில் உச்சம் பெற்று சூரியனும் புதனும் ஒரே டிகிரியில் இணைந்துள்ளதால் நடைபெறும்.சனிதசை புதன் புக்தியில் அடுத்த ஆண்டில் உனக்கு அரசு வேலை கிடைக்கும்.

ஜெ. ராஜேந்திரன், சென்னை.

கேள்வி:

செவ்

சந்
ராசி
சூ,குரு
சு,கே
ரா
பு
சனி

காது கேட்புத்திறன் குறைவுடைய எனது மகள் திருமணம் தடங்கலாகிக் கொண்டே வருகிறது. மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதி குரு உச்சம் அடையக் கூடாது மற்றும் ஏழாமிடத்தில் வக்ரச்சனி இருப்பதால் காலம் கடந்துதான் திருமணம் நடக்கும் என்று இங்குள்ள ஜோதிடர் சொல்லுகிறார். என் பெண் திருமணம் எப்போது?

பதில்:

மிதுன லக்னம், மிதுன ராசி. இரண்டில் சூரி, சுக், குரு, கேது. மூன்றில் புதன், ஏழில் சனி, பதினொன்றில் செவ்.

பாதகாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் என்பதை விட ஏழாமிடத்தில் சுபர்பார்வை இல்லாத சனியும், எட்டில் இருக்கும் ராகுவுமே உங்கள் பெண்ணின் திருமணத்தை தடை செய்யும் அமைப்புக்கள். மேலும் மிதுன லக்னம், மிதுன ராசிக்கு குரு உச்சமாகக் கூடாதுதான். அதேநேரத்தில் குருதசையின் முற்பகுதியில் திருமணத்தைக் குரு கொடுத்தால்தான் அதை அவரே கெடுக்கவும் செய்வார். உங்கள் பெண்ணிற்கு ஏழில் அமர்ந்து சுக்கிரனின் சாரம் பெற்ற சனியே திருமணத்தைக் கொடுக்கும் அதிகாரம் பெற்ற கிரகம் என்பதால் சனி தனது சுயபுக்தியில் 2017-ல் திருமணத்தை அமைத்துத்தருவார்.

என். கவிதா, நாமக்கல்.

கேள்வி :

ராசி
ரா
சந்,சு
கே
சூ.பு
குரு
செவ்
சனி

தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மனதில் எப்போதும் தைரியம் இல்லாதது போல் இருப்பதால் மருத்துவம் பார்த்து வருகிறேன். எப்போது சரியாகும்? திருமணம் எப்போது?

பதில்:

விருச்சிக லக்னம், மகர ராசி. லக்னத்தில் சூரி, புதன். மூன்றில் சுக், கேது, பதினொன்றில் செவ், சனி. பனிரெண்டில் குரு.

லக்னமும், லக்னாதிபதியும் சுபத்துவம் பெறாமல் பாவத்துவம் பெற்று பலவீனமாகி ராசிக்கு பத்தில் குரு இருப்பதால் ஆசிரியர் பணி. தற்போது நோய் ஸ்தானமான ஆறாமிடத்தை பார்த்து வலுப்படுத்தும் குருவின் தசை நடக்கிறது எட்டிற்குடைய புதன் லக்னத்தில் அமர்ந்து லக்னத்தை சனி பார்த்து லக்னாதிபதி செவ்வாய், சனியுடன் இணைந்து ராசியும், ராகு, கேதுகளுடன் சம்பந்தப்பட்டு பலவீனப்பட்டதால் மருத்துவம் பார்க்கும் நிலைமை.

நோயைத் தீர்க்கும் ஆறாமிடத்திற்கு ஆறாமிடமான பதினொன்றில் இருக்கும் சனிதசையில் மருத்துவத்திற்கு தேவை இருக்காது. லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். குருதசை சந்திரபுக்தியில் 2016 பிற்பகுதியில் திருமணம் நடைபெறும்.

அறுபத்தி ஆறுவயதில் திருமணம் செய்யலாமா?

டி. கே. பழனிச்சாமி, பெருந்துறை.

கேள்வி :

ரா
சூ
செவ்
ராசி
சந்
பு,சு
சனி
குரு
கே

அறுபத்தி ஆறு வயதாகியும் திருமணம் ஆகவில்லை. தற்போது சனிதசை நடக்கிறது. சிலர் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். என்ன செய்யலாம் என்று ஆலோசனை சொல்லுங்கள்.

பதில்:

மேஷ லக்னம், மகர ராசி. லக்னத்தில் ராகு. ஐந்தில் சனி. ஏழில் கேது. ஒன்பதில் குரு. பத்தில் சந், புதன், சுக். பதினொன்றில் சூரி, செவ்.

அறுபத்தியாறு வயதில் திருமணம் செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? நம்முடைய கலாச்சாரத்தின்படி ஒரு ஆணையும், பெண்ணையும் இணைத்து வைப்பது சந்ததி விருத்திக்காகத்தான். ஒரு ஜாதகத்தின் திரிகோணமான ஐந்தாமிடத்தில் சுபக்கிரகங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று மூலநூல்கள் சொல்வதன் சூட்சுமம் என்னவெனில் முழுமையான பாபக்கிரகமான சனி அந்த இடத்தில் இருந்தால் தனது மூன்றாம் பார்வையால் மனைவி ஸ்தானமான ஏழாமிடத்தையும், தனது பத்தாம் பார்வையால் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தையும் பார்த்துக் கெடுப்பார் என்பதால்தான். இந்த அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது.

அதோடு லக்னாதிபதி வலுவிழந்தால் வாழ்க்கையின் அடிப்படை சுகம் கிடைக்காது. ஆகக்கூடி உங்கள் ஜாதகத்தின் ஐந்தாமிடத்து சனி மனைவி ஸ்தானத்தையும், குடும்ப ஸ்தானத்தையும், கெடுத்ததோடு மட்டுமல்லாமல் லக்னாதிபதி செவ்வாயையும் புத்திரஸ்தானாதிபதி சூரியனையும் பார்த்துப் பலவீனமாக்கினார். இந்த சனியையும் லக்னத்தையும் குரு பார்க்கிறாரே என்றாலும் நீசத்தின் முனையில் இருக்கும் குருவின் பார்வைக்கு வலு கிடையாது.

செவ்வாய் சூரியனுடன் நான்கு டிகிரிக்குள் இணைந்து மிகவும் பலவீனமாகி லக்னமும் ராகு அமர்ந்ததால் கெட்டது. ஆக கடுமையான புத்திர தோஷமும், தாரதோஷமும் ஏற்பட்டு தற்போது அதை ஏற்படுத்திய சனிதசையும் நடந்து அடுத்து மேஷ லக்னத்திற்கு பாவியான புதன்தசையும் வரப்போவதால் உங்களுக்கு திருமண அமைப்போ, குழந்தை பாக்கிய அமைப்போ இல்லை. எனவே வாழ்வின் இறுதிக் காலத்தை பரம்பொருளை நினைத்து தியானித்து வழிபட்டு அடுத்தமுறை பிறக்காத ஒரு நிலையை வேண்டிக் கொள்ளுங்கள். எல்லாம் அவன் செயல்.

விஜயா, சென்னை.

கேள்வி :

பு
செவ்
சுக்
சனி
சூ
சந்
ராசி
கே
ரா
குரு

கணவர் இறந்து மூன்று வருடம் ஆகிறது. எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன். என் மாமியார் வீட்டிலேயே குலதெய்வத்தை வணங்குவார்கள். நான் கணவர் இறந்தவுடன் சென்னைக்கு வேலைக்கு வந்துவிட்டேன். இங்கிருக்கும் முனீஸ்வரன் ஆலயத்தில் சென்று வழிபட்டு வரலாமா? சொந்தவீடு அமையுமா? பிள்ளைகள் கடைசிவரை என்னுடன் இருந்து எனக்கு நல்ல பெயர் வாங்கித் தருவார்களா?

பதில்:

விருச்சிக லக்னம், கும்ப ராசி. இரண்டில் குரு. மூன்றில் ராகு. நான்கில் சூரி. ஐந்தில் புதன். ஆறில் சுக், செவ். ஏழில் சனி.

ஏழில் சனி அமர்ந்து சனிதசையில் அஷ்டமாதிபதி நீசபங்க புதனின் புக்தியில் கணவனை இழந்த ஜாதகம். கடவுளைக் கும்பிடுவதற்கு யாரிடமும் கேட்கத் தேவையில்லையம்மா. எங்கிருந்தாலும் அவர் ஈஸ்வரன்தான். தாராளமாக சென்னையில் கும்பிடலாம். நான்காமிடத்தில் தர்மகர்மாதிபதிகள் அமர்ந்து சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து சனிதசை நடத்துவதால் வரும் சந்திரபுக்தியில் 2018ல் சொந்தவீடு அமையும். புத்திரகாரகன் குரு ஆட்சிபெற்று இருப்பதால் பிள்ளைகள் கடைசிவரை துணையாக இருப்பார்கள்.

எஸ். பழனிச்சாமி, ஈரோடு.

கேள்வி :

சனி
ரா
ராசி
சந்
கே
ல,பு
சூ
குரு
சுக்
செவ்

திருமணம் நடந்து மழலைச் செல்வம் கிடைத்து நான் மற்றவர்கள் முன்பு தலைநிமிர்ந்து வாழ்வேனா ?

பதில்:

விருச்சிக லக்னம், கடக ராசி. லக்னத்தில் சூரி, புதன். நான்கில் ராகு. ஆறில் சனி. பதினொன்றில் செவ். பனிரெண்டில் சுக், குரு.

நான் அடிக்கடி எழுதுவது போல சுக்கிரனும், குருவும் இணைந்திருந்தால் சுக்கிரன் தரும் தாம்பத்திய சுகத்தை குரு கொடுக்கவிடமாட்டார். குரு தரும் புத்திர சுகத்தை சுக்கிரன் தரவிடமாட்டார். உங்கள் ஜாகத்தில் குருவும், சுக்கிரனும் ஆறு டிகிரிக்குள் இணைந்தது மிகவும் பலவீனம். மேலும் இவர்களை நீச வக்ரம் பெற்ற சனி பார்த்ததும் குற்றம்.

எட்டுக்குடைய புதன் மனைவி ஸ்தானத்தைப் பார்த்து ராசிக்கு எட்டில் ராகு அமர்ந்து கடுமையான தாரதோஷமும், ஐந்தாமிடத்தை செவ்வாய் பார்த்து பனிரெண்டில் குருமறைந்து கடுமையான புத்திர தோஷமும் உண்டானதால் முறையான பரிகாரங்களை செய்யும் பட்சத்தில் நடக்கும் சுக்கிர தசையில் சுக்கிரனின் பார்வையைப் பெற்ற ராசிக்கு ஏழுக்கதிபதி சனியின் புக்தியில் திருமணம் நடக்கும்.

கே. கைலாஸ் – கே. காந்தாமணி, ஆவடி.

கேள்வி :

ல,சந்
செவ்
கே
ராசி
சுக்
பு,குரு
ரா
சூ,சனி

குருஜி அய்யா அவர்களுக்கு வயதான தாய், தகப்பனின் தாழ்மையான வணக்கம். மகனின் திருமணம் தடைப்படுவது மன வேதனையைத் தருகிறது. எழுபது வயது இதய நோயாளியான கணவரும் நானும் எங்கள் மகனுக்கு எப்போது அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்யப் போகிறோம் என்பதை தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

பதில்:

மிதுன லக்னம், மிதுன ராசி லக்னத்தில் செவ். இரண்டில் புதன், சுக், குரு. மூன்றில் சூரி, சனி, ராகு.

மேலே உள்ள ஈரோடு எஸ்.பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட பதில் உங்கள் மகனுக்கும் பொருந்தும். உங்கள் மகனுக்கு சுக்கிரனும், குருவும் ஒரே டிகிரியில் இணைந்து தாரதோஷமும் புத்திரதோஷமும் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நீங்கள் செய்த பரிகாரங்கள் பொதுவானவை. ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஶ்ரீகாளஹஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலையில் ருத்ராபிஷேகம் செய்வதும் திருவெண்காட்டில் ஜென்ம நட்சத்திரமன்று புத பகவானை வழிபட்டு அந்தத் திருக்கோவிலுக்குள் இரண்டரை மணி நேரம் இருப்பதும் ஒரு புதன் கிழமை மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் புதன் ஹோரையில் ஒரு குதிரைக்கு அதற்கு விருப்பமான உணவு உங்கள் மகன் கையால் அளிப்பதும் சென்னை கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் புதன்கிழமை தோறும் ஒரு நாழிகை உள்ளே இருப்பதும் முறையான பரிகாரங்கள்.

இதை முழுமையாகச் செய்யும் பட்சத்தில் நடக்கும் சனி தசை புதன் புக்தியில் சுக்கிர அந்திரத்தில் வரும் ஆவணி மாதத்தில் இருந்து தை மாதத்திற்குள் திருமணம் நடைபெறும்.

1 comment :

  1. எனக்கு அரசு வேலை கிடைக்குமா? Name : sathyaraj date of birth :2/11/1987 place of birth:Trichy

    ReplyDelete