Friday, June 19, 2015

புத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 - Puththikkaaragan Puthanin Sutchmangal


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

ஒரு மனிதனின் அறிவிற்கும், ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் வித்யா காரகன் எனப்படும் புதன்.

ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் கண்டிப்பாக புதன் வலுப் பெற்று இருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணிக்க வரும் பெற்றோர். முதலில் கேட்கும் கேள்வி என் குழந்தை என்ன படிப்பான் என்பதுதான். அந்தப் படிப்புக்குக் காரணமானவன் புதன்.

புதனைப் பற்றிக் குறிப்பிடும் பழமொழிகளில் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்ற முதுமொழி, பொன் எனப்படும் ஜோதிடத்தின் பொன்னவனான. குரு தரும் பணம் மற்றும் குழந்தைச் செல்வம் ஒருவருக்குத் தாராளமாகக் கிடைத்தாலும், புதன் தரும் அறிவுச் செல்வம் அவருக்கு சுலபத்தில் கிடைக்காது என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது.

இவ்வுலகில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் அறியப் போகும் அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் புதன்தான். நவீன விஞ்ஞானிகளை உருவாக்குபவரும் இவர்தான்.

அறிவால் உலகத்தை ஆட்டுவிப்பவர் என்பதால் இந்திய வேத ஜோதிடத்தில் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவர் நிபுணன் என்று புகழப்படுகிறார்.

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவின் மூலமாக தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார்.

எல்லா வகையிலும் புதன் ஒரு தனித்துவமுள்ள கிரகமாவார். அவருடைய சுப, அசுப நிலைகளும் அப்படிபட்டவை. இதனால்தான் நமது மூலநூல்களில் எவருடனும் சேராமல் தனித்திருக்கும் புதன் மட்டுமே முழுச் சுபராகச் சொல்லப்பட்டுள்ளது.

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் என்பதால் பூமி மையக் கோட்பாட்டின்படி நம்முடைய பார்வைக் கோணத்தில் எப்போதும் சூரியனுடன் இணைந்தே இருப்பார். அதாவது பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது புதன் சூரியனுக்கு அருகிலேயே இருப்பார்.

மிக அபூர்வமான சூழ்நிலையில் வருடத்தில் சில வாரங்கள் மட்டும் அவர் சூரியனை விட்டு விலகி முன்பின் ராசிகளில் இருப்பார். இதுபோன்று சூரியனுடனோ, வேறு பாபக் கிரகங்களுடனோ சேராமல் இருக்கும் நிலையில் புதன் முழுச் சுபர் எனும் நிலை பெற்று மிகப் பெரிய நன்மைகளைச் செய்வார்.

வேறு எந்தக் கிரகத்துடனும் சேராமல் புதன் தனித்திருக்கும் நிலையில் அவரது பார்வைக்கு குருவுக்கு நிகரான சக்தி உண்டு. இதை என்னுடைய நீண்ட ஜோதிட அனுபவத்தில் அனேக ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன்.

புதனும், சூரியனும் இணையும்போது சூரியன் அந்த ஜாதகருக்கு யோகராக இருக்கும் நிலையில் புதன் அங்கே நன்மையை அளிப்பார் என்பதும் ஒரு சூட்சுமம். இதற்கு சூரியன் அவரது முதன்மை நண்பர் என்பது காரணம்.

ஏற்கனவே செவ்வாயின் சூட்சுமங்களில் நான் எழுதியதைப் போல உடலை இளமையாக வைத்து கொள்ள உதவுபவர் செவ்வாய் என்றால், மனதை இளமையான வைத்து கொள்ள உதவுபவர் புதன்.

புதன் வலுப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் “பாசிட்டிவ் அப்ரோச்” என்று சொல்லப்படும் நேர்மறை நிலையில் அணுகுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மனதைத் தளர விட மாட்டார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொண்டு, தோல்விகளை வெற்றியாக மாற்றுபவர்கள் புதனின் அருள் பெற்றவர்கள்தான்.

ஒருவர் சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும் இருப்பதற்கு புதனின் பலம் அவசியம். பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை நடிகர்கள், அறிவுப்பூர்வமான விவாதம் செய்பவர்கள், கணக்குத் துறையினர் உள்ளிட்ட பலர் புதனால் உருவாக்கப் பட்டவர்கள்தான்.

குஜாதி ஐவர்கள் என்று நமது கிரந்தங்களில் குறிப்பிடப்படும் குரு, சுக்கிர, புதன், செவ்வாய், சனி இவர்கள் ஐவரும் லக்னத்திற்கு கேந்திரங்கள் என்று கூறப்படும் 1,4,7,10-ல் ஆட்சியோ, உச்சமோ பெற்றால் அதனை பஞ்சமகா புருஷ யோகங்கள் என்று நமது ஜோதிட மூல நூல்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. இதில் புதன் தரும் யோகத்திற்கு பத்ர யோகம் என்று பெயர்.

சந்ததி விருத்திக்காக அனைவருக்கும் காமம் தேவைப்படுவதன் பொருட்டு காமத்திற்குக் காரணமான சுக்கிரன் மட்டும் அனைத்து லக்னக்காரர்களுக்கும் கேந்திரங்களில், ஆட்சியோ உச்சமோ பெறுவார். வேறு எந்தக் கிரகத்திற்கும் இந்த விசேஷமான அமைப்பு இல்லை.

(இதைப்பற்றி சில வருடங்களுக்கு முன் எழுதிய மாளவ்ய யோகம் பற்றிய கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். அடுத்து வரும் சுக்கிரனைப் பற்றிய விளக்கங்களில் இதை விரிவாகச் சொல்கிறேன்.)

அதுபோலவே குரு, செவ்வாய், சனி ஆகிய மூவரும் சரம், ஸ்திரம் ஆகிய எட்டு லக்னங்களில் பிறப்பவர்களுக்கு கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெற்று வலுவாகி யோகம் தருவார்கள்.

ஆனால் புதன் மட்டும் அரிதிலும் அரிதாக வெறும் நான்கு லக்னங்களுக்கு மட்டுமே, உபய லக்னங்களில் பிறப்பவர்களுக்கு மட்டுமே பத்ர யோகத்தை அளிப்பார். அதாவது வெறும் நான்கு லக்னங்களுக்கு மட்டுமே அவர் கேந்திரங்களில் ஆட்சி, உச்சத்தை அடைவார். இது ஒன்றே நவ கிரகங்களில் இவரது பெருமையையும் மனித வாழ்வில் அறிவின் அத்தியாவசியத்தையும் காட்டும்.

படைப்புக் கடமைக்காக அனைவருக்கும் காமம் தரப்படுகின்ற நிலையில் அறிவு மட்டும் பூர்வ ஜென்ம கர்ம வினையைப் பொருத்து, வெகு சிலருக்கு மட்டுமே தரப்படுகிறது. நம்மில் சிலர் மட்டுமே மிகச் சிறந்த அறிவாளிகளாக இருப்பதன் காரணம் இதுவே.

அறிவு ஓங்கி நிற்கும் நிலையில் அங்கே அற்ப சுகங்களுக்கு இடமில்லை என்பதைக் காட்டவே, அறிவுக்குக் காரகனான புதன் உச்சம் பெறும் கன்னி ராசியில் சிற்றின்ப காரகன் சுக்கிரன் நீசமாகி வலு இழக்கிறார்.

புத்தி மழுங்கடிக்கப்பட்டு சிற்றின்ப சுகம் ஓங்கி நிற்கும் நிலையில் அறிவுக்கு அங்கே இடமில்லை, அங்கே அறிவு வேலை செய்யாது என்பதைக் குறிக்கவே கால புருஷனின் படுக்கையறை எனப்படும் அயன, சயன, போக ஸ்தானமான மீனத்தில் போகக் காரகன் சுக்கிரன் உச்சமாகும் நிலையில் புத்திக் காரகன் புதன் நீசமடைகிறார்.

இதுவே புதனின் உச்ச நீசத் தத்துவம்......

நவ கிரகங்களில் தன் சொந்த வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் என்ற மூன்று நிலைகளை ஒரு சேரப் பெறுவதும், நீசமடையும் பொழுதும் தன் சுய நட்சத்திரத்தில் வலுப் பெறுவதும் புதன் ஒருவர் மட்டுமே.

மற்ற இரு ஆதிபத்தியக் கிரகங்கள் அனைவரும் இரண்டு இடங்களில் ஆட்சி, ஒரு இடத்தில் உச்சம் என மூன்று இடங்களில் பலம் பெறும் நிலையில் புதன் இரண்டு இடங்களில் மட்டுமே வலுப் பெறுவதால்தான் அவர் உபய லக்னங்களுக்கு மட்டும் பத்ர யோகம் அளிக்கும் நிலைக்கு உள்ளாகிறார்.

புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவரும் புதனின் அருளைப் பெற்றவர்களே. புதன் கன்னியிலோ, மிதுனத்திலோ, மீனத்தில் நீசபங்கம் பெற்றோ பலமாக அமைந்த பலர் புகழ்பெற்ற ஜோதிடர்களாக இருக்கின்றனர்.

சந்திர கேந்திரத்தில் நிற்கும் புதனுக்கு அதிக வலிமை உண்டு. சூரியனை விட்டு விலகி அவரால் அதிக தூரம் செல்ல முடியாது என்பதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் கூறுகிறார். அனுபவத்திலும் அது சரிதான்.

புதன் அஸ்தங்கம் அடையும் நிலையிலும் அவரது காரகத்துவங்கள் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆயினும் ராகுவுடன் அவர் மிகவும் அருகில் நெருங்கும் சமயத்தில் அவர் வலிமை இழக்கிறார். கேந்திராதிபத்திய தோஷத்தில் இவர் குருவுக்கு அடுத்த நிலையில் தோஷத்தை ஏற்படுத்துவார்.

பத்ர யோகத்தைத் தரும் நிலையில் புதன் இருக்கும்போது சந்திரன், செவ்வாய் குரு ஆகியோருடன் இணைவதும் அவர்களின் பார்வையைப் பெறுவதும் யோகத்தைப் பங்கப்படுத்தும். என்னதான் “குரு பார்க்க கோடி நன்மை” என்றாலும் புதனுக்கு அவர் ஆகாதவர் என்பதால் சில நிலைகளில் குரு, புதனைப் பார்ப்பது புதனின் தனித்துவத்தை பலவீனப்படுத்தும்.

புதன் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் நிலையில் தனித்து இருந்தால் ஜாதகரை பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குவார். கன்னி ராசியில் அவர் வக்ர நிலை அடையாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். உச்ச நிலையில் வக்ரம் பெறுவது நீச நிலையையே தரும் என்பதால் கன்னியில் வக்ரம் பெறும் புதனால் முழுமையான யோகத்தைத் தர இயலாது.

சமீபகாலங்களில் புகழ்பெற்று வரும் ஐ.டி.த்துறை எனப்படும் கணிப்பொறி மென்பொருள் சம்பந்தப்பட்ட துறைகளைக் குறிப்பவரும் புதன்தான். பெரும்பாலான மென்பொருள் மற்றும் கணினித் துறையினர் புதன் மிதுனம், கன்னியில் வலுப்பெற்ற நிலையில் பிறந்தவர்கள்தான்.

கணினி இல்லையேல், அதன் சாப்ட்வேர் இல்லையேல், இன்று உலகமே இல்லை என்ற வார்த்தையை சிறிது மாற்றி புதன் இல்லையேல் உலகு இல்லை என்றும் சொல்லலாம்.

புதனின் பிறப்பில் உள்ள சூட்சுமம் என்ன ?

ஒருவருடைய மனதை ஆள்பவன் சந்திரன். அவரின் புத்திக்கு அதிபதி புதன். மனதிலிருந்து புத்தி பிறக்கிறது. எனவேதான் நம்முடைய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சந்திரனிடமிருந்து புதன் பிறந்தான் என்று சொன்னார்கள்.

கிரகங்களுக்கிடையே இருக்கும் உறவு முறையில் புதனுக்கும், சந்திரனுக்கும் மட்டும் ஒரு விசித்திரமான அமைப்பு உண்டு. அது என்னவெனில் சந்திரனுக்கு புதன் நட்புக் கிரகம். ஆனால் புதனுக்குச் சந்திரனைப் பிடிக்காது. புதன் சந்திரனை எதிரியாக நினைப்பவர்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லா நமது ரிஷிகள் புராணங்களில் சொல்லியிருக்கும் ஏராளமான கதைகளின் பின்னணியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பிரபஞ்சத் தத்துவங்களும், நுணுக்கமான ஜோதிட சூட்சுமங்களும் இருக்கின்றன என்பதை இந்தத் தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்திலேயே சொல்லிருக்கிறேன்.

அதற்கு இந்த சந்திரன், புதன் உறவுமுறைக் கதையும் ஒரு உதாரணம்.

நமது புராணங்களில் சந்திரனின் கள்ளத் தொடர்பால், அதாவது தவறான வழியில் பிறந்தவர் புதன் என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கதைக்குள் ஒளிந்திருப்பது ஒரு ஜோதிட உண்மையே.

இரண்டு கிரகங்களுக்கிடையே இருக்கும் நட்பு, பகை உறவுமுறையில் ஒரு கிரகம் மற்றொன்றுக்கு நட்பு, அந்த மற்றொன்று முதலாம் கிரகத்தை பகையாகக் கருதும் என்று புரிந்து கொள்ளச் சிக்கலான ஜோதிட உண்மையை, கற்றுக் கொள்பவனுக்கு தெளிவாக விளக்கவே நமது ரிஷிகள் சந்திரனின் கள்ளத் தொடர்பால் பிறந்தவர் புதன் என்ற கதையைச் சொன்னார்கள்.

ஒரு குழந்தை எப்படிப்பட்ட வழியில் பிறந்தாலும் அதனைப் பெற்றவர்கள் அதன் மேல் பாசத்துடன் இருப்பார்கள். ஆனால் தவறான வழியில் பிறந்த குழந்தை தன் பிறப்பைக் குறித்த தாழ்வு மனப்பான்மையாலும், ஒரு பொது இடத்தில் தன் பிறப்பைக் குறித்த விமர்சனத்தால் கிடைக்கும் தலைகுனிவாலும், பெற்றோர்களை வெறுக்கும்.

எனவே புதனின் பிறப்பைக் குறித்த கதைகள் நமது ஞானிகளின் அபாரமான எடுத்துக்காட்டுடன் கூடிய, ஒரு விஷயத்தை நமக்கு எளிதாகப் புரிய வைப்பதற்கான விளக்கும் தன்மையைக் குறிக்கிறதே அன்றி, இது பகுத்தறிவாளர்கள் நினைப்பது போல கள்ளத் தொடர்பு சமாச்சாரம் அல்ல.

ஒன்றை எளிதாகப் புரிய வைக்க நமக்குச் சொல்லப்பட்ட உதாரணக் கதைகளே பின்னால் வந்தவர்களால் கண், காது, மூக்கு வைக்கப்பட்டு நம்ப முடியாத அபத்தங்கள் என்று பகுத்தறிவாளர்கள் கிண்டல் செய்ய ஏதுவாயிற்று. புதன் பற்றிய இந்தக் கதையை தெரிந்து கொண்ட இந்த நாள் முதல் இதைப் படிப்பவருக்கும் இனி சந்திரனுக்கும், புதனுக்கும் உள்ள ஜோதிட உறவுமுறை மறக்காது.

( மே 14- 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது )

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

10 comments :

  1. Wonderful article...very wise and useful

    ReplyDelete
  2. நன்றி அய்யா...!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா! மனதில் இருந்து அறிவு பிறக்கிறது. மனம் அறிவை விரும்புகிறது. அறிவு மனதை வெறுக்கிறது. சந்திரன் புதன் உறவு விளக்கம் அற்புதம் ஐயா! நமது புரணத்தை உணர பெரும் கதவை திறந்துகாட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா! மனதில் இருந்து அறிவு பிறக்கிறது. மனம் அறிவை விரும்புகிறது. அறிவு மனதை வெறுக்கிறது. சந்திரன் புதன் உறவு விளக்கம் அற்புதம் ஐயா! நமது புரணத்தை உணர பெரும் கதவை திறந்துகாட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ஐயா வணக்கம் !

    மீன லக்னத்திற்கு புதன் பாதகதிபதியாக இருந்து ,சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்து 3-இல் ( ரிஷபம் ) நட்பு பெற்று , யாருடைய பார்வையும் பெறாமல் , நீச செவ்வாய் சாராம் வங்கிஇருந்தால் பாதகம் செய்வாரா ? இல்லை 3-இல் இருபதால் பாதகம் செய்யமாட்டாரா ?

    நன்றி !

    ReplyDelete