Thursday, February 5, 2015

சூரியனுக்கான பரிகாரங்கள் C-005 - Sooriyanukkana Parikarangal


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888 

நமது மூலநூல்கள் ஒருவர் செய்யும் தொழிலுக்கு காரக கிரகங்களாக சனியையும், சூரியனையும் குறிப்பிடுகின்றன.

இதில் சூரியனுக்கும், சனிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், சூரியன் வேலை வாங்குபவராகவும், சனி வேலை செய்பவராகவும் அதாவது ஒருவர் உத்தரவிடுபவராகவும் இன்னொருவர் கீழ்ப்படிபவராகவும் இருப்பார்.

இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் சனி சூட்சும வலுப் பெற்று தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் அவர் உயர் பதவியில் இருந்தாலும் ஒருவருக்கு கீழே வேலை செய்பவராகவும், சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டால் ஒருவர் தானே முடிவெடுத்து சுயமாக இயங்குபவராகவும், சில நிலைகளில் முதலாளியாகவும் இருப்பார்.

செய்யும் தொழிலில் ஒருவர் சாதனை செய்வதற்கு சிம்மமும், சூரியனும் கெடக் கூடாது என்று சொல்வது இதைத்தான் குறிக்கிறது. பத்தாமிடத்தில் ஸ்தான பலம் பெறாமல் திக்பலம் பெறும் சூரியனும், செவ்வாயுமே மிகப் பெரிய தொழிலதிபர்களை உருவாக்கக் கூடிய வல்லமை படைத்த கிரகங்கள் ஆகும்.

அடுத்து பவர் (POWER) எனப்படும் அதிகாரத்தை சூரியன் குறிப்பிடுவதைப் போல, பவர் எனப்படும் மின்சாரத்திற்கும் காரகன் சூரியன்தான். ஜாதகத்தில் சூரியனுக்கு சுபத்துவமும், பத்தாமிட தொடர்பும் உண்டாகும் நிலைகளில் ஒருவரை மின்சாரம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்ய வைப்பார்.

மின் சாதனங்களை விற்பனை செய்யக் கூடிய எலக்ட்ரிகல் ஸ்டோர் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலைகளின் மூலம் வருமானத்தைத் தருபவரும் சூரியன்தான். அதேபோல ஒருவர் கோதுமை பயிரிடும் விவசாயியாகவும், கோதுமையால் லாபம் அடைய வேண்டும் என்றாலும் சூரியனின் வலு அவசியம் தேவை.

ஆன்மிகத்தில் சூரியனின் பங்கு என எடுத்துக் கொண்டோமேயானால், சூரியன் சுப வலுப் பெறும் நிலைகளில் ஒருவரை சிவ பக்தராக்குவார். தமிழகத்தில் வழி வழியாக சிவத் தொண்டு புரியும் ஆதீனகர்த்தர்கள், தொன்மையான சிவாச்சாரியார்கள் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள்தான்.

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் வக்ர நிலை என்பது ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பாகும். இந்த வக்ர நிலைக்கும் முக்கிய காரணம் சூரியன்தான். வக்ரம் என்பதற்கு மாறுதலான இயக்கம் என்று பொருள். ஒரு கிரகம் வக்ரமடைந்தால் தனது இயல்பான பலன்களைச் செய்யாது.

பொதுவாக சூரியனுக்கு ஐந்து முதல் ஒன்பது ராசிக்குள் இருக்கும் பஞ்சபூதக் கிரகங்கள் வக்ர நிலையை அடையும். ஒரு கிரகம் சூரியனுக்கு நேரெதிரில் ஏழாமிடத்தில் இருந்தால் அது வக்ரத்தில் இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லி விடலாம். சந்திரனுக்கும் ராகு, கேதுக்களுக்கும் வக்ர நிலை இல்லை.

சூரியனை நெருங்கிய நண்பராக புதன் கருதுவதால், புதனுடன் சூரியன் இணைந்திருக்கும் நிலையில் நன்மைகள் உண்டு. அதேநேரத்தில் சுக்கிரனுக்கு சூரியன் ஆகாதவர் என்பதால் சுக்கிரனுடன் இணையும் நிலையில் சுக்கிரனது காரகத்துவங்களை சூரியன் பாதிப்பார். சந்திரன், செவ்வாய், குரு ஆகியோருடன் இணைந்தால் சூரியன் நல்ல பலன்களைச் செய்வார்.

சுக்கிரனை பாதிக்கும் அதே சூரியன் சனியுடன் இணையும்போது தன்னுடைய இயல்புகளைப் பறி கொடுத்து தானே பாதிக்கப்படுவார். இருளைத் துரத்தும் சக்தி வெளிச்சத்திற்கு இருந்தாலும் மிகக் கடுமையான ஆழ்ந்த இருட்டுக்கு, ஒளியை விழுங்கும் சக்தி உண்டு என்பதையே இது குறிக்கிறது.

இதை நிரூபிக்கும் விதமாக ராகுவுடன் நெருங்கும் தூரத்தைப் பொருத்து, சூரியன் மிகவும் பலவீனமடைவார். கேதுவுடனும் அப்படியே. ராகு, கேதுக்களுடன் சூரியனும், சந்திரனும் இணையும் நிலையே கிரகணம் எனப்படுகிறது. இது இவர்கள் இருவரும் தங்களது சக்தியை இழந்து பலவீனமாவதைக் குறிப்பிடுகிறது.

இன்னுமொரு முக்கிய விதியாக ஒரு ஜாதகத்தில் கெடுதல் செய்யும் நிலையாகச் சொல்லப்படும் அஷ்டமாதிபத்யம் எனப்படும் எட்டாமிடத்தின் அதிபதி என்கிற தோஷமும் சூரியனுக்கு கிடையாது. அதாவது சூரியன் எட்டாமிடத்திற்கு அதிபதியாகும் நிலையில் மற்ற பாப கிரகங்களைப் போல விபத்து போன்ற கெடுதல்களைச் செய்ய மாட்டார். இந்த நிலை மகர லக்னத்திற்கு மட்டுமே உரியது.

அது ஏனெனில் பஞ்ச பூதக் கிரகங்கள் எனப்படும் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் சனி ஆகிய அனைவரும் ஒருவருடைய ஜாதக அமைப்பில் ஒரு நல்ல வீடு, ஒரு கெட்ட வீடு என இரண்டு வீடுகளுக்கு அதிபதி ஆவார்கள். ஆனால் சூரியனும், சந்திரனும் ஒரு வீட்டுக்கு மட்டுமே அதிபதியாவார்கள் என்பதால் சூரிய, சந்திரர்கள் இருவருக்குமே அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது.

அடுத்து ஒரு முக்கிய சூட்சுமமாக சூரிய தசையில், சனி புக்தியும், சனி தசையில் சூரிய புக்தியும் மாறுபாடான பலன்களைச் செய்யும். இவ்விரண்டு நிலைகளிலும் ஜாதகருக்கு நன்மைகள் இருக்காது. சந்திர புக்தியும் அப்படியே.

நமது ஞானிகளால் கிரகங்களுக்குள் ஜென்ம விரோதிகள் என்று உணர்த்தப் பட்டவர்கள் குருவும், சுக்கிரனும் அடுத்து சூரிய, சந்திரர்களும் சனியும்தான். சனியின் வீடுகளான மகர, கும்பத்திற்கு நேரெதிரில் சூரிய சந்திரர்களின் கடகமும், சிம்மமும் அமைந்திருப்பது இதை உறுதிப்படுத்தும்.

ஞானிகள் சுருக்கமாக தந்தை, மகன் உறவு சொல்லி சனிக்கும், சூரியனுக்கும் ஆகாது என்று நமக்குப் புரிய வைத்ததை வேறுவிதமாகச் சொல்வதாக இருந்தால் இருளும், ஒளியும் எதிரெதிர் நிலை கொண்டவை என்பதன்படி ஒளிக் கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒளியற்ற இருட்டு கருப்புக் கிரகமான சனி ஆகாதவர் என்று சொல்லலாம்.

சூரியன் மேஷ ராசியில் முதல் இருபது டிகிரி வரை மட்டுமே உச்சம் எனப்படுகின்ற அதிக பலம் என்கிற நிலையைப் பெறுவார். உச்சத்திற்கும், ஆட்சி நிலைக்கும் இடைப்பட்ட நிலையான மூலத் திரிகோண வலுவை சிம்ம ராசியின் முதல் இருபது டிகிரி வரையிலும், மீதமுள்ள இருபது முதல் முப்பது வரையிலான பத்து டிகிரியில் ஆட்சி நிலையையும் பெறுவார்.

சந்திரன் அவருக்கு மிகவும் பிடித்த நண்பர் என்பதால் கடகத்தில் அவர் வலு இழப்பதில்லை. அதேபோல குருவின் மீனம், தனுசு, செவ்வாயின் மேஷம் விருச்சிகம் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்த வீடுகள். சூரியனை தனது முதல் நண்பராக கொண்ட புதனின் மிதுனம், கன்னி வீடுகளும் அவருக்கு ஏற்ற வீடுகள்தான்.

மகரமும், கும்பமும், ரிஷபமும் அவரை வலிமை இழக்கச் செய்யும் பகை வீடுகள். அதே நேரத்தில் கும்பத்தில் இருக்கும் சூரியன் தனது பார்வையால் தன் வீடான சிம்மத்தை பார்த்து வலுப் படுத்துவார் என்பதால் அவர் கும்பத்தில் இருக்கும் பொழுது சுபத்துவம் அடைந்திருந்தால் நன்மைகளைச் செய்வார்.

சுக்கிரனின் துலாம் ராசியில் முதல் இருபது பாகை வரை முற்றிலும் வலிமை இழக்கும் நீசம் எனப்படும் நிலையை சூரியன் அடைகிறார். நீசத்தைக் கடந்து துலாம் ராசியில் இருபது டிகிரி முதல் முப்பது டிகிரிவரை இருக்கும் பொழுது அவரது வலுவைக் கணிப்பது சிரமமாக இருக்கும்.

முக்கியமாக சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசமாகி, இருபது டிகிரிக்கு அப்பால் இருக்கும் போது லக்னாதிபதி நீசம் என்று கணித்தோமானால் பலன்கள் மாறுபடும். எனவே சூரியன் இருக்கும் டிகிரி நிலையைக் கவனிக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே ஒரு கிரகத்தின் உச்ச,நீச அமைப்புகளைக் கணிக்கும் பொழுது அவற்றின் துல்லிய டிகிரி நிலைகளைக் கவனிப்பதே சரி.

அதேபோல சூரியனின் அதிக பலம் எனும் பொருள்படும் அதி உச்ச நிலை மேஷத்தின் பத்தாவது டிகிரியிலும், அதிக பலவீன நிலை எனப்படும் அதி நீச நிலை துலாத்தின் பத்தாவது டிகிரியிலும் ஏற்படுகிறது.

நிறைவாக, ஒருவருடைய ஜாதகத்தில் கீழ்க்காணும் அமைப்புகளுக்கு சூரியனே காரணமாவார். சூரியன் சுப பலத்துடன் வலுவாக இருக்கும் நிலைகளில் கீழ்க்கண்டவைகளில் ஒருவருக்கு நன்மைகள் நடக்கும். அசுப வலுவுடன் இருந்தால் இதே விஷயங்களில் கெடுதல்கள் இருக்கும்.

தந்தை, ஆண், அதிகாரம், நெருப்பு, அரசன், கண், அரசுவேலை, காரச்சுவை, கிழக்குத் திசை, செயல் திறன், சிகப்பும் ஆரஞ்சும் கலந்த அக்னி நிறம், காய்ச்சல், தலை, தாமிரம், பாதரசம், மின்சாரம், மருத்துவம், விதைகள், காடு, ஷத்ரிய குலம், தந்தை வழி உறவினர்கள், பித்த நோய், தலைவலி போன்ற தலையில் வரும் வியாதிகள், பகல், சிவபெருமான், தவம், கோதுமை, மாணிக்கம், மயில், தேர் எனப்படும் ரதம், ஒளி, பிரயாணம், மருந்துகள், ஞாயிற்றுக்கிழமை, அரசியல் ஈடுபாடு, தேன், இதயம், திருடன், விஷம், சித்துவேலைகள் என ஏமாற்றுதல், உஷ்ண நோய்கள் ஆகியவற்றில் சூரியன் ஆதிக்கம் செய்வார்.

சூரியனுக்கான திருத்தலங்கள் எவை? பரிகாரங்கள் என்ன?

நவ கிரகத் தலங்களில் கும்பகோணம் அருகில் உள்ள ஊரான சூரியனார் கோவிலில் அமைந்திருக்கும் திருக்கோவிலே தமிழ்நாட்டில் சூரியனுக்கான முதன்மைப் பரிகாரத் தலம் ஆகும்.

சென்னையில் போரூர் அருகே உள்ள கொளப்பாக்கத்தில் சேக்கிழார் பெருமானால் நிறுவப்பட்ட ஈஸ்வரன் கோவில் வட சூரியனார் கோவில் என்று புகழ் பெற்றது. அதேபோல சென்னையிலேயே ரெட்ஹில்ஸ் அருகே உள்ள ஞாயிறு என்ற கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இறைவனும் சூரியனின் அருளை நமக்குத் தருபவர்தான்.

இறைவழிபாடு தாண்டிய பரிகாரங்கள் என்று பார்த்தோமேயானால் சூரியன் மோசமாகக் கெட்டிருக்கும் நிலையில் செய்ய வேண்டிய பரிகாரங்களுள் ஒன்றாக ஒரு ஞாயிற்றுக்கிழமை உச்சிப் பொழுது ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் சூரிய ஹோரையில் குறிப்பிட்ட அளவு கோதுமையை ஒருவருக்கு தானம் செய்வதைச் சொல்லலாம்.

இது சூரியனின் பலவீனத்தைப் போக்கி ஜாதகருக்கு நன்மைகளைச் செய்யும். ஆனால் சூரியன் வலுவாக இருக்கும் நிலையில் இதைச் செய்தால் அவரால் கிடைக்கும் நன்மைகள் தடைபடும்.

(பிப் 5-2015 மாலை மலர் நாளிதழில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

4 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மற்றுமொரு அருமையான பதிவிற்கு நன்றி குருஜி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. குருவே சரணம் 🙏 தாங்கள் ராசியில் ஒரு கிரகம் 5ம் இடத்திலும் அதுவே பாவகத்தில் 6ம் பாவத்தில் இருந்தால் அது தன் நிலையைப் பொருத்து 6ம் வீட்டின் நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும் என்று முன்னர் கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் கர்மாவின் காரணமில்லாமல் காரியமில்லை என்பதன்படி, ராசியில் 5ம் வீட்டில் இருப்பதால் அந்த கிரகத்திற்கு கிடைப்பது என்ன? அந்த 5ம் வீட்டுக்கு கிடைப்பது என்ன ? இந்த சம்பந்தத்தின் காரணமும் அதன் பலனும் என்ன ?
    உதாரணமாக சிம்ம லக்னாதிபதி ராசியில் 5ம் இடம் சுய நட்சத்திர சாரம் பெற்று பாவகத்தில் அவர் 6ம் வீட்டில் இருந்தால் லக்னாதிபதி மறைகிறாரா ? அப்படி என்றால் ராசியில் அவர் 5ம் இடம் பெற்ற காரண பலம் என்ன ? அப்படி பாவகத்தில் 6ம் இடத்தில் உள்ள சூரியன் அங்கு தாங்கள் கூறிய ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு விதிகளில் நீச பங்கம் பெற்று ராசியிலும் பாவகத்திலும் 6 ல் இருக்கும் சூரியனின் நட்சத்திர சாரம் பெற்ற குருவுடன் இரண்டு டிகிரிக்குள் இணைந்து அதை அஸ்தங்கம் ஆக்கினால், இந்த நிலையில் இவ்விரண்டு கிரகங்களின் நிலை என்ன, பலம் என்ன ? குறிப்பு - குரு சூரியன் இரண்டும் வர்க்கோத்தமம், சூரியன் புஷ்கர நவாம்சத்தில்.

    ReplyDelete