Thursday, January 22, 2015

சுகம் தரும் சூரியன் C-004 - Sukam Tharum Sooriyan


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888 

பொதுவாக சூரியன் ஒரு ஸ்தாபனத்தை நிர்வகிப்பதற்கு காரணமானவர் என்பதால் ஜாதகத்தில் சூரியன் வலுப் பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரால் தலைமைப் பதவியில் இருக்க முடியும். சிறு அலுவலகமாயினும் ஒரு நபர் நிர்வாகப் பொறுப்பில் இருப்பதற்கு சூரியனின் தயவு வேண்டும்.

இன்னும் ஒரு சூட்சும நிலையாக சூரியன் நேரடியாக மேஷத்தில் உச்சம் அடைந்து ஸ்தான பலம் பெறுவதை விட அதற்கு நிகரான திக்பலம் எனும் ஒரு வலுவான நிலையை அவர் பத்தாமிடத்தில் அடைவது சிறப்பான அமைப்பாகும்.

கடக லக்னத்தில் பிறந்து பத்தில் சூரியன் உச்சம் பெற்றவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், உபய லக்னங்களில் பிறந்து பத்தாம் வீட்டில் சூரியன் திக்பலம் பெற்றவர்கள் அந்த அதிகாரிகளுக்கு ஆணையிடும் மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கும் அநேக ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

அதேபோல எல்லா யோகங்களும் அனைத்து லக்னங்களுக்கும் பலன் தராது. ஒரு கிரகம் யோகம் தரும் நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகத்தின் லக்னாதிபதிக்கு நட்புக் கிரகமாக இருந்தால் மட்டுமே பூரண யோக பலன்களைச் செய்யும்.

அதன்படி சூரியனும் தனது முதல்தர யோகநிலையை தனது வீடான சிம்ம லக்னம், ராசியில் பிறப்பவர்களுக்கும், தான் யோகாதிபதியாக இருக்கும் மேஷம், விருச்சிகம், தனுசு ஆகிய லக்னம், ராசிகளுக்கும் தருவார். இரண்டாவது நிலையாக தன்னை நண்பராக பாவிக்கும் புதனின் மிதுனம், கன்னி மற்றும் சந்திரனின் கடகம், குருவின் மீனம் ஆகியவற்றுக்குச் செய்வார்.

நமது உடலில் கண்களைக் குறிக்கும் கிரகமும் சூரியன்தான். குறிப்பாக வலது கண் இவரது முழு ஆதிக்கத்திற்குட்பட்டது. அதோடு எலும்புகள் மற்றும் இதயத்திற்கும் இவரே பொறுப்பாகிறார். ஆறாம் அதிபதியோடு தொடர்பு கொண்ட சூரியன் ஜாதகத்தில் கண்ணைக் குறிக்கும் இரண்டாமிடத்தோடு சம்பந்தப்படுவாரேயானால் ஒருவருக்கு பார்வைக் குறைபாடுகளையும் கண் நோய்களையும் தருவார்.

இந்த நிலை மீனத்திற்கு வரலாம். மீன லக்னத்திற்கு சூரியன் உச்சம் பெறுவது யோகநிலை அல்ல. சிலர் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது வலுக் குறைவான சூரியனால்தான். அதுபோலவே ஒரு ஜாதகத்தில் சூரியன் பாபியாகி ஆறாமிடத்தோடு சம்பந்தம் பெற்று, அவருடைய தசை, புக்தி நடக்கும் பொழுது இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளையும், பைபாஸ் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகளையும் செய்ய வைப்பார்.

நம்முடைய ஜோதிடத்தின் தலைவன் சூரியன்தான் என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அதுபோலவே கிரகங்களில் மிக உயர்ந்த வலுக் கொண்டவர் சூரியன் மட்டுமே. விஞ்ஞானப்படி சூரியன் ஒரு கிரகம் அல்ல. அவர் சுயமாக ஒளி தரும் ஒரு நட்சத்திரம். அவர் நட்சத்திரம் என்பது நம்முடைய ஞானிகளுக்கு தெரியாமல் போனதில்லை. “சர்வ திசையெங்கும் சூரியன்களாகவே இருக்கின்றன” என்று தனது ஆர்ய பட்டீயத்தில் பெரும் ஞானி ஆர்யபட்டர் பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களையே குறிப்பிடுகிறார்.

கிரகங்களின் தலைவனை ஒரு கிரகமாகவே சொல்ல வேண்டும் என்பதால்தான் அவைகள் உருவாகக் காரணமான சூரியனை, கிரகங்களின் தலைவனாக, ஒரு கிரகமாக உருவகப்படுத்தினார்கள் ஞானிகள்.

ஆனால் கிரகங்களின் வலுவை வரிசைப் படுத்தும் போது சூரியன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவார். ராகு-கேதுக்கள் முதலிரண்டு இடங்களில் வந்து விடுவார்கள்.

அது ஏனெனில் நவ கிரகங்களையும் உருவாக்கி அவர்களுக்கு தனது ஒளியையும் கொடுத்து, பூமியையும் அதிலுள்ள உயிரினங்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியனை அதாவது சூரியன் பூமிக்குத் தரும் ஒளியை- கிரகணம் என்ற பெயரில் சில நிமிடங்கள் மறைக்கும் அதிகாரம் ராகுவுக்கும், கேதுவுக்கும் இருப்பதாலேயே கிரக வலிமையில் ராகு-கேதுக்களுக்கு முதலிடம் அளிக்கப்படுகின்றன.

எனவே “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்ற பழமொழிப்படி சூரியனுடன் ராகுவோ, கேதுவோ இணைவது சூரியனின் வலிமையைக் குறைக்கும். அதேநேரத்தில் ராகு,கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் சூரியனை நெருங்கும் போது அஸ்தங்கம் என்ற பெயரில் வலுவிழப்பார்கள்.

குரு, சூரியனிடமிருந்து தான் பெறும் ஒளியை இரண்டு மடங்காக திரும்பப் பிரதிபலிக்கிறார் என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. இந்த ஒளிப் பிரதிபலிப்புத் திறன் அவருக்கு இருப்பதாலேயே அவரை நாம் முதன்மைச் சுப கிரகம் என்கிறோம். இத்தகைய திறன் இருந்தாலும் மாபெரும் ஒளியான சூரியனை நெருங்கும்போது அவர் தனது ஒளியினை இழந்து வலிமை இழப்பார்.

கிரகங்களின் பார்வை என்பதே அவற்றின் ஒளிவீச்சுத்தான் என்பதை நான் பல சந்தர்ப்பங்களில் விளக்கியிருக்கிறேன். ஒரு பிரம்மாண்ட வெளிச்சத்திற்குள் நுழையும்போது நம் கண்கள் குருடாவதைப் போல சூரியனின் நிஜ ஒளிக்கு முன் கிரகப் பிரதிபலிப்பு ஒளி எடுபடாது என்பதால்தான் அஸ்தங்கமடைந்த கிரகங்களுக்கு பார்வை பலம் இல்லை என்று நமது ஞானிகளால் சொல்லப்பட்டது.

அஸ்தங்கம் அடையும் கிரகம் தனது அனைத்து சக்திகளையும் இழந்து சூரியனிடம் சரணடையும் நிலையில், அந்தக் கிரகம் தர வேண்டிய பலன்களை சூரியனே தனது தசை, புக்திகளில் தருவார்.

குறிப்பாக சுக்கிரனும் புதனும் சூரியனுடன் நெருங்கிச் செல்பவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் அடிக்கடி அஸ்தங்கம் அடைவார்கள். சுக்கிரன் சூரியனுக்கு முன்பின் ஒன்பது பாகையிலும், புதன் பதினொரு பாகையிலும் சூரியனிடம் தங்களின் சக்தியினை இழப்பார்கள். இதில் புதனுக்கு மட்டும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று சில மூல நூல்கள் குறிப்பிடுகின்றன.

அஸ்தங்கம் அடைந்த கிரகங்கள் பரிவர்த்தனை பெற்று இருந்தால் தங்கள் வலுவை இழப்பதில்லை என்பது ஒரு விதிவிலக்கு.

ஒரு மனிதனின் ராசியை உறுதி செய்வது சந்திரன் என்றால் அவரது லக்னத்தை உறுதி செய்வது சூரியனாவார்.

எவ்வாறெனில், சூரியனின் இயக்கத்தை வைத்தே மாதங்கள் பிரிக்கப்பட்டன. மேஷ ராசியின் முதல் டிகிரியில் இருந்து முப்பது டிகிரி வரை சூரியன் இருப்பது சித்திரை மாதம் எனப்படுகிறது. அடுத்த முப்பத்தி ஓராவது டிகிரியில் அவர் ரிஷபத்தில் நுழையும்போது வைகாசி மாதம் ஆரம்பமாகிறது. சுருக்கமாக சொல்லப் போனால் பனிரெண்டு ராசிகளும் பனிரெண்டு மாதங்கள்தான்.

இந்நிலையில் ஒரு லக்னம் என்பது தோராயமாக இரண்டுமணி நேரம் என்பதால், சித்திரை மாதமான மேஷ ராசியில் சூரியன் இருக்கும் போது சூரியன் உதயமானவுடன் ஆரம்பமாகும் முதல் லக்னம் மேஷ லக்னமாக இருக்கும். இதேபோல ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் இருக்கும் ராசியே முதல் லக்னமாகவும் அமையும்.

ஒரு ஜாதகத்தில் தந்தையைக் குறிக்கும் கிரகம் சூரியன் ஆவார். ஒருவருடைய தந்தையின் நிலையை ஜாதகத்தில் சூரியன், ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதியைக் கொண்டு அறியலாம். ஒன்பதாம் பாவத்தில் சனி,ராகு போன்ற பாப கிரகங்கள் இருந்து சூரியனும் கெட்டிருந்தால் அந்தக் கிரகங்களின் தசை,புக்தியிலோ சூரியனின் தசை,புக்திகளிலோ ஜாதகரின் தந்தை பாதிக்கப்படுவார்.

தன்னை வலிமை இழக்க செய்யும் கிரகமான ராகுவுடன் சூரியன் மிக நெருங்கி இருந்தால் ஒருவருக்கு தந்தையின் ஆதரவோ, அன்போ கிடைப்பது கடினம். சூரியன் சுப வலுப் பெற்றிருந்தால் சிறந்த தந்தை கிடைப்பார். மேலும் பத்தாமிடத்தோடு சூரியன் சம்பந்தப்பட்டு இருந்தால் ஒரு ஜாதகர் தந்தையின் தொழிலை, தந்தைக்குப் பிறகு நீடித்துச் செய்ய முடியும்.

ஜாதகத்தில் சூரியனுடன், சனி இணைந்திருந்தாலோ, சூரியனை, சனி பார்த்தாலோ அவருக்கும் அவர் தந்தைக்கும் ஒத்து வராது என்று கூறலாம். இருவரில் ஒருவர் சுபத்துவம் அடைந்திருந்தால் ஒழிய இந்த பலன் மாறாது.

சில நிலைகளில் “காரஹோ பாவ நாஸ்தி” அமைப்பில் சூரியன் சுபத்துவமின்றி ஒன்பதாம் வீட்டில் இருப்பது மற்றும் சூரியனும், சனியும் இணைவது, அல்லது பார்த்துக் கொள்வது இளம் வயதிலேயே தந்தையை இழக்கவோ, பிரியவோ வைக்கும். இந்த நிலை சிறிது மாறினால் பிரயோஜனம் இல்லாத தந்தையைக் கொடுக்கும்.

அதேபோல சிம்மத்தில் சனி இருப்பதும் சரியான நிலையாகாது. சூரியன் தொழில்காரகனும் ஆவார் என்பதால் அவரது வீடான சிம்மத்தில் சனி இருப்பது தொழிலுக்குச் சரியான நிலை அல்ல.

சூரியன் நீச பங்க ராஜயோகம் தருவது எப்போது?


ஜாதகத்தில் சூரியன் துலாம் ராசியில் நீசத்தில் இருந்தாலும் துலாத்தின் முதல் இருபது பாகைகளைக் கடந்த பின் நீச பலனைச் செய்வதில்லை. துலாம் ராசியில் அவர் சந்திர கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது அவருக்கு வீடு கொடுத்த துலா நாதன் சுக்கிரன் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலோ அவர் நீச பங்கம் அடைவார். ஆனால் நீச பங்க ராஜயோகம் என்பது அவர் உச்ச சனியுடன் இணையும் போதுதான்.

அதேபோல தனது நண்பரான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து வர்க்கோத்தமம் பெற்று, சுக்கிரனுடன் பரிவர்த்தனையும் அடைந்து, சனியுடனும் இணைந்து, சந்திரனுக்கு கேந்திரத்திலும் இருந்தால் உச்சத்தைவிட மேலான ஒரு நிலை பெற்று அந்த லக்ன நாதன் அவருக்கு நண்பனாக இருக்கும் பட்சத்தில் அவரது தசையில் நீச பங்க ராஜயோகத்தைச் செய்வார்.

( ஜனவரி 22-2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது )


அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

4 comments :

  1. அருமையான விளக்கங்கள் குருஜி அவர்களே,

    துலாத்தில் ஆட்சிபெற்ற சுக்கிரபகவானுடன் இணையும் போது சூரியபகவான் நீசபங்க நிலையை அடையமாட்டாரா?

    உச்ச சனி பகவானுடனான சேர்க்கையைவிட இது தான் நல்ல அமைப்பு என்று நான் நினைத்திருந்தேன்.

    ReplyDelete
  2. 🙏 குருவே சரணம்...அற்புதமான விளக்கம் ☺️🙏

    ReplyDelete