ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
ஜோதிடத்தின் கிரக நிலைகள் நமது பார்வைக் கண்ணோட்டத்தின்படி அதாவது பூமி மையக்
கோட்பாட்டின்படி அமைந்தவை. அதன்படி சொல்லப் போவோமேயானால், குரு கிரகம் கடக
ராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும், மகரத்தில் உள்ள
போது மிகக் குறைவாகவும் கிடைக்கிறது என்று கொள்ளலாம்.
இதை நம்மால் பூமியில் உணரக் கூடிய நிகழ்வைத் தரக் கூடியவர் சூரியன்.
சூரியனின் இயக்கப்படியே பனிரெண்டு மாதங்களும், பனிரெண்டு ராசிகளாக
அமைக்கப்பட்டன என்பதால் மேஷ ராசி என்பது உண்மையில் சித்திரை மாதத்தையும்,
துலாம் ராசி ஐப்பசி மாதத்தையும் குறிக்கும்.
உச்சம் எனப்படும் வலுவான நிலையை மேஷ ராசியில், சித்திரை மாதத்தில் சூரியன்
பெறும்போது அவரது கதிர்கள் நம்மைச் சுட்டெரிக்கின்றன. சூரியனின் ஒளி அப்போது
பூமிக்கு அதிகமாகக் கிடைப்பது கண்கூடு.
அதுபோலவே சூரியன் வலுவிழந்து நீசம் எனப்படும் துலாம் மாதமாகிய ஐப்பசியில்
அவரது ஒளி நமக்குக் கிடைக்காமல் எப்போதும் மேகமூட்டமாகவே இருக்கும். இது ஒன்றே
ஜோதிடம் சொல்லும் கிரகபலம் என்பது உண்மை என்பதை நிரூபிக்கும்.
அடுத்து, கிரகங்கள் தங்களுக்குள் இணைந்து சில நன்மைகளைத் தரும் கலப்புக்களை
உண்டாக்கி மனிதனுக்கு தேவையான யோகங்களைச் செய்கின்றன என்பது ஜோதிடத்தின்
சாரம்.
யோகம் எனப்படும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு இணைவு அல்லது சேர்க்கை என்று பொருள்.
அதிலும் “ராஜயோகம்” என்ற வார்த்தைக்கு “அரசனாக்கும் சேர்க்கை” என்று அர்த்தம்.
எல்லோருடைய ஜாதகங்களிலும் ஜோதிடர்கள் அந்த ராஜயோகம் இந்த ராஜயோகம் என்று சில
யோகங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அரசனாக அதிகாரம்
செய்யக்கூடிய அமைப்பைப் பெறுவது லட்சத்திலோ, கோடியிலோ ஒருவர்தான். அந்த
அதிகாரம் செய்யக் கூடிய ராஜயோகத்தைத் தருபவர் சூரியன். அதற்குத் துணை நிற்பவர்
சந்திரன்.
ஒருவர் நிஜமான ராஜயோகத்தை அனுபவித்து அரசனாகவோ அல்லது அரசனுக்கு சமமான
அதிகாரம் செய்யக் கூடிய அமைப்புகளிலோ இருக்க வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில்
சூரியன் வலுவாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் நான் வலு என்று குறிப்பிடுவது
சூரியனையும், சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தையும் சேர்த்தே குறிக்கிறது.
அதிகாரத்தை அனுபவிக்கும் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்
அதிகாரிகளின் ஜாதகங்களில் இந்த அமைப்பை நான் பரிபூரணமாகப் பார்த்திருக்கிறேன்.
அதோடு சூரியனும், சந்திரனும் ஒளிக் கிரகங்கள் என்பதாலும் சூரியனிடமிருந்தே
சந்திரன் ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பதாலும் ஒரு நல்ல யோக ஜாதகத்தில்
சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருக்க வேண்டும். அதாவது சந்திரன்
சூரியனுடன் இணைந்தோ அல்லது அவரிடமிருந்து நான்கு, ஏழு, பத்தாமிடங்களிலோ அவரது
ஒளியைப் பெற்று பிரதிபலிக்கும் விதத்திலோ அமர்ந்திருக்க வேண்டும்.
இன்னும் முக்கியமாக சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில்
இருந்தாலும் அந்த ஜாதகத்தில் அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளும் ராசிக்கோ,
லக்னத்திற்கோ கேந்திர வீடுகளாக ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் நான்கு
கேந்திரங்களாக இருப்பது முதல்தரமான ராஜயோகம் ஆகும்.
ஒரு ஜாதகர் என்ன தொழில் செய்வார் அல்லது எதன் மூலம் ஜீவிப்பார் என்பதைக்
குறிப்பிடும் இடமான தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவத்தில் சூரியன்
திக்பலத்துடன் இருப்பதோ அல்லது பத்தாமிடத்திற்கு முன்பின் இடங்களான ஒன்பது,
பதினோராமிடங்களில் திக்பலத்தை விட்டு அதிகம் விலகாமல் இருப்பதோ நீடித்த
அரசாளும் அமைப்பைக் குறிக்கும் ராஜயோகம்.
சந்திரன் திக்பலம் பெறுவது நான்காம் வீட்டில் என்பதால் சூரியன் பத்தாம்
வீட்டிலோ, பத்திற்கு அருகிலோ இருக்கும்போது சந்திரன் அவருக்கு நேர் எதிரில்
நான்காம் வீட்டிலோ, நான்கிற்கு இருபுறங்களில் திக்பலத்திற்கு அருகிலோ இருந்து
சூரிய ஒளியை பரிபூரணமாகப் பெறுவதும் சிறந்த அமைப்புத்தான்.
நமது மூலநூல்களின் கருத்துப்படி சூரியன் அரைப் பாபர்தான் என்று
சொல்லப்படுகிறது. என்னதான் ஆனாலும் பாபர், பாபர்தான் எனும் கருத்தில் எனது
“பாபக் கிரகங்களின் சூட்சும வலுத் தியரி”யின்படி சூரியன் உச்சம், ஆட்சி என
ஸ்தான பலம் பெற்று நேர்வலுப் பெறாமல் திக்பல வலுப் பெறுவதே நல்லது.
சூரியன் வலுவாக இருப்பது போலவே அவருடைய வீடான சிம்மமும் வலுவாக இருக்க
வேண்டும். பொதுவாக ஒரு பாவம் அதன் அதிபதியால் பார்க்கப்பட்டால் வலுவாகும் என்ற
விதிப்படி கும்பத்தில் சூரியன் இருந்து சிம்மத்தைப் பார்க்கும் நிலையில் சிம்ம
ராசி அதிக வலுப்பெறும்.
இதன் அடிப்படைக் கருத்து என்னவெனில், கும்பத்தில் சூரியன் இருக்கும் மாதமான
மாசி மாதம் பிறப்பவர்கள் அரசாங்கம், அரசியல் ஆகியவற்றில் முக்கிய முதன்மைப்
பதவிகளை வகிக்க முடியும். மேலும் சுப கிரகமான குரு மேஷத்தில் இருந்தோ, தனுசில்
இருந்தோ வலுப் பெற்று தனது திரிகோணப் பார்வையால் சிம்மத்தைப் பார்ப்பவர்களும்
இதில் அடங்குவார்கள்.
இதில் அரசன் எனப்படுவது அக்கால வழக்கப்படி என்பதால், தற்கால நிலைப்படி வலுவான
சூரியனும், வலுப் பெற்ற சிம்மமும் ஒருவரை மக்கள் பிரதிநிதிகள் என்று
சொல்லப்படும் எம்.பி, எம்.எல்.ஏ ஆகவோ, அதன் மூலம் மந்திரி, முதல்வர், பிரதமர்
போன்ற பதவிகளிலோ இருக்க வைப்பார்கள்.
மேற்கண்ட இப்பதவிகள் குறிப்பிட்ட காலவரையறைகளை உடையவை என்பதால் அதாவது ஐந்து
வருடங்கள் மட்டுமே என்பதால், வலுவான சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டு,
நீடித்த யோக தசைகளும் நடக்கும் நிலையில், ஒருவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசை
வழிநடத்திச் செல்லும் அதிகாரமிக்க பதவிகளில் இருக்க வைத்து அரசின் ஒரு
அங்கமாக்குவார்.
நமது ஞானிகளால் சிவராஜ யோகம் என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் குருவும்,
சூரியனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அமைப்பும் ஒருவரை அதிகாரம் செய்ய
வைக்கும் அமைப்புத்தான். சூரியனிடமிருந்து பெறும் ஒளியை திரும்ப அவருக்கே
பிரதிபலித்து, தலைவனான சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவிக்கு தயார் செய்யும்
ஒரு அமைப்புத்தான் சிவராஜ யோகம் எனப்படும் குருவும் சூரியனும் சம சப்தமமாக
இருக்கும் நிலை.
இந்த யோக அமைப்பில் குருவும், சூரியனும் பலவீனமடையாமல் பகை, நீசம் போன்றவைகளை
அடையாமல் பாபக் கிரகங்களின் தொடர்பின்றி வலுவாக இருப்பதைப் பொருத்து, ஒருவர்
அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயரதிகாரி வரை மந்திரி முதல் பிரதமர் வரை
பதவி வகிக்கும் அமைப்பைப் பெறுவார்.
அதேபோல அமாவாசை யோகம், பவுர்ணமி யோகம் ஆகிய இரண்டும் சூரியனை வைத்தே
ஏற்படுகின்றன. இந்த யோகங்கள் அமையப் பெற்ற ஒருவரும் அரசாங்கத்தில் பணிபுரிவது,
அரசை இயக்கும் அமைப்பைப் பெறுவது போன்ற நிலையை அடைவார்.
அமாவாசை யோகம் என்பது சூரியனும், சந்திரனும் இணைந்திருப்பது. பவுர்ணமி யோகம்
என்பது சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருப்பது.
இந்த இரு யோகங்களிலும் சூரியனும், சந்திரனும் பலவீனமாகாமல் இருப்பதே நல்ல
அமைப்பு என்பதால் சூரியனும், சந்திரனும் நீசம் பெறும் துலாம் ராசியிலும்,
விருச்சிக ராசியிலும் இவை அமைவது சிறப்பான பலன்களைத் தருவதில்லை.
அதற்குப் பதிலாக சூரியன், சந்திரன் ஆட்சி, உச்சம் பெறும் சிம்மம், மேஷம்,
கடகம், ரிஷபம் ஆகிய இடங்கள் அந்த ஜாதகத்திற்கு ஆறு, எட்டு போன்ற கெட்ட
பாவங்களாக அமையாமல் நல்ல இடங்களாக அமைந்து அமாவாசை யோகம் உருவானவர்கள் சூரிய,
சந்திர தசை புக்திகளில் சிறப்பான நிலையை அடைவது உறுதி.
அதேபோல சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் ஒன்று, ஏழாக அமையும் பவுர்ணமி
யோகமும் சிறப்பான ஒரு யோகம்தான். குறிப்பாக மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய
மூன்று லக்னங்களில் பிறந்தவர்களுக்கு இந்த அமைப்பு நல்ல பலன்களைத் தரும்.
அதிலும் விருச்சிக லக்னத்திற்கு பவுர்ணமி யோகம் தர்ம கர்மாதிபதி யோகமாகவும்
அமையும் என்பதால் சூரிய, சந்திர தசை புக்திகளில் இவர்களுக்கு இரட்டிப்பு
நற்பலன்கள் கிடைக்கும்.
(ஜனவரி 10-2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
exellent statement, valga valamudan
ReplyDeleteநன்றி அய்யா...ஜோதிடம் பற்றி அறியாதவர்களும் தங்கள் கருத்துக்களை படித்தால் நிச்சயம் அதை பற்றி அறிய ஆவல் கொள்வர்..
ReplyDeleteஅருமை அய்யா
ReplyDelete🙏குருவே சரணம்... உண்மை குருவே, ஒளித் தத்துவமே ஜோதிடம். விளக்கம் அற்புதம். 🙏☺️
ReplyDelete