Monday, October 13, 2014

பரிகாரங்கள் எப்போது பலிக்கும்?

பி. ஆர். தங்கவேலு

பரமக்குடி

கேள்வி:

எனது மகள் சரண்யாவிற்கு எப்பொழுது வரன் அமையும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பதில்:

மகரலக்னம் சிம்மராசி மகம் நட்சத்திரமாகி, ஏழுக்குடைய சந்திரன் எட்டில் மறைந்து குடும்பவீடு எனப்படும் இரண்டாம் பாவத்தில் அஷ்டமாதிபதி சூரியனும் ராகுவும் அமர்ந்து ராசிக்கு இரண்டாம் வீட்டையும் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டையும் சனி பார்த்த ஜாதகம். தற்பொழுது அஷ்டமாதிபதி சூரியதசையில் சுக்கிரபுக்தி நடைபெறுகிறது.

செ
குரு
சூ.
ரா
ராசி
ல,பு
சுக்
சந்,
கே
சனி

கடுமையான தோஷ அமைப்புகள் இருப்பதால் உங்கள் மகளுக்கு தாமதமாக 28 வயதில் திருமணம் செய்வது நல்லது. மாலைமலர் போன்ற அனைவரும் படிக்கக்கூடிய நாளிதழில் பரிகாரங்களைச் சொன்னால் அதை இன்னொருவர் தனது தோஷத்திற்கும் எடுத்துகொள்ளும் அபாயம் இருப்பதால் நான் இங்கே பரிகாரங்கள் சொல்லுவது இல்லை.

பரிகாரங்கள் எனப்படுபவை ஒரு டாக்டர் தரும் மருந்து போன்றதுதான். நோய்க்கு தகுந்தாற் போல ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அதன் தோஷ அமைப்புகளின் படி இது மாறுபடும்.

மேலும் இந்த விஷயத்தில் ஜோதிடர் என்பவர் ஒரு போஸ்ட்மேன் போலத்தான். சித்தர்களும் ஞானிகளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ள முறையான வழிமுறைகளின் படி பரிகாரங்களை தேர்ந்தெடுத்து கேட்பவருக்கு டெலிவரி மட்டும் செய்வதுதான் அவர் வேலை. எந்த ஒரு ஜோதிடருக்கும் தானே உருவாக்கி பரிகாரங்கள் சொல்ல தகுதி இல்லை.

ஜோதிடர் என்பவர் சாதாரண மனிதர்தான். கடவுள் இல்லை. அந்தக் கோவிலுக்குப் போய் விளக்கேற்று, இந்தக் கோவில் அம்மனுக்கு மாலை சாத்து என்று ஒருவர் சொன்னால் அது நடக்கும் என அவசியமில்லை. ஒரு அனுபவமுள்ள சிறந்த ஞான ஜோதிடர் நமது ஞானிகள் சொன்னபடி ஒரு கிரகத்தின் இருப்பை சரியாகக் கணித்து அந்த கிரகம் ஜாதகருக்கு யோகக்கிரகமாகி வலுவிழந்து இருந்தால் பரிகாரமும் அவயோக கிரகமாக இருந்தால் ப்ரீத்தியும் சொல்ல வேண்டும்.

பரிகாரங்கள் என்றால் கிரகத்தின் ஸ்தலம் பூஜை நிறம் தான்யம் வாகனம் உலோகம் ராசிக்கல் போன்றவற்றை சரியாக கையாள வேண்டும். ப்ரீத்தி என்றால் ஹோமம் தான முறைகளைச் சொல்ல வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாத அனுபவமில்லாத சில ஜோதிடர்கள் சொல்பவைகளால் தோஷம் அதிகரித்து எதிர்மறை விளைவுகள் நடப்பதை நான் பார்க்கிறேன்.

பாபகிரகங்களான சனி செவ்வாயை அவயோக கிரகங்களாக கொண்டவர்களுக்கு சிலர் சொல்லும் வழிபாட்டு முறைகளால் இன்னும் அதிக கடன்தொல்லை தரித்திரம் நோய் திருமணதாமதம் போன்றவை நடப்பதை நான் அறிவேன். குறிப்பாக சனியை வழிபடுவதில் கவனமாக இருக்க வேண்டும். இதைப் பற்றி மாலைமலரில் விரிவாக எழுதுகிறேன்.

1 comment :

  1. திரு ஆதித்ய குருஜி அவர்களுக்கு, ஜாதகக் கட்டத்தில் குரு விடுபட்டிருக்கார். அதனால், பரிகாரம், ப்ரீத்தி பலன் தருமா என்று கணிக்க முடியுமா?

    ReplyDelete