கைப்பேசி : 9768 99 8888
லக்ன வாரியாக தனித் தனியே சர மற்றும் ஸ்திர லக்னங்களுக்கு சனி தரும் சச யோக
பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்......
இங்கு நான் குறிப்பிடும் பலன்கள் சனி தனித்து ஆட்சி, உச்சம் அடையும் நிலையைப்
பற்றியது. சனி வக்ரம் பெற்று அசுப பலம் இழந்திருந்தாலோ, சுபர்களுடன்
இணைந்தோ அல்லது அவர்களின் பார்வையைப் பெற்றிருந்தாலோ அல்லது வேறு வகையில் சூட்சும வலு
அடைந்திருந்தாலோ தன் கொடிய பலன்களைச் செய்ய மாட்டார்.
முக்கியமாக சனி, குருவைப் பார்க்காமல், குரு மட்டும் சனியைப் பார்க்கும் நிலையில்
விசேஷமான பலன்கள் இருக்கும். அதாவது குருவும், சனியும் சம சப்தமமாக இருக்கக்
கூடாது.
சனி நின்ற வீட்டிற்கு திரிகோணத்தில் ஒன்பதாமிடத்திலோ, ஐந்தாமிடத்திலோ குரு
அமர்ந்து சனியின் பார்வையை பெறாமல், குரு மட்டும் சனியைப்
பார்க்க வேண்டும். ஏனெனில் சனியின் பார்வையைப் பெறும் குருவும் தனது வலிமையை
இழப்பார்.
மீண்டும் சொல்கிறேன்.....
சனி என்பவர் டிகிரி காபியின் டிகாக்சன் மட்டும்தான். சூட்சும வலு அல்லது
சுபர்கள் தொடர்பு எனும் பால் மற்றும் சர்க்கரையைக் கலந்தால்தான் காபியாகி ருசி
தருவார். இல்லையெனில் வாயில் வைக்க முடியாத கசப்புத்தான்.
சசயோகம்
மேஷம் :
மேஷ லக்னத்திற்கு சனி பத்து மற்றும் பதினோராமிடங்களான ஜீவன மற்றும்
லாபாதிபதியாக அமைவார். மேஷத்தின் பாதகாதிபதியும் அவர்தான். இந்த லக்னத்திற்கு ஏழாமிடத்தில்
உச்சமும், பத்தாமிடத்தில் ஆட்சியும் பெற்று இரு நிலைகளில் சனி வலிமை பெற்று சச யோகம்
தருவார்.
ஏழாமிடத்தில் அவர் உச்ச பலம் மற்றும் திக்பலம் பெறும் நிலையில் பாக்ய ஸ்தானம், லக்னம் மற்றும்
நான்காமிடங்களை பார்வையிடுவார். ஒரு பாப கிரகமான சனி முழு வலிமை பெற்று மேற்சொன்ன
இடங்களைப் பார்க்கும் நிலையில் இந்த மூன்று பாவங்களும் பாதிக்கப்படும்.
சனி ஒன்பதாமிடத்தைப் பார்வையிடும் நிலையில் ஜாதகருக்கு தந்தையின் அன்பும்
ஆதரவும் கிடைப்பது அரிது. ஜாதகரின் தந்தை இருந்தும் பயன் இல்லாதவராக இருப்பார்.
அல்லது ஜாதகர் இளம் வயதில் தந்தையை இழக்கக் கூடும். ஒன்பதாம் அதிபதி குருவைப் பொருத்து
இந்த பலனில் கூடுதல் குறைவு இருக்கும்.
லக்னத்தை சனி வலிமை பெற்றுப் பார்ப்பதால் ஜாதகர் சுயநலவாதியாகவும், காரியம் முடிந்ததும்
காலை வாரும் இயல்புடையவராகவும், நன்றி இல்லாதவராகவும்
இருப்பார். அர்த்தமற்ற பிடிவாதமும், குதர்க்கமான எதிர்மறை
பேச்சுகளும் இவரிடம் இருக்கும். உண்மையை மறைக்கும் இயல்புடையவராகவும் இருப்பார்.
சுபத்துவ சூட்சும வலுப் பெற்றிருந்தால் ஜாதகருக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகமாக
இருக்கும்.
நான்காமிடமான வீடு, வாகனம், கல்வி, சுகம், அம்மா இவைகளுக்கு காரணமான சுக ஸ்தானத்தை சனி வலுப் பெற்று பார்க்கும் நிலையில்
மேற்சொன்ன அனைத்தும் வலு இழக்கும். மேற்கண்ட இனங்களில் சனி கெடுதல்களைச் செய்வார்.
அதேநேரத்தில் சனியே ஜீவன ஸ்தானதிபதியாகி உச்ச பலமும், திக்பலமும் பெறும்
நிலையில் தொழில் விஷயங்களில் சில நல்ல பலன்களைச் செய்வார். தனது காரகத்துவங்களில்
ஏதேனும் ஒன்றில் வியாபாரத்தையோ, தொழிலையோ அமைத்துத் தருவார்.
சனி அடிமை வேலைக்கு காரகத்துவம் உடையவர் என்பதால் சில நிலைகளில் மக்கள்
தொடர்பு சம்பந்தப்பட்ட வேலைகள், கிராமங்களில் பணி புரிதல், உள்ளாட்சி அமைப்புகள்
தொடர்பான பணிகள் ஜாதகருக்குக் கிடைக்கும். மேலும் அவர் உச்சமடையும் துலாம் ராசி சரத்
தன்மை கொண்டது என்பதால் சனி தசையில் வெளிநாட்டுத் தொடர்பும் கிடைக்கும்.
மேஷத்திற்கு பாதகாதிபதியான சனி ஏழாமிடத்தில் உச்சம் பெறுவது, பாதகாதிபதி இருக்கும்
பாவம் கெடும் என்பதன்படி வாழ்க்கைத் துணை அமைப்பை கெடுக்கும். பொதுவாகவே சனி இருக்கும்
இடத்தைக் கெடுப்பார். அதிலும் மேஷத்திற்கு பாதகாதிபதியாகவும் ஆகும் நிலையில் அவர்
இருக்கும் பாவம் முற்றிலும் செயல் இழக்கும்.
ராசிக்கோ, லக்னத்திற்கோ ஏழாமிடத்தில் வலிமை பெறும் சனி, ஆணுக்கு தன்னை விட
வயதில் மூத்த பெண்ணிடம் ஈர்ப்பையும், பெண்ணுக்கு
தன்னிலும் வயது குறைந்தவர்களிடம் மோகத்தையும் தூண்டுவார். சுபத்துவமற்ற சனி
முறையற்ற தொடர்புகளுக்கு வழி வகுப்பார். தாமத திருமணம், இரண்டு திருமணம் போன்றவை அமையும்.
திருமணத்திற்கு பின்பும் அமைதியற்ற வாழ்வு இருக்கலாம்.
பெண்களுக்கு இந்த இடத்தில் சனி இருப்பது சில முறையற்ற செயல்களில் அவர்களை
ஈடுபட வைக்கும். சிலர் தன்னை விட மிகக் குறைந்த, அல்லது மிக அதிக வயதுடையோரிடம் நட்புக்
கொள்வதற்கு ஏழாமிடத்து சனியே காரணம். இந்த பாவத்தில் ஸ்தான பலமும், திக்பலமும்
பெற்று தனித்து சனி இருக்கும் நிலையில் திருமண வாழ்வே சிலருக்கு கேள்விக்குறியாக அமையலாம்.
ஏழில் சனி இருப்பவர்களுக்கு நண்பர்களும் கூட்டாளிகளும் அமைவது அரிது. ஏனெனில்
இவர்கள் நண்பர்களுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள் என்பதால் தான்.
மேஷத்திற்கு இன்னொரு நிலையாக பத்தாமிடத்தில் ஆட்சி பெறும் சனி அங்கிருந்து
தனது 3, 7, 10 ம் பார்வைகளால் 12, 4, 7 ம் இடங்களைப்
பார்வையிடுவார். பனிரெண்டாமிடத்தை சனி பார்வையிடுவது ஒரு வகையில் நல்லதுதான்.
விரயங்கள் குறையும். ஆனால் தாம்பத்ய உறவு, மற்றும் உறக்கம்
போன்றவற்றில் ஜாதகருக்கு முழுமை இருக்காது.
நான்காமிட பார்வையால் ஜாதகருக்கு உடல்நலக் குறைவு, தாயாருடன் விரோதம்
அல்லது அம்மாவை இழத்தல், கல்வியில் குறை, வீடு, வாகன வகைகளில் சிக்கல்கள் போன்றவைகள் இருக்கும்.
ஏழாமிடத்தை சனி ஆட்சி பெற்றுப் பார்க்கும் நிலையில் தாமத திருமணம் அல்லது
காதல் கலப்புத் திருமணம், பொருத்தமற்ற வாழ்க்கைத் துணை, மண வாழ்வில்
சிக்கல்கள், சரியில்லா நட்பு, கூட்டுத்
தொழிலில் நஷ்டம் போன்ற பலன்களைச் செய்வார்.
பத்தாமிடத்தில் சனி ஆட்சி பெறுவதால் “ஜீவனாதிபதி ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி
பெற்றிருப்பதால் நல்ல தொழில் அமையும்” என்ற விதி இங்கு
செல்லுபடியாகாது. இங்கு சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாத நிலையில் சனி இருக்கிறார்
எனில் பாதகாதிபதி பத்தாமிடத்தில் வலுவாக இருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
மேஷத்திற்கு பாக்யாதிபதியான குருவின் தசையில் ‘ஓஹோ’ வென்றிருந்து,
தனித்து பத்தாமிடத்தில் ஆட்சி பெற்ற சனி தசையில் முற்றிலும் சரிவைச் சந்தித்த
எத்தனையோ ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். சனி எந்த இடத்தில் வலுப் பெற்றாலும்
அந்த இடத்தைக் கெடுக்கவே செய்வார்.
ரிஷபம் :
இந்த லக்னத்திற்கு ஒன்பது மற்றும் பத்தாமிடங்களுக்கு சனி அதிபதி ஆவார்.
பனிரெண்டு லக்னங்களிலும் தர்ம கர்மாதிபதி யோகத்தை அனுபவிக்க இயலாதவர்கள் ரிஷப
லக்னக்காரர்கள் மட்டுமே ஆவார்கள் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
இயற்கைப் பாபக் கிரகமான சனி ஒன்பதாமிடமான திரிகோணத்திற்கு அதிபதி ஆவதால் இந்த
லக்னத்திற்கு பாதகாதிபதியாக ஆவார். ஆகவே துலாம் லக்னத்தைப் போல பூரண ராஜயோகாதிபதி
என்று சனியை ரிஷபத்திற்குச் சொல்ல முடியாது.
ரிஷபத்திற்கு பெருங் கேந்திரமான பத்தாமிடத்தில் ஆட்சி பலமும், மூலத் திரிகோண
பலமும் பெற்று சச யோக நிலையை சனி பெறுவார்.
பத்தில் அவர் வலிமை பெறுவதால் ஜீவனாதிபதி வலுப் பெற்று விட்டார் என்றோ, ஒன்பதுக்குடையவன்.
பத்தில் பலம் பெறுவது ஒரு வகையில் தர்ம கர்மாதிபதி யோகம் என்றோ, தொழில் ஸ்தானம் வலுவாகி விட்டதால் இன்னொரு அம்பானிதான் என்றெல்லாம் சொல்லி
விட முடியாது.
சூட்சும வலு என்ற எனது தியரிப்படி ஏதேனும் ஒரு வகையில் சனி வலுப்
பெற்றிருந்தாலோ, அல்லது இந்த லக்னத்தின் சுபரான புதனின் தொடர்பு, பார்வையைப் பெற்றிருந்தாலோ
சனி கெட்ட பலன்களைச் செய்யாமல் தனது காரகத்துவங்களில் ஏதேனும் ஒரு வகையில் பொருள்
அளிப்பார்.
இந்த லக்னத்திற்கு ஆறு மற்றும் எட்டுக்குடைய பாவிகளான இயற்கை சுபர்கள் குரு,
சுக்கிரனின் பார்வையைப் பெறுவது கூட நல்லதுதான்.
இங்கிருக்கும் சனி ஜாதகருக்கு நிரந்தரமில்லாத தொழிலையோ, நிலையில்லாத வேலை
வாய்ப்பையோ அளிப்பார். ஜீவன வகையில் அடிக்கடி மாற்றம் இருக்கும் அல்லது எங்கேனும்
சாதாரண அடிமை வேலை பார்க்க வைப்பார். பத்தாமிடத்திலிருந்து சனி 12,4,7 ம் இடங்களைப் பார்ப்பார் என்பதால், மேஷ லக்னத்திற்கு
சொன்ன பலன்களே ரிஷபத்திற்கும் பொருந்தும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
(மார்ச் 14-20, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது .)
No comments :
Post a Comment