(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ,
சோ, சை, ல,
லீ, லு, லோ,
அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)
மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்போகும் தமிழ்
புதுவருடமான பிலவ ஆண்டு நல்ல பலன்களைத் தருவதாகவும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல
பலன்களை தருவதாகவும் இருக்கும்.
புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டான
பிலவ வருடத்தில் மேஷ ராசிக்கு உள்ள சிறப்பான அம்சங்கள் என்னவென்று
பார்த்தோமேயானால், ராசிக்கு பத்தாமிடத்தில் பாபக்கிரகமான சனி ஆட்சி பெற்ற நிலையில் குறிப்பிட்ட மாதங்கள் சுபத்துவ நிலையிலும் இருப்பது
அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே
வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
பாபக்கிரகங்கள் உபஜெய ஸ்தானங்கள்
எனப்படும் மூன்று, ஆறு,
பத்து, பதினொன்றில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள்
குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்ட சில
மாதங்களுக்கு சனி வலுவாக இருப்பத மேஷ ராசிக்கு நல்லது.
இந்த அமைப்பு தொடர்ந்திருக்கும் காலம் வரைக்கும் உங்களுக்கு யோகமான காலம்தான்.
மேஷ ராசிக்காரர்கள் ஒருவகையில் கோபக்காரர்கள்
என்றாலும் எதிலும் நடுநிலை கொண்ட நேர்மையானவர்கள்
என்பதாலும், எந்த ஒரு வேலையையும் அர்ப்பணிப்பு
உணர்வுடன் செய்வீர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள்
என்பதாலும் இந்த வருடம் நல்லபடியாக இருப்பீர்கள்.
பொதுவாக மேஷத்தினர் மற்றவர்கள்
பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட
அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற
முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.
புது வருடத்தின் ஆரம்பத்தில் சிறிதுகாலம்
அதிசார நிலையில் குரு இருந்தாலும், பிற்பகுதியில் வரவிருக்கும் நேர்முகமான குருப்பெயர்ச்சி காலம் உங்களுக்கு
மாற்றங்கள் நிறைந்த காலமாக இருக்கும். இந்த மாறுதல்கள் அனைத்தும் ஏற்கனவே
இருக்கும் நிலையைவிட உயர்ந்த நிலையைத்தான் தரும்.
பிலவ வருடத்தின் பிற்பகுதியில் உங்களின்
எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்கும். தற்போது இருக்கும் இடத்தை விட்டு வெளியே
சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித்
தயங்கி ஒரே இடத்தில் இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில் வெளியே அனுப்பும்.
அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத்
தோன்றினாலும் சிலகாலம் கழித்து எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப்
புலப்படும். அதன் பிறகு நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.
எனவே புது வருட இறுதியில் எதிர்காலத்தில்
நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை
நிகழ்வுகள் நடக்கும். கிரகங்கள்
தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.
இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல்
கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த மேஷ ராசிக்காரர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை
இந்த வருடத்தில் இருந்து காண்பீர்கள். வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும்.
பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும்.
உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும்.
வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு
வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில்
அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன்
கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.
இளையபருவத்தினருக்கு இந்தப் புதுவருடம்
யோகத்தைத் தரும் என்பதோடு மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும்
துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் வருடமாகவும் அமையும். இன்னும் வேலை திருமணம்
போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற வேலை
கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.
வியாபாரிகளுக்கு லாபம் இருக்கும் என்பதால்
குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது.
சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன்
செயல்படுத்துவது நல்லது.
அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை
பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள்
கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ
கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை
நம்ப வேண்டாம்.
சனி ஆட்சி நிலையில் சுபத்துவமாக இருப்பதால் சிலருக்கு ஆலயப்பணி செய்யும்
பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக
முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா
பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது
கிடைக்கும்.
ரிஷப ராகுவின் இரண்டாமிட சுபத்துவ
நிலையினால் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற
மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை
இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
சிலர் தங்களுடைய எதிர்கால
வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரும் நேரம்
இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின்
சம்மதம் கிடைக்கும். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது
நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு
உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.
தொழில் வியாபாரம் வேலை மற்றும்
இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும்.
உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி
செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.
சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம்
உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள்
கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக்
காப்பாற்றுவீர்கள். சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும்
உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ
முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள்
இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள்
இருக்கும்.
வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில்
அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு
சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம்
சிகிச்சைக்கு செல்வது நல்லது. இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய
நண்பர்கள் கிடைப்பார்கள்.
தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம்
உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில்
உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள்
மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஏதேனும்
ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.
வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின்
தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள்
மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது
நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில்
முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு
கிடைக்கும்.
இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.
குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச்
சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து
வாங்க முடியும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.
வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை
அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில்
இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை
அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
பெண்களுக்கு இந்த வருடத்தில் நல்ல பலன்கள்தான்
அதிகம் இருக்கும். குடும்பத்தில் செலவுகள்
அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு
திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தள்ளிப் போய் இருந்த
பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் கிடைக்கும்.
சனியின் பத்தாமிட நிலையினால் உங்களில்
சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள்.
தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது
இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால்
கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
மொத்தத்தில் பிறக்க இருக்கும் தமிழ்ப்
புத்தாண்டு மேஷத்திற்கு கவலைகளைப் போக்கும் ஒரு ஆண்டாக இருக்கும்.
No comments :
Post a Comment