Saturday, November 17, 2018

குருஜியின் 2018-கார்த்திகை மாத பலன்கள் - GURUJIYIN KARTTIKAI MADHA PALANGAL


ஜோதிடக்கலைஅரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி எண் :8870998888 

மேஷம்:

கார்த்திகை மாத ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் சந்திரனுடன் இணைந்து சுபத்துவ நிலையில் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதால் இது உங்களுக்கு சந்தோஷமான மாதமாக இருக்கும். ராசிநாதனின் வலுவால் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரிகள், தொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார் ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். 


சிலர் தாங்கள் எதிர்காலத்தில் சாதிக்க போகும் துறையினை தேர்ந்தெடுப்பதும், இன்னும் சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நபர்களை சந்திப்பதும் இந்த மாதம் நடக்கும். இளையவர்களுக்கு இது சிக்கல் இல்லாத மாதம்தான். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு திருப்பங்கள் இருக்கும். உயர் படிப்பு படிக்கவோ, அரசுத்தேர்வு எழுதவோ இருந்த தடைகள் விலகி விட்டன. இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் சாதகமாக முடியும். சிலர் பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள்.

தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. அதேநேரத்தில் கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ அருகில் வராது. சாப்ட்வேர் துறையினருக்கு வேலைப்பளு இருக்கும். பெண்களால் நன்மைகளும், வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ள மாதமாக இது இருக்கும். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்கும் காலமாக இருக்கும். மருந்து எப்போதுமே கசக்கும் என்றாலும் அது நோயை தீர்க்கும் என்பதால் இப்போது உங்களுக்கு நடக்க இருக்கும் மாற்றங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. உங்களில் சிலருக்கு வெளிநாடு யோகம் உண்டு. இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை.

ஆறாமிடமாக இருந்தாலும் ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி வரும். தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் என்றும் உங்களுக்கு சந்தோசம்தான். அதே நேரத்தில் சிறிய உடல்நல பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.. தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். நினைத்த வாகனம் அமையும். 

அஷ்டமச்சனி நடப்பதால். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. ராசிக்கு குருபார்வை இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இது முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

மிதுனம்:

கார்த்திகை உங்களுக்கு நல்ல மாதம்தான். ராசிநாதன் புதன் ஆறில் இருந்தாலும் மாதம் முழுவதும் குருவுடன் இணைந்து சுபத்துவமாக உள்ளது யோக அமைப்பு என்பதால் இந்தமாதம் மிதுனத்திற்கு நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். குருவின் பார்வையால் தொழில் ஸ்தானம் வலுப் பெறுவதால் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பள உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து நண்பராக மாறுவர்கள். 

வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் நன்மைகள் உண்டு. சிலருக்கு இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு, சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் இனி விலகும். பணவரவு நன்றாக இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. 

இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை, தொழில், அமைப்புகளில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சனி ராசியை பார்ப்பதால் பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் வரப்போகும் இரண்டு வருடங்களில் சிக்கல் வரும். கடன் வாங்குவதில் கவனம் தேவை.

கடகம்:

ராசியின் யோகர்களான குருவும், சூரியனும் இணைந்து லாப ஸ்தானத்தை பார்ப்பது நல்ல அமைப்பு என்பதால் இந்த மாதம் கடகத்திற்கு நல்ல பலன்கள் இருக்கும். கார்த்திகை முழுவதும் சுபநிகழ்ச்சிகளும், தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகளும், பணவரவும் உண்டு. சிலர் தொழில் துறையில் சாதனை படைப்பீர்கள். சிலருக்கு பொருள் சேர்க்கை இருக்கும். எதிலும் லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் எட்டில் இருந்தாலும் யோகர் செவ்வாயுடன் இணைந்து உங்களின் பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் இருக்கிறார் என்பதால் இது குறை சொல்ல முடியாத மாதம்தான். குறிப்பாக இது பணவரவுகளையும், நன்மைகளையும் செய்யும் மாதமாக இருக்கும். கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ இருக்காது. புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. 

வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை முடிப்பீர்கள். ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். ஐந்தாமிடத்தில் இருக்கும் குருவினால் இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும். 

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் கார்த்திகை மாதம் முழுவதும் தனது நண்பரான செவ்வாயின் வீட்டில், நண்பரான குருவுடனும், தன்னை நண்பராக நினைப்பவரான புதனுடனும் இணைந்திருக்கிறார். இது உங்களுக்கு சந்தோஷங்களையும் நன்மைகளையும் தரும் நிலை என்பதால் இந்த மாதம் எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாமல் நல்லமாதமாகவே இருக்கும். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். 

இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் இருக்கும். இன்னும் சில காலத்திற்கு கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது உறுதி. எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. செவ்வாய், குரு வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். 

குருபகவான் தொழில் வீடான பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் எல்லாவற்றையும் சுலபமாக சமாளிப்பீர்கள். ஜீவன ஸ்தானம் வலுப்பெறுவதால் வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கார்த்திகை மாதம் சிம்மத்திற்கு நல்லவைகளை செய்யும் சிறப்பான மாதம்தான். 

கன்னி:

ராசிநாதன் புதன் குருவுடன் இணைந்து சுபத்துவமாக இருப்பதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும் மாதம் இது. கன்னிக்கு இப்போது அதிர்ஷ்டம் துணை நிற்கும். சிலருக்கு பணவரவுகளும், நன்மைகளும், நண்பர்கள், உறவுகள் மூலம் உதவிகளும் உண்டு. இளைஞர்களுக்கு வயதுக்கே உரிய சில கேளிக்கை அனுபவங்கள் இருக்கும். சிலர் அந்தஸ்து, கௌரவம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களையும், சம்பவங்களையும் அடைவீர்கள். சுக்கிரனும், சனியும் நல்ல நிலையில் இருப்பதால் சந்தோஷமான மாதம் இது. 

ஒன்பதாமிடம் குரு பார்வையுடன் வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். விவசாயத்துறையில் உள்ளவர்கள் வளம் பெறுவார்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக வரிவசூல் செய்யும் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் இப்பொழுது கூடி வரும். 

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி நிலையில் இருப்பதால் இந்தமாதம் துலாம் ராசிக்கு தொழில் ரீதியான பிரயாணங்களால் நன்மைகளும், பணவரவும் இருக்கும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது உண்டு. ராகுபகவான் பத்தாமிடத்தில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும்.

சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் குறைவதற்கு வாய்ப்பில்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டு. மாதம் முழுவதும் தொழில், வேலை, வியாபாரம் போன்ற இனங்களில் நல்லவைகள் நடக்கும்.

அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். துலாம் ராசி பெண்களுக்கு மிக நல்ல பலன்கள் நடக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள்.

விருச்சிகம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் சந்திரனுடன் இணைந்து சுபத்துவ நிலை பெற்றிருப்பதால் பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. வேலை, தொழில் போன்றவற்றில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் நிம்மதி அடைவீர்கள். ஜென்மச்சனி அமைப்பை கடந்து வெகுதூரம் வந்து விட்டதால் இனி விருச்சிகத்திற்கு சங்கடம் தரும் நிகழ்வுகள் எதுவும் இல்லை. அனைத்திலும் ஆறுதல் பெறும் மாதம் இது.

விருச்சிகத்திற்கு இனி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும் என்பது உறுதி. அதேநேரத்தில் நிதானமாகத்தான் நடக்கும். கவலை வேண்டாம். விருச்சிக ராசிக்காரர்கள் இனிமேல் கலங்கத் தேவையில்லை. இனி உங்களுக்கு நல்ல காலம்தான். கடந்த ஐந்து ஆண்டு காலமாக உங்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்த பிரச்னைகளை இனி வெற்றி கொள்வீர்கள். கிரகங்கள் நல்ல அமைப்பில் இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு மன தைரியத்தைத் தரும் நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். 

சூரியன் வலுப்பெறுவதால் வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த அனைத்தும் முடிவுக்கு வரும். இனிமேல் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் தேடி வரும். சிலருக்கு வீடு, குடும்பம், வேலை, தொழில் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாத மாறுதல்கள் இருக்கும். அந்த மாறுதல்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லவையாக அமையும் என்பதால் வருகின்ற மாறுதல்களை ஏற்று கொண்டு அதன்படி நடப்பது நல்லது. 

தனுசு:

இந்த மாதம் தனுசு ராசி இளைஞர்களின் செயல்கள் அனைத்திலும் பதற்றமும், படபடப்பும் காணப்பட்டாலும் உங்களின் மனோதைரியம் கூடுதலாகும். ராசியில் இருக்கும் ஜென்மச்சனியால் சிலருக்கு சூதாட்டம், பங்குச்சந்தை, லாட்டரி போன்றவைகளில் திடீர் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம். முதலீடும் செய்ய வேண்டாம். பெரியவர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. 

சிலருக்கு மறைமுகமான வழியில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும். ரியல் எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள், பெருவணிகர்கள் போன்றோருக்கு வருமானம் இருக்கும். சிலருக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். கைப்பொருள் திருட்டுப் போகுதல், பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கும் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. 

நிர்வாகப் பதவியில் இருப்பவர்கள் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட மற்றவர் அடங்கி போவது நல்லது. 

மகரம்:

மகர ராசி இளைஞர்களுக்கு வேலை, தொழில் அமைப்புகளில் இப்போது மந்த நிலை இருக்கும். சிலருக்கு செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வரும். சிக்கனமாக இருக்க வேண்டிய மாதமிது. ஏழாமிட ராகு பணவரவுகளையும், வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. அலுவலகத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். சில குழப்பங்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று பழி சுமத்தப்படுவீர்கள். 

ராசியில் இருக்கும் கேதுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக செய்வீர்கள். மகர ராசி இளைஞருக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும் மாதம் இது. கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. அதே நேரத்தில் யோகக் கிரகங்கள் நல்லநிலையில் இருப்பதால் முன்னர் நீங்கள் அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த மாதம் முறைப்படுத்திக் கொள்ள முடியும். 

நடுத்தர வயதினருக்கு நல்ல பொருளாதார நிலையும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் இருக்கும். வருமானத்தை சேமிக்கத்தான் முடியாது. அரசியல்வாதிகளுக்கும், அரசுத் துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது. வெளிநாட்டு விஷயங்களில் லாபம் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் மேன்மையடைவார்கள். உங்களில் சிலர் அடிக்கடி டென்ஷன் ஆவீர்கள். சிலர் அக்கா, தங்கைகளின் திருமணத்தை நடத்தி பார்ப்பீர்கள். 

கும்பம்: 

பாக்யாதிபதி சுக்கிரன் வலுப் பெறுவதால் உங்களில் சிலருக்கு வாழ்க்கைத் துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதம் இது. சிலருக்கு கணவர் மூலம் சந்தோஷமான விஷயங்களும், இன்னும் சிலருக்கு மனைவியினால் ஆதாயங்களும் உள்ள மாதம் இது. ஆறாமிடத்தில் ராகு சுபநிலை பெறுவதால் லாபங்களும், பண வரவுகளும் அந்நிய, இன, மத, மொழிக்காரர்களால் நன்மைகளும் உண்டு. இதுவரை பயமுறுத்தி கொண்டிருந்த விஷயங்கள் நல்லவிதமாக மாறும். கும்பத்திற்கு கெடுபலன்கள் எதுவும் இல்லை. 

இளைஞர்களுக்கு நல்லவை நடக்க ஆரம்பிக்கும் மாதம் இது. கார்த்திகையின் சிறப்புப் பலனாக ராசியில் செவ்வாய் இருப்பதால் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். பிறர் மீது குறை கண்டுபிடித்து கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். ஆனால் இதை மறந்து யாரிடமாவது கோபத்துடன் பேசி இந்தமாதம் அவரை விரோதியாக்குவீர்கள். அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வீடு மாற்றம், வாகன மாற்றம் இருக்கும். 

உங்களில் சதயம் நட்சத்திரக்கார பணியாளர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவதற்கோ, சம்பளம் தாமதம் ஆவதற்கோ வாய்ப்புக்கள் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானங்கள் உண்டு. சுய தொழிலர்களுக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும் பணத் தட்டுப்பாடு இருக்காது. செலவுக்கேற்ற பணவரவு இருக்கும். பொருளாதார நிலைமை கெடாது. பணம் இருப்பதால் எதையும் சமாளிக்கலாம். வருங்கால முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும் மாதம் இது. 

மீனம்:

மீனத்திற்கு இது குறைகள் இல்லாத மாதம்தான். மாதத்தின் பிற்பகுதி அதிக நன்மைகளைச் செய்யும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதி உண்டு. நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்பொழுது பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவில் வந்து அவதரிப்பார். சிலருக்கு அரசு வேலை உண்டு. வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வேலை இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள். சோம்பலை ஒதுக்கி வைத்து விட்டு முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

ராசியை குரு பார்ப்பதால் உங்களின் மனதைரியம் அதிகரித்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. உங்களில் சிலருக்கு எப்படி இந்த வருமானம் வந்தது என்று அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள முடியாத பணவரவு கிடைக்கும். ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து நன்றாக செயல்படுவீர்கள் என்பது நிச்சயம். சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

குறிப்பிட்ட ஒருபலனாக வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். ரேவதி நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அதிக நன்மை இருக்கும்.. வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினருக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. உங்களின் நீண்டநாள் கனவு நனவாகும். மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும் வேற்று மதத்தினர் உதவுவார்கள். தந்தைவழி உறவில் நல்ல பலன்கள் இருக்கும். மீனத்திற்கு இனி சிக்கல்கள் இல்லை. 

No comments :

Post a Comment