Saturday, 2 June 2018

பிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா?D-009(B)- Pradhamar Modikku Viruchiga Rasiya?


சென்ற வாரக் கட்டுரையைப் படித்து விட்டு பிரதமர் மோடிக்கு விருச்சிக ராசிதானே, அவர் ஏழரைச்சனியில் தானே ஆட்சியைப் பிடித்திருக்கிறார் என்ற கேள்விகள் வந்திருக்கின்றன.

தகுந்த ஆதாரம் இல்லாமல் ஒருவருடைய பிறந்த ஜாதகத்தை நான் நம்புவதில்லை என்பதை சில வாரங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன். இணையத்தில் பிரதமர் மோடி ஜாதகம் என்று 11 ஜாதகங்கள் இருக்கின்றன. இதில் எது உண்மை என்று யாருக்குத் தெரியும்?

பிரதமர் மோடி அவர்கள் விருச்சிக ராசியில் தான் பிறந்திருக்கிறார் என்பது நிச்சயமற்றது. இன்னும் சொல்லப் போனால் 60 ஆண்டுகளுக்கு முன் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த அவரது ஜனன நாள், நேர விபரங்களை அவரே துல்லியமாக அறிவாரா என்பதும் சந்தேகத்திற்குரியது. பிறந்தநேரம் பற்றிய இத்தனை பெரிய விழிப்புணர்வும், தொழில் நுட்ப வசதிகளும் இல்லாத ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்த அனைவரின் குறிப்புகளும் தோராயமானதே.

மோடி அவர்கள் பிறக்கும் போதே பிரதமர் ஆவார் என்று யாரும் அவரது ஜாதகத்தை எழுதி பத்திரப்படுத்தி இருக்கப் போவது இல்லை. அவர் ஓரளவிற்கு முன்னிலைக்கு வந்த பிறகே அவரது குடும்ப உறுப்பினர்களிடமோ, வேறு சில வழிகளிலோ அவரது பிறந்த விபரங்களை சேகரித்து இதுதான் அவரது ஜாதகம் என்று காட்டப்படுகிறது. அது ஒருபோதும் துல்லியமானதாக இருக்காது.

அக்காலத்தில் ஜோதிட நம்பிக்கையுள்ள குடும்பங்களில் மட்டுமே குழந்தை பிறக்கும் சரியான நேரத்தை குறித்து வைக்கும் வழக்கம் இருந்தது. இங்கே பலரின் பிறந்த நேரங்கள் குத்துமதிப்பானதுதான். அதிலும் ஒரு குழந்தை நள்ளிரவில் பிறந்திருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. நேரம் முன்பின்னாகத்தான் இருக்கும். அதேபோல கிராமங்களில் பிறந்தவர்களின் விபரங்களும் தோராயமானதுதான்.

பொதுவாழ்வில் உள்ளவர்களின் ஜாதகங்கள் என்று இணையத்திலும், ஊடகங்களிலும் வருபவற்றை நம்பாதீர்கள் என்று என்னைப் படிப்பவர்களை அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மறைந்த எம்ஜிஆர் அவர்களின் உண்மையான ஜாதகமும் ஒரு சாட்சி.

எம்ஜிஆர் அவர்கள் 17-1-1917 அன்று பிறந்ததாக ஒரு ஜாதகத்தை எழுதி சில ஆண்டுகளுக்கு முன் பலன் சொன்ன அத்தனை ஜோதிடர்களும் உண்மையில் ஜோதிடத்தின் உண்மைத்தன்மையைக் குறைத்தவர்கள்தான். ஜோதிடம் ஒருபோதும் சமரசத்திற்கு உள்ளாகாது. ஜாதகத்தை மதிப்பிடும்போதே அது குப்பை அள்ளுபவன் ஜாதகமா, கோடீஸ்வரன் ஜாதகமா என்று கணிக்க இயலாமல் கையில் கிடைத்த நேரத்தை வைத்து அதற்குத் தகுந்தாற்போல் பலன் எழுதுவதற்கும், சொல்வதற்கும் பெயர் ஜோதிடம் அல்ல.

எந்த ஒரு பிரபலமும் தன்னுடைய உண்மையான ஜாதகத்தை வெளிப்படையாகத் தருவதில்லை அல்லது அவரது பிறந்த நேர குறிப்புகள் துல்லியமாக அவருக்கே தெரியாது. அப்படியே தெளிவாகத் தெரிந்தாலும் உண்மையான ஜாதகத்தை வெளியே சொல்வதில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. ஜோதிடர்கள்தான் ஆர்வக் கோளாறில் தனக்குக் கிடைக்கும் ஜாதகப்படி பிரபலங்களின் பலன்களை எழுதி, அந்தக் கணிப்பு தவறி ஜோதிடத்தின் மாண்பைக் கெடுக்கிறார்கள்.

இணையத்தில் உள்ள ஜெயலலிதா, ரஜினி போன்றவர்களின் ஜாதகங்கள் இதற்கு விதிவிலக்கு. எனக்கு நன்கு தெரிந்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் பத்தாவது வரை படித்த அவரது தோழியின் மூலம் நான் ஜெயலலிதாவின் ஜாதகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறேன். ரஜினிகாந்த் அவர்களின் ஜாதகமும் ஒருமுறை அவருக்கு நெருக்கமான ஒருவரால் என்னிடம் உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோல கலைஞர் அவர்களின் துல்லியமான பிறந்த நேரமும் எவருக்கும் தெரியாது. ஒரு கால் மணி நேர இடைவெளிக்குள் தான் அவரது ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

ஆகவே பிரதமர் மோடி அவர்களின் ராசி விருச்சிகம் என்பது தவறாக கூட இருக்கக் கூடும். அப்படியே அவர் விருச்சிக ராசியாக இருந்தாலும், முப்பது வருடங்களுக்கு முன் (அவருக்கு முந்தைய சுற்று ஏழரைச் சனி நடக்கும்போது) தான் கடுமையான கஷ்ட சூழல்களில் இருந்ததை அவரே பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். பொதுவாக ஐம்பது வயதுகளில் ஆரம்பிக்கும் பொங்கு சனி நன்மைகளைச் செய்யும் என்பதும் ஒரு பொதுவிதிதான்.

(01-06-2018 மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :

  1. dear sir.
    Mr modhiji date of birth is September 17 1950 time of birth is 9.34 am place of birth is Vadnagar. this particulars was given by his brother to P.V. Narashima rao ( not politition) Astrologer uSA. This astrologer is from andrapradesh. this you can verify in Jahanthahora web site.or saptarishi astrology.
    thankyou
    ezhhl

    ReplyDelete