Tuesday, May 15, 2018

Meenam: 2018 Vaigaasi Matha Palankal – மீனம்: 2018 வைகாசி மாத பலன்கள்

மீனம்:

மீனராசிக்கு இனிமேல் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடும் மாதமாக வைகாசி மாதம் இருக்கும். உங்களில் சிலருக்கு நல்லவை நடக்க இருந்து வந்த இடையூறுகள் விலகி விட்டதால் இனிமேல் கவலை எதுவும் இல்லை. இளைய பருவத்தினர் சிலருக்கு தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் வாய்ப்பும் இளமைப் பருவத்திற்கே உரிய காதல் அனுபவங்களும் உண்டு. சிலருக்கு வேலை மாற்றங்கள் உண்டு.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். பெரியதொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும். வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும். எல்லா பிரச்சனையும் நவம்பரில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சி வரைதான். நவம்பர் முதல் அதிர்ஷ்டம் ஆரம்பிக்கிறது.

No comments :

Post a Comment