Saturday, 26 May 2018

குருஜியின் மாலைமலர் வார ராசி பலன்கள் (28-5-2018 - 03-6-2018)

மேஷம் :

அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. உழைப்பும், முயற்சியும் இப்போது நிறைவான வெற்றியைத் தரும் என்பதால் உழைப்பவர்களுக்கு இந்த வாரம் அபாரமான நன்மைகள் உண்டு. நீங்களும் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதை இந்த வாரம் நிரூபிப்பீர்கள். மேஷநாதன் செவ்வாயும், யோகாதிபதிகள் சூரியனும், சந்திரனும் நல்லநிலையில் இருப்பதால் மேஷத்திற்கு மனமகிழ்ச்சியும் நிறைவான பாக்கியங்களும் கிடைக்கும் வாரம் இது. குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு.

எல்லா நிலைகளிலும் நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும் என்பதால் இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். 28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 28ம் தேதி மாலை 4.39 மணி முதல் 31ம் தேதி அதிகாலை 3.12 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

ரிஷபம் :

ராசிநாதன் சுக்கிரனும் யோகாதிபதி புதனும் வாரம் முழுவதும் பரிவர்த்தனை அமைப்பில் இருக்கும் நல்ல வாரம் இது. எப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் அது உங்கள் அருகில் கூட நெருங்காது என்பதால் நீங்கள் தயக்கங்களை உதறி சாதிக்கும் வாரம் இது. பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரியஅளவில் முதலீடு செய்ய வேண்டாம். முதலில் சிறிது வருமானம் வருவது போல தெரிந்தாலும் கடைசியில் உள்ளதும் போய் விடும். உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள்.

சிலருக்கு கடன் பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். 28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 31-ம்தேதி அதிகாலை 3.12 மணி முதல் 2-ம்தேதி மதியம் 3.37 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம் தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது. காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு நன்மைகள் உண்டு.

மிதுனம் :

பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதன் மூலம் ராசிநாதன் புதன் ராசியிலேயே ஆட்சியில் இருக்கும் நிலை பெறுகிறார். இது மிதுனத்திற்கு யோகங்களைத் தரும் என்பது நிச்சயம். இந்தவாரம் உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு.

சிறு விஷயத்திற்கு கூட அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். கடன் பிரச்சினையில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதனை தீர்ப்பதற்கான ஆரம்பங்களும், வழிமுறைகளும் தோன்றும். 28,29,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம்தேதி பகல் 3.37 மணி முதல் 5-ந்தேதி அதிகாலை 4.33 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.

கடகம் :

யோகாதிபதிகள் சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் இந்த வாரம் வலுவான நிலையில் இருப்பது கடக ராசிக்கு எதிர்மறை பலன்கள் அனைத்தையும் நீக்கி புத்துணர்ச்சியும் புது வாழ்க்கையும் தரும் அமைப்பு என்பதால் கடகத்திற்கு கெடுதல்கள் சொல்ல எதுவும் இல்லை. சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்.

இதுவரை சொந்த வாழ்க்கையிலும் வேலை, தொழில் போன்ற அமைப்புகளிலும் ஏமாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். தந்தைவழியில் எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிறுகலைஞர்கள் பிரபலமாவீர்கள்.

சிம்மம் :

சிம்மநாதன் சூரியன் வலுவாக இருப்பதால் சிம்மத்திற்கு பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் யோகம் தரக்கூடிய வாரமாகவும் இது இருக்கும். உங்களின் யோக வாரம் இது. உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். சகோதர உறவு நன்றாக இருக்கும்.

எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் லாபங்கள் குறைவாகத்தான் இருக்கும். தனஸ்தானம் வலுப் பெறுவதால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலைசெய்வோர் போன்ற துறையினருக்கு நல்ல பலன்கள் நடைபெறும். பணவரவு சரளமாக இருக்கும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் பணத்திற்கு தட்டுபாடு இருக்காது. எனவே எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும்.

கன்னி :

ராசிநாதன் புதன் பரிவர்த்தனை பெறும் யோக வாரம் இது. இந்த வாரம் வேலை, தொழில் சாதிப்பீர்கள். புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. குடும்பத்திலோ, அலுவலகத்திலோ ஒருவர் ஏதாவது பேசி விட்டாலோ, திட்டி விட்டாலோ பொறுத்துப் போங்கள். மனம் விட்டு பேசினாலே பிரச்னைகளை இல்லாமல் செய்து விடலாம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் வாரம் இது. வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள்.

துலாம் :

ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் பரிவர்த்தனையாகும் நிபந்தனைகளுக்குட்பட்ட நல்ல வாரம் இது. இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் இனி நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். ராசிநாதன் சுக்கிரன், பாக்கிய ஸ்தானாதிபதி புதன் இருவரும் பரிவர்த்தனையாக இருப்பது தோஷங்களை விலக்கி யோகங்களை அளிக்கும் அமைப்பு என்பதால் இது உபயோகமுள்ள வாரம்தான். நவம்பரில் நடக்கும் குருப்பெயர்ச்சி முதல் துலாத்தின் வாழ்க்கை வசந்தமாக மாறும்.

துலாம் ராசி இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு இருப்பதால் வாரம் முழுமையும் மேன்மையான வாரமாக அமையும் என்பது உறுதி. ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.

விருச்சிகம் :

மூன்றாமிடத்தில் வலுப்பெற்று இருக்கும் ராசிநாதன் செவ்வாய் உங்களுக்கு தைரியத்தையும் அதன்மூலமாக புகழையும் பெற்றுத் தருவார் என்பதால் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் காரியம் யாவும் வெற்றியடைந்து உங்களை சந்தோஷத்தில் இருக்க வைக்கும் வாரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு. வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும்.

உங்களுடைய செயல்திறமை, விடாமுயற்சி, கடும் உழைப்பு போன்றவை உங்களை ஒரு போதும் தோல்வியடைய வைக்காது என்பதால் இனியும் கவலைப்பட தேவையற்ற வாரம் இது. விருச்சிகத்தினர் அனுபவித்து வரும் மனக் கஷ்டங்களையும், பணப்பிரச்சினைகளையும் தற்போதைய ராசிநாதன் வலு தடுக்கும் என்பது உறுதி. விருச்சிக ராசிக்கு இப்போது இருக்கும் எல்லா பிரச்சனையும் இன்னும் சிலவாரங்களுக்குத்தான் என்பதால் எதையும்சமாளிக்கும் மனோதைரியத்தை இறைவன் உங்களுக்கு அளிப்பார் என்பது உறுதி.

தனுசு :

தனுசு ராசி இளைஞர்களின் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் சரியான முடிவுகள் எடுக்கத் தடுமாறும் வாரமாக இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம். யோகாதிபதி செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதோடு ராசிக்கு சுபரான சுக்கிரனின் பார்வையும் இருப்பதால் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் வாரம் இது. புதிதாக சிக்கல்கள் எதுவும் வராது. எதிலும் நேர்வழியில் செல்லுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்கள் கிடைக்கும் வேலையில் சேருங்கள். கௌரவம் பார்க்காதீர்கள். வீடு, வெளியிடம், அலுவலகம் எங்கும் யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள். கண்டிப்பாக குடிக்காதீர்கள். காதலிக்காதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறும். பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள்.

மகரம் :

ஆகாத எதிரிகளை நீங்கள் சிரித்த முகத்தோடு உறவாடிக் கெடுக்கும் வாரம் இது. இந்த வாரம் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனை திசை மாறும். எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும். சுக்கிர, புதன் பரிவத்தனையால் இளைய பருவத்தினர் காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். அதே காதல் இன்னும் இரண்டு வருடம் கழித்து மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும். தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சகோதர உறவு, கூட்டுத் தொழில் சுமுகமாக இருக்கும்.

சிலருக்கு சிகப்பு நிறமுடைய பொருட்களால் நன்மைகளும் பணவரவும் இருக்கும். குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சுயதொழில், வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பணப் பிரச்னைகளில் இருப்பவர்களின் சிக்கல்கள் தீரும். தலைவலியாக இருந்து கொண்டிருந்த விஷயங்கள் இனி சாதகமாகும்.

கும்பம் :

நான்கு, ஐந்துக்குடைய புதனும், சுக்கிரனும் பரிவர்த்தனை நிலை உண்டாவதால் கும்ப ராசிக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லாத நல்ல வாரம் இது. உங்களை இதுவரை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களை ஆதரிப்பார்கள். சிலருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்ல பலன்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும் வாரம் இது.

பிரச்னைகளால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். தொழில் நஷ்டம், வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்ல வேலையை அடைவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்ல முறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். கும்ப ராசிக்கு மேன்மைகளைத் தரும் வாரம் இது.

மீனம் :

யோகாதிபதி செவ்வாய் இன்னும் சில மாதங்களுக்கு உச்ச நிலையில் இருப்பதால் இப்போது எந்தப் பிரச்னையும் மீனத்திற்கு வரப்போவது இல்லை. பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவதால் இதுவரை கிடைக்காத நல்லவேலை, தொழில் கிடைப்பதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் இருக்கும். இளைய சகோதரர்களால் சிலர் நன்மை அடைவீர்கள். மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். வில்லங்க விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு. பெண்கள் உதவுவார்கள். தொலைக்காட்சி துறையினருக்கு இது நல்ல வாரம்.

இளையவர்கள் சிலர் இப்போது இருக்கும் பிரச்னைகளைக் கண்டு மனம் தளர வேண்டாம். என்ன பிரச்னை என்றாலும் ஆகஸ்டுக்கு பிறகு உங்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் என்பதால் தற்போது நீங்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. 28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 26 ம் தேதி காலை 8.14 மணி முதல் 28ம் தேதி மாலை 4.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment