Friday, May 25, 2018

கன்னி:2018 ஜூன் மாத பலன்கள்

கன்னி :


மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் நட்பு வலுவுடனும், பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடனும் உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் நல்ல மாதம் இது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் தனது நண்பரான சூரியனுடன் புதன் இணைந்திருப்பதால் கன்னி ராசிக்கு ஜூன் மாதம் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கும். உங்களில் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல திருப்பமான நிகழ்வுகள் நடக்கும் மாதம் இது. இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள்.



உதாரணமாக கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் நல்லபடியாக குணம் அடைவீர்கள். உடல்நலம் சீராகும். திறமை இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் அல்லாடியவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்பும் வெற்றியும் இனிமேல் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். 

ஜீவனஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். 

இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் நன்மைகள் நடப்பதை உணருவீர்கள். இன்னொரு நிலையாக சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் பெண்கள் விஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

4,5,6,8,10,12,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 9ம் தேதி இரவு 11.10 மணி முதல் 12-ம் தேதி அதிகாலை 2.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment