Friday, May 25, 2018

மகரம்: 2018 ஜூன் மாத பலன்கள்

மகரம் :


மகர ராசியின் யோகாதிபதி புதன் இந்த மாதம் வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் மகரத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். அதே நேரத்தில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைந்து ஏழாமிடத்தில் இருப்பதால் இதுவரை வெளிநாடு போகாதவர்கள் கடல் தாண்டுவீர்கள். உங்களில் சிலருக்கு வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும் இருக்கும். சொல்லிக் கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மைகளைத் தரும்.



ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்படுவதால் சிலருக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி ஆலயங்களுக்குச் செல்வீர்கள். ஆலயத் திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஜாதகத்தில் சனி, குரு, கேது தசை நடப்பவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் மேன்மையான பலன்கள் நடக்கும் என்பதால் மகர ராசிக்காரர்களுக்கு எவ்வித குறைகள் இருந்தாலும் பரம்பொருள் அவற்றைக் கனிவுடன் தீர்த்து வைப்பார் என்பதால் ஜூன் மாதத்தில் கெடுதல்கள் எவையும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லை. 

நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் உண்டு. பத்தில் இருக்கும் குருபகவானால் சில மகர ராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும், பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், பணத் தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது. 

ராசிநாதன் சனி குருவின் வீட்டில் விரயத்தில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள். வருகின்ற நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு நிலையான தொழில் அமைப்புகளும், குறைவில்லாத பணவரவும் அமையும் என்பதால் ஜூன் மாதத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி.

2,4,5,6,7,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம்தேதி அதிகாலை 4.19 மணி முதல் 20-ம்தேதி காலை 7.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

No comments :

Post a Comment