Friday, May 25, 2018

மேஷம் : 2018 ஜூன் மாத பலன்கள்

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் நல்ல மாதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்சத்தில் அமர்ந்து ஒன்பதுக்குடைய குரு ராசியைப் பார்ப்பது யோக அமைப்பு என்பதால் இது உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாகவே இருக்கும். வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் வரவில்லையே என்று எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களில் சிலருக்கு இப்போது இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனைக் கண்ட பனி போல விலகி மிகச்சிறந்த மாற்றமும், முன்னேற்றமும் உண்டு. எனவே மேஷத்தினர் நன்மைகளை மட்டும் எதிர் நோக்கப் போகும் மாதம் இது.


இதுவரை முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். ராசிநாதன் உச்ச வீட்டில் இருப்பதால் பணவரவும், தனலாபங்களும் நிறைவாகவே இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு அனைத்து நல்லபலன்களும் நடக்கும். நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். குருபகவான் ஏழாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேருவீர்கள்.

கடன் பிரச்னைகள் கண்டிப்பாகத் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை, ரெவின்யூ போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

1,2,3,6,8,11,12,13,21,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி இரவு 10.33 மணி முதல் 27-ம்தேதி காலை 9.35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் எவருடனும் வீண் வாக்குவாதம் செய்வதோ சண்டை போடுவதோ வேண்டாம். மேற்கண்ட தினங்களில் எதிலும் பொறுத்துப் போங்கள். நீண்ட தூர பயணங்களையும், புதிதாக எதையும் ஆரம்பிப்பதையும் இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment