Wednesday, 2 May 2018

2018 May Month Natchathra Palangal - 2018 மே மாத நட்சத்திர பலன்கள்


அசுவினி

இந்தமாதம் அஸ்வினியின் நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும். இதுவரை தொல்லை கொடுத்த பிரச்னைகள் தீரப் போகின்றன. சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் புரிந்து கொண்டு பக்கத்தில் வருவார்கள். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். சிலர் தூரப் பயணங்கள் செய்வீர்கள்.


பரணி

உங்களில் இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் லாபம் உண்டு. சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு வி.ஐ.பி.க்கள் அறிமுகம் உண்டு. மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணவரவு தடைபடாது.

கிருத்திகை

இந்த மாதம் கிருத்திகை நட்சத்திரத்தினர் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். தெளிவான முடிவு எடுப்பதற்கு தயங்குவீர்கள். சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக்கலக்கங்கள் இருக்கும். மாத இறுதியில் கிரகநிலைகள் மாறுவதால் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல கடைசி வாரத்தில் இருக்காது என்பது உறுதி. பெண்களால் செலவுகள் இருக்கும். சகோதரிகளுக்கு உதவீர்கள். ஒரு சிலர் வெளிமாநிலம், வெளிநாடு போக நேரிடும். தூரஇடங்களில் இருப்பவர்களுக்கு சிக்கல்கள் எதுவும் இருக்காது.

ரோஹிணி

உங்களில் சிலர் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவீர்கள். குறிப்பாக வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும் அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். மாத முற்பகுதியில் லாபங்களும், பணவரவுகளும் இருக்கும். அதே நேரத்தில் 15-ம் தேதிக்குப் பிறகு வருமானத்தைச் சேமிக்க முடியாமல் இந்த மாதத்திலேயே செலவும் செய்ய வேண்டி இருக்கும்.

மிருகசீரிடம்

பருவ வயதினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திக்கும் மாதம் இது. சாதகமான கிரக அமைப்பால் எதையும் சாதிப்பீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல மாதம் இது. குடும்பத்தில் சந்தோஷங்கள் உண்டு. கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் இருப்பவர்களுக்கு வழக்குகள் சாதகமாகும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் உண்டு. குழந்தைகள் கேட்பதை வாங்கித் தர முடியும்.

திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தினரின் பின்னடைவுகள் விலகும் மாதம் இது. உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்திலும் இருந்த தடைகள் விலகி விட்டது. தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு. சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். தாயார் வழியில் நல்லவைகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும்.

புனர்பூசம்

இந்த மாதம் புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்தையும் மனைவியின் பொறுப்பில் விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தாமதித்து வந்த வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் மாறும். எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள்.

பூசம்

பூசத்தினருக்கு இந்த மாதம் சந்தோஷ மாதமாக இருக்கும். உங்களில் சிலருக்கு இருக்கும் பிரச்னைகள் தீர ஆரம்பிக்கும் மாதம் இது. சிலர் நிம்மதியாக உணருவீர்கள். என்ன முடிவு எடுப்பது என்று தெளிவில்லாமல் இருந்தவர்களுக்கு இந்த மாதம் ஒரு நல்ல முடிவு தெரியும். தொழில் இடங்களில் தொந்தரவுகள் ஏற்படாது. உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

ஆயில்யம்

ஆயில்யத்திற்கு இது நல்ல மாதம்தான். உங்களில் படிப்பு விஷயத்தில் குழம்பி இருந்தவர்களுக்கு தீர்வினைக் கொடுக்கும் மாதம் இது. பெற்றோரைப் பிரிந்து தூர இடங்களில் இருக்கும் இளைஞர்களின் மன அழுத்தம் இந்த மாதம் தீரும். இதுவரை சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இப்போது நேர்த்தியாக சரி செய்வீர்கள். பெரியவர்களுக்கு பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும்.

மகம்

இந்த மாதம் மகத்திற்கு செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொடுக்கும் மாதம் இது. யாரிடமும் தேவையற்ற வீண்வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளால் நல்ல சம்பவங்கள் இருக்கும். சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில் மேன்மை தன லாபங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் உண்டு. சிலருக்கு ஞானிகளின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்

பூரம்

பூரத்திற்கு இந்த மாதம் ஸ்பெகுலேஷன் துறைகள் கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் கவனமுடன் இருக்கவும். வேற்று மதத்தினர் உதவுவார்கள். வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. வேலையில் இருப்பவர்கள் அனுசரித்துப் போவது நல்லது.

உத்திரம்

உத்திரம் நட்சத்திர இளைஞர்களுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக இது அமையும். பணம் சம்பாதிப்பதில் இது நல்ல மாதம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் இப்போது நடக்கும். வேலையில் பாராட்டப் படுவீர்கள். இன்பச் சுற்றுலா செல்லுவீர்கள். சகோதர,சகோதரிகள் உதவுவார்கள். வீட்டுக்கு தேவையான வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி, ஏசி போன்றவைகளை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

அஸ்தம்

அஸ்தத்திற்கு திருப்பங்களைக் கொடுக்கின்ற மாதம் இது. உங்களை பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். அனைத்தும் நன்மையாகும் மாதம் இது. மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நீங்களும் பிறருக்கு உதவ முடியும். உதவும் அளவிற்கு கையிலும் பணம் இருக்கும். கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் நன்மை உண்டு. தூரத்தில் இருக்கும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

சித்திரை

பெண்களால் சிரமங்களும், செலவுகளும் உள்ள மாதம் இது. 15-ம் தேதிக்கு பிறகு செலவுகளை சமாளிக்க வருமானம் வரும். எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் மூலம் ஆதரவான நிகழ்வுகள் இருக்கும். வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கும். சிலருக்கு ஆபரணச் சேர்க்கையும், தேவையான பொருட்கள் வாங்குதலும் உண்டு. பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரக்காரர்கள் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்களோ என்று உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இடையூறுகள் இருக்காது. மே மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். எந்த ஒரு விஷயத்தையும் வெற்றியாக முடிக்க முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்களுக்குள் இணக்கமான நிலை இருக்கும்.

விசாகம்

இதுவரை மந்தமாக இருந்த தொழில் இனி சிறப்பாக நடைபெறும். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். எதிலும் கேட்ட உதவி கிடைக்கும். சுய தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் புனித யாத்திரைகள் செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள்.

அனுஷம்

அனுஷம் நட்சத்திரக்காரர்களின் பிரச்னைகள் அனைத்தும் நல்லவிதமாகத் தீரப் போகிறது. உணமையைச் சொல்லப் போனால் பெரும்பாலானவர்களுக்கு தீர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிகச் சிலருக்கு மட்டும்தான் தொல்லைகள் தொடர்கின்றன. இனி அப்பாடா என்று இருப்பீர்கள். நல்லவை நடப்பதற்கான அறிகுறிகள் துவங்கும். இனி உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. எதையும் சமாளிப்பீர்கள். எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை உணருவீர்கள்.

கேட்டை

கேட்டைக்கு இந்தமாதம் கெடுதல்கள் இல்லை. நடைபெறாத நன்மைகள் இனிமேல் தெய்வத்தின் அருளால் நடக்கும். கஷ்டமான ஜென்மச்சனி காலத்தை சமாளித்து விட்டீர்கள். இனிமேல் சந்தோஷம்தான். சோதனைகள் முடிந்து விட்ட காலம் இது. ஒரு போதும் மனதைத் தளர விடவேண்டாம். சென்ற வருடத்தோடு பிரச்னைகள் அத்தனையும் ஒழிந்து விட்டது. இனி நன்றாக இருப்பீர்கள். இதுவரை எதில் உங்களுக்கு மன அழுத்தம் இருந்ததோ அந்தக் காரணம் இப்போது விலகும். இது வெறும் வார்த்தை இல்லை. உண்மை.

மூலம்

ஏழரைச் சனி நடப்பதால் தொழில் நன்றாக நடந்தாலும் பணவரவு தடுக்கப்படும். அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் நேர்வழியில் செல்லுங்கள். குறுக்குவழி இப்போது கை கொடுக்காது. முக்கியமான துறைகளில் இருப்பவர்கள் மேல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். சிக்கல்கள் வரும். புதியகிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம்.

பூராடம்

சனி இப்போது உங்கள் நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறார். இளைய பருவத்தினர் ஏழரைச் சனி காலத்தில்தான் சில கஷ்டங்களை அனுபவிப்பீர்கள். காதல், கீதல் என்று உங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்தினால் வானம் வசப்படும். சனிக்குப் பரிகாரமாக பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மைகளை தரும். நடுத்தர வயதினருக்கு நல்ல பலன்கள் உண்டு.

உத்திராடம்

உங்களில் தனுசு ராசியினருக்கு இந்த மாதம் நல்ல நண்பர்களும் சில பிரச்னைகளால் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்றவைகளில் தலையிட வேண்டாம். பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டையை தவிருங்கள் மாத பிற்பகுதியில் அனைத்தும் சீராகும்.

திருவோணம்

இந்த மாதம் ஒரு சிறப்பு பலனாக சுற்றியுள்ளவர்கள் உங்களை வெறுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். அதனால் கோபம் வரும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கிரகநிலைகள் உங்களை கோபக்காரனாக்கி சிக்கலை உண்டாக்கும் என்பதால் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும் என்பதால் பேசுவதில் கவனமாக இருங்கள். வீட்டிலும் உங்கள் மாற்றத்தை உணருவார்கள் என்பதால் நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது.

அவிட்டம்

உங்களில் மகரத்தினர் தொழில் விரிவாக்கத்தினை கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். பணம், செல்போன் தொலைவது போன்ற சம்பவங்கள் நடைபெறும் விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். உங்களில் கும்ப ராசியினருக்கு திருமணம், குழந்தை பிறப்பு, வீடுவாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் உண்டு. வீடுமாற்றம், தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். இப்போதய அனுபவங்களால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

சதயம்

அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. மாதம் முழுவதும் நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசுவாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதிக முயற்சி இல்லாமலே சுபகாரியங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

பூரட்டாதி

உங்களின் கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள், தடைகள் அனைத்தும் தீரும் மாதம் இது. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள். தந்தைவழி உறவில் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டு. கடன் தொல்லையில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

உத்திராட்டாதி

உங்களில் குரு தசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் இருக்கும். சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் உண்டு. லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு காரியங்கள் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். பிரச்னைகளை வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். இளைஞர்களுக்கு உற்சாக மாதம் இது.

ரேவதி

ரேவதிக்கு சந்தோஷ மாதம் இது. இந்த மாதம் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படப் போகிறது. நன்றாக இருக்கப் போகிறீர்கள். பிரச்னைகள் அனைத்தும் விலகப் போகிறது. அவரவர் வயது இருப்பிடம் தகுதி திறமைக்கு ஏற்றார்போல நன்மைகள் நடக்கும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும். வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். எண்ணங்கள் செயலாகி நினைத்தது நடக்கும். சொன்னது பலிக்கும்.

1 comment :

  1. கேட்னடக்கு மன அழுத்தம் தாங்க முடியவில்னல இதற்கு இறப்பே மேல்

    ReplyDelete