Thursday, May 31, 2018

2018 June Month Natchathra Palangal - 2018 ஜூன் மாத நட்சத்திர பலன்கள்

அஸ்வினி :

அஸ்வினிக்கு ஜூன் மாதம் இனிமையான நல்ல அனுபவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். தாய்வழியில் இருந்து வந்த எதிர்மறைபலன்கள் நீங்கி உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். சிலர் எதிர்கால வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவுகளை தற்போது எடுப்பீர்கள். சிலருக்கு மறைமுகமான வழிகளில் இந்த மாதம் வருமானம் கிடைக்கும்.


பரணி :

உங்களில் சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ், கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள். வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்ல நேரம் இது. சாப்ட்வேர் பணியாளர்கள் செய்யும் வேலையில் மதிப்பு கிடைக்கப் பெறுவார்கள். 

கிருத்திகை :

ஜூன்மாதம் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்களுக்கு நல்ல முடிவு வரும். வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எண்ணம் செயலாகும். உங்களில் சிலர் விரும்பிய வாழ்க்கைத் துணையை அடையும் நிகழ்வுகள் உண்டு. வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி சம்மதத்தைப் பெறுவீர்கள். சிலருக்கு வீண் செலவுகள் இருக்கும். அதேநேரத்தில் பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் சேமிக்க முடியாமல் போகும்.

ரோகிணி :

இந்த மாதம் ரோகிணிக்கு அலுவலகத்தில் நல்லவைகள் இருக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். உயர்கல்வி கற்க விரும்பும் சிலருக்கு அதற்கான ஆரம்பங்கள் நடக்கும். சிலருக்கு வேற்றுமொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும்.

மிருகசீரிஷம் :

உங்களில் மீடியாத் துறையினருக்கு அலைச்சல்கள் உண்டு. சிறுகலைஞர்கள் பிரபலமாவீர்கள். இளைஞர்கள், மாணவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான படிக்கட்டுகள் இந்த மாதம் அமையும். உங்களில் மிதுன ராசியினருக்கு சாதகமான கிரக நிலைகள் இருப்பதால் தோல்வி மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெற்று சுறுசுறுப்பாவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றங்கள் இருக்கும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

திருவாதிரை :

உங்களில் திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் திருமண உறுதி நிகழ்வுகள் உண்டு. காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். இதுவரை கஷ்டப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தும் இனிமேல் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றியாக நடந்து உங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். புதிய மனிதராக உணர்வீர்கள். உங்களில் சிலருக்கு அதிகாரமுள்ள தலைமைப் பதவி கிடைக்கும். ஜூன்மாதம் உங்களுக்கு அருமையான மாதம்.

புனர்பூசம் :

புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சற்று மந்தமான பலன்களும் மற்ற மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களும் ஜூன்மாதம் நடைபெறும். குறிப்பாக இரும்புத் தொழில் சம்பந்தப்பட்டவர்கள், பழைய கழிவு, வேஸ்ட் பேப்பர், தேவையில்லாத பொருட்கள், அழுகும் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபங்கள் உண்டு. 30 வயதிற்குட்பட்ட இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கான அறிமுகங்கள், அஸ்திவாரங்கள் இந்த மாதம் நடக்கும்.

பூசம் :

உங்களுக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத மாதமாக ஜூன் மாதம் இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தடங்கல்களும், எதிர்மறை அனுபவங்களும் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. சிலர் நல்ல வீட்டில் குடி போவீர்கள். கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு இனிமேல் அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும்.

ஆயில்யம் :

உங்களில் இளையவர்களுக்கு பெண்கள் விஷயத்தில் கவனம் சிதறுவதற்கான அமைப்பு இந்த மாதம் உள்ளது. அதனால் சிலருக்கு வீண்பழி வரலாம். இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கெடுதல்கள் எதுவும் இந்த மாதம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. மாதம் முழுவதும் உங்களின் ராசிக்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

மகம் :

இந்த மாதம் நினைத்தது கை வரப் பெறுவீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்டத் தொழில் செய்பவர்களுக்கு ஜூன் நல்ல மாதமாக அமையும். சிலருக்கு திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு வேலையில் இது நிம்மதி மாதமாக இருக்கும். இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட, கார், மோட்டார் சைக்கிள் போன்றவைகளை ரிப்பேர் செய்யும் மெக்கானிக்குகள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் செய்பவர்கள் பணவரவைப் பெறுவீர்கள். உங்களில் சிலர் அலுவலகத்தில் வேலைத்திறமைக்காக பாராட்டப்படுவீர்கள்.

பூரம் :

ஜூன் மாதம் உங்களுக்கு சிறப்பைத் தரும் மாதமாக அமையும். வழக்கு, கோர்ட்டு என அலைந்து கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு வேலை, தொழில் விஷயமாக வேறு ஊருக்கு செல்லும் மாற்றங்கள் நடக்கும். வீட்டில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அந்நிய இன, மத, மொழிக்காரர்கள் மூலம் நன்மைகள் உண்டு. சிலருக்கு இஸ்லாமிய நண்பர்கள் கை கொடுப்பார்கள்.

உத்திரம் :

ஜூன்மாதம் நல்லவைகளின் ஆரம்ப மாதமாக இருக்கும். உங்களில் கன்னி ராசிக் காரருக்கு அதிக நன்மைகள் உண்டு. வேலை, தொழில், வியாபாரத்தில் பிடிப்பில்லாமல் மேம்போக்காக இருந்த நிலைமை மாறி உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலருக்கு முக்கியமான விஷயங்களில் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கும், நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் எண்ணம் போல் நிறைவேறும்.

அஸ்தம் :

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு ஜூன் மாதம் முதல்பகுதியில் நல்ல பலன்களும் பிற்பகுதியில் மத்திம பலன்களும் நடக்கும். மாதத்தின் முதல் 15 நாட்கள் பணவரவு இருக்கும். பாக்கெட்டில் காசு வைத்துக்கொண்டு தெம்பாக இருப்பீர்கள். பின்பகுதி மாதத்தில் பணம் போன வழி எது என்று குழம்பிக் கொண்டிருப்பீர்கள். ஆனாலும் ஜூன்மாதம் உங்களுக்கு சிறப்பான வருமானம் தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து கேட்கும் உதவிகள் கிடைக்கும். மூத்த அண்ணன், அக்காக்களிடம் வேண்டியவற்றை சாதித்துக் கொள்வீர்கள்.

சித்திரை :

கருப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில், மற்றும் திரவப் பொருட்கள் விற்பவர்கள் இந்த மாதம் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அண்ணன், அக்காக்களின் திருமண உறுதி நிகழ்ச்சி இப்போது உண்டு. குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் இருக்கும். வேலைக்காரர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வழக்குகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தோஷ மாதம் இது.

சுவாதி :

குலதெய்வத்தின் அருள் பூரணமாக கிடைக்கும் மாதம் இது. சுவாதியினருக்கு நன்மைகள் நடப்பதற்கு தடைகள் எதுவும் இல்லை. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிரந்தர வருமானம் வரும். தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

விசாகம் :

பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும் மாதம் இது. ஜூன் உங்களுக்கு நல்ல மாதம்தான். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் உண்டு. குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பவர்கள், ஊதா நிறம் சம்பந்தப்பட்டவர்கள் நன்மைகளை அடைவீர்கள். சிலருக்கு பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்.

அனுஷம் :

கடன் சிக்கல்களில் இருந்து இந்த மாதம் முதல் மீண்டு வருவீர்கள். இதுவரை உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபர் முக்கியமான நேரத்தில் உதவுவார். எதிர்ப்புகள் விலகும் மாதம் இது. உடல்நலக் கோளாறுகள் சரியாகும். குறிப்பாக பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். செக் ரிட்டர்ன், மோசடி, டைவர்ஸ் வழக்குகளில் அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான திருப்பங்களும் முடிவுகளும் உண்டு. கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். நீண்ட நாள் வராத வாடகை, குத்தகை பணம் வசூலாகும்.

கேட்டை :

கேட்டை நட்சத்திரக்காரர்களில் நடுத்தர வயதுகளில் இருப்பவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பெண்களின் நிலைமையோ கடுமையாக இருக்கிறது. குடும்பத்தில் குழப்பம், பிரிவு, இழப்பு, பணப்பிரச்னை, போன்றவைகளால் நிம்மதிக் குறைவு இருக்கிறது. குடும்பத்தில் யாராவது ஒருவர் விருச்சிக ராசி என்றாலும் அந்தக் குடும்பமே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாம் இன்னும் சில வாரங்கள்தான். கேட்டை, கோட்டை கட்டி ஆளும் என்பது மறுபடியும் நிரூபிக்கப்படும். எல்லாம் மாறும். கவலைப்படாதீர்கள்.

மூலம் :

தொழிலை கண்ணும் கருத்துமாக கவனியுங்கள். அகலக்கால் வைக்க வேண்டாம். இருக்கும் வேலையில் மாறுவது இப்போது வேண்டாம். சட்டியில் இருந்து தப்பி அடுப்பில் விழுவீர்கள். ஆனால் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள். மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவீர்கள். இளையவர்களுக்கு பணம் என்றால் என்னவென்று அடையாளம் காட்டும் காலம் நடந்து கொண்டிருக்கிறது. உறவுகள், நட்புகளில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பது வரும் மாதங்களில் லேசாகப் புரிய ஆரம்பிக்கும். காதலிக்காதீர்கள். எல்லாம் நன்மைக்கே.

பூராடம் :

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு ஜூன் மாதம் சுமாரான பலன்களை தரும். சனி உங்கள் நட்சத்திரத்தின் அருகில் இருப்பதால் கவனச் சிதறல்களால் சிலருக்கு ஞாபகமறதி இருக்கும். கைப்பொருளில் கவனம் தேவை. செல்போனைத் தொலைப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் சிறு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. வங்கிகளில் பணம் செலுத்தும் போதும், பணம் எடுத்து வரும்போதும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கிறிஸ்துவ நண்பர் அல்லது வேற்று மொழிக்காரர் ஒருவர் சரியான நேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவார்.

உத்திராடம்:

உங்களில் வழக்கு, நீதிமன்றம் என்று அலைபவர்களுக்கு அனைத்தும் முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இளைஞர்களின் வாழ்க்கை இன்னும் செட்டிலாகாமல் இருக்கும். புதிதாக தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து செய்வது நல்லது. ஏழரைச்சனி முடியும் வரை புதிய முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது. எவரையும் நம்ப வேண்டாம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே திறம்பட செய்வது நல்லது.

திருவோணம் :

இளையபருவத்தினர் இந்த மாதம் வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டு. எதிர்கால நல்வாழ்விற்கான நிகழ்ச்சிகள் நடக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்கள் விஷயத்தில் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அந்நிய இன, மத மொழிக்காரர்கள் உதவி கிடைக்கும்.

அவிட்டம் :

உங்களில் தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் உண்டு. உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வயதானவர்களுக்கு பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் உண்டு.. உங்களின் ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருப்பீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.. வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு.

சதயம் :

இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களை ஆதரிக்கும் மாதம் இது. சிலருக்கு எதிர்பாராத ஆட்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் உண்டு. பணப்பயிர் மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும். இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகளுக்கு நல்ல பலன்கள் இருக்கும்.

பூரட்டாதி :

உங்களில் மீன ராசியைச் சேர்ந்தவர்களுக்கு திருமண சம்பந்தமான நல்லவைகள் இப்போது உண்டு. மாத ஆரம்பமே யோகத்துடன் ஆரம்பிப்பதால். இப்போது வரன் உறுதியாகும். சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள்.

உத்திரட்டாதி :

அதிகமான கோபம் வரும் மாதம் இது. தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்டநாள் பாக்கி வசூல் ஆகும். அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்து செய்யும் முயற்சிகள் வெற்றியாக முடியும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு தாமதங்களும் தடைகளும் ஏற்படும், எதையும் நீங்கள் சமாளிக்கும் மாதம் இது.

ரேவதி :

இந்த மாதம் புதிதாக அறிமுகம் ஆகும் நபரிடம் கவனமாக இருங்கள். அவர் உங்களுக்கு பின்னாட்களில் தொந்தரவு தருபவராக மாறுவார். வேலை, தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு இது நல்ல மாதம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. கலைஞர்கள் வளம் பெறுவார்கள். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்.

1 comment :

  1. கேட்னட க்கு சில வாரங்கள் என்றால்
    October month வனரக்குமா ஐயா

    ReplyDelete