Saturday, 5 May 2018

குருஜியின் மாலைமலர் வார ராசி பலன்கள் (07-05-18 முதல் 13-05-18 வரை)


மேஷம் :

ராசிநாதன் செவ்வாய் உச்சமாக இருப்பதால் இந்த வாரம் முழுவதும் மேஷத்தினருக்கு சந்தோஷமான நிகழ்ச்சிகளும், புத்துணர்வு தரும் சம்பவங்களும் நடந்து மகிழ்வைத் தரும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த திட்டங்களை நல்லவிதமாக செயல்படுத்த முடியும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலை நாட்டப்படும்.


குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள். கணவன் மனைவி உறவு நல்லமுறையில் இருக்கும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள். இதுவரை டென்ஷனும், படபடப்புமாக இருந்தவர்கள் இனிமேல் நிதானமாக இருப்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி இருக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் எந்த பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

ரிஷபம் :

ஆறில் குரு அமர்ந்து, பத்திற்குடையவன் எட்டில் இருப்பதால் சொந்த தொழில், வியாபாரம் செய்யும் ரிஷபத்தினர் அகலக்கால் வைக்காமல் அடுத்தவரை நம்பாமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம் இது. இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி செய்பவர்கள் அதை ஒத்தி வைப்பது நல்லது. ஆனாலும் மாற்றங்கள் வந்தே தீரும் என்பதால் வேலையை விட்டு வெளியேறுவதற்கான நெருக்கடிகள் அதிகரிக்கக் கூடும்.

ஆன்மீக விஷயத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பக்தி இயக்கங்களில் ஈடுபாடு வரும் சிலர் புதிதாக சில குறிப்பிட்ட கோவில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து போவதற்கு ஆர்வம் கொள்வீர்கள். சிவபக்தி மேன்மை தரும். மகன் மகள் விஷயத்தில் மனக் கவலைகள் தீரும். 11,13 ஆகிய நாட்களில் பணம் வரும். பெண்களுக்கு இது சுமாரான வாரமாகத்தான் இருக்கும். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் எல்லா வேலையையும் உங்கள் தலை மேல்தான் சுமத்துவார்கள்.

மிதுனம் :

சகாய ஸ்தானாதிபதி சூரியன் லாப வீட்டில் உச்சம் பெற்று இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இது நல்ல வாரம்தான். அதைவிட மேலாக நீண்ட நாட்களாக நீசநிலையில் இருந்த ராசிநாதன் புதன் இந்த வாரம் முதல் அது நீங்கப் பெற்று வலிமை அடைகிறார். உங்களின் சந்தோஷங்களின் ஆரம்ப வாரம் இது. இளைஞர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும்.

முட்டுக்கட்டையாக இருந்து வந்த தடைகள் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய காலகட்டம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை அமையும். அரசுவேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்லசெய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ் குரூப்ஒன் மற்றும் நீட் தேர்வுகளை நல்லமுறையில் எழுத முடியும். திருமணம் ஆகாதவர்களுக்கு நவம்பருக்குள் திருமணம் நடப்பதற்கான ஆரம்பங்கள் உண்டு.

கடகம் :

இந்த வாரத்தின் இரண்டு சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் ராசிநாதன் சந்திரன் நல்ல நிலைமையில் இருப்பதால் கடகத்தினருக்கு வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் இப்போது நன்மைகள் உண்டு. சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அது வாங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகளும் மனதில் அது சம்பந்தப்பட்ட எண்ணங்களும் இருக்கும். அந்தஸ்து, கவுரவம் உயரும். நீண்டகாலமாக தடங்கலாகி வந்த ஒரு விஷயம் இப்போது எண்ணம் போலவே நடைபெறும்.

பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், பொருள் விற்பவர்கள் உயர்வு பெறுவீர்கள். கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். அதிக சிரமமின்றி பணம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு நவம்பர் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறும். 8ம் தேதி இரவு 8.59 மணி முதல் 11ம் தேதி காலை 7.11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

சிம்மம் :

ராசிநாதன் சூரியன் பத்தில் உச்சம், யோகாதிபதி செவ்வாய் ஆறில் உச்சம் என பழம் நழுவி பாலில் விழுந்தது போன்ற கிரக அமைப்புகள் சிம்மத்திற்கு இருப்பதால் உங்களின் அதிர்ஷ்ட வாரம் இது. யோகக் கிரகங்கள் வலுவடைந்து இருப்பதால் எதிலும் வெற்றி நிச்சயம். எனவே பழையவை எதையும் நினைத்து கலக்கம் அடையாமல் இனிமேல் நடக்கப் போகும் நல்லவைகளை நினைத்தால் கவலைகள் ஏதும் இல்லை. சிலர் தேவையற்ற பொருள் வாங்கி பணத்தை விரையம் செய்வீர்கள். வருமானமும் அதற்கேற்ற வகையில் வரும்.

இதுவரை எதிர்ப்புகளினால் தங்களின் உண்மையான திறமையை வெளிகொண்டு வர முடியாதவர்களும் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாதவர்களும் இந்த வாரம் வெற்றிகளை பெறுவீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. 9,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 11 ம் தேதி காலை 7.11 மணி முதல் 13ம் தேதி மதியம் 1.31 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

கன்னி :

ராசிநாதன் புதன் நீசநிலையில் இருந்து விலகும் நல்ல வாரம் இது. சுக்கிரனும், குருவும் நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் இந்த வாரம் கன்னிக்கு கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. வாரத்தின் நடுப்பகுதியில் சந்திரனின் தயவால் பணவரவு ஒன்று உண்டு. அடுத்தவர்களால் கௌரமாக நடத்தப் படுவீர்கள். கடன்தொல்லைகளில் நிம்மதி இழந்திருந்தவர்களுக்கு கடனை முழுமையாக அடைக்கவோ அல்லது குறைக்கவோ வழி பிறக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

உங்களின் அந்தஸ்து மதிப்பு உயரும் நேரம் இது. பெண்களுக்கு நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். 12,13 ஆகிய நாட்களில் பணம் வரும். 13 ம் தேதி மதியம் 1.31 மணி முதல் 15 ம் தேதி மாலை 4.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

துலாம் :

துலாநாதன் சுக்கிரன் வலுவான ஆட்சி நிலையில் இருந்து, ராசி உச்ச சூரியனால் பார்க்கப்பட்டு புனிதமடைவதால் துலாத்திற்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. உங்களில் சிலர் மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. குறிப்பாக உங்களில் சுவாதி நட்சத்திரக்கார்களுக்கு இது நல்லவாரம்.

இளைஞர்களுக்கு கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. உங்களின் யோகாதிபதி சனி எப்போதுமே கொடுத்துக் கெடுப்பார் என்பதால் சனி கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். கெட்டுப் போகாதீர்கள். மகன் மகளுக்கு திருமணம் உறுதியாகும். பேரன் பேத்திகள் மூலம் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும்.

விருச்சிகம் :

ராசிநாதன் செவ்வாய் உச்ச வலுவடைவதால் ஏழரைச்சனியினால் துன்பங்களை அனுபவித்து வரும் விருச்சிகத்தினர் நன்மைகளை அனுபவிக்கும் வாரம் இது. என்னதான் பிரச்னை இருந்தாலும் இந்த வாரம் செவ்வாயின் வலுவால் உங்களின் அந்தஸ்து கௌரவம் பாதிக்காமல் பணவரவும் இருக்கும் என்பதால் இனிமேல் கஷ்டங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் எல்லாம் தாமதமாகி வந்தவர்களுக்கு இனி வழி பிறக்கும். இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து கெட்டவைகளும் முடிந்து நல்லவைகளை காண ஆரம்பிப்பீர்கள்.

உங்களில் சிலருக்கு கடந்த சில வாரங்களாக நடந்த சம்பவங்களின் அர்த்தம் தற்போது புரியும். நெருங்கிய சிலரைப் பற்றி இப்போது நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள். இதுவரை விடை தெரியாத பல கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியும். இனிமேல் எந்த வழியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்பதும் அந்த பாதையும் இப்போது கண்ணுக்குத் தெரியும். நவம்பர் மாதம் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் உங்களில் சிலருக்கு திருமணம் கூடி வரும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு குறையில்லாத வாரம் இது.

தனுசு :

ஆறில் ஆட்சி பெறும் சுக்கிரனால் வீண்பழியோ, சிரமங்களோ, செலவுகளோ வரும் என்பதால் இது பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வேண்டிய வாரமாக இருக்கும். அதேநேரத்தில் யோகாதிபதி செவ்வாய் உச்சமாக இருப்பதால் எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே இருக்கும். எட்டு, பனிரெண்டாமிடங்கள் வலுப் பெறுவதால் பண விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வரவுகள் தடைபடாது என்றாலும் தேவையற்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வரும். உடன் இருப்பவர்களால் சங்கடங்கள் தோன்றும் என்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது. வியாபாரிகள் மற்றும் சொந்தத் தொழில் செய்பவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியது அவசியம். வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம்.

மகரம் :

ராசியில் இருக்கும் உச்ச செவ்வாயால் உங்களில் சிலருக்கு உறவினர்களால் தகராறுகளோ வழக்கு, விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட், போலீஸ் என அலைய நேரிடலாம். ராசிச் செவ்வாயால் சிறிய விஷயத்திற்கு கூட கடுகடுவென இருப்பீர்கள். அடுத்தவர்கள் உங்களை கோபமூட்டி பார்த்தாலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது. குறிப்பாக கணவர்-மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் கோபத்தை ஒத்தி வையுங்கள்.

இளைய பருவத்தினருக்கு திருமண காலம் வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடி வரும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் விலகும்.

கும்பம் :

உங்களில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இப்போது வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும். இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும்.

கும்பத்திற்கு இப்போது இருக்கும் கோட்சார கிரக நிலைகள் உங்களை நல்ல எதிர்காலத்திற்குக் கூட்டிச் செல்லும் என்பதால் நல்லவைகளுக்கான ஆரம்பங்கள் இப்போது நடக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் அமைந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இந்த வாரம் நெருங்கிய ஒரு நண்பரிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும்.

மீனம் :

கடந்த சில வாரங்களாக பொருளாதார சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருந்த மீன ராசிக்காரர்கள் அனைவருக்கும் சூரியன் மூன்றாம் இடத்திற்கு மாறப் போவதால் நன்மைகள் ஆரம்பிக்கும் வாரம் இது. உங்களில் பூரட்டாதி நட்சத்திரக்காரருக்கு கூடுதல் நன்மைகள் இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். புது மனிதராக மாறப் போகிறீர்கள்.

வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும், மரியாதையும் உண்டு. உடன் வேலை செய்பவர்களிடையே மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய யோசனை கேட்கப்படும். கணவரால் பாராட்டப் படுவீர்கள். குழந்தைகளும் பெரிய அளவிற்கு உங்களை இம்சைப் படுத்த மாட்டார்கள். இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும்.

No comments :

Post a Comment