Monday, April 30, 2018

மீனம்: 2018 மே மாத பலன்கள்


மீனம் :

பாக்கியாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் உச்சமாகி லாபஸ்தானத்தோடு தொடர்பு கொள்வது உன்னதமான அமைப்பு என்பதால் மீனத்திற்கு மே மாதம் மேன்மையான மாதம்தான். கூடவே வருமானக் குறைவையும், கடன் தொல்லைகளையும் காட்டும் சூரியனும் உச்சமாக இருப்பது சிறிது சாதகமற்ற அமைப்புத்தான் என்றாலும் அவர் ராசிநாதன் குருவின் பார்வையில் இருப்பதால் பாதகம் எதையும் செய்ய வாய்ப்பில்லை. பாபக் கிரகங்களான கேது, சனி ஆகியோர் உபசய ஸ்தானங்களான பத்து, பதினொன்றில் இருப்பதும் நன்மைகளைத் தரும் என்பதால் இந்த மாதம் மீனத்திற்கு பிரச்னைகளைத் தீர்க்கும் மாதம் என்பதோடு புதிதாக எந்த பிரச்னையும் வராத மாதமாகவும் இருக்கும்.

கணவன் மனைவியைக் குறிக்கும் ஏழாமிடம் பலவீனம் பெற்ற நிலையில் இருந்தாலும், குடும்பாதிபதி உச்ச நிலையில் இருப்பதால் வாழ்க்கைத் துணைவர், நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபமும் வருவது போலத் தோன்றினாலும் மாத இறுதியில் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள்.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்தமாதம் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். 

தெய்வ ஆசிர்வாதம் உண்டு. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறையும். சமீப காலமாக வேலையில் பிரச்சனை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்தும் நல்லலாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும்.

2,3,5,6,11,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 26 ம் தேதி காலை 8.14 மணி முதல் 28ம் தேதி மாலை 4.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment