Monday, April 30, 2018

மேஷம் : 2018 மே மாத பலன்கள்


மேஷம் :

மே மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்சவலுவுடன் இருப்பது மேஷத்திற்கு நல்ல பலன்களை தருகின்ற ஒரு அமைப்பு. உங்களில் இளைய பருவத்தினருக்கு மே மாதம் மேன்மையை தருகின்ற மாதமாக இருக்கும். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள், சொந்த வாழ்க்கையில் மனஅழுத்தம் தரும் நிகழ்வுகளை எதிர் கொண்டவர்கள், கடன்தொல்லை, வழக்கு போன்றவைகளால் நிம்மதி இழந்தவர்களுக்கு இனிமேல் நிம்மதி தருகின்ற மாதம் இது.


ராசிநாதன் வலுவுடன் உள்ளதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு வேலை செய்யும் இடங்களிலும் தொழில் அமைப்புகளிலும் மறைமுகமான எதிரிகள் உருவாகி கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். மேஷத்திற்கு இனிமேல் தோல்வி இல்லை. இந்த மாதம் உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் மேலோங்கிய நிலையில் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளும் சிறப்பாக நடைபெறும். குடும்ப ஸ்தானம் வலுப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவையான பொருள் ஏதாவது வாங்குவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். ஒரு சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். பெண்கள் விஷயத்தில் சற்றுக் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரியாக பெண்கள் இருந்தால் அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது. இல்லையெனில் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். 

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். குறிப்பிட்ட சிலர் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

1,2,3,5,6,15,19,20,26,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1ம் தேதி காலை 9.36 முதல் 3ம் தேதி இரவு 7.51 மணி வரையும், மாத இறுதியில் 28ம் தேதி மாலை 4.39 மணி முதல் 31ம் தேதி அதிகாலை 3.12 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

1 comment :

  1. ரிஷபம் ராசியின் பலன்கள் கொடுங்க ஐயா

    ReplyDelete