Monday, 10 July 2017

Weekly Raasi Palangal (10.7.2017 - 16.7.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம் :

மேஷத்திற்கு அஷ்டமச் சனி முடியப் போவதால் எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இந்த வாரம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும்.


சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் அமையும். இளைஞர்கள் வடமாநில பிரயாணம் செய்வீர்கள். ராசிநாதன் நீசமாக இருப்பதால் அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கடும் முயற்சிக்கு பின்பே வெற்றிகரமாக முடிக்க முடியும். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும்.

பிறந்த இடத்தை விட்டு தூரத்தில் இருப்பவர்களுக்கு நிலையான மாற்றங்களை தருவதற்கான நல்ல நிகழ்ச்சிகள் உண்டு. பெண்களால் ஆதரவும், அனுகூலமும் கிடைக்கும். ஏழாமிடம் வலுப்பெற்றுக் காணப்படுவதால் கணவன், மனைவி ஒருவருக்கொரு உதவியாக இருப்பீர்கள். பொருளாதார சிக்கல்கள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. பொதுவாக மகிழ்ச்சியை எதிர்கொள்ள இருப்பதற்கு நீங்கள் தயாராகும் வாரம் இது.

ரிஷபம் :

ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் வாரம் முழுவதும் ரிஷபராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நிகழ்ச்சிகளும், புத்துணர்வு தரும் சம்பவங்களும் நடந்து மகிழ்வைத் தரும் வாரமாக இது இருக்கும். ரிஷபத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீரும் வாரம் இது.கணவன் மனைவி உறவு நல்ல முறையில் இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த திட்டங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும். உடல் நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகு விரைவில் குணமடைவார்கள்.

பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் எந்த பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

மிதுனம் :

சூரியன் ராசியில் அமர்ந்ததால் பொருளாதார சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்கள் அனைவருக்கும் இந்த வாரம் சூரியன் ராசியில் இருந்து விலகப் போவதால் பின்னடைவுகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும் வாரமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.

மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும். கெடுதல்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் உண்டு. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம்தேதி இரவு 11.24 மணி முதல் 12-ந்தேதி காலை 10.03 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

கடகம் :

கடகநாதன் சந்திரன் வாரம் முழுவதும் வலுவான நிலையில் இருந்து வார இறுதியில் இரண்டிற்குடைய சூரியன் ராசியில் அமர்வதால் ராசியும் புனிதமடைந்து இந்தவாரம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரமாக இருக்கும். எட்டில் இருக்கும் கேதுவால் உறவினர்கள் பங்காளிகள் போன்றவர்களால் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்படலாம். வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் எரிச்சல் படுவீர்கள்.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும். யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலருக்கு வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.

இதுவரை தோல்வி மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப்பெற்று இனி சுறுசுறுப்பாவீர்கள். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் லாபங்கள் குறைவாகத்தான் இருக்கும். தனஸ்தானம் வலுப் பெறுவதால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. 14,15,16 ஆகிய நாட்களில் பணம் வரும் 12-ந்தேதி காலை 10.03 மணி முதல் 14-ந்தேதி மாலை 6.34 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம்.

சிம்மம் :

ஜீவனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடன் இருக்கும் அற்புதமான வாரம் இது என்பதால் பொருளாதார மேன்மை கிடைத்து நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி இப்போது பலிக்கும் என்பதோடு அதிக சிரமமின்றி கிடைக்கும் பண வரவாலும் குடும்பத்தில் சந்தோஷம் கண்டிப்பாக உண்டு. பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மனைவியுடன் கருத்து வேற்றுமை இருக்கும்.

சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக்குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதுவரை தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

திருமணமாகாதவர்களுக்கு செப்டம்பர் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறும். இளைய பருவத்தினருக்கு காதல் வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. இதுவரை குழந்தைபாக்கியம் தாமதித்தவர்களுக்கு ஆண்குழந்தை பிறக்கும். 15,16, ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம்தேதி மாலை 6.34 மணி முதல் 17-ம்தேதி அதிகாலை 12.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.

கன்னி :

யோகம் தரும் கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் உள்ளதாலும் புதனும், சுக்கிரனும் வலுவாக இருப்பதாலும் இந்தவாரம் கன்னிக்கு கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. வாரத்தின் பிற்பகுதியில் சந்திரனின் தயவால் திடீர் பண வரவு ஒன்றும் உண்டு. சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். கலைத்துறையில் இருப்பவர்க்கு இது மேன்மையான நேரம்.

இன்னும் சில வாரங்கள் தன, பாக்யாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று சொந்த ராசியில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் ஜூலை மாதம் முழுமையும் கன்னிக்கு நன்மை தரும் மாதமாக அமையும் என்பது உறுதி பெண்களுக்கு நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவி உயர்வு கூடுதல் சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும்.

அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். வீட்டில் சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். வேறு சில மங்கள நிகழ்ச்சிகளும் நடக்கும். இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பராக தொடருவார். நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும்.

துலாம் :

ராசியை நீச செவ்வாய் பார்ப்பதால் சிறிய விஷயத்திற்கு கூட இந்த வாரம் கடுகடுவென இருப்பீர்கள். அடுத்தவர்கள் உங்களை கோபமூட்டி பார்த்தாலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். குறிப்பாக கணவர்-மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் வரும் வாரம் என்பதால் கோபத்தை ஒத்தி வைப்பது நல்லது. திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து செப்டம்பருக்கு மேல் திருமணம் நடக்கும்.

மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும்.

ராசிநாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் ஆட்சி நிலை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் அவர் எட்டில் மறைந்து வலுப் பெறுவதால் ஜூலை மாதம் துலாம் ராசிக்கு எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் முதலில் தடைகள் வந்து பிற்பகுதியில் அனைத்துப் பிரச்சினைகளும் உங்களுக்கு சாதகமாக மாறி தீர்வு கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். பணத்திற்கு தட்டுபாடு இருக்காது. எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

விருச்சிகம் :

ராசியில் ஜென்மச் சனியாக இருக்கும் சனிபகவான் இன்னும் சில வாரங்களில் விலகப் போவதால் ஏழரைச்சனி இனிமேல் உங்களை கஷ்டப்படுத்தாது என்பது நிச்சயம். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் எதையும் நினைத்து கலக்கம் அடையாமல் நாளை கிடைக்கப் போகும் வெற்றியை நினைத்தால் கவலைகள் ஏதும் இல்லை. குறிப்பாக கேட்டை நட்சத்திரக்காரர்கள் உங்கள் மன அழுத்தத்தின் தீர்வை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் இனிமேல் விருச்சிகத்திற்கு முப்பது வருடங்களுக்கு துன்பம் இல்லை.

கடந்த காலங்களில் உங்களுக்கு நடந்த சம்பவங்களின் அர்த்தம் தற்போது புரியும். நெருங்கிய சிலரைப் பற்றி இப்போது நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள். இதுவரை விடைதெரியாத பல கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியும். இனிமேல் எந்தவழியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்பதும் அந்த பாதையும் இப்போது கண்ணுக்குத் தெரியும். செப்டம்பர் மாதம் நடக்கும் குருப்பெயர்ச்சிக்குப்பின் நல்ல காரியங்கள் அனைத்தும் கூடி வரும். இந்தாண்டு இறுதிக்குள் நிச்சயம் நல்ல செய்தியைக் கேட்பீர்கள்.

குடும்பத்தில் ஒருவர் ஏதாவது பேசிவிட்டாலோ, திட்டிவிட்டாலோ மற்றவர்கள் பொறுத்துப் போங்கள். குடும்பப் பிரச்னைகளை அனைவரும் ஒன்று சேர்ந்து மனம் விட்டு உட்கார்ந்து பேசினாலே ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம் என்பதை கருத்தில் கொள்வது நல்லது. இளைய வயதில் இருப்பவர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்னைகளும் அணிவகுத்து வரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு :

ஆறில் ஆட்சி வலுப் பெற்று இருக்கும் சுக்கிரனால் பெண்களால் வீண்பழியோ, சிரமங்களோ, செலவுகளோ வரும் என்பதால் இந்த வாரம் பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வேண்டிய வாரமாக இருக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் குரு அவரைப் பார்ப்பதால் எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே இருக்கும் என்பதும் உறுதி. பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கு மாற்றங்கள் நடக்கக் கூடிய கால கட்டம் இது.

வியாபாரிகள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியது அவசியம். வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கும். எனவே அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றும் என்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

பெண்களுக்கு இது சுமாரான வாரமாகத்தான் இருக்கும். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் எல்லா வேலையையும் உங்கள் தலை மேல்தான் சுமத்துவார்கள். என்ன பிரச்னை என்றாலும் பண வரவிற்கு காரணமான சுக்கிரன் ஆட்சி நிலையில் இருப்பதால் பணவரவுகளும், தொழில் மேன்மைகளும், சந்தோஷ நிகழ்ச்சிகளும் இந்த வாரம் இருக்கும். சிலருக்கு கடன் வாங்கி வீடு அல்லது பிளாட் வாங்கும் யோகம் இருக்கிறது.

மகரம் :

ராசிநாதன் சனி ராசியைப் பார்த்து ராசி வலுவடைவதால் இந்த வாரம் நீங்கள் நன்மைகளை அனுபவிக்கும் வாரமாக இருக்கும். அதே நேரத்தில் செவ்வாய் நீசமாகி ஏழாமிடத்தில் இருந்து ராசியைப் பார்க்கிறார். அவரது பார்வையால் எல்லாவற்றிலும் உங்களை கோபமும் எரிச்சலும் படக்கூடிய விஷயங்கள் இன்னும் சில வாரங்களுக்கு நடக்கும். குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். எனவே கோபத்தை தவிருங்கள்.

வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு தாமதங்களும் தடைகளும் ஏற்படும் என்பதால் எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் சுலபத்தில் நடைபெறுவது கடினம். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். என்னதான் பிரச்சினை இருந்தாலும் ராசிநாதனின் வலுவால் உங்களின் அந்தஸ்து கௌரவம் பாதிக்காமல் பணவரவும் நன்றாக இருக்கும் என்பதால் கஷ்டங்கள் என்று எதுவும் இல்லை.

தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கூட்டுத் தொழில் சுமுகமாக இருக்கும். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்யுங்கள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் கடந்த சில காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களை ஆகஸ்டு மாதம் முதல் அடுத்தடுத்து நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் குறிப்பாக செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மாற்றியமைத்து உங்களை நன்மைகள் நடக்கும் காலத்திற்குக் கூட்டிச் செல்லும் என்பதால் இப்போதே நல்லவைகளுக்கான ஆரம்பங்கள் உள்ள வாரமாக இது இருக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். வரும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் தற்போது இருக்கும் எட்டாமிடத்தில் இருந்து மாறி மிகவும் யோகம் தரும் ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு வந்து உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து மீண்டும் அதிர்ஷ்டம் தேடி வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது.

சொந்தத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் அகலக்கால் வைக்காமல், அடுத்தவரை நம்பாமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம் இது. செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைச் சற்று ஒத்தி வைப்பது நல்லது.

மீனம்:

ராசிநாதனும் குருவும் யோகாதிபதி செவ்வாயும் நல்ல இடங்களில் இருப்பதோடு சகாய ஸ்தானாதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டில் ஆட்சியாக இருப்பதால் இந்தவாரம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல வாரம்தான். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கதிற்கான அனைத்தையும் தற்போது நல்லவிதமாகச் செய்ய முடியும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கப் போவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். அரசுவேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்லசெய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ் குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும்.

இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு கூடுதல் லாபம் இருக்கும். அரசு, தனியார்துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு மீன ராசிக்காரர்களுக்கும் நல்ல வாரம் இது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் தொல்லைகள் இல்லாமல் ஜாலியான அனுபவங்கள் இருக்கும்.

No comments :

Post a Comment