Tuesday, July 11, 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 143 (11.7.2017)

தீபன் சக்ரவர்த்தி, தஞ்சாவூர்.

கேள்வி :

ஐந்து வருடமாக ஒரு பெண்ணை உயிருக்கு நிகராக, உண்மையாக காதலிக்கிறேன். அவளும் என்னை மூன்று வருடமாக காதலித்தாள். இப்போது என்னைப் பிடிக்கவில்லை என்கிறாள். என்னால் அவளை மறக்க முடியவில்லை. நான் அவளை உண்மையாக காதலிக்கிறேன். எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. அவளுக்கும் தோஷம் உள்ளது. அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டு நான் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதுவாக இருந்தாலும் நான் செய்யத் தயார்.


பதில் :

(ஆண் 22-5-1998 காலை 5.30 தஞ்சை, பெண் 23-9-1999 மதியம் 1.30 தஞ்சை)

19 வயதாகும் நீ கேட்கும் கேள்விக்கு ஒரே ஒரு பரிகாரம்தான். ஒரு கடிதத்தை பிழை இல்லாமல் எழுதத் தெரியும் அளவிற்கு ஒழுங்காக படிக்க வேண்டும். இந்த வருடம் படிப்பில் மாநிலத்தின் முதல் மாணவன் என்று பெயர் எடுக்க வேண்டும். அந்தப் பெண் கிடைப்பாள்.

வீ. ஆனந்தன், புதுச்சேரி.

கேள்வி :

என் தம்பி இரும்பு, பெயிண்ட் கடை நடத்தி வந்தான். கடந்த 5 வருடமாக 50 லட்சம் கடனாகி வட்டி கட்ட முடியாமல், கடன்காரர்களிடம் அடிபட்டு தலைமறைவாக இருக்கிறான். கடன்காரர்கள் தற்போது அப்பாவிடமும், உறவினர்களிடமும் நீங்கள்தான் கொடுக்க வேண்டும் என்று சண்டை போட்டு அவமானப் படுத்துகிறார்கள். அவனுக்காக கட்டிய வீடு அப்பா பெயரில் உள்ளது. அதை விற்கவும் முடியவில்லை. எப்போது விற்பனையாகும்? அவன் எதிர்காலம் எப்படி அமையும்?


ல,சனி
ராசி
கேது

செவ், 
ராகு
புத

சந், 
குரு

சூ, 
சுக்

பதில் :

(ரிஷப லக்னம், விருச்சிக ராசி. 1-ல் சனி. 3-ல் கேது. 4-ல் புத. 5-ல் சூரி, சுக். 7-ல் சந், குரு. 9-ல் செவ், ராகு. 25-9-1971, இரவு 10.45, பாண்டி)

விருச்சிக ராசிக்காரர் ஒருவரைக் கூட சனி விட்டு வைக்கவில்லை போலத் தெரிகிறது. ஜோதிடத்தை விமர்சிப்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடி கடந்த ஐந்தாண்டுகளாக விருச்சிகத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஒரு ஆய்வு நடத்தலாம்.

தம்பிக்கு ரிஷப லக்னம் விருச்சிக ராசியாகி, லக்னாதிபதியும் ஆறுக்குடையவனுமான சுக்கிரன் நீசம் பெற்று தசை நடத்தியதாலும், ஆறுக்குடையவன் தசை நடக்கும் போது ஏழரைச் சனி நடந்ததாலும் 2012-க்கு பிறகு கடன் ஏற்பட்டு விட்டது. கடன் ஸ்தானாதிபதி தசையில் ஏழரைச் சனி நடக்கும் போது தொழில் நடத்தியது தவறு.

தற்போது நீச சுக்கிர தசை முடிந்து ஒருவாரம் ஆகிவிட்டபடியால் இனிமேல் கடன் தொல்லைகளை தீர்க்க முடியும். அதே நேரத்தில் அவருக்காக இருக்கும் வீட்டை விற்றுதான் கடனை அடைக்க முடியும். அடுத்த வருடம் முதல் கடன் தொல்லைகள் நீங்கத் துவங்கி இன்னும் இரண்டு வருடம் கழித்து நன்றாக இருப்பார்.

கா. அசோக்குமார், . பாப்பிநாயக்கன்பட்டி.

கேள்வி :

குருநாதருக்கு மாணவனின் வணக்கங்கள். 2011 முதல் உங்கள் எழுத்துக்களை வாசித்து கொண்டிருக்கிறேன் என்பதை விட சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதே சரி. ஒரு அற்புதமான நல்ல திரைப்படம் எப்படி ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துமோ அதுபோல உங்களின் எழுத்துக்களும் ஏற்படுத்துகிறது. உங்கள் மூலம் கைவரப் பெற்றுள்ள ஜோதிடத்தை தொழிலாகச் செய்யலாமா? கிரகங்களின் மறைவு, திக்பலம், கேந்திரம், திரிகோணம் இவற்றை ராசிக் கட்டத்தில் பார்க்க வேண்டுமா? அல்லது பாவக சக்கரத்தில் பார்க்க வேண்டுமா? அடுத்து வரும் கேது தசையும், சுக்கிர தசையும் எப்படி இருக்கும் .

பதில் :

அடுத்து நடக்க இருக்கும் கேது தசையில் ஜோதிடத்தை தொழிலாகச் செய்யலாம். தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தை குருவும், புதனும் பார்ப்பதால் ஜோதிடம் உங்களுக்கு தொழிலாக கை கொடுக்கும். லக்னத்திற்கு இரண்டில் சுக்கிரன் இருப்பதாலும், ராசிக்கு இரண்டை குரு பார்ப்பதாலும் நீங்கள் சொல்லும் பலன் பலிக்கும்.

ஒரு கிரகத்தின் அத்தனை வலுவையும் ராசிக்கட்டத்தில் மட்டுமே கணிக்க வேண்டும். ராசியில் அக் கிரகம் இருக்கும் ஆட்சி, உச்சம், பகை, நீசம் போன்ற வலுக்களை நன்றாக கணித்து கொண்டு, பாவகத்தில் இருக்கும் வீட்டின் பலனை அதனுடைய தசையில் செய்யும் என்று பலன் சொல்ல வேண்டும்.

அடுத்து நடக்க இருக்கும் கேது தசை, சனியின் வீட்டில், ராசிக்கு பதினொன்றில் இருப்பதால் யோகத்தை செய்யும். சுக்கிர தசை லக்னாதிபதி தசை என்பதால் சகல பாக்கியத்தையும் தரும். சுக்கிரன் முதல் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

ஆர். லட்சுமண பெருமாள், மணப்பாறை.

கேள்வி :

எனது மகனும், மருமகளும் 4 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆனதில் இருந்து ஒரே சண்டை, சச்சரவு. மருமகள் சொல்லக் கூடாத வார்த்தை எல்லாம் சொல்லி சண்டையிட்டு 3 முறை கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டாள். திரும்பவும் ஒரு வாரம் கழித்து எனது மகன் தான் வேண்டும் என்று வருகிறார்.

உள்ளூரில் ஜோதிடம் பார்த்ததற்கு பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் உள்ளது மகனுக்கு இல்லை. எனவே இப்படித்தான் இருக்கும். வரும் ஜனவரி 2018 வரை இருவரும் பிரிந்து வாழ வேண்டும். இல்லையெனில் மகனுக்கு ஆயுள் கண்டம் என்று சொல்கிறார்கள். மகனும் ஒருமுறை தற்கொலை முயற்சி செய்து கொண்டு பிழைத்துக் கொண்டான். இவர்கள் நிரந்தரமாக வாழ்க்கை நடத்துவார்களா? மகனுக்கு ஆயுள் ஹோமம் போல ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? அறிவுரை கூற வேண்டுகிறேன்.

பதில் :

மகனுக்கு விருச்சிக ராசியாகி ஏழரைச் சனி நடக்கும் நிலையில் புதன் தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் தாம்பத்திய சுகம் கிடைக்க வேண்டி திருமணம் நடந்து விட்டது. மருமகளுக்கும் இதே போல சுக்கிரன் வீட்டில் அமர்ந்த ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் ஆனதற்கு பிறகு செவ்வாய் தோஷத்தை பற்றி பேசக்கூடாது. தவிர மருமகளுக்கு செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்துள்ளதால் தோஷம் இல்லை. வரும் அக்டோபர் மாதத்துடன் மகனுக்கு ஜென்மச் சனி விலகினாலும், மருமகளின் ரிஷப ராசிக்கு அஷ்டமச் சனி ஆரம்பிப்பதால், இருவருக்கும் இடையே இன்னும் இரண்டு வருடங்களுக்கு சுமுக நிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இப்போதிருக்கும் பிரச்னை அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் முடிவுக்கு வரும். ஜாதகப்படி இருவருக்குமே மனப் பக்குவம் போதாது என்பதாலும், இருவருக்கும் சர்ப்பதோஷம் இருப்பதாலும், மருமகளுக்கு ராகுதசை நடப்பதாலும், இருவருக்கும் லக்னத்தோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாலும், ஒருமுறை ஜென்ம நட்சத்திற்கு முதல்நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை காளத்தி நாதனையும், அன்னையையும் தரிசனம் செய்யச் சொல்லுங்கள். மருமகளை சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றச் சொல்லவும். எல்லாப் பிரச்னைகளும் சரியாகும்.

டி. பத்மாவதி, சேலம்.

கேள்வி :

மகன் திரைப்படத் துறையில் பத்தாண்டு காலமாக வேலை செய்து, மூன்று வருடங்களுக்கு முன் தனியே ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு என்னிடம் சொன்னான். அவன் ஜாதகத்தை சில ஜோதிடர்களிடம் காட்டி கேட்ட போது படம் எடுத்தால் வெற்றி பெறுவான் என்று கூறியதன் பேரில் படம் எடுக்க சம்மதித்தேன். ஆனால் படம் தோல்வி அடைந்ததுடன் உறவினர்களிடத்திலும் கடனாளியாக ஆகி விட்டோம். வறுமையின் காரணமாக கணவரும் இறந்து விட்டார். தன்னால்தான் குடும்பத்திற்கு இவ்வளவு கஷ்டமும் என்ற குற்ற உணர்ச்சியால் என் மகன் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறான். வீட்டிலும் வறுமை தாண்டவம் ஆடுகிறது. இது எப்போது மாறும்? கடன் எப்போது தீரும்?

கேது

செவ் 
குரு
சந்
ராசி

சுக் 
சனி

சூ 
புத
ராகு

பதில் :

(மகர லக்னம், கும்பராசி. 3-ல் கேது. 6-ல் செவ், குரு. 7-ல் சுக், சனி. 8-ல் சூரி, புத. 9-ல் ராகு. 29-8-1977, மாலை 3.50, சேலம்)

மகனுக்கு மகர லக்னமாகி ஆறுக்குடைய புதன் தசை 2012 இறுதி முதல் ஆரம்பித்த நிலையில் சொந்தப் படம் எடுக்க நினைத்தது தவறு. மேலும் குடும்பத்தில் உங்களில் யாருக்காவது தற்போது ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கும். வீட்டில் வேறு யாராவது விருச்சிகம் அல்லது துலாம் ராசியாக இருப்பீர்கள்.

லக்னத்திற்கு ஆறுக்கும், ராசிக்கு எட்டிற்கும் உடைய புதன் ஆட்சி பெற்ற அஷ்டமாதிபதியுடன் இணைந்து தசை நடத்தும் போது சினிமா எடுத்தது மாபெரும் தவறு. மகனின் ஜாதகப்படி தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆனாலும் அவர் ராசியில் சனியுடன் இணைந்து அம்சத்தில் நீசம் பெற்றுள்ளதால் சினிமா தொழில் கை கொடுக்காது.

தசாநாதன் புதன் முதல் எட்டரை வருடங்கள் ஆறுக்குடைய பலனை மட்டுமே செய்வார் என்பதால் 2020 வரை கடன் தொல்லைகள் தீராது. அதுவரை உங்கள் மகன் தோல்வி மனப்பான்மையில், எதிலும் பிடிப்பின்றி, விரக்தியாக, சோம்பலுடன் இருப்பார். சனிக்கிழமை இரவு தோறும் படுக்கும்போது மகனின் தலைக்கடியில் சிறிது கருப்பு எள்ளை தலைக்கடியில் வைத்து மறுநாள் காலை புதிதாக வடித்த சாதத்தில் கலந்து அதைக் காகத்திற்கு வைக்கவும்.

உடனடியாக கடன் வாங்கியாவது ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள், சனி ஹோரையில், சற்று காலைத் தாங்கி தாங்கி நடக்கும் அல்லது மெதுவாக நடக்கும் வயதான, கருப்பான, ஒரு துப்புரவுத் தொழிலாளியை மேற்குத் திசை பார்க்க நிறுத்தி வைத்து, ஒரு கருப்பு நிற பிளாஸ்டிக் தட்டில் ஒரு கருப்பு நிற ஆடை, ஒரு கருப்புத் தோல் செருப்பு, நூறு கிராம் கடுகு, அரை லிட்டர் நல்லெண்ணெய், ஒரு குவாட்டர் பிராந்தி பாட்டில், ஒரு சிறிய இரும்பு பாத்திரம், ஒரு கண்மை டப்பா வைத்து வீட்டிற்கு வெளியே, தட்டோடு மகன் கையால் தானம் கொடுக்கவும். கடன் தீருவதற்கான வழி உடனே பிறக்கும்.

குடும்பத்தில் செய்வினைக் கோளாறு இருக்கிறதா?

எஸ். ஆர். சுப்பிரமணி, சீரங்க கவுண்டனூர்.

கேள்வி :

எனது குடும்பத்தில் ஆண்டுக்கு ஒரு உயிரிழப்பு உடல்நிலை சரியில்லாமலோ, தற்கொலையாகவோ ஏற்படுகிறது. இது செய்வினை கோளாறால் ஏற்படுகிறதா? அல்லது முன்னோர்கள் செய்த பாவமா? ஏதாவது சாபமா? இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தெய்வ குற்றம் எதுவும் உள்ளதா?

பதில் :

உலகில் சாவு நடக்காத இடம் என்று ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம். அதன் பிறகு உங்கள் குடும்பத்தில் நடப்பது செய்வினை கோளாறா? பாவமா? சாபமா? என்பதைச் சொல்லலாம். எப்போது ஒரு உயிர் பிறக்கிறதோ அப்போதே அது இறப்பதும் நிச்சயமாகி விடுகிறது தானே?

எந்தக் குடும்பத்தில்தான் பிறப்பும், இறப்பும் வராமல் இருக்கிறது? சற்றுப் பெரிய குடும்பங்களில் அடுத்தடுத்து மரணங்கள் நடப்பது சகஜமான ஒன்றுதான். ஒவ்வொரு இறப்பும் சம்பந்தப்பட்டவர்களின் ஆயுளைப் பொருத்தது. நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ யாரும் இருக்கவும் முடியாது, இறக்கவும் முடியாது. எனவே இறந்தவர்கள் எதனால் இறந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்வதை விடுத்து இருப்பவர்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படுங்கள்.

செய்வினையும் கிடையாது, சாபமும் கிடையாது. எல்லா பாவங்களும் நம்முடைய மனதிலும் நம் வாழ்க்கை முறையிலும்தான் இருக்கிறது. குற்றம் செய்யாதவன் வாழ்க்கை என்றும் குறுகுறுப்பின்றி நிறைவாகவே இருக்கும். அவனது சுற்றமும் குறையின்றி வாழும்.

No comments :

Post a Comment